முகப்பு

14 December 2014

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு

 தொண்டரடிப்பொடியாழ்வார்  அருளிய திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியைத் தொடர்ந்து திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (10 பாடல்கள்) மற்றும் மதுரகவியாழ்வார் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு (11 பாடல்கள்) ஆகிய இருவருடைய பாசுரங்களையும் அண்மையில் நிறைவு செய்தேன். இவ்விரு ஆழ்வார்களுடைய வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும், அவருடைய பாடல்களில் சிலவற்றைப் பொருளுடனும் வாசிப்போம்.

அமலனாதிபிரான்
பாணர் குலத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு பாடும்போது, பெருமாளுக்குத் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவர அங்குவந்த லோகசாரங்க மகாமுனிவர் இவரைக்கண்டு தூரப்போ என்று சொல்ல, கானத்திலாழ்ந்த இவருக்கு அச்சொல் காதில் விழவில்லை.  முனிவர் ஒரு கல்லை எடுத்து எறிய, அம்முகத்தில் பட்ட அடி நெஞ்சில் பட்டது. உறக்கம் இன்றி இருந்த முனிவர் கனவில் காட்சியளித்த அரங்கன் நமக்கு அந்தரங்கனான பாண் பெருமாளை நீர் தாழ்வாக நினையாமல் உன் தோளிலே ஏற்றிக்கொண்டு  நம்மிடம் அழைத்துவாரும் என்று கூற, அவரும் அவ்வாறே செய்தார். ஆழ்வாரும் கண்களாரக் கண்டு  திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து  அமலனாதிபிரான் என்ற திவ்யப்பிரபந்தத்தில் 10 பாடல்களைப் பாடினார்.
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான்; வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்;
கோர மாதவம் செய்தனன் கொல்?
அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது, அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(எண்.931)
 
மிகவும் பொறுக்கமுடியாத சுமையாகிற அனாதையான பாவங்களின் தொடர்பைத் தொலைத்து அதனால் பாவம் நீங்கப் பெற்ற அடியேனைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான் ஸ்ரீரங்கநாதன். இவ்வாறு செய்ததும் அல்லாமல் என் மனத்திலும் நுழைந்துவிட்டான். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு உறுப்பாக நான் உக்கிரமானதொரு தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ? அறிகினேன் இல்லை. ஸ்ரீரங்கநாதனுடைய பிராட்டியும், முத்தாரத்தையும் உடையதான அத்திருமார்பு அன்றோ அடியவனான என்னை  அடிமைப்படுத்திக் கொண்டது.

கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தைக் கவர்ந்ததுவே! 
(எண்.933)
 
திருவரங்கன் தனது திருக்கைகளில் சுழியை உடைய சங்கையும், தீ வீசுகின்ற திருவாழியையும் ஏந்தி நிற்கின்றான். அவனுடைய திருமேனி பெரியதொரு மலை போன்றது. அவன் திருத்துழாய்ப் பரிமளம் வீசும் திருமுடியை உடையவன். எனக்கு சுவாமி. அரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன். திருவனந்தானாகிய திருப்பள்ளியின் மீது சாய்ந்து கிடக்கின்றான். ஆச்சரிய பூதனான அவனது சிவந்த திருப்பவளவாய் பெண்களுடைய சிவந்த அதரத்திலே ஈடுபட்டிருந்த என் மனத்தைப் தன் பக்கலிலே இழுத்துக் கொண்டது. 
 


 


மதுரகவியாழ்வார் 

ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் பிராமண குலத்தில் பிறந்த இவர் அனைத்துக்கலைகளையும் கற்று மதுரகவி என்னும் பெயர் பெற்றார். ஒரு நாள் திருக்கோளூர் பெருமானைத் திசை நோக்கித் தொழக் கருதித் தெற்குத் திக்கில் கண் செலுத்தியபோது பேரொளி இவர் கண்ணுக்குப் புலப்பட, அது எங்கிருந்து வருகிறது என்று அறிந்து ஆராய்ந்த அளவில் திருப்புளி ஆழ்வார் அடியில்  விளங்கிய நம்மாழ்வாரைக் கண்டு அவருக்குக் கைங்கர்யம் செய்தார். அவருக்காகத் தான் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தத்தையும், பிற பிரபந்தங்களையும் இசையோடு பாடிப் பரப்பினார்.


கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே. 
(எண்.937)

உடம்பிலே உறுத்தும்படி பல முடிகளை உடையதாய், உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய், காட்டப் போதாதபடி சிறிதாயிருக்கிற கயிற்றினால் யசோதைப் பிராட்டித் தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெரிய ஆச்சர்ய சக்தியை உடையவன். எனக்குச் சுவாமியான எம்பெருமானை விட்டு ஆழ்வானை அணுகி அடைந்து, தெற்குத் திசையிலுள்ள ஆழ்வார் என்று அவரது திருநாமத்தைச் சொன்னால் மிக இனிமைதாய் இருக்கும். என் ஒருவனுடைய நாவுக்கே அமுதம் ஊறும்.


அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
(எண்.947)

அடியாரிடம் அன்பு பூண்ட எம்பெருமானை அடைந்த எல்லா பாகவதர் பக்கலிலும் பக்தியுடையவரான நம்மாழ்வார் விஷயத்திலே பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி அருள் செய்த இந்தத் திவ்வியப் பிரபந்தத்தைத் தங்களுக்குத் தஞ்சமாக நினைத்திருப்பவர்களுக்கு இடம் பரமபதம்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மூலமும் தெளிவுரையும், முதல் தொகுதி, உரையாசிரியர் முனைவர் இரா.வ.கமலக்கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2011, (நான்கு தொகுதிகள்) ரூ.1200, தொலைபேசி: 9941863542, 9094963125, 9380630192, 28144995, 28140347, 43502995

இதுவரை நாம் நிறைவு செய்த பிரபந்தங்கள்
 பெரியாழ்வார் திருமொழி

25 comments:

  1. அருமையான பொருள் விளக்கம்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடல்கள், ஆழவார்கள் பற்றி அழகாய் பகிர்ந்து கொண்டைமைக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமை .. அய்யா

    ReplyDelete
  4. திவ்யப் பிரபந்த பாடல்களையும் திருப்பாணாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகிய நல்லடியார்களைப் பற்றியும் இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி..

    ஓம் நமோ நாராயணாய!..

    ReplyDelete
  5. பாசுரமும் பொருள் விளக்கமும் அருமை ஐயா! நன்றி!

    ReplyDelete
  6. பொருள் விளக்கத்தால் புரிந்து கொண்டேன். ஐயா..

    ReplyDelete
  7. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பற்றி அவ்வளவாக தெரியாது. இன்று தங்களால் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. ஆழ்வார்கள் கலந்து தந்த சுவையான தேனமுது பாடல்களை படித்தேன்; சுவைத்தேன்.

    ReplyDelete
  9. நல்ல பாடல்கள். வைணவம் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டு மிகப் பெரியது.

    ReplyDelete
  10. தங்களின் சேவை அரிது முனைவர் அய்யா!
    தொடருங்கள் தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  11. விளக்கவுரை அருமை நண்பரே....

    ReplyDelete
  12. அன்பின் அய்யா,
    அர்த்தமுடைய அழகான பதிவு.

    ReplyDelete
  13. இன்று தான் முதல் முறையே உள்ளே வந்து உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்தேன். சிறப்பான பணி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அருமையான விளக்கம் ஐயா.

    ReplyDelete
  15. முதல்முறையாக உங்கள் பதிவுகளைப் படித்தேன். அமலனாதிபிரான் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. தொடரட்டும் உங்கள் பணி. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  16. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  17. அமலனாதிபிரான் விளக்கம் அருமை ஐயா! தொடர்கின்றோம் ஐயா!

    ReplyDelete
  18. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள அமலனாதிபிரான் மற்றும் கண்ணினின் சிறுதாம்பு ஆகிய பாசுரங்களும் அதன் அர்த்தங்களும் மிக அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. தொடரட்டும் உமது பணிகள்

    ReplyDelete
  20. புதிய தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  21. பக்தி இலக்கியங்களில் சைவமும்,வைணவமும் தந்த இலக்கிய கொடைகள் ஏராளம்.
    அவற்றில் நாத முனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய
    சிறப்புகளை 12 ஆழ்வார்களை குறித்த தகவல்களும், தந்துள்ளீர்கள். பாடல்களை மனம் ஒன்றி படித்தோம்! ரசித்தோம் ருசித்தோம் வளர்க தங்களது தமிழ்த் தொண்டு அய்யா!
    நன்றி!
    புதுவை வேலு
    அய்யா!
    எனது இன்றைய பதிவு (நாராய்! இளந் நாராய்!) கவிதையை காண வாருங்கள்!

    ReplyDelete
  22. வணக்கம்
    ஐயா
    செறிவான பொருள்விளக்கம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  23. அன்பின் அய்யாவிற்கு,
    திரு.ஜி.எம்.பி அய்யாவின் சிறுகதைகள் பற்றிய தங்களின் ஆழமான அற்புதமான விமர்சனம் அருமையாக அமைந்துள்ளது மிக அழகு.

    ReplyDelete