முகப்பு

14 February 2015

யாருடைய எலிகள் நாம்? : சமஸ்

அண்மையில் நான் படித்த நூல் சமஸ் எழுதியுள்ள யாருடைய எலிகள் நாம்? மற்ற நூல்களைப் படிப்பதற்கும் இந்நூலைப் படிப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் உள்ள நூல் ஒரே நிலையில் ஒரே தடத்தில் வாசகரை அழைத்துச்செல்லும். ஆனால் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் ஒட்டுமொத்த தமிழக, இந்திய, சர்வதேச அரசியல் தொடங்கி அன்றாட பிரச்னை வரை விவாதிக்கப்பட்டுள்ளது. தலைப்பைப் படித்ததுமே வாசகர்கள் நிமிர்ந்து உட்காருவர். பின்னர் சிந்திக்க ஆரம்பிப்பர். படிக்கும் நம்மை களத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் நூலாசிரியர்.  சுமார் 400 பக்கங்கள் கொண்ட இந்நூலில் விடுபட்டது என்று கூறமுடியாத அளவு அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன. நூலைப் படிக்கும்போது கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் எதிர்கொண்ட சிரமத்தை உணரமுடிகிறது.

 
மன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் (3.1.2015) நூலாசிரியர் சமஸ்
வெவ்வேறு பின்புலத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு கட்டுரையிலும்  அவர் வெளிப்படுத்தும் ஆதங்கம், ஆற்றாமை, பொறுப்புணர்வு, ஏக்கம், வருத்தம் நம்மையும் ஆட்கொண்டுவிடும். குடிமகன் என்ற நிலையில் நாம் செய்த கடமை என்ன? நாம் ஏதாவது செய்யக்கூடாதா? இதற்கு நாமும் அல்லவா பொறுப்பு? நாம் ஏன் எவ்விஷயத்திலும் படாமல் ஒதுங்கிச் செல்கின்றோம்? நம் நாடும் சமுதாயமும் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது? இதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும்போது நாம் அனுபவிக்கப்போவது என்ன? என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழும். அனைத்திலும் வணிகமயம் என்ற நோக்கைக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு உலகம் உள்ளது, அதை உணருங்கள், அதில் நாம் அனைவரும் இருக்கிறோம், அதில் ஏற்படும் பாதிப்பு நம் அனைவரையுமே பாதிக்கும் என்று நச்சென்று அனாசயமாக எடுத்துரைக்கின்றன அவரது எழுத்துக்கள்.

மன்னார்குடியில், நூல் அறிமுக விழாவில் நூலாசிரியருடன் ஜம்புலிங்கம்

மனதில் பட்டதைத் தெளிவாகக் கூறும் இவரது பாணி தனித்துவம் கொண்டது. நகாசு இல்லாத சொற்கள். பம்மாத்து என்ற கூறவியலாத பதிவுகள். மூக்கில் விரல் வைக்கும் அளவு புள்ளி விவரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை நல்லதைப் பாராட்டல், தவறைச் சுட்டிக்காட்டல் என்ற நிலை. நிகழ்விடத்திற்கே நேரில் சென்று செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து வாசகர் முன் வைத்தல். தமிழ்கூர் நல்லுலகில் இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட ஒருவரை, அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்ளும் ஒருவரைப் பெற்றுள்ளது நமக்குப் பெருமையே. சமகாலத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாம் உணர்ந்து, அறிந்து, புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைக்கும் உத்தி படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் உள்ளது. அவரது எழுத்துக்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

"இன்றைக்கு தமிழ்பேசிக்கொண்டிருக்கும் 99%  பேர் குறைந்தபட்சம் பத்து வரிகள் சேர்ந்தாற்போல பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள்.....சமகாலப் பிரச்சினைகளுக்கும் யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், மீமெய்யியலிலும் பழம்பெருமையிலும் தோயும் மனோபாவமே நம்முடைய பொது மனோபாவமாகிவிட்டது.." (ப.37)


"சுதந்திரம் அடைந்து ஆறு தசாம்ச ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட இந்தியாவில் அடிப்படைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பு மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது...."(ப.82)

"காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழ் அல்லது கம்பங்கூழ் அல்லது தினைப்பாயசம் அல்லது வரகரிசி சாதம். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இதுபோன்ற உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி, கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்...."(ப.89)

"காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு துரோகங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்..."(ப.102)

"எல்லோருக்கும் உயர் கல்வி அளிப்பதாலும் ஏதோ ஒரு பட்டத்தை அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம்? பள்ளிப்படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காகப் பட்டம்? யோசித்துப் பாருங்கள்..."(ப.131)

"உலகில் தமிழகத்தைப் போல, ஒரே அரசின்கீழ் நான்கு வகையான கல்வி வாரியங்கள் செயல்படும் விசித்திர முறை வேறு எங்கும் கிடையாது...." (ப.135)

"நண்பர்களே, நாம் மரண தண்டனையை எதிர்க்கவேண்டும்.......ஓர் எளிய நீதி போதும், நாம் மரண தண்டனையை ஒழிப்பதற்கு. ஒரு கொலை எக்காரணத்தைக் கொண்டும் இன்னொரு கொலைக்கான நியாயம் ஆகிவிடாது......"(ப.189)

"நான் சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவதில்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பதைச் சொல்வேன்...."(ப.204)


"நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசுவோர் பலரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம். நம்முடைய பழைய  அமைப்பில் உள்ள பலவீனங்களைப் பேச மறுக்கிறோம்...."(ப.238)

"ஒரு காலத்தில் அரபு நாடுகளில் வேலைக்குப் போய்க் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச்சமூகம், இப்போது எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது...(ப.243)

"வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகச் செய்யப்படுகின்றன.  அவற்றுக்குரிய மதிப்பும் கிடைக்கிறது. இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன்? 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள சூட்சுமம்...."(ப.251)

"ஒரு புறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது. உள்ளூர் தொழில் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளை பரப்புகின்றன. நாடு ஏன் இருள்கிறது என்பது இப்போது புரியும் என நினைக்கிறேன்...."(ப.270)

"பணம் இல்லாத வாழ்க்கை யாருமற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கச் செல்வது என்று எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன....நமக்கென்றிருக்கும் உலகிலிருந்து நாம் உலகம் என்று நம்பும் ஓர் உலகை நோக்கி ஓடுகிறோம். திடீரென ஒருநாள் நிஜ உலகின் யதார்த்தங்கள் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடுகிறோம்..."(ப.308)

"சுதந்திரத்தின்போது ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற எல்லைகளின் அடிப்படையிலேயே, இந்தியா தன்னுடைய எல்லைகளை அணுகுகிறது. பிரச்சனை என்னவென்றால், இந்த எல்லைக்கோடுகளை நம்முடன் சம்பந்தப்பட்ட நாடுகள் முழுமையாக ஏற்கவில்லை....."(ப.355)

"ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக்கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அடரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை..." (ப.370)


யாருடைய எலிகள் நாம், சமஸ், துளி வெளியீடு (அலைபேசி 9444204501), சென்னை, ரூ.300
--------------------------------------------------------------------------------------------
மன்னார்குடியில் சமஸ் நூல் அறிமுக விழா புகைப்படங்கள்
நன்றி : Facebook: My Clicks-Ganesan Muthuvel
--------------------------------------------------------------------------------------------

27 comments:

  1. புத்தகச்சந்தையிலேயே வாங்க நினைத்த நூல்! ஆனாலும் அப்போது பட்ஜெட் உதைத்தமையால் வாங்கவில்லை! சிறப்பான நூல் விமர்சனம்! விரைவில் வாங்கிப் படிக்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
  2. அன்பின் திரு. சமஸ் அவர்களின் எழுத்துக்களை வாசித்திருக்கின்றேன்.. அவரது நூலை நல்லமுறையில் அறிமுகம் செய்து - வாசிக்கும் ஆவலை தூண்டி இருக்கின்றீர்கள்..

    ReplyDelete
  3. விரைவில் வாசித்து விடுகிறேன் தமிழ் இந்துவில் வாசித்த அவரது கட்டுரையே அவ்வளவு சிறப்பானதாக இருக்கும் நன்றி ஐய்யா

    ReplyDelete
  4. ஆஹா... ஆழமாக விமர்சித்து இருக்கிறீர்கள் ஐயா....
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அய்யா,
    நல்லதொரு புத்தக அறிமுகம்.
    நூலாசிரியரையும் அவரது எழுத்தாளுமையையும்அறிவேன்.
    நிச்சயமாய் நூலை வாங்கிப் படிக்கிறேன்.
    பகிர்விற்கு நன்றி.
    தம 2

    ReplyDelete
  6. படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. விமர்சனம் பக்கங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது அருமை. த.ம.+

    ReplyDelete
  7. "வெளிநாடுகளில் 9 காரட் முதல் 22 காரட் வரை தங்க நகைகச் செய்யப்படுகின்றன. அவற்றுக்குரிய மதிப்பும் கிடைக்கிறது. இந்தியாவில் அப்படி இல்லை. 22 காரட் நகைகளே முன்னிறுத்தப்படுகின்றன. ஏன்? 22 காரட் நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. மீண்டும் மீண்டும் நகைகளை மாற்றும் தேவையை அவை உருவாக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள சூட்சுமம்....

    ஆம் உண்மையே ஆழமான முறையில் கருத்துகளை உள்வாங்கி விமர்சித்து இருக்கிறீர்கள் படிக்கவேண்டிய நூல்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  8. மிக நல்ல அறிமுகம் ......

    //திடீரென ஒருநாள் நிஜ உலகின் யதார்த்தங்கள் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடுகிறோம்..."(ப.308)//

    FUTURE SHOCK நூல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா.

    புத்தகத்தில் இடம்பெற்ற பகுதிகளை எழுதியுள்ளீர்கள் அதை படித்த போது வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு நிகழ்வு சிறப்பாக அமைந்துள்ளது என்பதை தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. மீமெய்யியல் = இதன் அர்த்தம் எனக்கு பிடிபடவில்லை. தமிழ்ச் சொற்களே தமிழனுக்கு அன்னியமாகிக் கொண்டு வருகின்றனவோ?

    ReplyDelete
  11. நூலினை வாங்கி விட்டேன் ஐயா
    இனிதான் படிக்க வேண்டும்
    தங்களின் விமர்சனம் அருமை
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  12. வாசிக்க வேண்டும் எனும் ஆவல் எழுகிறது ஐயா... நன்றி...

    ReplyDelete
  13. "பணம் இல்லாத வாழ்க்கை யாருமற்ற வாழ்க்கையாகிவிடுகிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கச் செல்வது என்று எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன....நமக்கென்றிருக்கும் உலகிலிருந்து நாம் உலகம் என்று நம்பும் ஓர் உலகை நோக்கி ஓடுகிறோம். திடீரென ஒருநாள் நிஜ உலகின் யதார்த்தங்கள் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகி விடுகிறோம்..."(ப.308)

    முழுக்க முழுக்க உண்மை. இன்று எல்லாமே வணிகமயமாகிவிட்டது.
    அருமையான முன்னோட்டம். பல்வேறு தலைப்புக்களில் அமைந்த கட்டுரைகளிலிருந்து மிக முக்கிய கருத்துக்களை எடுத்துக்கொடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விமர்சனம்.
    இதை ஏற்கெனவே புத்தக காட்சியில் வாங்கிவிட்டேன். இன்னும் படிக்கத் துவங்கவில்லை. வாசித்த பிறகு என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.
    திரு பழனி கந்தசாமி ஐயா கூறியிருப்பது போல் மீமெய்யியல் எனக்கும் விளங்கவில்லை. அதை விளக்கினால் நல்லது.
    நல்லதொரு நூலை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து பலருக்கும் படிக்க வேண்டும் ஆர்வத்தைத் தூண்டும் பதிவுக்குப் பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  14. நமது சமூகச் சீர்கேடுகளை சுட்டிக்காட்டி ,ஏகாதிபத்திய பூனைக்கு நாம் எலிகளாய் ,அடிமைகளாய் ஆக்கப் பட்டு இருக்கிறோம் என்பதை தெளிவாய் சொல்லி இருப்பதாக படுகிறது !
    த ம +1

    ReplyDelete
  15. ஆழமாக விமர்சித்து இருக்கிறீர்கள்
    அருமை.

    ReplyDelete
  16. அரிசியை விட கேப்பை,கம்பு விலை கூடிவிட்டன...!!! அதனால்தான் அரிசியை வாங்கிச் சாப்பிட வேண்டியநிலை

    ReplyDelete
  17. முனைவர் அவர்களுக்கு நன்றி. சிறப்பான நூல் விமர்சனம். நூலாசிரியர் சமஸ் அவர்களின் எண்ணத் துளிகளை மேற்கோள்களாக தொகுத்து காட்டி இருப்பது, இந்த நூலை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. வாங்கி படிக்கிறேன் அய்யா!
    த.ம.11

    ReplyDelete
  18. எனக்கு ஒன்று தோன்றுகிறது. நம் சமுதாயத்தில் நாம் யாருடையவோ எலிகளாகவே இருக்கிறோம் என்பது நம்மில் பலரும் உணரும் உண்மை. குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றுக்கு நிவர்த்திதான் என்ன.?எல்லோரும் உடன் படுகிறார்களோ இல்லையோ ஆசிரியர் ஏதாவது வழி சொல்லி இருக்கிறாரா.

    ReplyDelete
  19. வயதின் காரணமாக அதிகம் படிக்க இயலவில்லை! விமர்சனம் நன்று!

    ReplyDelete
  20. எழுத்தாளுமை எதிரொலிக்கும் ஏற்றமிகு படைப்பு!
    என எண்ணுகிறேன். வாங்கி படிக்க உள்ளேன்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  21. ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக்கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான்---வாங்கிப் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று..

    ReplyDelete
  22. ஐயா எழுத்தாளர் திரு. சமஸ் அவர்கள் இந்து நாளிதழிலில் எழுதிவரும் கட்டுரைகளை படித்துள்ளேன். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டு. தங்களது விமர்சனம் வழியாக அவரது புகைப்படத்துடன் நுலினைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. தங்களுடன் அவரது புகைப்படம் பார்த்தேன். இதுபோன்ற விமர்சனம் வழியாக நல்ல செய்திகளை அறிந்துகொள்கிறேன். வாய்ப்புக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  23. //காலையில் இட்லி, தோசை, சப்பாத்திக்குப் பதிலாக ஒரு கோப்பை கேழ்வரகுக் கூழ் அல்லது கம்பங்கூழ் அல்லது தினைப்பாயசம் அல்லது வரகரிசி சாதம். உடலுக்கு நல்ல வலுவைத் தரக்கூடிய இதுபோன்ற உணவுக்கு மாறுவதன் மூலம் ஒருபுறம் தமிழகத்தின் அரிசி, கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கை அப்படியே குறைக்க முடியும்.//

    நல்ல கருத்து தான். ஆனால் கடைகளில் அரிசி ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும்போது இந்த சிறு தானியங்கள் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கு விற்கப்படுகின்றனவே. அவைகள் விலை குறைந்தால் நிச்சயம் மக்கள் அவைகளி உபயோகப்படுத்துவார்கள்.

    நல்ல திறனாய்வு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. 22 காரட் நகைகள் பற்றிய தகவல் .. ஏமாற்றப்படுவதை தெரிவிக்கின்றன். இருந்தாலும் ஏமாறாமல் இருக்க முடியவில்லை....

    ReplyDelete
  25. அருமையான நூல் விமர்சனம்.

    மனதில் பட்டதைத் தெளிவாகக் கூறும் இவரது பாணி தனித்துவம் கொண்டது. நகாசு இல்லாத சொற்கள். பம்மாத்து என்ற கூறவியலாத பதிவுகள். மூக்கில் விரல் வைக்கும் அளவு புள்ளி விவரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை நல்லதைப் பாராட்டல், தவறைச் சுட்டிக்காட்டல் என்ற நிலை. நிகழ்விடத்திற்கே நேரில் சென்று செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து வாசகர் முன் வைத்தல். தமிழ்கூர் நல்லுலகில் இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட ஒருவரை, அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்ளும் ஒருவரைப் பெற்றுள்ளது நமக்குப் பெருமையே. // மிக மிக சரியே ஐயா. நாங்களும் அவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றோம்.

    ReplyDelete
  26. ''...நகாசு இல்லாத சொற்கள். பம்மாத்து என்ற கூறவியலாத பதிவுகள். மூக்கில் விரல் வைக்கும் அளவு புள்ளி விவரங்கள். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை நல்லதைப் பாராட்டல், தவறைச் சுட்டிக்காட்டல் என்ற நிலை. நிகழ்விடத்திற்கே நேரில் சென்று செய்திகளையும், தரவுகளையும் சேகரித்து வாசகர் முன் வைத்தல். தமிழ்கூர் நல்லுலகில் இவ்வாறு பன்முகத் திறமை கொண்ட ஒருவரை, அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் உள்ளது உள்ளபடி பகிர்ந்துகொள்ளும் ...''''
    புத்தகத் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.
    நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கம், ஆற்றாமை, பொறுப்புணர்வு, ஏக்கம், வருத்தம் நம்மையும் ஆட்கொண்டுவிடும்.//

    உண்மை. அருமையான நூல் விமர்சனம்.

    ReplyDelete