முகப்பு

28 September 2014

விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு

6.7.2014 அன்று விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கி இன்று 100ஆவது பதிவு நிறைவு. அதனைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இப்பணியில் துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.

பிறந்த மண்ணான கும்பகோணம், வளர்ந்து பார்த்த இடங்களான கோயில்கள், படித்த இலக்கியங்கள், நமது கலை, பண்பாடு போன்றவை தொடர்பாக அவ்வப்போது மனதில் படுவனவற்றை எழுதவேண்டும் என்பதே எனது ஆரம்ப எண்ணமாக இருந்தது. அந்த அடிப்படையில் எழுத ஆரம்பித்து 100 நாள்களுக்குள் 100 பதிவுகளைப் பதியசெய்ததை நினைக்கும்போது வியப்பாக உள்ளது. 

ஆரம்பத்தில் பதிவுகளைப் பதிய ஆரம்பிக்கும்போது நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பல தவறுகளையும், மாற்றங்களையும் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. விக்கியுள்ள நண்பர்கள் என்னை நெறிப்படுத்தி செல்லும் நிலையில் ஓரளவு பக்குவம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது.

திரு முத்துநிலவன் அவர்கள் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்த ஒரு பயிற்சிப்பட்டறை விக்கியில் நான் எழுத ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இதில் கலந்துகொள்ள தஞ்சாவூரிலிருந்து     நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் சென்றிருந்தோம்.  பிரின்சுஎன்ஆர்சர்மா விக்கிபீடியாவைப் பற்றி தந்த அறிமுகம் என்னுள் ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. திரு முரளீதரன் மற்றும் திரு திண்டுக்கல் தனபாலன் வலைப்பூக்களைப் பற்றி அருமையான விளக்கவுரை தந்தனர். 

அவரது அந்தப் பேச்சு என் விக்கிபீடியாவின் மீதான என் ஈர்ப்பை அதிகப்படுத்தியது. பௌத்தம் தொடர்பாக ஒரு வலைப்பூவிலும், பிற பொருண்மைகள் தொடர்பாக இவ்வலைபூவிலும் எழுதிவரும் நிலையில் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிப்பது, தொடர்வது சாத்தியமாகுமா என்ற ஒரு குழப்பம் மனதில் இருந்தது. நாம் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், பதியவும் விக்கிபீடியா உதவுகிறது என்ற நிலையில் தொடர்ந்து எழுதுவது சாத்தியமாயிற்று. தொடர்ந்து நான் எழுதும்போது எனது எழுத்துக்களை நெறிப்படுத்தி, அவ்வப்போது உரிய கருத்துக்களைக் கூறி தெளிவுபடுத்தி வரும் விக்கிபீடியா நண்பர்களுக்கு என் நன்றி. 

விக்கிபீடியாவிற்கு வலைப்பூ மூலமாகவே அறிமுகமான நிலையில் என் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அனைத்திற்கும் மேலாக நான் பணியாற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக நண்பர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றி.

என் பணிக்குத் துணையாக இருக்கும் என் மனைவி திருமதி பாக்கியவதிக்கு என் நன்றி.
----------------------------------------------------------------------------------------------------
 விக்கிபீடியாவில் பதிவு
ஆரம்பிக்கப்பட்டவை :
http://tools.wmflabs.org/xtools/pages/?user=%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&lang=ta&wiki=wikipedia&namespace=0&redirects=noredirects

பயனர்:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

பௌத்த ஆய்வாளர் :
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE._%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

14 September 2014

கோயில் உலா : செப்டம்பர் 2014

நேற்று (13.9.2014) தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் காவிரியின் தென்கரைத் தலங்களில் முதல் ஐந்து தலங்களையும், மங்களாசாசனம் பெற்ற வைணவத் தலங்களில் இரண்டாவது தலத்தையும் காணும் பேறு பெற்றோம். விடியற்காலையில் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றோம். 


காலை ரங்கநாதர் கோயில் கோபுர தரிசனம்
காலை உணவிற்கான ஏற்பாடு

அங்கே கம்பரசம்பேட்டை தடுப்பணை அருகே காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஒவ்வொரு கோயிலாகச் செல்ல ஆரம்பித்தோம். 
கடம்பவனேஸ்வரர் கோயில் முகப்பு


1)கடம்பந்துறை (கடம்பவனேசுவரர்/முற்றிலாமுலையம்மை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் இரண்டாவது தலமான கடம்பந்துறை எனப்படும் கடம்பவனேசுவரர் கோயில் திருச்சி-ஈரோடு சாலையில், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில அமைந்துள்ளது. வாயிலில் டிண்டிதேவர், முண்டிதேவர் வாயிற்காப்போராக உள்ளனர். கோயிலுக்கு நுழையும்போது அம்பாள் சன்னதி உள்ளது. அதைத் தாண்டித்தான் மூலவரை தரிசிக்கச் செல்லவேண்டும். கோயிலில் அழகான தேர் உள்ளது. காலையில் கடம்பந்துறை, நண்பகல் வாட்போக்கி (ஐயர்மலை) மாலையில் ஈங்கோய்மலையைத் தரிசித்தல் நலம் என்று கூறினர். முந்தைய கோயில் உலாவின் நாம் ஈங்கோய்மலை சென்றுவந்த நிலையில் தற்போது கடம்பந்துறையும், வாட்போக்கியும் செல்லும் அரிய பேறினைப் பெற்றதை நினைத்தபோது மனம் நிறைவாக இருந்தது. 

ஐயர்மலை
ஐயர்மலை அடிவாரம்
ஐயர்மலையில் ஏறிவரும் பக்தர்கள்

2)ஐயர்மலை (ரத்னகிரீஸ்வரர்/சுரும்பார்குழலி/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் முதல் தலமான ஐயர்மலை எனப்படும் வாட்போக்கி ரத்னகிரீஸ்வரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது. இதற்கு நேர் எதிராக ஈங்கோய்மலை (வடகரைத்தலம்) உள்ளது. 1140 படிகளை ஏறி மலை உச்சியில் உள்ள இறைவனைத் தரிசிக்கவேண்டும். அடிவாரத்தில் பிராதன விநாயகர் உள்ளார். கொடி மரம், ரிஷபம் உள்ளன. தொடர்ந்து அங்கிருந்து மலைக்கு ஏறவேண்டும். 400 படிகள் ஏறியதும் எனக்கு முடியாத நிலையில் தொடர முடியவில்லை. தினமும் காவிரியிலிருந்து அபிடேகத்திற்கு நீர் கொண்டுவருவதாகக் கூறினர். தலையில் குடத்தில் நீரை அநாயசமாக ஒருவர் எடுத்துச்சென்றதைக் காணமுடிந்தது. இறையருள் இன்றி இப்பணியை மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை உணரமுடிந்தது.  மலையேறிய அனுபவத்தை நண்பர்கள் பகிர்ந்து கொண்டபின் அங்கிருந்து திருப்பராய்த்துறை நோக்கிக் கிளம்பினோம். 


திருப்பராய்த்துறை கோயில் கோபுரம்
3)திருப்பராய்த்துறை (பராய்த்துறைநாதர்/பசும்பொன்மயிலாம்பிகை/சம்பந்தர், அப்பர் பாடல்)
திருப்பராய்த்துறையில் கோயில் மண்டபத்தில் மதிய உணவை உண்டபின் அங்கு ஓய்வெடுத்தோம். மாலை கோயில் திறக்கப்பட்டபின்னர் கோயிலுக்குச் சென்றோம். தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் மூன்றாவது தலமான தலமான திருப்பராய்த்துறை திருச்சி-கரூர் சாலையில் திருச்சியிலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகா வனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்களுக்கு அருள் புரிந்த தலம்.  இக்கோயிலுக்கு அருகில் காவிரி அகண்ட காவிரியாக ஓடுகிறது. இவ்வூரை அடுத்து முக்கொம்பில் மூன்றாகப் பிரிகிறது. லிங்கத்திருமேனி மீது புரட்டாசி 18ஆம் நாளன்று சூரியக்கதிர்கள் விழுமென்று கூறினர். இக்கோயிலில் காணப்பட்ட வரலாற்றுக்குறிப்பில் சப்தஸ்தானங்களில் இத்தலம் ஒன்று என்ற குறிப்பு உள்ளது. திருச்சி சப்தஸ்தானங்களாக திருவானைக்கா, திருப்பராய்த்துறை, திருப்பைஞ்ஞீலி, திருச்செந்துறை, திருப்பாச்சிலாச்சிராமம், திருவேதிக்குடி, திருஆலந்துறை ஆகிய தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  திருச்சியில் சப்தஸ்தானம் உள்ளது என்பதை தற்போதுதான் அறியமுடிந்தது.

கற்குடி உச்சிநாதர் கோயில் கோபுரம்
 4)கற்குடி (உச்சிநாதர்/மைவிழியம்மை, பாலாம்பிகை/மூவர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் நான்காவது  தலமான கற்கடி தற்போது உய்யக்கொண்டான்மலை என அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் இரு அம்பிகைகளின் சன்னதிகள் உள்ளன. கல்லில் மலையில் இறைவன் குடியிருப்பதால் இத்தலம் கற்குடி என்றழைக்கப்படுகிறது.


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் கோபுரம்
5)உறையூர் (அழகியமணவாளன்/கமலவல்லி நாச்சியார்)
இவ்வுலாவில் நாங்கள் பார்த்த ஒரே வைணவக்கோயில் உறையூரில் உள்ள  கமலவல்லி நாச்சியார் கோயில் எனப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இரண்டாவது தலம் என்ற சிறப்பினை உடையது.  மூலவரான அழகிய மணவாளன் நின்ற கோலத்தில் உள்ளார். அவருக்கு அருகே நாச்சியார் திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்தகோலத்தில் உள்ளார். நாச்சியாருக்கு தனியாகச் சன்னதி இக்கோயிலில் இல்லை. நம்மாழ்வார் சன்னதி, திருப்பாணாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் சன்னதியில் அரிய ஓவியங்கள் உள்ளன. அவை நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் காணப்படும் பாடல்களிலிருந்து அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை எனக் கோயிலில் கூறினர்.


உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் திரு ஜெயபால் சொற்பொழிவு
6)முக்கீச்சுரம் (பஞ்சவர்ணேசுவரர்/காந்திமதி/சம்பந்தர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் ஐந்தாவது தலம் முக்கீச்சுரம் ஆகும். திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் நான்காவது  தலமான கற்கடி தற்போது உய்யக்கொண்டான்மலை என அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள இத்தலத்தில் இரு அம்பிகைகளின் சன்னதிகள் உள்ளன. கோயிலில் வாரவழிபாட்டுக்குழுவினர் தேவாரம் ஓதிக்கொண்டிருந்தனர். அங்கு திரு ஜெயபால் அவர்களை சிறிது நேரம் பேசக்கூறியதும் அவர் சைவத்தின் பெருமையையும், கோயில்களில் வழிபாட்டு மன்றம் நடத்துவதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். கோயிலுக்கு வந்த உறையூர் மக்களுக்கு மட்டுமன்றி உடன் சென்ற எங்களுக்கும் அப்பொழிவு நற்பொழிவாக அமைந்தது. இரவு 8.30 மணிக்கு மேல் ஆகவே தஞ்சாவூரை நோக்கிக் கிளம்பினோம். 


துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, சிவ.ஆ.பக்தவச்சலம், 42, சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 632 602, 2005, தொலைபேசி  04171-222946

108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருக்கு நன்றி.