முகப்பு

18 December 2024

அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) : பட்டப்படிப்பு 1976-79

அண்மையில் கும்பகோணத்திற்குச் சென்றபோது அந்நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய, கல்லூரிக்கால நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இனிமையான நினைவுகளைத் தேடிச் சற்றே பின்னோக்கிச் செல்வோமா?

இளங்கலை (1976-79) படிக்கும்போது கல்லூரிக்கு
எடுத்துச்சென்ற கோப்பு அட்டை

கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் முதல் வகுப்பு தொடங்கி கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (P.U.C.,) வரை தமிழ் வழியிலேயே (Tamil medium) படித்தேன். புகுமுக வகுப்பில் தேர்ச்சி பெற்றபின்னர் இளங்கலைக்கு (B.A.,) விண்ணப்பிக்க வேண்டிய நேரம். அப்போது நண்பர்கள் இளங்கலை வகுப்பினை ஆங்கில வழி படித்தால்தான் வேலை எளிதாகக் கிடைக்கும் என்றனர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே இந்தியும்,  தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்க ஆரம்பித்தேன். 

ஆங்கிலவழிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன.

  • படித்துமுடித்தபின் வேலைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற ஆர்வம்.
  • வேலைக்கான விண்ணப்பத்தையே ஆங்கிலத்தில்தான் அனுப்பவேண்டும் என்ற நிலை. 
  • வேலையில் சேர்ந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
  • வேலை பெறும் அளவிற்கு தகுதியை உயர்த்திக்கொள்ளல்.
  • ஆங்கில வழியில் படிப்பது சிரமம் என்று நண்பர்கள் கூறிய சவாலை ஏற்றல்.
  • படித்த படிப்பிற்கு உள்ளூரில் வேலை கிடைக்குமா என்ற ஐயம்.
  • 1974இல் தொடங்கிய தட்டச்சு, அனுபவம், தி இந்து (ஆங்கிலம்) வாசிப்பனுபவம்.  
தமிழ்வழிப் படித்த மாணவருக்கு  ஆங்கில வழி வகுப்பில் இடம் கிடைக்குமா என்ற ஐயம் எழவே இளங்கலை பொருளாதாரம் ஆங்கில வழி (B.A. Economics/English medium) மற்றும் தமிழ் வழி (B.A. Economics/Tamil medium) என்ற வகையில் இரு விண்ணப்பங்கள் போட்டேன். இரண்டிற்கும் நேர்காணல் வந்தது. ஆங்கிலவழி வகுப்பில் சேர்ந்தேன்.

முதலாண்டு (Part I Tamil Paper I, Part II English Paper I, Ancillary: History of India). இரண்டாமாண்டு (Part I Tamil Paper II, Part II English Paper II, Ancillary: Outlines of Political Theory, Main: Economic Thought). மூன்றாமாண்டு (Main: Micro Economic Theory, Macro Economic Theory, Monetary and International Economics, Fiscal Economics, Indian Economic Development) என்ற வகையில் பாடங்கள் அமைந்தன. ஆரம்பத்தில் மாணவர்கள் ஆங்கிலவழி படிப்பதாகக் கூறுவர், ஆனால் தேர்வு தமிழில் எழுதுவர் பல நண்பர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிப்பது சிரமம் என்று சில ஆசிரியர்கள் கூறினர். புதிய நண்பர்களோ ஆங்கிலவழிப் படித்தால் தேர்ச்சி பெறமுடியாது என்றனர். முதல் ஒரு மாதம் எதுவுமே புரியவில்லை. வகுப்பிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்றுகூட நினைத்ததுண்டு. பொறுமையாக ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தபோது சற்றுப் புரிய ஆரம்பித்தது. கல்லூரியில் இளங்கலை படிக்கும்போது அழகான கோப்பு அட்டையை எடுத்துச்சென்றேன். தாளை வாங்கி அதில் அடுக்கிவைத்துக்கொள்வேன். புல்ஸ்கேப் (fool's cap) தாளில் மூலையில் ஒரு துளையிட்டு (Single punch hole, inserting tag) பாடவாரியாகப் பிரித்துக்கொண்டு குறிப்பெடுத்துக்கொள்வேன். சமயத்தில் சுருக்கெழுத்திலும்கூட (English  shorthand) குறித்துக்கொள்வேன். அப்போதே ஆசிரியர்கள் சுருக்கெழுத்திலேயே குறிப்பெடுப்பதை வியப்போடு பாராட்டினர். வீட்டில் வந்தபின் அந்தந்த பாடத்திற்குரிய தாள்களை தனியாகக் கோர்த்துவைப்பேன். இவ்வாறு வகுப்பு நடக்கும்போது நான் எடுத்து பாதுகாத்த குறிப்புகள் தேர்வுக்காலத்தில் எனக்கு அதிகம் உதவின.

கல்லூரி நூலகத்தில் சென்று பாடங்களுக்கான (Source books for the Main subject and ancillary subjects) நூல்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். சில நூல்களை சாத்தாரத்தெரு மூலையிலும், டவுன் ஹைஸ்கூல் எதிரிலும் உள்ள பழைய புத்தகக்கடைகளில் குறைவான விலைக்கு வாங்கினேன். பெரிய நூல்களாக அவை இருந்தன. தலைப்புகள், உள் தலைப்புகள், தேவையான இடங்களில் படங்கள் என்ற வகையில் பிரமிப்பை உண்டாக்கின. பல சொற்கள் புதியனவாக இருந்தன. 

தி இந்து ஆங்கில நாளிதழை வாசிக்க ஆரம்பித்த அக்காலகட்டத்தில் முதலில் எளிதாக உள்ளவற்றைப் படித்துவிட்டு, பின்னர் சற்று சிரமமானவற்றைப் படிப்பேன். அதே உத்தியைக் கொண்டு பாடங்களைப் படித்தேன். நான் எடுத்த நூல்களில் எனக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளைக் கொண்ட பாடங்களை முதலில் படிக்க ஆரம்பித்து, பின்னர் மற்றவற்றைத் தொடர்ந்தேன். சில சமயங்களில் ஆசிரியர் கூறுகின்ற, அப்போதுதான் முதன்முதலாக அறிந்த, ஆங்கிலச்சொற்களைக் குறித்துக்கொண்டேன். இந்த முறை மூலமாக ஒவ்வொரு நாளும் புதிய சொற்களையும், அவற்றுக்கான பொருளையும் அறிய ஆரம்பித்தேன். பாடங்களில் வரும் சில சொற்கள் (fiscal, inflation, budget, poverty line) தி இந்து நாளிதழில் இருப்பதைக் கண்டு வியந்தேன். பொருளாதாரம் தொடர்பான பல சொற்களை நாளிதழ் மூலமாக அறிந்தேன். படிக்கின்ற பாடத்தில் அவை வரும்போது மிகவும் வியந்துபோவேன். ஆங்கில மொழி  மீதான பயம் நீங்க ஆரம்பித்தது.  

முதலாண்டில் தமிழ், ஆங்கிலத்துடன் ஒரு துணைப்பாடமாக இந்திய வரலாறு ஆங்கிலத்தில் எழுதவேண்டியிருந்தது. அதனை ஆங்கிலத்தில் எப்படியும் எழுத முடிவெடுத்தேன். முதன்முதலாக மொழியல்லாத ஒரு பாடத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது அப்போதுதான். அதில் தேர்ச்சி பெற்ற துணிவு அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வாறே எழுதவும், வெற்றி பெறவும் உதவின.  புகுமுக வகுப்பில் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றதைப்போலவே பட்டப்படிப்பிலும் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றேன்.  

இவ்வாறாக மூன்றாண்டுகளை நிறைவு செய்தேன். தமிழ்வழிப் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அந்தந்த பாடத்திற்குரியனவற்றில் பயன்படுத்தப்படுகின்ற தமிழ் சொற்களையும் எளிமையாக அறியமுடிந்தது. தமிழ்வழிப் படித்திருந்தால் இன்னும் அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது.

கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குடும்பத்தின் இயல்பு நிலை அதிகம் பாதிக்கப்பட்டது. முதலாண்டில் மாமாவும் (அப்பாவின் தங்கையின் கணவர்), இரண்டாம் ஆண்டில் தாத்தாவும் (அப்பாவின் அப்பா), மூன்றாம் ஆண்டில் அப்பாவும் இயற்கையெய்தனர். இடி மேல் இடி. எங்கள் தாத்தாவுக்கு (அவர் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்த அவருடைய மைத்துனரின்) கடையிலிருந்து வந்துகொண்டிருந்த உதவிப்பணம் நின்றது. நாங்கள் அனைவரும் அனாதையானது போல் உணர்ந்தோம். வீடு மட்டுமே சொத்து. மற்றபடி வருமானம் எதுவுமில்லை. எங்கள் அம்மா வீட்டில் மேலும் சில பகுதிகளை வாடகைக்குவிட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல்.  

இவ்வாறான சூழலில் நான் பல இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை இறந்தபோது வந்திருந்த எங்கள் சிறிய தாத்தாவின் மருமகன் என் கல்வித்தகுதிகளைக் கேட்டபின்  சென்னையில் விடுப்புப்பணியிடத்தில் (leave vacancy) நான் பணியில் சேர உதவினார்.  இளங்கலை தேர்வு முடிவு எதிர்பார்த்த நிலையில் ஆங்கிலத்தட்டச்சு உயர்நிலை, தமிழ்த் தட்டச்சு உயர்நிலை, ஆங்கிலச்சுருக்கெழுத்து கீழ்நிலை, இந்தி பிராத்மிக் தேர்ச்சி ஆகியவையே எனக்கு அப்போது வேலை கிடைக்க உதவியது. இளங்கலை மட்டுமே படித்திருந்தால் நான் அதிகம் சிரமப்படவேண்டியிருந்திருக்கும்.  நான் சேர்ந்த நிறுவனத்தில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், நான் அப்போது பெற்றிருந்த பிற தகுதிகள் அங்கு நான் சிறப்பாகப் பணியாற்ற உதவியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.   

இக்காலகட்டத்தில்தான் ஏதோ ஒரு பாடப்பிரிவிற்காக முதன்முதலில் மாணவிகள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். 

வகுப்பு நண்பர் ஜெனத்தீன்ராஜ், மாணவர் தலைவராகப் போட்டியிட்டபோது அவருக்கு வாக்குக் கேட்டோம்.

முதலாண்டில் ஒரு ஆசிரியை (Fiscal Economics) ஆறு வகுப்புகள் மட்டும் எடுத்தார். மற்றபடி அனைவரும் ஆசிரியர்களே.

ப்ளானிங் பார்ம் (Planning Forum) என்ற அமைப்பில் நானும் நண்பர் சந்திரசேகரும் போட்டியிட்டு இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்கினைப் பெற குலுக்கல் முறையில் அவர் தலைவராகவும், நான் துணைத்தலைவராகவும் செயல்பட்டோம். இத்தேர்தலுக்கான நோட்டீசை நாங்கள் இருவருமே சென்று தனித்தனியாக அச்சடிக்கக் கேட்டு, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் இருந்த கலாநிதி பிரஸில் தந்தோம். 

சம்பிரதி வைத்தியநாதன்தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு நடந்தே சென்றேன். சைக்கிள், ரேடியோ போன்றவை எங்களுக்கு மிகவும் தூரம். 

இளங்கலை வணிகம் படித்த நண்பர் திரு கே.எஸ்.சந்தானகிருஷ்ணனின் நட்பு கிடைத்தது இக்காலகட்டத்தில்தான்.

அரங்கேற்றம், அவள் ஒரு தொடங்கதை,  அபூர்வ ராகங்கள் படங்களில் ஆரம்பித்த பாலசந்தர் திரைப்படங்களின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து இன்னும் அதிகமானது.

அதற்கெல்லாம் மேலாக என் வாழ்வில் இக்காலகட்டம் போதிய கல்வித்தகுதி, துணைத்தகுதி, தன் காலில் நிற்றல், யாரையும் சாரா பண்பு, போன்ற பல அனுபவங்களைத் தந்தது. 

இது தொடர்பான முந்தைய பதிவு.


அரசினர் கலைக்கல்லூரி : புகுமுக வகுப்பு 1975-76

மனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-79)

01 December 2024

வரலாற்றில் ஐயம்பேட்டை : என். செல்வராஜ்

திரு என். செல்வராஜ், வரலாற்றில் ஐயம்பேட்டை என்ற நூலில்  மண்ணின் பெருமைகளை சோழர் காலம், தஞ்சை நாயக்கர் காலம், தஞ்சை மராட்டியர் காலம் ஆகிய காலகட்டங்களில் தொடங்கிப் பல சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார்.  



ஐயம்பேட்டையில் உள்ள 45 கோயில்களைப் பட்டியலிட்டுள்ளதோடு சில கோயில்கள், அங்கு நடைபெறும் விழாக்கள், சக்கரவாகேஸ்வரர் சப்தஸ்தானம், ஸ்ரீ கிருஷ்ணன் பஜனைக்கூடம் ஆகியவற்றைப் பற்றியும், சமூகத்தினர் என்ற வகையில் பட்டு சாலிய சமூகத்தினர், சௌராஷ்டிர சமூகத்தினர், குதினி நெசவுக்கலைஞர்கள் மற்றும் பிற சமூகத்தினரைப் பற்றியும் விவாதிக்கிறார்.

ஆற்காடு நவாப்-சாவடி நாயக்கர் மோதல், உடையார்பாளையம்-ஜமீன் சாவடி நாயக்கர் மோதல், அண்ணன்மார் சுவாமிகள்-ஐயம்பேட்டை தொடர்பு, ஐயம்பேட்டையில் சத்ரபதி சிவாஜியின் பட்டத்தரசி, ஆற்காடு நவாப்-மன்னர் பிரதாம சிம்மர் போரும் சமாதானமும் என்ற தலைப்புகளின் மூலமாக வாசகர்களை அக்காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். 

ஆச்சார்யன் பெரியநம்பிகள் திருவரசு, ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ பதரா மன்னார் ஆர்ய பாகவத ஸ்வாமிகள், ஸ்ரீ வேங்கடஸுரி ஸ்வாமிகள், ஸ்ரீமத் வேங்கட ரமண பாகவதர்,  சத்குரு ஸ்ரீ தியாக பிரம்மம், பெங்களூர் நாகரத்தினம்மா, சூலமங்கலம் ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் ஆகியோரைப் பற்றிய பதிவுகள் மூலமாக பல அரிய செய்திகளைப் பகிர்கிறார். 

ஐயம்பேட்டை அரண்மனை, சோழர் காலப் புத்த செப்புத்திருமேனி,  விஜயராகவ நாயக்கர் காலச்செப்பேடு,  நில விற்பனைச் செப்பேட்டு ஆவணம் போன்ற வரலாற்றுச் சான்றுகளை ஆராய்வதுடன், உப்பு சத்தியாகிரகத்தில் ஐயம்பேட்டையின் பங்கினை நினைவுகூர்கிறார். இந்நூலிலிருந்து சில குறிப்பிடத்தக்கப் பகுதிகளைக் காண்போம். 

"…ஐயம்பேட்டை வரலாற்றுப் பின்னணியை நாம் சூலமங்கலத்தின் வாயிலாகத் தான் அறியவேண்டியுள்ளது. காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் தென் கரை கிராமமான சூலமங்கலத்தின் வட பகுதி, குடமுருட்டி ஆற்றின் தென் கரையை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகியவை காலங்கள் தோறும் எவ்வாறு பெயர் மாற்றம் பெற்றன என்பதில்தான் ஐயம்பேட்டை வரலாறும் உள்ளடங்கியுள்ளது. " (.32)

"......சூலமங்கலம் கிராமத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதி இராமச்சந்திரபுரம் ஆகப் புது அவதாரம் எடுத்து, வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் கண்ட கிராமமாக மாறிப்போனது…இராமச்சந்திரபுரத்தில் சில காலம் வாசம் செய்த செவ்வப்ப நாயக்கர் குடும்பம், தஞ்சையில் அரண்மனை,  கோட்டை கொத்தளங்கள், அகழி சீரமைப்புப்பணிகள்  பூர்த்தி  சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை." (.37)

"செவ்வப்ப நாயக்கர் தன்னுடைய ராஜகுரு கோவிந்தய்யன் நினைவாக இவ்வூருக்குத் தென்மேற்கில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு ஐயன்பேட்டை என்று பெயரிட்டார். இவ்வூர் வணிகப்பெருவழியில் இருந்ததால் ஐயன் என்பதோடு பேட்டை இணைக்கப்பட்டு ஐய(ன்)ம்பேட்டை ஆயிற்று." (.49)

"…….ஐயம்பேட்டையின் வரலாறு ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமஸ்வாமி ஆலயத்தினை மையமாகக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்….ஐயம்பேட்டை சிறு நகரிலுள்ள கோயில்களில் இவ்வாலயமே காலத்தால் முற்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தின் பின்னணியில் இரண்டு அரச வம்சாவளியினர் வரலாறும் அடங்கியுள்ளது." (.121)

"திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்றாக ஐயம்பேட்டை இல்லை. இருப்பினும் ஏழூர்ப் பல்லக்குத் திருவிழாவில் பங்கு வகிக்கும் சிவாலயம் ஐயம்பேட்டை ஆற்றங்கரைக்கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்." (.140)

"ஐயம்பேட்டையின் அடையாளமாக இருந்த அரண்மனை, தர்பார் மண்டபம் பழமையின் அடையாளமாகவும் இருந்த குளம் ஆகியவை எல்லாம் சுவடழிந்துப் போய்விட்டன. பெயர் சொல்லிக்கொண்டு இருப்பது பள்ளிக்கூடம் உள்ள மண்டபத்தின் 25 சதவிகிதம் மட்டுமே. அதற்கு என்ன காலக்கெடு, யார் வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?" (.227)

"ஆற்றங்கரை சந்தியா மண்டபத்திற்கு அருகில் ஒரு துளசி மாடத்தையும், அதில் இருந்த கல்வெட்டுப் பலகையையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நூலாசிரியர் கண்டறிந்தார்….ஐயம்பேட்டைப் பகுதி கோயில்கள் எதிலும் பழமையான கல்வெட்டுகள் காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டின் இக்கல்வெட்டே மிகப் பழமையான ஒரே ஒரு கல்வெட்டு என்ற பெருமையும் இதற்கு உண்டு." (.251)

இந்நூல் ஐயம்பேட்டையைப் பற்றிய ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது. சில வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை இளந்தலைமுறையினருக்கு உதாரணமாக அமையும் வகையில் நூலாசிரியர் முன்வைத்துள்ளார். பொதுமக்கள் மட்டுமின்றி ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெருந்துணையாக உள்ள இந்நூலைப் படைத்துள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : வரலாற்றில் ஐயம்பேட்டை
ஆசிரியர் : என். செல்வராஜ் (அலைபேசி 94434 48159)
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள்ஸ் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014 , மின்னஞ்சல் support@nhm.in, தொலைபேசி +91-44-4200-9603, அலைபேசி +91-95000 45609
ஆண்டு : 2024
விலை : ரூ.325

நன்றி : புக் டே தளம். நூல் அறிமுகம்

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்




தினமணி, 9 டிசம்பர் 2024

தினத்தந்தி, 9 டிசம்பர் 2024

தினமலர், 10 டிசம்பர் 2024


திரு அய்யம்பேட்டை என்.செல்வராஜ் நூல் வெளியீட்டு விழா

10 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.