முகப்பு

21 February 2015

ஆனந்த பவன்

ஆனந்த பவன்
1960களின் இறுதியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய வியாச (கட்டுரை) நோட்டின் அட்டையில் ஆனந்த பவன் கட்டடத்தைப் பார்த்தேன்.  நோட்டின் அட்டையைப் பார்த்த எனது வகுப்பு ஆசிரியர் நேருவின் ஆரம்ப கால வாழ்க்கை தொடங்கி விடுதலைப் போராட்டம், அரசியல், படிப்பு மற்றும் எழுத்தின் மீதான அவரது ஈடுபாடு ஆகியவற்றை எங்களிடம் எடுத்துக்கூறினார். நேரு பள்ளிக்குச் செல்லும்போது ஆனந்த பவனின் நான்கு வாசல்களிலும் நான்கு மகிழ்வுந்துகள் நிற்கும் என்றும் அவர் நான்கு வாசல்களில் எதில் வேண்டுமானாலும் வந்து, அங்கு நிற்கின்ற மகிழ்வுந்தில் ஏறி பள்ளிக்குச் செல்வார் என்றும் கூறியிருந்தார்.  ஆனந்த பவனிற்குச் செல்லும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. உங்களையும் அங்கு அழைக்கின்றேன். வாருங்கள். 
அலகாபாத்தில் நகரின் நடுவில் காட்சியளிக்கின்றது ஆனந்த பவன். அளவில் சிறியதாக இருந்தாலும், வேலைப்பாடு மற்றும் கலையழகு என்ற நிலையில் உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. மோதிலால் நேருவால் வடிவமைக்கப்பட்டு அவரால் ஆனந்த பவன் என்ற பெயரையும் பெற்றது இந்த பவன். வண்ணமயமான பலவகைப்பட்ட பூச்செடிகள், அழகான புல்வெளிகள், நெடிது உயர்ந்து வளர்ந்த மரங்கள் போன்றவற்றைக் கொண்டபரந்து விரிந்த தோட்டத்தின் நடுவில்  பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பூங்காவிற்குள் இருக்கிறோமோ அல்லது அரண்மனைக்குள் வந்துள்ளோமோ என்று உள்ளே வந்தவரைச் சிந்திக்க வைக்கிறது. 

ஆனந்த பவனின் பெருமை பேசும் 1927ஆம் ஆண்டின் பதிவு
ஆனந்த பவனில் உள்ளே நுழைந்ததும் அனைவருடைய பார்வையையும் கவர்ந்திழுக்கும் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. நுழைவாயிலின் அருகே உள்ள அந்த கல்வெட்டில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் 1927இல் கட்டப்பட்ட இந்த ஆனந்தபவனானது செங்கல்லாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதன்று, நமது நாட்டு விடுதலைப் போருடன் தொடர்புடையது, மிக முக்கியமான முடிவுகள் இங்கிருந்து எடுக்கப்பட்டன, மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்றன என்ற குறிப்பு விடுதலைக்கு முந்தைய மற்றும் விடுதலை பெற்ற காலத்திய இந்தியாவை நினைவூட்டுகிறது. 

மோதிலால் நேரு காலத்திலிருந்து உள்ள இந்த பவன் தரைத்தளம், ஒரு மாடியுடன் கூடியதாக உள்ளது. இரண்டாவது மாடியில் ஒரு மூலையில் மண்டபம் போன்ற சிறிய அமைப்பு காணப்படுகிறது.  இந்த பவனில் மோதிலால் நேரு, சொரூப ராணி, ஜவஹர்லால் நேரு பயன்படுத்திய அறைகள் மிகவும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து அறைகளும் கண்ணாடித் தடுப்புகளால் உள்ளே உள்ளது தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஓர் அறை காங்கிரஸ் கமிட்டி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அறையாக உள்ளது. இன்னொரு இடத்தில் மகாத்மா காந்தி பெரும்பாலும் இங்குதான் இருப்பார் என்ற குறிப்பு காணப்படுகிறது.  நேரு எழுதிய நூல்கள் ஓர் அறையில் விற்பனைக்கு உள்ளன. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் பல அரிய புகைப்படங்கள்  பவனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேரு எழுதிய கடிதங்களை அங்கு உள்ளன. நேரு குடும்பத்தினர் பயன்படுத்திய பொருள்கள், படித்த நூல்கள், பேனா மற்றும் பரிசுப்பொருள்கள் மிகவும் அழகாகவும், கண்ணைக்கவரும்படியும் அமைக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான அறைகள், கலை நயமிக்க நாற்காலி, மேசை உள்ளிட்ட மரப்பொருள்கள், நெடிதுயர்ந்த கதவுகள், அழகான தூண்கள், கண்ணைக் கவரும் முகப்பு, பவனைச் சுற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ள தளம் என்ற நிலைகளில் சிறப்பான கட்டடமாக அது உள்ளது. நேரு குடும்பத்தார் பயன்படுத்திய அறைகளை உள்ளதுஉள்ளபடியே காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதத்தின் மூலமாக அவர்களுடைய கலை ரசனையை உணரமுடிகிறது. இந்திரா காந்தி பிறந்ததும், அவருக்குத் திருமணம் ஆனதும் ஆனந்த பவனில்தான். 
இந்திரா பிரியதர்ஷினி காந்தியின் திருமணம் 
ஆனந்த பவனில் ஜம்புலிங்கம் பாக்கியவதி
நேரு தான் பிறந்த மண்ணான அலகாபாத்தை அதிகம் நேசித்தார். அவர் அலகாபாத்தையும், கங்கையையும் ரசிப்பதை  நட்வர்சிங்  One life is not enough  என்ற தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.  நேருவின் மரணத்தைப் பற்றி நேருவே கூறுவதை நட்வர்சிங் பின்வருமாறு எடுத்துக்கூறுகிறார். "நான் வெளி நாட்டில் இறந்தால் என் உடல் அங்கேயே எரியூட்டப்படவேண்டும். என் சாம்பலை அலகாபாத்திற்கு அனுப்பப்படவேண்டும். சாம்பலின் ஒரு பகுதி கங்கையில் இடப்படவேண்டும்.  மீதியை விவசாயிகளின் வயலில் தெளித்துவிடுங்கள். கங்கையில் நான் கரைத்துவிடக் கூறுவதற்குக் காரணம் அதன்மீதான சமயம் சார்ந்த பிணைப்பு தொடர்பாக அல்ல. என் இளமைக்காலம் முதல் நான் கங்கையாற்றுடனும் யமுனையாற்றுடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவன். நான் வளர வளர அந்த பிணைப்பும் வளர்ந்தது. பருவ மாற்றங்கள் கங்கையில் ஏற்படுத்திய தாக்கங்களை நான் பார்த்துள்ளேன். கங்கையோடு தொடர்புடைய வரலாறு, பாரம்பரியம், பாடல், கதைகள் போன்றவை காலங்காலமாகப் பின்னிப் பிணைந்துவிட்டன. இவையனைத்தும் கங்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. கங்கையை இந்தியர்கள் நேசிக்கின்றார்கள்........அந்த நீண்ட காலத் தொடர்ந்து வரும் பாரம்பரியத்தை நான் பெருமையோடு நினைவுகூர்கிறேன். இந்த இணைப்பானது அறுந்துவிடக்கூடாது என்பதே என் அவா. இந்த நிலையில் நான் அதைப் போற்றுகின்றேன். அதனை ஒரு தூண்டுகோலாக கருதுகிறேன்....மீதி சாம்பலை ஆகாயத்தில் விமானம் வழியாக எடுத்துச்சென்று இந்த விவசாயிகள் உழுகின்ற நிலத்தில் தெளித்துவிடுங்கள். அப்போது அவை இந்திய மண்ணுடன் இரண்டறக் கலந்து, இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமாக ஆகிவிடும்...."


நேருவின் அஸ்தி வைக்கப்பட்டது பற்றிய பதிவு
நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆனந்த பவனின்  நுழைவாயிலின் அருகே ஓர் இடத்தில் "நேருவின் அஸ்தி (திரிவேணி) சங்கமத்தில் கரைக்கப்படும் முன்பாக இங்கே வைக்கப்பட்டிருந்தது" என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட குறிப்பு காணப்படுகிறது. நேருவின் ஆசை பூர்த்தியானதை இங்கு வைக்கப்பட்டிருந்த சாம்பல் நினைவுபடுத்தியது. மோதிலால் நேரு காலந்தொட்டு இருந்துவருகின்ற ஆனந்த பவனில் மிக முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பாக காங்கிரஸின் பெரும்பாலான நடவடிக்கைகள் இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசத்தலைவர்கள் பயன்படுத்திய பொருள்கள் ஒரே இடத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேருவும் காந்தியும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனும் பெருந்தலைவர்களுடன் உரையாடிய பெருமை கொண்ட இடம். இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட ஆனந்த பவன் 1970இல் இந்திரா பிரியதர்ஷினியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

ஆனந்த பவன் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படல்
 அருங்காட்சியகமாக ஆக்கப்பட்டு பலர் வந்து கண்டுகளிக்கும் அளவு மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட இந்தியப் பயணத்தில்  ஆனந்த பவனத்திற்கு சென்ற நினைவுகள் என்றென்றும் எங்கள் நெஞ்சில் ஆனந்தமாக இருக்கும்.  
---------------------------------------------------------------------------------------------------
புகைப்படங்கள் எடுக்க உதவி : திருமதி கண்மணி இராமமூர்த்தி, திருமதி பாக்கியவதி
---------------------------------------------------------------------------------------------------

14 February 2015

யாருடைய எலிகள் நாம்? : சமஸ்

அண்மையில் நான் படித்த நூல் சமஸ் எழுதியுள்ள யாருடைய எலிகள் நாம்? மற்ற நூல்களைப் படிப்பதற்கும் இந்நூலைப் படிப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் உள்ள நூல் ஒரே நிலையில் ஒரே தடத்தில் வாசகரை அழைத்துச்செல்லும். ஆனால் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் ஒட்டுமொத்த தமிழக, இந்திய, சர்வதேச அரசியல் தொடங்கி அன்றாட பிரச்னை வரை விவாதிக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் படித்ததுமே வாசகர்கள் நிமிர்ந்து உட்காருவர். பின்னர் சிந்திக்க ஆரம்பிப்பர். படிக்கும் நம்மை களத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் நூலாசிரியர்.  சுமார் 400 பக்கங்கள் கொண்ட இந்நூலில் விடுபட்டது என்று கூறமுடியாத அளவு அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. நூலைப் படிக்கும்போது கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் எதிர்கொண்ட சிரமத்தை உணரமுடிகிறது.

 
மன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் (3.1.2015) நூலாசிரியர் சமஸ்
வெவ்வேறு பின்புலத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு கட்டுரையிலும்  அவர் வெளிப்படுத்தும் ஆதங்கம், ஆற்றாமை, பொறுப்புணர்வு, ஏக்கம், வருத்தம் நம்மையும் ஆட்கொண்டுவிடும். குடிமகன் என்ற நிலையில் நாம் செய்த கடமை என்ன? நாம் ஏதாவது செய்யக்கூடாதா? இதற்கு நாமும் அல்லவா பொறுப்பு? நாம் ஏன் எவ்விஷயத்திலும் படாமல் ஒதுங்கிச் செல்கின்றோம்? நம் நாடும் சமுதாயமும் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது? இதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும்போது நாம் அனுபவிக்கப்போவது என்ன? என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழும். அனைத்திலும் வணிகமயம் என்ற நோக்கைக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு உலகம் உள்ளது, அதை உணருங்கள், அதில் நாம் அனைவரும் இருக்கிறோம், அதில் ஏற்படும் பாதிப்பு நம் அனைவரையுமே பாதிக்கும் என்று நச்சென்று அனாசயமாக எடுத்துரைக்கின்றன அவரது எழுத்துக்கள்.

மன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் நூலாசிரியருடன் ஜம்புலிங்கம்

மனதில் பட்டதைத் தெளிவாகக் கூறும் இவரது பாணி தனித்துவம் கொண்டது. நகாசு இல்லாத சொற்கள். பம்மாத்து என்ற கூறவியலாத பதிவுகள். மூக்கில் விரல் வைக்கும் அளவு புள்ளி விவரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை நல்லதைப் பாராட்டல், தவறைச் சுட்டிக்காட்டல் என்ற நிலை. நிகழ்விடத்திற்கே நேரில் சென்று செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து வாசகர் முன் வைத்தல். தமிழ்கூர் நல்லுலகில் இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட ஒருவரை, அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்ளும் ஒருவரைப் பெற்றுள்ளது நமக்குப் பெருமையே. சமகாலத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாம் உணர்ந்து, அறிந்து, புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைக்கும் உத்தி படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் உள்ளது. அவரது எழுத்துக்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

"இன்றைக்கு தமிழ்பேசிக்கொண்டிருக்கும் 99%  பேர் குறைந்தபட்சம் பத்து வரிகள் சேர்ந்தாற்போல பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள்.....சமகாலப் பிரச்சினைகளுக்கும் யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், மீமெய்யியலிலும் பழம்பெருமையிலும் தோயும் மனோபாவமே நம்முடைய பொது மனோபாவமாகிவிட்டது.." (ப.37)


"சுதந்திரம் அடைந்து ஆறு தசாம்ச ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட இந்தியாவில் அடிப்படைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பு மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது...."(ப.82)

"காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழ் அல்லது கம்பங்கூழ் அல்லது தினைப்பாயசம் அல்லது வரகரிசி சாதம். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இதுபோன்ற உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி, கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்...."(ப.89)

"காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்..."(ப.102)

"எல்லோருக்கும் உயர் கல்வி அளிப்பதாலும் ஏதோ ஒரு பட்டத்தை அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம்? பள்ளிப்படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காகப் பட்டம்? யோசித்துப் பாருங்கள்..."(ப.131)

"உலகில் தமிழகத்தைப் போல, ஒரே அரசின்கீழ் நான்கு வகையான கல்வி வாரியங்கள் செயல்படும் விசித்திர முறை வேறு எங்கும் கிடையாது...." (ப.135)

"நண்பர்களே, நாம் மரண தண்டனையை எதிர்க்கவேண்டும்.......ஓர் எளிய நீதி போதும், நாம் மரண தண்டனையை ஒழிப்பதற்கு. ஒரு கொலை எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு கொலைக்கான நியாயம் ஆகிவிடாது......"(ப.189)

"நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவதில்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன்...."(ப.204)


"நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசுவோர் பலரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். நம்முடைய பழைய  அமைப்பில் உள்ள பலவீனங்களைப் பேச மறுக்கிறோம்...."(ப.238)

"ஒரு காலத்தில் அரபு நாடுகளில் வேலைக்குப் போய்க் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச்சமூகம், இப்போது எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது...(ப.243)

"வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகச் செய்யப்படுகின்றன.  அவற்றுக்குரிய மதிப்பும் கிடைக்கிறது. இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன்? 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள சூட்சுமம்...."(ப.251)

"ஒரு புறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது. உள்ளூர் தொழில் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளை பரப்புகின்றன. நாடு ஏன் இருள்கிறது என்பது இப்போது புரியும் என நினைக்கிறேன்...."(ப.270)

"பணம் இல்லாத வாழ்க்கை யாருமற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கச் செல்வது என்று எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன....நமக்கென்றிருக்கும் உலகிலிருந்து நாம் உலகம் என்று நம்பும் ஓர் உலகை நோக்கி ஓடுகிறோம். திடீரென ஒருநாள் நிஜ உலகின் யதார்த்தங்கள் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடுகிறோம்..."(ப.308)

"சுதந்திரத்தின்போது ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எல்லைகளின் அடிப்படையிலேயே, இந்தியா தன்னுடைய எல்லைகளை அணுகுகிறது. பிரச்சனை என்னவென்றால், இந்த எல்லைக்கோடுகளை நம்முடன் சம்பந்தப்பட்ட நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை....."(ப.355)

"ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக்கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அடரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை..." (ப.370)


யாருடைய எலிகள் நாம், சமஸ், துளி வெளியீடு (அலைபேசி 9444204501), சென்னை, ரூ.300
--------------------------------------------------------------------------------------------
மன்னார்குடியில் சமஸ் நூல் அறிமுக விழா புகைப்படங்கள்
நன்றி : Facebook: My Clicks-Ganesan Muthuvel
--------------------------------------------------------------------------------------------

07 February 2015

நான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்


தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்த பின் அண்மையில் நாவுக்கரசர் தேவாரம் (4ஆம் திருமுறை) முதல் திருமுறையினை நிறைவு செய்துள்ளேன். சமண சமயம் தொடர்பான கருத்துக்களையும், அவருடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ள விதம் சைவத்தின் மீதான அவருடைய ஈர்ப்பை அதிகமாக வெளிப்படுத்துகிறது. பிற நிலைகளில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் போலவே இறைவனையும், இயற்கையையும் பாடும் பாடல்களைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் வித்தியாசமான நடையினைக் கொண்டுள்ள அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம்.
 



1) பொது : விடந்தீர்த்த திருப்பதிகம்
இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முதல் அடியின் முதல் சொல்லும் ஒன்று முதல் பத்து வரையிலான எண்களைக் கொண்டு அமையும் வகையில் பாடியுள்ளார்.

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பால்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந்துனக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கைதானே.
(பதிகத்தொடர் எண்.18 பாடல் எண்.10)


அவர் அணிந்த ஐந்தலைப்பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.


2) பொது : திருஅங்கமாலை
இப்பதிகத்தில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றினையும் குறித்து முதல் சொல் வரும் வகையில் தலையே, கண்ணே, செவியே இறைவனை வணங்கு என்று கூறுகிறார். பின்வரும் பாடல் கண்காள் எனத் தொடங்குகிறது.

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னை
கண்காள் காண்மின்களோ.
(பதிகத்தொடர் எண்.9 பாடல் எண்.2) 
 
கண்களே, கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக்கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானைக் காணுங்கள்.


3) திருவாரூர்
இப்பதிகத்தில் உடலைப்பற்றியும், உடலுக்குள்ள ஒன்பது வாசல்களைப் பற்றியும், அவை தரும் துன்பங்களைப் பற்றியும் கூறுகிறார்.


புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்ப துவா யொற்றுமை யொன்றுமில்லை
சழக்குடை இதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே. 
(பதிகத்தொடர் எண்.52 பாடல் எண்.2)
   
ஆரூர் மூலட்டனீரே ! புழுக்களை உள்ளே அடக்கிவைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிற்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைவிக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.

 
4) கோயில்
சிதம்பரத்தில் பாடிய இப்பதிகத்தில் மனிதராய்ப் பிறப்பெடுக்க விரும்பத்தக்க செயலாக இறைவனைக் காண்பதைக் கூறுகிறார். 

குனித்த புருவமுங கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
(பதிகத்தொடர் எண்.81 பாடல் எண்.4) 

வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த மேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும்  காணும் வாய்ப்பினைப் பெறுவதாம் பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும். 

5) திருவையாறு
திருவையாற்றில் இவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் இறைவனின் திருவடிகளின் பெருமையை அவர் சொல்ல நாம் கேட்போம்.

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய் நின்ற கால்
ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே.
 (பதிகத்தொடர் எண்.98 பாடல் எண்.2) 

பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று ஆராயுறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.

பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008  

நாம் முன்னர் நிறைவு செய்தது
ஞானசம்பந்தர் தேவாரம் (முதல் மூன்று திருமுறைகள்)