முகப்பு

20 September 2023

கும்பகோணம் : சினிமா அனுபவம்

கும்பகோணத்தில் எனக்கு நினைவு தெரிந்து ஆரம்பத்தில் இருந்த திரையரங்குகள் ராஜா டாக்கீஸ் (சோமேஸ்வரன் கோயில் எதிரில்/இப்போது இல்லை), டைமண்ட் டாக்கீஸ் (இப்போது தங்கும் விடுதியாகிவிட்டது), விஜயலட்சுமி தியேட்டர் (வாணி விலாச சபா என்பர்), ஜுபிடர் தியேட்டர் (மகாமகக்குளம் அருகில்/இப்போது இல்லை) ஆகிய நான்கு மட்டுமே. 

பின்னர் நூர் மஹால் (பின்னர் செல்வம் தியேட்டர் என்றாகி தற்போது எம்.எஸ்.எம். தியேட்டர்), கற்பகம் (பின்னர் வேல்முருகன்), தேவி தியேட்டர் (பின்னர் பரணிகா), மீனாட்சி, வாசு, விஜயா ஆகிய திரையரங்குகள் கும்பகோணத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தவையாகும். இத்திரையரங்குகள் தொடர்பாக சில நினைவுகள் இன்றும் மனதைவிட்டு அகலாமல் உள்ளன.

1960களில்  மூங்கில் தட்டியில் திரைப்படச் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கும். அதில் தினசரி மூன்று காட்சிகள், சனி, ஞாயிறு நான்கு காட்சிகள் என்று ஓரத்தில் வண்ண மையினால் எழுதப்பட்டிருக்கும். சிலவற்றில் சனி, ஞாயிறு காலைக்காட்சி மட்டும் என்ற வண்ண மை குறிப்புடன் ஆங்கில திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். பொற்றாமரைக்குளக்கரையில்தான் அவ்வாறான  போஸ்டர்கள் அதிகமாக இருக்கும். குளத்தின் கரையில் வெளிப்புறத்தில் சுவரையொட்டி இரு மூங்கில்களை நட்டு அதில் மூங்கில் தட்டியினை வைத்து அதில் போஸ்டர்களை ஒட்டிவைத்திருப்பர். அதைப் பார்த்து எந்தெந்தத் திரையரங்கில் எந்தெந்தப் படம் ஓடுகிறது என்று தெரிந்துகொள்வோம். இரு புறங்களிலும் எத்தனைக் காட்சிகள் என்ற விவரம் இருக்கும். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது வெற்றிகரமான 50ஆவது நாள், 100ஆவது நாள், 250ஆவது நாள் என்று சுவரொட்டிகள் சிறப்பாக அச்சிடப்பட்டிருக்கும்.

புதிய திரைப்படம் வரும்போதோ, பல நாள்கள் ஓடியதற்காகவோ, திரைப்படம் முடியும் நாளைத் தெரிவிக்கவோ சிறிய தள்ளுவண்டி உள்ள ஒரு வண்டியில் போல இரு பக்கமும் போஸ்டரை வைத்து கூவிக்கொண்டே செல்வர்.  சில சமயங்களில் அந்த திரைப்படத்தின் நோட்டீசையும் தூக்கி எறிந்துக்கொண்டும், வருவோர் போவோரிடம் கொடுத்துக்கொண்டும் செல்வர். இரு பக்கமும் தட்டியைக்கொண்ட அந்த சிறிய தள்ளுவண்டியில் இரு சிறிய இரும்பு சக்கரத்தில் ஓடும். சில சமயங்களில் இரட்டை மாடு பூட்டிய வண்டியிலும் அவ்வாறு சென்றதைக் கண்டுள்ளேன். 

ராஜா டாக்கீஸ் ஆரம்பக்காலத்தில் திரைப்படங்கள் அதிகமாகப் பார்த்தது இங்குதான்.   52 பைசாவில் அங்கு சினிமா பார்த்த நினைவு.  பார்வையாளர்கள் பகுதி முழுமையாக குறுக்கே ஒரு சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கும். ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் அமர்ந்திருப்பர். நான்காவதோ, ஐந்தாவதோ படிக்கும்போது நான் பார்த்து நினைவிலுள்ள முதல் பாலசந்தர் படம் இரு கோடுகள். அப்படம் பார்த்துவிட்டு வந்தபின் சிங்காரம் செட்டித்தெருவில் நண்பனுடைய வீட்டில் அப்படத்தின் டைட்டில் கார்டு அடுத்தடுத்து இரு கோடுகள் பற்றி பேசிய நினைவு உள்ளது. அப்போது பாலசந்தரைப் பற்றித் தெரியாது. உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் திரையிடப்பட்டபோது வாசலில் தட்டியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் வாசகர்கள் டிக்கெட் எடுத்துக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும் என்று எழுதியிருந்தது. பால பாரதம் என்ற புராணத் திரைப்படம் வந்தபோது எங்கள் அத்தை அதில் உள்ளதுபோல் உடன்பிறந்தோர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றார். இந்தித் திரைப்படமான பாபியை இங்குதான் பார்த்தேன்.  நான் அதிகம் ரசித்த அவள் ஒரு தொடர்கதை  இங்கு பார்த்தேன். அதனைப் பார்க்கப்போகும்போது திரையரங்கத்தின் வெளியே இருந்த சுவரொட்டிகளை அதிக நேரம் நின்று பார்த்தது நினைவில் உள்ளது. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன். சிவாஜி வாரம், எம்ஜிஆர் வாரம் என்று படம் வெளியிட்டார்கள். சிவாஜி வாரத்தின்போது ஒரு நாளைக்கு ஒரு படமும், எம்ஜிஆர் வாரத்தின்போது இரு ஒரு படமும் திரையிட்டார்கள்.

விஜயலட்சுமி தியேட்டர் இங்கு அவ்வப்போது பார்த்துள்ளேன். ஒரு காலகட்டத்தில் சிவாஜிகணேசனின் பழைய திரைப்படங்களை இங்கு தொடர்ந்து வெளியிட்டார்கள். அப்போது ஊட்டி வரை வரவு இங்கு பார்த்தேன். சிவாஜிகணேசன் நடித்த விளையாட்டுப்பிள்ளை இங்கு பார்தத நினைவு. இங்கு பார்த்த பிற படங்கள் நினைவில் இல்லை.

டைமண்ட் டாக்கீஸ் இங்கு அதிகமாகப் படம் பார்க்கவில்லை. அவ்வாறே இங்கு பார்த்த படங்களும் நினைவில் இல்லை.

ஜுபிடர் திரையரங்கம் வீட்டிலிருந்து அதிக தொலைவிலிருந்த தியேட்டர் இதுதான். இதில் அரங்கேற்றம் பார்த்த நினைவு. பின்னாளில் நான் பாலசந்தர் ரசிகனாக மாறியதற்கான ஆரம்பம் இப்படமே. இதன் முதன்மைப்பாத்திரமான  லலிதா (பிரமிளா) நம் அண்டைவீட்டுப் பெண் போல இருப்பார். அந்தப்படத்திற்குப் போய்வந்தபின்னர் வீட்டில் அதுபோன்ற படத்திற்குப் போகக்கூடாது என்று திட்டு வாங்கினேன். இப்படத்தைப் போலவே என்னை முற்றிலும் மறந்து நான் ரசித்த மற்றொரு படம் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை. என் மனதில் அதிக தாக்கத்தை இப்படம்  உண்டாக்கியது.  

நூர் மஹால் எனக்கு விவரம் தெரிந்து முதன்முதலாக கட்டப்பட்ட திரையரங்கம் நூர் மஹால். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை கல்லூரி நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து பார்த்தேன். இந்தத்திரைப்படத்தைப் போல வேறு எதையும் அதிக நண்பர்களுடன் ஒரே நேரத்தில், ஒரே காட்சியில் பார்க்கவில்லை. இத்திரைப்படத்திற்கு இந்திரா அத்தையும் வந்த நினைவு. பாலசந்தர் ரசிகன் என்ற நிலையில் இப்படத்தை அதிகம் ரசித்தேன்.  "ஏழு ஸ்வரங்களுக்குள்......" பாடல் என்னை அதிகம் ஈர்த்தது.

கற்பகம் ராஜா டாக்கீஸைவிட மிகவும் நெருக்கமாக வந்தது கற்பகம் தியேட்டர். தியேட்டர் கட்டுமானப்பணியின்போது அங்கு அப்பாவுடன் சென்று பார்த்துள்ளேன். கட்டட வடிவமைப்பு அழகாக இருக்கும். கட்டடப்பணியாளர்கள் விரும்பியதற்காக தியேட்டர் முன்பு ஒரு தென்னை மரத்தை உள்ளது உள்ளபடியே, வெட்டாமல் வைத்துவிட்டார்கள். துவக்கவிழாவின்போது அதில் இருந்த தேங்காய்களுக்கும் வண்ணமிட்டிருந்தனர். முதல்முறையாக திரை மேலே செல்லும் உத்தியை இத்தியேட்டரில் அறிமுகப்படுத்தினர். தொங்கும் திரையில் வண்ண விளக்குகள் எரிய, மெல்லிசையின் பின்புலத்தில் திரை மேலே தூக்கும். அந்த சத்தத்தை வைத்தே அருகிலுள்ளோர் டிக்கட் எடுக்க வந்துவிடுவர்.

தியேட்டரின் திறப்பு விழா நாளில் திருமலை தென்குமரி திரைப்படத்தை முதல் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டனர்.  அதனைப் பார்த்துவிட்டு வந்து வீட்டில் பெருமையாகப் பேசினேன்.  ராஜபார்ட் தங்கதுரை வந்தபோது அதில் வந்த ஒரு பாத்திரமாக திருப்பூர் குமரனைப் போல சிவாஜிகணேசன் கொடியைக் கையில் பிடித்தபடி நிற்க ஒரு பெரிய கட் அவுட்டை (மாட்டு வண்டியோ, டிராக்டரோ நினைவில்லை) வைத்துத் தெருவெல்லாம் சுற்றிவந்தனர். திருப்பூர் குமரனின் கையில் இருந்த கொடி தனியாக, துணிக்கொடியாக, செருகப்பட்டு பறந்துகொண்டிருந்தது. ஒரு வித்தியாசமான உத்தியாக அதனைப் பேசினர். தங்கப்பதக்கம் நிறைவு நாளன்று படத்தில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் வந்திருந்தனர் பெருமையாகப் பேசப்பட்டது. அந்தப்புகைப்படங்களை அத்தியேட்டரில் பார்த்துள்ளேன். நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை என்னுடைய எல்லா நண்பர்களுடனும், தனியாகவும் பல முறை பார்த்துள்ளேன். இதன் கதாநாயகி சோனாவுக்காக (ஜெயப்ரதா) நானும் நண்பர் சந்தானகிருஷ்ணனும் சேர்ந்து பலமுறை பார்த்துள்ளோம்.  கடைசி நாள் கடைசி காட்சி முடிந்தபின்னர் எங்கேயும் எப்போதும் பாடலை மட்டும் மறுபடியும் திரையிட்டார்கள். எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

இத்தியேட்டரில் ஆபரேட்டராகப் பணியாற்றியவர் சில காலம் எங்கள் வீட்டில் குடியிருந்தார். அவருடன் சென்று ஆபரேட்டர் ரூமைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரு கார்பன்களை நெருக்கமாகக் கொணர்ந்து அதில் வரும் ஒளியில் படம் ஓடுவதைப் பார்த்துள்ளேன். கார்பன் என்பதானது கருப்பு நிற மெழுகுவர்த்தி போல இருக்கும். கார்பன் குறையக்குறைய வேறு கார்பனை கையில் எடுத்துக்கொள்வர். படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே வண்ண நிறம் தீட்டப்பட்ட கண்ணாடியை பாடல் காட்சியிலும் பிற காட்சிகளும் மாற்றி மாற்றிக் காண்பிப்பர். திரையில் அக்காட்சி வித்தியாசமாகத் தெரியும். அதை ஆபரேட்டர் செய்தபோது அவர் அறையிலிருந்துகொண்டே திரையிலும் பார்த்தேன்.

முதன்முதல் சினிமாஸ்கோப் என்ற பெருமையுடன் ராஜராஜ சோழன் திரைப்படம் வந்தபோது அத்திரைப்பட சுவரொட்டிகளில் கு.காமராஜ், மு.கருணாநிதி ஆகியோரின் வாழ்த்து இரு பக்கங்களிலும் இடம்பெற நடுவில் கதாநாயகனான சிவாஜி கணேசனை ராஜராஜசோழனாகக் காணமுடிந்தது. எந்த தியேட்டர் என நினைவில்லை.

தேவி, மீனாட்சி, விஜயா, வாசு, காசி போன்ற தியேட்டர்களில் அதிகம் படம் பார்க்க வாய்ப்பில்லை. 

அண்ணாலக்ரஹாரம் ரத்னா, தாராசுரம் சூரியகாந்தி (பின்னர் பெயர் மாறியதா எனத் தெரியவில்லை) போன்ற டூரிங் டாக்கீஸ்களில் அவ்வப்போது லைசென்ஸ் முடியும்போது படத்தின் சுவரொட்டியில் "எமது வந்தனோபசார கடைசி படம்" என்று துண்டுச்சீட்டில் ஒட்டியிருப்பார்கள். அவ்வாறு கடைசியாக வெளியான சில படங்களுக்கு அப்பா அழைத்துச்சென்றுள்ளார். லைசென்ஸ் புதுப்பிக்கும் கால இடைவெளியில் திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது. அவ்வாறான கடைசி படம் நல்ல படமாக இருந்தால் அப்பா அழைத்துச்சென்றுவிடுவார். அவ்வப்போது படச்சுருளை மாற்றும்போது மின்விளக்குகளைப் போட்டுவிடுவர். மறுபடியும் படச்சுருளை இயக்க படம் தொடரும். ஒரு முறை படச்சுருள் அறுந்ததாகக் கூறி அவ்வாறு படத்தைப் பாதியில் நிறுத்தினர். பின்னர் படச்சுருளில் ஊக்கைப் போட்டு இணைத்து ஓட்டினர். அந்த ஊக்கு திரை முழுக்க பெரிதாகத் தெரிந்தது. படத்தின் பெயர் நினைவில்லை. 

 அப்பாவுடன் சினிமா

சினிமாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் பிள்ளையைக் கெடுக்கிறான் என்று எங்கள் அப்பாவை, ஆத்தாவும், தாத்தாவும் அடிக்கடித் திட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா எதையும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார். அவர் என்னை பல ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் அழைத்துச்சென்றுள்ளார். அப்பழக்கம் காரணமாக என் மகன்களையும், மனைவியையும் ஆங்கிலப்படங்களுக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தேன்.

பீஸ் சால் பாத் என்ற இந்தித் திரைப்படம் பார்த்து அதிகம் பயந்தது இன்னும் நினைவில் உள்ளது. இந்த வரிசையில் விக்டோரியா 203, யாதோன் கி பாராத் (தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே), தீவார் (தமிழில் ரஜினிகாந்த் நடித்த தீ), பே ஈமான் (தமிழில் சிவாஜிகணேசன் நடித்த என் மகன்) போன்ற இந்தித்திரைப்படங்களைப் பார்த்துள்ளேன். அவர் அப்போது சொல்லி, பின்னாளில் நான் பார்த்த படங்களில் ஒன்று டன் கமாண்ட்மெண்ட்ஸ் என்ற பிரம்மாண்டமான ஆங்கிலப்படமாகும். ஆங்கிலப்படத்தாக்கம் காரணமாக பென்ஹர், கிளியோபாட்ரா, டே ஆப் தி ஜேக்கல்,  உமர் முக்தார் போன்ற படங்களை விரும்பிப் பார்த்தேன். டே ஆப் தி ஜாக்கல் புதினத்தையும் படித்துள்ளேன். படத்தைவிட புதினம்தான் என்னை அதிகம் ஈர்த்தது.

அண்ணாலக்ரஹாரம் ரத்னா தியேட்டரில்  நவராத்திரி படத்திற்கு வீட்டிற்குத் தெரியாமல் அப்பா என்னை அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள தியேட்டர். நடந்தே சென்று வந்தோம். எங்கள் வீட்டில் சைக்கிள் கிடையாது. திரும்பிவந்தபின் ஆத்தாவும், தாத்தாவும் என்னை திட்டிய திட்டை மறக்கவே முடியாது. அடிக்காமல் விட்டுவிட்டனர்.

டி32 என்ற ஆங்கிலத்திரைப்படம் காலைக்காட்சி பார்க்க நூர்மஹால் தியேட்டருக்கு அழைத்துச்சென்றார். நேரடியாக கவுண்டரில் டிக்கட் வாங்கிக் உள்ளே வந்தபோது சிவாஜிகணேசன் நடித்த இரு மலர்கள் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிவாஜி கணேசனின் ரசிகரான  அப்பாவுக்கு வெளியே வர மனமில்லை. இருந்தாலும் அவர் ஆங்கிலப்படத்தை விரும்பிப்பார்ப்பார். படத்தைப் பார்த்து வெளியேவந்தபின்னர்தான் அப்பா வெளியே போஸ்டரில் எழுதி இருந்ததைப் பார்த்தார். படப்பெட்டி வராததால் டி32 படத்திற்குப் பதிலாக இரு மலர்கள் திரையிடப்படுகிறது என்று சுவரொட்டியில் நீல வண்ண மையால் எழுதப்பட்டிருந்தது. (பெரும்பாலும் சுவரொட்டிகளில் நீல வண்ணத்தையே காணமுடியும். சில சமயங்களில் சிகப்பும், கருப்பும் இருக்கும்)

ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தில் ராஜபார்ட்டாக சிவாஜிகணேசன் நிற்கும் ஆளுயரப் போஸ்டரை அப்பா வாங்கி எங்கள் வீட்டில் ஒட்டிவைத்திருந்தார். 

ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்திற்கு முதலில் சாப்பாட்டு ராமன் என்று பெயர் வைத்ததாகவும், பின்னர் பெயரை மாற்றியதாகவும் அப்பா கூறினார்.

ஒரு முறை சிவாஜிகணேசனின் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதற்காக அப்பா சென்றபோது ஒரே கூட்டமாக இருந்ததாகவும், தான். தனியாக ஓரமாக நின்று கூட்டத்தையே பார்த்துக்கொண்டு, போகலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரைக் கவனித்துக்கொண்டிருந்த தியேட்டர் பணியாளர் ஒருவர் அவரை உள்ளே தனியாக அழைத்துச் சென்று டிக்கெட் வாங்கிக்கொடுத்து படத்தைப் பார்க்கச் சொன்னதைப் பெருமையாக சொல்வார். அது எந்தப்படம் என எனக்கு நினைவில்லை. 

சிவாஜிகணேசன் நடித்த 100ஆவது படமான நவராத்திரி வரையிலான 100 படங்களிலிருந்தும் 100 புகைப்படங்களைக் கொண்ட சிவாஜி100 என்ற ஒரு நூலை அப்பா பாதுகாப்பாக வைத்திருந்தார். 

11 மே 2024இல் மேம்படுத்தப்பட்டது.

06 September 2023

பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும் : முனைவர் ஆ. ராஜா

முனைவர் ஆ. ராஜா எழுதியுள்ள "பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்" என்ற நூல் ஆலங்குடி வட்டாரப்பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் நுண்கற்காலத் தடயங்கள், கொடுமணல் அகழாய்வுகளும், தொல்பொருட்களும், கீழடி அகழாய்வுகள், பல்லவர் கால மூத்த தேவி சிற்பம், அளவையியல் மரபில் மரக்கால், பெரியபட்டினத்தின் தொன்மையும், வரலாறும், இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம், கடல்சார் வரலாற்றைக் காட்டும் தொன்மையான நங்கூரங்கள், கலை, பண்பாட்டுத் தளத்தில் சோமேசுவரர் திருக்கோயில், தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள், சேதுபதி கல்வெட்டுகள் காட்டும் முத்துக்குளித்தல் என்ற உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. கட்டுரைகள், தலைப்புக்கேற்ற வகையில் உரிய சான்றுகளுடனும், ஏராளமான தகவல்களுடனும், 50க்கும் மேற்பட்ட படங்களுடனும் உள்ளன. அனைத்தும் பழந்தமிழர் வாழ்வியலோடும், வரலாற்றோடும் தொடர்புடையனவாக உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.




"......பரந்துபட்ட தமிழகத்தின் தொன்மைச்சிறப்புகளை வெளிப்படுத்தும் செய்திகளைக் கள ஆய்வு மற்றும் சேகரிப்பின் அடிப்படையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவா என்னுள். அதன் விளைவாக விளைந்ததே இந்நூல்" என்று ஆசிரியர் என்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய அவா ஓரளவிற்குப் பூர்த்தியடைந்ததைக் கட்டுரைகள் உணர்த்துகின்றன.

"ஆலங்குடி வட்டாரத்தில் கண்டறியப்பட்டுள்ள நுண்கற்காலப் பண்பாட்டிடங்களின் தன்மையை ஒப்புநோக்கும்போது இதற்கு முன்னர் இம்மாவட்டத்தில்  கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த நுண்கற்காலப் பண்பாட்டு இடங்களை ஒத்துள்ளன......." (ப.2)

"கொடுமணலிலுள்ள வாழ்விடப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்டபோது, அகழாய்வுக்குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப்பகுதிகள், வீட்டுத்தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப்பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன." (ப.16)

"...கீழடி சங்க கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகும். இங்கு கிடைத்த சான்றுகள் சங்க கால மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் நமக்கு உணர்த்துகிறது....இப்பண்பாடானது கி.மு.6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதால், சிந்துச்சமவெளி நாகரிகத்திற்கு இணையாகவே கீழடி நாகரிகத்தைக் கருதலாம்." (பக்.24, 33)

"மூத்த தேவி சிற்பம் தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று வழிபாடு குறைந்த இத்தெய்வம் பல்லவர் காலத்தில் மூத்ததேவியாகவும், தாய்த்தெய்வமாகவும் வழிபாட்டு நிலையில் இருந்துள்ளது.....இந்த வகையான மூத்ததேவி சிற்பம் தமிழகத்தில் தற்போது பெரும்பான்மையான இடங்களில் ஊருக்கு வெளிப்புறங்களில் வைத்து வழிபடும் நிலையினைக் காணமுடிகிறது...." (ப.36)

"வேளாண்மையில் மரக்கால் என்பது நம்பிக்கை சார்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் அறுவடையின்போது தூற்றிக் குவித்த நெற்பொலியில் மரக்காலால் முதலில் நெல்லை அளந்து தெய்வத்திற்காக எடுத்து வைப்பர். அது நம்பிக்கை சார்ந்ததாகும்......" (ப.49)

"கடல் பயணத்தின்போது கலங்களை நிறுத்துவதற்கு நங்கூரங்கள் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரும்பு நங்கூரங்கள் பயன்படுத்துவதுபோல் தொடக்கக் காலத்தில் கல்லிலான நங்கூரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது." (ப.68)

"கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் உள்ள நாகூர், நாகபட்டினம், சுந்தரபாண்டியபட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன." (ப.90)

"சங்க காலம் தொட்டே கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழக மக்கள் கடலில் மூழ்கி முத்துக்குளித்து, முத்துக்களைச் சேகரித்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். முத்துக்குளித்தலில் பழந்தமிழர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் முத்துக்குளித்தல் எனும் தொழிலானது பிரதானத் தொழிலாக சங்க காலத்திலும் அதைத் தொடர்ந்து இடைக்லங்களிலும் இருந்துள்ளன." (ப.96)

நூலாசிரியர், களப்பணி மூலம் பெற்ற தகவல்களை உரிய இடங்களில் சிறப்பாகத் தந்துள்ளார்.  முந்தைய அறிஞர்களின் கூற்றுகள் உரிய சான்றாக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. அவை விவாதப்பொருளுக்கு அதிகம் துணை நிற்பதை அறிய முடிகிறது. பழந்தமிழரின் வாழ்வியலையும், வரலாற்றையும் பல்வேறு கோணங்களில் நோக்கி, வடிவம் தர பெருமுயற்சி மேற்கொண்டு, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்
ஆசிரியர் : முனைவர் ஆ. ராஜா (அலைபேசி 97869 19046)
பதிப்பகம் : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு,டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024 (044-23726882/98404 80232)