முகப்பு

14 September 2014

கோயில் உலா : செப்டம்பர் 2014

நேற்று (13.9.2014) தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் காவிரியின் தென்கரைத் தலங்களில் முதல் ஐந்து தலங்களையும், மங்களாசாசனம் பெற்ற வைணவத் தலங்களில் இரண்டாவது தலத்தையும் காணும் பேறு பெற்றோம். விடியற்காலையில் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றோம். 


காலை ரங்கநாதர் கோயில் கோபுர தரிசனம்
காலை உணவிற்கான ஏற்பாடு

அங்கே கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஒவ்வொரு கோயிலாகச் செல்ல ஆரம்பித்தோம். 
கடம்பவனேஸ்வரர் கோயில் முகப்பு


1)கடம்பந்துறை (கடம்பவனேசுவரர்/முற்றிலாமுலையம்மை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் இரண்டாவது தலமான கடம்பந்துறை எனப்படும் கடம்பவனேசுவரர் கோயில் திருச்சி-ஈரோடு சாலையில், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில அமைந்துள்ளது. வாயிலில் டிண்டிதேவர், முண்டிதேவர் வாயிற்காப்போராக உள்ளனர். கோயிலுக்கு நுழையும்போது அம்பாள் சன்னதி உள்ளது. அதைத் தாண்டித்தான் மூலவரை தரிசிக்கச் செல்லவேண்டும். கோயிலில் அழகான தேர் உள்ளது. காலையில் கடம்பந்துறை, நண்பகல் வாட்போக்கி (ஐயர்மலை) மாலையில் ஈங்கோய்மலையைத் தரிசித்தல் நலம் என்று கூறினர். முந்தைய கோயில் உலாவின் நாம் ஈங்கோய்மலை சென்றுவந்த நிலையில் தற்போது கடம்பந்துறையும், வாட்போக்கியும் செல்லும் அரிய பேறினைப் பெற்றதை நினைத்தபோது மனம் நிறைவாக இருந்தது. 

ஐயர்மலை
ஐயர்மலை அடிவாரம்
ஐயர்மலையில் ஏறிவரும் பக்தர்கள்

2)ஐயர்மலை (ரத்னகிரீஸ்வரர்/சுரும்பார்குழலி/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் முதல் தலமான ஐயர்மலை எனப்படும் வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது. இதற்கு நேர் எதிராக ஈங்கோய்மலை (வடகரைத்தலம்) உள்ளது. 1140 படிகளை ஏறி மலை உச்சியில் உள்ள இறைவனைத் தரிசிக்கவேண்டும். அடிவாரத்தில் பிராதன விநாயகர் உள்ளார். கொடி மரம், ரிஷபம் உள்ளன. தொடர்ந்து அங்கிருந்து மலைக்கு ஏறவேண்டும். 400 படிகள் ஏறியதும் எனக்கு முடியாத நிலையில் தொடர முடியவில்லை. தினமும் காவிரியிலிருந்து அபிடேகத்திற்கு நீர் கொண்டுவருவதாகக் கூறினர். தலையில் குடத்தில் நீரை அநாயசமாக ஒருவர் எடுத்துச்சென்றதைக் காணமுடிந்தது. இறையருள் இன்றி இப்பணியை மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை உணரமுடிந்தது.  மலையேறிய அனுபவத்தை நண்பர்கள் பகிர்ந்து கொண்டபின் அங்கிருந்து திருப்பராய்த்துறை நோக்கிக் கிளம்பினோம். 


திருப்பராய்த்துறை கோயில் கோபுரம்
3)திருப்பராய்த்துறை (பராய்த்துறைநாதர்/பசும்பொன்மயிலாம்பிகை/சம்பந்தர், அப்பர் பாடல்)
திருப்பராய்த்துறையில் கோயில் மண்டபத்தில் மதிய உணவை உண்டபின் அங்கு ஓய்வெடுத்தோம். மாலை கோயில் திறக்கப்பட்டபின்னர் கோயிலுக்குச் சென்றோம். தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் மூன்றாவது தலமான தலமான திருப்பராய்த்துறை திருச்சி-கரூர் சாலையில் திருச்சியிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகா வனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்களுக்கு அருள் புரிந்த தலம்.  இக்கோயிலுக்கு அருகில் காவிரி அகண்ட காவிரியாக ஓடுகிறது. இவ்வூரை அடுத்து முக்கொம்பில் மூன்றாகப் பிரிகிறது. லிங்கத்திருமேனி மீது புரட்டாசி 18ஆம் நாளன்று சூரியக்கதிர்கள் விழுமென்று கூறினர். இக்கோயிலில் காணப்பட்ட வரலாற்றுக்குறிப்பில் சப்தஸ்தானங்களில் இத்தலம் ஒன்று என்ற குறிப்பு உள்ளது. திருச்சி சப்தஸ்தானங்களாக திருவானைக்கா, திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, திருச்செந்துறை, திருப்பாச்சிலாச்சிராமம், திருவேதிக்குடி, திருஆலந்துறை ஆகிய தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  திருச்சியில் சப்தஸ்தானம் உள்ளது என்பதை தற்போதுதான் அறியமுடிந்தது.

கற்குடி உச்சிநாதர் கோயில் கோபுரம்
 4)கற்குடி (உச்சிநாதர்/மைவிழியம்மை, பாலாம்பிகை/மூவர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் நான்காவது  தலமான கற்கடி தற்போது உய்யக்கொண்டான்மலை என அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் இரு அம்பிகைகளின் சன்னதிகள் உள்ளன. கல்லில் மலையில் இறைவன் குடியிருப்பதால் இத்தலம் கற்குடி என்றழைக்கப்படுகிறது.


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் கோபுரம்
5)உறையூர் (அழகியமணவாளன்/கமலவல்லி நாச்சியார்)
இவ்வுலாவில் நாங்கள் பார்த்த ஒரே வைணவக்கோயில் உறையூரில் உள்ள  கமலவல்லி நாச்சியார் கோயில் எனப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இரண்டாவது தலம் என்ற சிறப்பினை உடையது.  மூலவரான அழகிய மணவாளன் நின்ற கோலத்தில் உள்ளார். அவருக்கு அருகே நாச்சியார் திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்தகோலத்தில் உள்ளார். நாச்சியாருக்கு தனியாகச் சன்னதி இக்கோயிலில் இல்லை. நம்மாழ்வார் சன்னதி, திருப்பாணாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் சன்னதியில் அரிய ஓவியங்கள் உள்ளன. அவை நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் காணப்படும் பாடல்களிலிருந்து அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை எனக் கோயிலில் கூறினர்.


உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் திரு ஜெயபால் சொற்பொழிவு
6)முக்கீச்சுரம் (பஞ்சவர்ணேசுவரர்/காந்திமதி/சம்பந்தர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் ஐந்தாவது தலம் முக்கீச்சுரம் ஆகும். திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் நான்காவது  தலமான கற்கடி தற்போது உய்யக்கொண்டான்மலை என அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் இரு அம்பிகைகளின் சன்னதிகள் உள்ளன. கோயிலில் வாரவழிபாட்டுக்குழுவினர் தேவாரம் ஓதிக்கொண்டிருந்தனர். அங்கு திரு ஜெயபால் அவர்களை சிறிது நேரம் பேசக்கூறியதும் அவர் சைவத்தின் பெருமையையும், கோயில்களில் வழிபாட்டு மன்றம் நடத்துவதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். கோயிலுக்கு வந்த உறையூர் மக்களுக்கு மட்டுமன்றி உடன் சென்ற எங்களுக்கும் அப்பொழிவு நற்பொழிவாக அமைந்தது. இரவு 8.30 மணிக்கு மேல் ஆகவே தஞ்சாவூரை நோக்கிக் கிளம்பினோம். 


துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, சிவ.ஆ.பக்தவச்சலம், 42, சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 632 602, 2005, தொலைபேசி  04171-222946

108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருக்கு நன்றி.

16 comments:

  1. அருமையான தெய்வீகப் பயணத்தினை தங்களுடன் சேர்ந்தே பயணத்த ஓர் உணர்வு
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. தெய்வீக மனம் கமழும் அற்புதமாக பகிர்வு. எல்லாக் கோயில்களுக்கும் நேரில் சென்று வந்தது போன்ற திருப்தியை அளித்தது. பாராட்டுகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  3. மிகவும் நல்ல உபயோகமான ஆன்மீகப் பயணக் கட்டுரை! ஐயா! தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. அன்பின் ஐயா..
    கோபுர தரிசனம்.. பாப விநாசனம்..
    சிறப்புடைய திருக்கோயில்கள் தரிசனம்..
    தங்களுடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. திருச்சி பகுதியில் ஆன்மீகப் பயணம்! அருமையான படங்கள்!
    தெrரிந்து இருந்தால் திருச்சி கம்பசன்பேட்டை வந்து உங்கள் அனைவரையும் வரவேற்று இருப்பேன்.! !

    ReplyDelete
  6. அரங்கன் கோயில் ஒன்றினைத் தான் நேரில் தரிசித்திருக்கிறேன். பிற கோயில்களைத் தங்கள் தயவால் இன்று தரிசிக்க முடிந்தது. மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. Very good experience of 5 temples with nice photographs. Congrats. Keep it up.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பகிர்வின் வழி இறைவனை தரிசித்த உணர்வு..... ஐயா
    அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அனைத்தும் மிகச்சிறப்பான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. உறையூர் நாச்சியார் கோவில் சென்று வந்திருக்கிறோம். உறையூருக்கு முக்கீச்சுரம் என்னும் பெயர் தகவல் இதுவரை தெரியாதது. சிறப்பான தகவல்களுடன் ஒரு திருக்கோவில்கள் சுற்றுலா உங்களிப்பதிவின் மூலம். நன்றி.

    ReplyDelete
  11. அருமையான பக்தி பயண அனுபவம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தாமதமான வருகைக்கு மன்னிக்க...
    கூடவே வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் முனைவரே....

    ReplyDelete
  13. உங்களோடு பயணம் செய்த உணர்வு வாழ்த்துகள்

    ReplyDelete
  14. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete