முகப்பு

22 May 2015

கலையியல் ரசனைக் கட்டுரைகள் : குடவாயில் பாலசுப்ரமணியன்

அண்மையில் நான் படித்த நூல் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கலையியல் ரசனைக் கட்டுரைகள். 

மரபின் மைந்தன் முத்தையா அவர்களை ஆசிரியராகக் கொண்டு கோவை மாநகரிலிருந்து வெளிவந்த ரசனை என்னும் திங்களிதழில் 2006 முதல் 2011 வரை எழுதப்பெற்ற கலையியல் சார்ந்த ரசனைக் கட்டுரைகளில் 30 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கலை, இலக்கியம் என்ற பல கூறுகளை உள்ளடக்கி ஒன்றோடொன்று பொருத்திக்காட்டி பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார் ஆசிரியர். 

இந்நூலின் மூலமாக நூலாசிரியர் நம்மை தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம், மேலக்கடம்பூர், திருநாவலூர், மாமல்லை, நாமக்கல், திருமெய்யம், காஞ்சீபுரம், பழையாறை, பட்டீஸ்வரம், கொடும்பாளூர், திருப்பிடவூர், திரிலோக்கி, குடுமியான்மலை, புள்ளமங்கை, திருமழபாடி, குடந்தைக் கீழ்க்கோட்டம் (நாகேஸ்வரன் கோயில்), தில்லை, திருச்சி மலை, நாமக்கல் மலை, திருக்கோகர்ணம், மகாபலிபுரம், வழுவூர், தண்டலைச்சேரி, பனைமலைக்கோயில், திருவாலங்காடு, பல்லவனீச்சரம், திருவாரூர், உதயகிரி, பாதமி, எல்லோரா, கோடியக்கரை, தக்கோலம், அமண்குடி, திருவாஞ்சியம், திருக்கொள்ளம்புதூர், நல்லூர், திருவலஞ்சுழி, தென்காசி, திருவையாறு, பெண்ணாடகம், பட்டடக்கல், திருபுவனம் உள்ளிட்ட பல கோயில்களுக்கு அழைத்துச் சென்று கலையின் நுட்பத்தை மிக எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார். அவருடன் இப்போது சில கோயில்களுக்குச் செல்வோம்.


கங்கைகொண்ட சோழீச்சரம்
உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காணமுடியாத மிகப்பெரிய சண்டேஸ்வர பிரஸாத தேவர் சிற்பமும், அதனைச் சுற்றி சுவரில் சண்டேஸ்வரர் புராணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ள இடம் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலாகும். தாராசுரம், மேலக்கடம்பூர், திருநாவலூர் போன்ற திருக்கோயில்களிலும் சண்டேஸ்வரர் புராணக்காட்சிகள் உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்துநோக்கும்போது கங்கை கொண்ட சோழபுரத்துப் படைப்பே முதலிடம் வகிப்பதாகும். (பக்.12,13).

எல்லோரா
எல்லோரா கைலாசநாதர் கோயிலில் நுழைந்தவுடன் முதலாவதாக நம்மை எதிர்கொண்டழைப்பது திரு என்னும் தெய்வம் உறையும் தாமரைத் தடாகக் காட்சியே. உயிரோட்டமாகத் தாமரைத் தடாகம் விளங்குவதையும் அங்கு நான்கு யானைகள் திருமகளைத் திருமஞ்சனம் ஆட்டுவதையும் காணக் கண் கோடி வேண்டும். (ப.37).

திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர்கோயிலில் சிவபெருமானும் உமாதேவியும் அமர்ந்தவாறு கடும் வேகத்தில் செல்லும் காட்சியை சிற்பி உருவாக்கியுள்ளான். பொதுவாக இடபாரூடர் நிற்கும் காளை மீது உமாதேவியோடு பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் காட்சிதான் திகழும். ஆனால் இச்சோழச் சிற்பியோ கடுநடையோடு காளை செல்லும் திசை நோக்கியவாறு கால்களை இரு புறமும் தொங்கவிட்ட நிலையில் இருவரும் அமர்ந்து செல்லும் உயிரோட்டமான சிற்பத்தைப் படைத்துள்ளான். (ப.49)

புள்ளமங்கை
கி.பி.9ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழன் எடுத்த புள்ளமங்கை (தஞ்சாவூர் மாவட்டம்) சிவாலயத்தின் கண்டபாதம் என்னும் அதிஷ்டானப் பகுதியில் இராமாயணம் முழுவதையும் சிற்பமாகப் படைத்தான் ஒரு சோழ நாட்டுச் சிற்பி.....கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்குக் காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் உள்ளது என்பதுதான் உண்மை. (ப.55)

தஞ்சாவூர்
தமிழகத்திலுள்ள பல சிவாலயங்களில் இராவணானுக்கிரக மூர்த்தியின் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தபோதிலும் பழையாறை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களில் இடம் பெற்றிருக்கும் சிற்பப் படைப்புகளுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் காலத்து ஓவியத்தில் இடம் பெற்றுள்ள இராவணன் கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சிக்கும் இணையாக வேறு படைப்புகளை ஒப்பிடுதல் சற்றுக் கடினமே....வாய் பிளந்து இராவணன் அலறும் காட்சிக்கு ஈடாக வேறோர் ஓவியம் இவ்வையகத்தில் இல்லை எனலாம். (பக்.73, 78)

தாராசுரம்
பதினான்கு பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டு ஆடும் அகோரமூர்த்தி வடிவத்தினை தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலிலன்றி தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் காணல் அரிது. (ப.109)

திருமழபாடி
திருமழபாடித் திருக்கோயிலின் திருச்சுற்றில் தென் மேற்கு மூலையில் உள்ள சிறு கோயிலில் திருவாசியுடன் கூடிய சோமாஸ்கந்தர் திருமேனி கற்சிற்பமாக இன்றும் வழிபாட்டில் உள்ளது. இந்தஅழகுமிகு சிற்பப்படைப்பு விஜயநகர அரசு காலத்தில் வடிக்கப் பெற்றதாகும். (ப.137)

கும்பகோணம்
கும்பகோணம் வீர சைவமடத்து வீரபத்திரர் கோயில் கோபுரக் கட்டுமானம், தாராசுரத்திலுள்ள ஒட்டக்கூத்தர் சமாதி கோயிலின் இடிபாடுற்ற முன் மண்டபம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதியில் உள்ள பல மண்டபங்கள், திருக்கரைவீரத்து மண்டபம், திருக்கண்ணமங்கை திருக்கோயில் மண்டபம் என சோழ நாட்டில் எண்ணற்ற இடங்களில் இட்டிகையில் செய்த கலைப் படைப்புகளோடு இக்கலை மரபு ஒரு காலத்தில் தழைத்திருந்தது.  (இட்டிகை - சுட்ட மண் பலகை, வெந்த மண் கல் என்ற பாருள் பொதிந்த சொற்களால் சோழர் காலத்தில் கூறப்பட்டது)  (பக்.157, 163)



வீரபத்திரர் கோயில் கட்டுமானம்
புகைப்படங்கள் பா.ஜம்புலிங்கம்

தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம்
காமனைப் பொறுத்த நிலையில் தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் என்ற மூன்று திருக்கோயில் படைப்புகளிலும் வெவ்வேறு வகையான படைப்பு நுட்பங்களைக் காணமுடியும். தஞ்சை விமானத்துக் காட்சிப் படைப்பில் நெற்றிக் கண் திறந்ததால் வெளிப்படும் தீச்சுடர்களும், அதன் தாக்குதலால் காமன் படும் துன்பமும் உயிரோட்டமாய் காணலாம். கங்கைசொண்ட சோழீச்சரத்திலோ பிரம்மாண்டமும் கம்பீரமும் நம்மை வியக்க வைக்கின்றன. தாராசுரத்திலோ நம் கண் முன்பே காட்சி நிகழ்வு முழுவதையும் காண்கிறோம். (ப.192)

புள்ளமங்கை சிற்பங்கள், கும்பகோணம் வீர சைவமடத்துக் கட்டுமானம், திருக்காட்டுப்பள்ளியில் இறைவன் காளையில் இறைவியோடு வரல், பழையாறையில் இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுத்தல், திருமழபாடியில் சோமாஸ்கந்தர் சிற்பம் உள்ளிட்ட சில இடங்களை நான் நேரில் பார்த்துள்ளேன். நூலில் அவற்றைப் படிக்கும்போது நாம் பார்த்த சிற்பங்களும், ஓவியங்களும் இவ்வளவு காலத்தனவா என எண்ணி வியந்தேன். நூலாசிரியருடன்  பல சிற்பங்களைக் காணும் பேறு  பெற்றேன்.நூல் மூலமாக பல அரிய செய்திகளை அழகான புகைப்படங்களோடு காணும் வாய்ப்பினை மறுபடியும் பெற்றேன். 

 அருமையான இந்நூலைப் படிப்போம். நமக்கு அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும், ஓவியங்களையும், கட்டட நுட்பங்களையும் ரசிப்போம். வாருங்கள். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம்.  

---------------------------------------------------------------------------------------------------
நூல் : கலையியல் ரசனை கட்டுரைகள்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன் (9843666921)
பதிப்பகம் : அகரம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007,  (04362-239289)
ஆண்டு : 2014
விலை : ரூ.180
---------------------------------------------------------------------------------------------------

நாம் முன்பு வாசித்த இவரது நூல்கள்:

31 comments:

  1. வணக்கம்
    ஐயா
    புத்தகம் பற்றி மிக அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். அறியாத வரலாற்றை அறியக்கிடைக்கும். புத்தகம். எல்லாம் பயனுள்ள கட்டுரைகள்வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.
    தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. முனைவர் அவர்களின் விமர்சனம் அருமை நூலை படிக்கும் ஆவலை உண்டு பண்ணி விட்டது தகவலுக்கு நன்றி.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. நம் கலைகள். ஆம் அய்யா அருமையான நூல் விமர்சனம். அவசியம் படிக்கனும். நன்றி.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்.

    நூலைத் தங்களின் பார்வையில் எடுத்துச் சென்றவிதம் சிறப்பு.

    தொடர்கிறேன்.

    நனறி

    ReplyDelete
  6. முடியுமானால் எழுத்துகளின் அளவைச் சற்றுப் பெரிதாக்கலாம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தற்போது எழுத்தின் அளவைப் பெரிதாக்கிவிட்டேன்.

      Delete
  7. நூல் விமர்சனம் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது... வரலாற்று சிறப்பை பகிர்ந்து இர்க்கிறீர்கள். வாங்கி வாசிக்க வேண்டும்.நன்றி தம +1

    ReplyDelete
  8. அருமையான நூல் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா
    இந்நூல் தஞ்சையில் எந்த கடையில் கிடைக்கும் என்பதை தெரிவித்தீர்களேயானால் , உடன் வாங்குவேன்
    நன்றி ஐயா
    தம 6

    ReplyDelete
    Replies
    1. அகரம் பதிப்பகத்தில் கிடைக்கும். தொலைபேசி எண்ணையும், பதிப்பக முகவரியையும் பகிர்வில் தந்துள்ளேன். நன்றி.

      Delete
  9. நேரில் கண்டதை நூலில் படிக்கும் பரவசத்தை ரசித்தேன்...

    சிறப்பான நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா, எனக்கு வரலாறு பழங்கலைகளில் அதிக ஆர்வம் உண்டு. இந்த நூலின் அறிமுகப் பதிவை வாசித்த போதே இந்நூலை வாசிக்க வேண்டும் என்ற பேரவா எழுந்துவிட்டது. அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ! :)

    ReplyDelete
  11. முதுமையில் முடங்கிக் கிடக்கும் என் போன்றவர்களுக்கு இத்தகைப் பதிவுகள் ,பலவும் அறிய வழி செய்கின்றன! நன்றி முனைவரே!

    ReplyDelete
  12. கலை நயங்களைப் பற்றிய நூலுக்கு
    கலை நயத்துடன் அறிமுகம்..

    தங்களின் கை வண்ணம் - கலைப் பொக்கிஷங்களை - நேரில் பார்க்கத் தூண்டுகின்றது..

    ReplyDelete
  13. படிப்பதற்கு வாய்ப்பில்லை..தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.நன்றி! அய்யா...

    ReplyDelete
  14. நூல் விமர்சனம் வெகு சிறப்பு அய்யா!
    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  15. சரித்திர புகழ் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அந்த இடங்களைப் பற்றி விரிவாக சொல்லக்கூடிய புத்தகங்கள் இல்லையே என்று நினைப்பேன். தங்கள் அறிமுகப்படுத்திய இந்த புத்தகம் அந்த ஏக்கத்தை போக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    தங்கள் தளத்தில் இணைந்துள்ளேன். இனி வரும் பதிவுகளை தொடர்கிறேன்.

    த ம 11

    ReplyDelete
  16. அறியாத கலைகளை அறியதந்தற்கு நன்றி! அய்யா...

    ReplyDelete
  17. சரித்திரப்புகழ் பெற்ற இடங்களைப்பற்றிய நூல் அறிமுகம் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. அன்பின் முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்களுக்கு

    வேறு ஒருவரது நல்ல புத்தகத்தை, அதன் மேன்மையை, அரிதாகக் கிடைக்கும் தரவுகளின் அடையாளத்தை இத்தனை அன்போடு அறிமுகம் செய்திருக்கும் உங்களை எல்லா உயிரும் தொழும்...

    இறை நம்பிக்கை இல்லாதவரையும் கலை அள்ளிச் செல்லும் என்றீர்கள்....

    கோயில்களை மன்னர்கள் தங்களது இரண்டாவது கஜானாக்களாக பரிபாலனம் செய்து வந்தனர் என்றும், வெகுமக்கள் காணிக்கையும் அங்கே குவிந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். படையெடுப்பு நடக்கையில் கோயில்கள் ஏன் குறிவைக்கப் பட்டன என்பதன் பொருளும் இதில் அடங்கி இருக்கிறது. கோயில் நுழைவு உரிமை ஏன் அடித்தட்டு மக்களுக்கு மறுக்கப்பட்டது என்பதையும் உள்ளடக்கிய அருமையான நூல் ஒன்று, ஆலய நுழைவு உரிமை என்ற பெயரில் 1930களிலேயே வெளி வந்திருந்தது. பெரியார் இயக்கத் தொண்டரான அதன் ஆசிரியர் குமரி பகுதியில் அப்போதைய மாகாண அவையில் உறுப்பினராகவும் செயல்பட்டவர்.

    ராஜராஜன் காலத்தில் நிலம் பறிக்கப்பட்ட வேளாண் மக்கள் பின்னர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தப் பட்ட வரலாற்றுக் குறிப்புகளையும் வாசித்திருக்கிறேன்.

    இவற்றை மீறி கோயில்களுக்குச் செல்வதையோ, சிற்பங்களை ரசனையோடு உள்ளத்தைப் பறிகொடுத்து லயித்து நோக்குவதையோ நானும் சரி, என் வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரியும் சரி மறுத்துக் கொள்வதில்லை...

    உங்களது அற்புதமான அறிமுக மொழியினூடு ததும்பும் ஆர்வம் போற்றுதலுக்குரிய பண்பு...

    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  19. பல இடங்கள் சென்று வந்தவை. இனி செல்லாத இடங்களுக்குப் போகும் வாய்ப்பும் குறைவு. புத்தகத்தில் இடம் சார்ந்த புகைப் படங்கள் இருக்குமானால் பார்க்கலாம். அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. ஒரு இடத்திற்கு, முக்கியமாக கோயிலுக்கு செல்லும் முன் அந்த இடத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டால் நல்லது. அந்த வகையில் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ”கலையியல் ரசனைக் கட்டுரைகள்” பற்றிய உங்கள் நூல் விமர்சனம் நல்ல அறிமுகம். திறம்பட உரைத்தீர்கள்.
    த.ம.12

    ReplyDelete
  21. மனிதனின் கற்பனைக்கு எல்லையில்லை என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.

    ReplyDelete
  22. தங்களின் அறிமுகப்பணி தொடரட்டும்

    ReplyDelete
  23. பயனுள்ள தகவல்கள் அய்யா..

    ReplyDelete
  24. அருமையான விமர்சனம் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.
    பதிவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  25. நல்ல நூல் ஒன்றை அறிமுகம் செய்ததற்காக நன்றிகள் முனைவரே ..

    ReplyDelete
  26. குடவாயிலாரின் நூல்கள் யாவும் பலவும் ஆன்லைனில் கிடைப்பதில்லை என்பதால் பரவாலாக காணப்படாதிருக்கிறது. ஆனால் அதில் ஒளிந்திருக்கும் தகவல் வரலாற்று ஆர்வலர்களுக்கும், தொல்லியல் ஆரவலர்களுக்கும் அத்தியவசியமானது. மனிதரைப் பேசச் சொல்லிக் கேட்கவேண்டும். எவ்வளது தகவல். எத்தணை சுவாரசியம்.
    நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. வணக்கம் சகோதரரே.

    அருமையான நூலை சிறப்பான முறையில் எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.அதிலிருந்த அனைத்து கோவில்களின் பெருமைகளை அறிந்து கொள்ளும் ஆவலை தங்கள் சிறந்த விமர்சனம் தூண்டி விடுகிறது. வாங்கிப் படிக்க வேண்டும் .பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே.

    என் தளம் வந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  28. சரித்திரப் புகழ்பெற்ற கோவில்களைப் பற்றிய அருமையான தகவல்கள் தரும் புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி. வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் வாசிப்பேன்.

    ReplyDelete
  29. அன்பின் திரு.மரு.பி.ஜம்புலிங்கம் ஐயா அவர்கட்கு,

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
    தங்களின் வலைப்பூ சென்று பிரம்பித்துப் போய் திரும்பினேன். கலை நயங்கள், திருக்கோயில்கள் என்றுத் திரும்பிய திசையெல்லாம் ஆன்மீகமும், களையும் நிரம்பி வழிய. பதிவுகள் மிகவும் அருமை.
    தங்களின் துணைவியாரின் பதிவுகளும் அருமை. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்பதால் புக் மார்க் செய்து கொண்டேன். தங்கள் இருவரின் எழுத்துலக சேவையும் எங்களைப் போன்ற அனைவருக்கும் தேவை. பாராட்டி மகிழ்கின்றேன். தங்கள் வலைப்பூவிலிருந்து இன்னும் பல வலைப்பூ செல்லும் வாய்ப்பையும் தந்தீர்கள். நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    ReplyDelete