முகப்பு

24 June 2015

கோயில் உலா : சூன் 2015

20.6.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, மங்களாசாசனம் பெற்ற தலங்களான நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், திருப்புகழ்த் தலமான காவலூர், பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் காவலூர் மற்றும் திருஆதனூர் கோயில்கள் தற்போது முதல் முறையாக நான் செல்கிறேன். மற்ற அனைத்து கோயில்களுக்கும் முன்னர் பல முறை சென்றுள்ளேன். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். வாருங்கள்.


கோயில் உலாவின்போது ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலில்
1) திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
காலை 7.00 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேனில் கிளம்பினோம். முதலில் திட்டை சென்றோம். வசிஷ்டேஸ்வரையும் சுகந்தகுந்தளாம்பிகையையும் தரிசித்தோம். குருவினை நின்ற நிலையில் கண்டோம்.
திட்டை கோயிலின் முன்பாக நிற்கும் எங்களது வேன்
 2) காவலூர் முருகன் கோயில்
திட்டை பயணம் முடித்து அங்கிருந்து காவலூர் சென்றோம். திருப்புகழ் பாடல் பெற்ற இக்கோயில் சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது. ஆறுபடை வீடுகளைச் சேர்ந்த முருகனின் திருவுருவங்களையும் இங்கு கண்டோம். திருமுருக கிருபானந்த வாரியார் இக்கோயிலுக்கு விரும்பி வந்ததாகக் கூறினர்.

காவலூர் முருகன் கோயில் முழுத்தோற்றம்
3) திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில்
அங்கிருந்து நாங்கள் சென்றது திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோயில். முல்லைவனநாதரையும், அம்மனையும் தரிசித்தோம். யாகசாலையை ஒட்டிய மண்டபம் குதிரை, தேரை இழுத்துச் செல்வது போல அமைந்துள்ள அமைப்பு பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அச்சிற்பத்தை ரசித்துவிட்டு அக்கோயிலிலேயே காலை உணவு உட்கொண்டோம். இதே போன்ற சிற்பத்தை பழையாறையிலும் கண்டோம்.

திருக்கருக்காவூர் கோயிலில்  தேரை இழுத்துச்செல்லும் குதிரை
 4) ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
அழகான மாடக்கோயில்.  படிகளில் ஏறி மேலே கோயிலுக்குச் சென்றோம். பசுபதிநாதரையும், மங்களாம்பிகை, பங்கஜவல்லி என்ற இரு அம்மன் இரு அம்மன் சன்னதிகளையும் கண்டோம். ஒரே இடத்தில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், காள பைரவர், உன்மத்த பைரவர் எனப்படுகின்ற ஐந்து பைரவர்களைக் கண்டோம். இவ்வாறு வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.

மாடக்கோயில் அமைப்பில் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்
5) திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில்
அடுத்து நாங்கள் சென்றது திருச்சத்திமுற்றம் முல்லைவனநாதர் கோயில். இம்மண்டபத்தில் கருவறையின் வலப்புறம் சக்தி தழுவிய உடையார் என்ற சன்னதி உள்ளது. இது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். சக்தி முற்றம் எனப்படுகின்ற சக்தி உறையும் இடத்தை இறைவி இறைவனுக்கு முத்தம் தருவதாகக் கூறிவருவதைக் கண்டோம். தனியாக அம்மன் சன்னதியில் அம்மனைக் கண்டோம்.

6) பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
அடுத்து நந்தி விலகிய தலமாகக் கருதப்படும் தேனுபுரீஸ்வரர் கோயில். மூலவர் சன்னதியின் இடப்புறம் ஞானாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்படுகளோடு உள்ளதைக் கண்டோம். தேனுபுரீஸ்வரரையும், அம்மனையும் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது அக்கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் சன்னதியைக் கண்டோம். துர்க்கையம்மனை தரிசித்துவிட்டு குழுவாக அங்கு மதிய உணவு உண்டோம். மாலை வரை ஓய்வெடுத்தோம். 4.00 மணிக்கு மறுபடியும் கிளம்பினோம்.
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் வாயில்
அங்கிருந்து போகும் வழியில் முழையூர் தர்மபுரீஸ்வரர் கோயிலைப் பார்த்தோம். மாடக்கோயிலாக மிகவும் பெரிய கோயிலாக இருந்தது. அதற்கடுத்து  பார்சுவநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நேரமின்மை காரணமாக இரு கோயிலுக்கும் செல்ல முடியவில்லை.

7) பழையாறை சோமநாதர் கோயில்
இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளபோதிலும் பெயரின் காரணமாக வரலாற்றுரீதியாக என்னை ஈர்த்த கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் அமைப்பு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை நினைவுபடுத்தும். மூலவர் சன்னதி அமைந்துள்ள மண்டபம் குதிரைகள் இழுத்துச் செல்வதைப் போல அமைந்துள்ளது. ஒரே நாளில் இவ்வாறான அமைப்பில் இரு கோயில்களை இன்று பார்த்துள்ளோம்.

பழையாறை சோமநாதசுவாமி கோயிலில் தேரை இழுத்துச்செல்லும் குதிரை
8) நந்திபுர விண்ணகரம் எனப்படும் நாதன்கோயில்
அதற்கருகில் நாதன்கோயில் எனப்படுகின்ற ஜகன்னாதப்பெருமாள் கோயில் இருப்பதாகக் கூறினேன். அப்போது திரு ஜெயபால் அவர்கள் அது மங்களாசாசனம் பெற்ற தலமா? என்றார். ஆமாம் என்று நான் கூறியதும் எங்களது வேன் அக்கோயிலை நோக்கிச் சென்றது. ஆறு விண்ணகரங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளதாகக் கூறினர். மூலவராக அமர்ந்த கோலத்தில் பெருமாள் உள்ளார். அருகில் ஸ்ரீதேவி, பூமாதேவி உள்ளனர். பெருமாள் சன்னதியின்  இடப்புறம் செண்பகவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

நந்திபுரவிண்ணகரம் ராஜகோபுரம்

9) பஞ்சவன்மாதேவீச்சரம்
கோயில் உலாவின்போது வரலாற்றறிஞர் திரு குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நாங்கள் இருக்கும் இடத்தைக் கூறியவுடன் அவசியம் பஞ்சவன்மாதேவீச்சரம் செல்லுங்கள் என்றார். என் மனதுக்குள் இருந்த ஆசையும் அதுவே. அடுத்த இடமாக நாங்கள் ராஜேந்திர சோழன் தன் சிற்றன்னைக்காகக் கட்டிய பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம் சென்றோம்.  

10) திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில்
பஞ்சவன்மாதேவீச்சரத்திலிருந்து கோபிநாதப்பெருமாள் கோயில் வழியாக திருவலஞ்சுழி வந்தடைந்தோம். திருவலஞ்சுழியில் கபர்தீஸ்வரர் கோயிலும், விநாயகர் கோயிலும் ஒரே வளாகத்தில் உள்ளன.  வலப்புறம் பைரவருக்கான தனிக்கோயில் உள்ளது. விநாயகர் கோயிலைக் கடந்தே சிவன் கோயிலுக்குச் செல்ல முடியும் விநாயகர் கோயிலிலும், கபர்தீஸ்வர் கோயிலிலும்  நுட்பமான தூண்கள் காணப்படுகின்றன. மிகப்புகழ் பெற்ற திருவலஞ்சுழி பலகணியைப் பார்த்தோம்.
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வலஞ்சுழி விநாயகர் கோயில்
11)திருஆதனூர்
திருவலஞ்சுழியிலிருந்து சுவாமிமலை வழியாக வந்து திருஆதனூர் சென்றோம். கிடந்த நிலையில் பெருமாள் இருந்த ஆண்டளக்குமயன் கோயில் சென்றோம். மங்களாசாசனம் பெற்ற இக்கோயிலில் பெருமாள் கிடந்த கோலம் மனதிற்கு நிறைவைத் தந்தது. அக்கோயிலுடன் எங்களது பயணத்தை நிறைவு செய்து, இரவு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

திருஆதனூர் பெருமாள் கோயில்
நன்றி : இத்தலச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
-----------------------------------------------------------------------------------------------
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது தனது தளத்தில் எனது இரு வலைப்பூக்களையும் 25.6.2015 அன்று அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.கீழ்க்கண்ட இணைப்பில் அப்பதிவைக் காண அழைக்கிறேன்.
அமைதியான சாதனையாளர் பா.ஜம்புலிங்கம்
-----------------------------------------------------------------------------------------------

18 June 2015

விக்கிபீடியா: 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு

தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்துள்ளேன். தொகுப்பு (edit) என்ற நிலையில் 5000ஐ நெருங்குகிறேன். இம் முயற்சிக்குத் துணை நிற்கும் விக்கிபீடியா நண்பர்களுக்கும், வலைப்பூ நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பௌத்த ஆய்வாளராக விக்கியில் உள்ள நான் பயனர் என்ற நிலையில் பதிந்து எழுதிவருகிறேன். இவ்வினிய வேளையில் தமிழ் விக்கிபீடியாவில் எனது அனுபவங்களைப் பகிர்வதை மகிழ்கிறேன். உங்களையும் விக்கியில் எழுத அழைக்கிறேன்.

விக்கியின் விதிமுறைகளை முற்றிலும் அறியாத காலகட்டத்தில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வழக்கமாக எழுதும் கட்டுரை போல விக்கிபீடியாவில் ஒரு பதிவு எழுதினேன். உரிய முறையில் அது எழுதப்படாத நிலையில் சில நாள்களில் அக்கட்டுரை நீக்கப்பட்டதை அறிந்தேன். விதிமுறைகளை ஓரளவு அறிந்து விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே எழுத ஆரம்பித்தேன். 6.7.2014 அன்று விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கி 100ஆவது பதிவை  நிறைவு செய்தேன். ஒவ்வொரு பதிவுக்குப் பின்னும் ஒரு ஊக்கமும் ஆக்கமும் உள்ளதை எழுதும்போது உணரமுடிகிறது. புதிதாக எழுதுவதோடு மட்டுமன்றி பிறருடைய பதிவுகளையும் என்னால் முடிந்த அளவு மேம்படுத்தி வருகிறேன்.

முதல் பதிவு
தமிழ்ப்பண்டிதர் மணி.மாறனைப் பற்றியது. ஆரம்பித்தபோது எதை, எப்படி, எங்கிருந்து எழுதுவது என்ற நிலையில் பல கேள்விகள் எழுந்தன. அதிகம் சிரமப்பட்டு தொடங்கிவிட்டேன். அக்கட்டுரை தற்போதைய வடிவம் பெற பல மாதங்களானது.



அன்றே பதிவு
தஞ்சாவூரில் வெள்ளை பிள்ளையார் கோயில் குடமுழுக்கு (15.9.2014) நடந்தபோது கோயிலுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்து அன்றே பதிந்தேன். அன்றைய நாள் நிகழ்வினை அன்றே பதிய ஆரம்பித்தது இப்பதிவிலிருந்துதான்.

விரும்பிய பதிவுகள்
நான் ஆரம்பித்த பதிவுகள் அனைத்தும் மனதிற்குப் பிடித்தபோதிலும், கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல பதிவுகள் என்னை அதிகம் கவர்ந்துவிட்டன.
முதன்முதலில் கவனிப்பாரட்டுக் கிடந்து பின்னர் நல்ல நிலையினைப் பெற்ற, பட்டீஸ்வரம் அருகேயுள்ள, இராஜேந்திரசோழன் எடுத்த பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம்.
பிறந்த மண்ணான கும்போணம் செல்லும்போதெல்லாம் பெரும்பாலும் நான் செல்லும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்.
ஒரே கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கோயில்களாக திருவலஞ்சுழியில் உள்ள கோயிலுக்குச் சென்று பதியப்பட்டவையே திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் மற்றும்  திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்.

இல்லாதவை பற்றிய பதிவு
தஞ்சாவூர் பீரங்கி பற்றி விக்கியில் உள்ளதா என்று என் மனைவி ஐயமெழுப்ப உருவானதே தஞ்சாவூர் பீரங்கி. பின்னர் அந்த நோக்கில் சிந்தித்து பல பதிவுகள் எழுதிவருகிறேன். இவ்வாறான ஆரம்பம் எந்த தலைப்பு இல்லை எனத் தெரிவு செய்து அதைப் பற்றி தேடி எழுத ஓர் ஆவலை உண்டாக்கிவிட்டது.

மறக்கமுடியாத பதிவு
தேனுகா அவர்களைப் பற்றிய பதிவினை ஆரம்பித்து, புகைப்படத்தைச் சேர்ப்பதற்காக அவருடன் தொலைபேசியில் பேசினேன். மறு நாள் அவர் மின்னஞ்சலில் அனுப்புவதாகக் கூறியிருந்தார். அவர் புகைப்படம் அனுப்புவதாகச் சொன்ன நாளில் கும்பகோணத்திலிருந்து வந்த செய்தி அவர் இறந்துவிட்டார் என்பதே. அவரைப் பற்றியப் பதிவையும் இட்டுவிட்டு அவருடைய இறப்பு பற்றிய செய்தியையும் பதியவேண்டிய நிலை வந்தது குறித்து வருந்தி அவருடைய பக்கம் சென்றேன். எனக்கு முன்னரே பிறிதொரு விக்கிபீடியா நண்பர் தேனுகாவின் இறப்புச் செய்தியைப் பதிந்திருந்தார். விக்கி நண்பர்களின் உதவியுடன் அவருடைய புகைப்படம், அவருடைய பதிவில் சேர்க்கப்பட்டது.



தொடர் பதிவு
தஞ்சாவூரில் தேரோட்டம் பற்றிய செய்தி வரத்தொடங்கிய முதல் தேரோட்ட நாளன்று விழாவில் கலந்துகொண்டது வரை அனைத்து செய்திகளையும் முடிந்த வரை தொகுத்து பதிவில் இணைத்தேன். குறிப்பாக விழா நாளில் தஞ்சாவூர் பெரிய கோயிலிலிருந்து விடியற்காலை பஞ்சமூர்த்திகள் புறப்பட்டதைப் புகைப்படங்களாகச் சேர்த்து பதிவில் இணைத்தேன். தேரோட்ட ஆரம்பம் முதல் இது ஒரு தொடர் பதிவாக இருந்தது. அவ்வப்போது மேற்கோள்களைத் தரவேண்டியிருந்தது.

மற்றொரு தொடர் பதிவு
இளைய மகாமகம் பற்றிய பதிவினை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நாள்களில் கும்பகோணம் சென்று புகைப்படங்களை எடுத்துப் பதியப்பட்டதே இளைய மகாமகம்.

அறிமுகமான நிலையில் பதிவு
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் ஒரு நண்பர், பெட்டி காளியம்மன் கோயில் விழாவிற்கு வருகிறார்களா? என்று கேட்கவே, போக முடியாத நிலையில் விழா முடிந்த பின்னர் அக்கோயிலுக்குச் சென்று பதிவு செய்ததே கொரநாட்டுக் கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில்.

படித்த நூல் பற்றிய பதிவு
படித்த நூல்களைப் பதியவேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது பல நூல்களைப் பற்றிப் பதிவிடுகிறேன். அவ்வாறான ஒரு பதிவே ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழர் வீரம் (நூல்).



விக்கிபீடியர்களின் ஆலோசனைகள்
100ஆவது பதிவினை நிறைவு செய்தபோது நான் பகிர்ந்த கருத்தை இங்கு மறுபடியும் பதிய விரும்புகிறேன். ஆரம்பத்தில் பதிவுகளைப் பதிய ஆரம்பிக்கும்போது நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பல தவறுகளையும், மாற்றங்களையும் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. விக்கியுள்ள நண்பர்கள் என்னை நெறிப்படுத்தி செல்லும் நிலையில் ஓரளவு பக்குவம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது. விக்கிபீடியர்களின் துணையோடும், ஆலோசனைகளோடும் பதிவுகளை செம்மையாக எழுதும் எண்ணம் மேம்படுகிறது.

தெரிந்துகொள்ள வேண்டிய நுட்பங்கள்
இன்னும் சில தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டியுள்ளது. நூலட்டை சேர்த்தல், பிறருடைய புகைப்படங்களை இணைத்தல், பிற ஆவணங்களிலிருந்து புகைப்படங்களைத் தெரிவு செய்தல் போன்ற பல நிலைகளில் இன்னும் கற்றுக்கொண்டு வருகிறேன்.

விக்கிபீடியாவில் எழுத அழைப்பு
தொடர் பங்களிப்பும், விக்கிபீடியர்களின் துணையும் நான் தொடர்ந்து விக்கிபீடியாவில் எழுத உதவும் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது. அந்நம்பிக்கையுடன் மற்ற நண்பர்களையும் விக்கியில் எழுத அழைக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிப்போம். நம் மொழி, பண்பாடு, கலை என்ற நிலைகளில் நம்மால் ஆன பங்களிப்பைத் தருவோம். வாருங்கள்.

----------------------------------------------------------------------------------------------------
200ஆவது பதிவை நான் நிறைவு செய்ததை அவரது தளத்தில் பகிர்ந்த நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
----------------------------------------------------------------------------------------------------
 19.6.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

12 June 2015

புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்

தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று ஆலந்துறைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு குடவாயில் பாலசுப்ரமணியன் அய்யம்பேட்டை செல்வராஜ், அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, கரந்தை ஜெயக்குமார் உள்ளிட்ட பல நண்பர்களுடனும் அறிஞர்களுடனும் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் மென்மேலும் அதன்மீதான ஈடுபாடு கூடுவதை என்னால் உணர முடிகிறது. அக்கோயிலுக்குச் செல்வோம் வாருங்கள். 


தமிழகத்தில் தஞ்சாவூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்குச் செல்லலாம். 

பண்டைக்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். அம்மன்னன் காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு இக்கோயில் ஒரு எடுத்துக் காட்டாகும். ஞானசம்பந்தப்பெருமானால் பாடப்பெற்ற இக்கோயிலின் தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச்சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக இக்கோயில் விளங்குகிறது. 



கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. சப்தஸ்தானத்தல விழாவிற்கான பல்லக்கு அருகே காணப்படுகிறது.





கருவறை கோஷ்டத்தில் சீதை இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்துசெல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.       













ஒரு சோழ நாட்டுச் சிற்பி.....கம்பனின் காப்பியம் காட்டும் வாலி வதத்தின் சோகத்தை விஞ்சும் வகையில் கம்பனுக்குக் காலத்தால் முற்பட்ட புள்ளமங்கைச் சிற்பம் உள்ளது உண்மை என்று அங்குள்ள சிற்பங்களில் ஒன்றின் பெருமையைப்பற்றி  குடவாயில் பாலசுப்பிரமணியன் தன்னுடைய கலையியல் ரசனைக் கட்டுரைகள் என்ற நூலில் விவாதிக்கிறார். அனைத்துச் சிற்பங்களும் அவ்வாறு உணர்வை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

அழகான சிற்பங்களையும், கலை நுட்பங்களையும் கொண்ட இக்கோயிலுக்கு ஒரு முறை சென்றுவருவோம்.

துணை நின்றவை
மா.சந்திரமூர்த்தி, புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 2004
மு.அகிலா, புனலாடும் முன் புள்ளமங்கை செல்வோம், மகாமகம் மலர் 2004

07 June 2015

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

சித்தாந்த ரத்னம் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் சென்ற குழுவில் நான் பார்த்த கோயில்களில் ஒன்று மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில். தமிழகத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள அக்கோயிலைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு முறை நேரில் சென்று காணுங்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள இக்கோயிலுக்கு சிதம்பரம்-எய்யலூர் வழியாகக் காட்டுமன்னார்குடி சாலையில் மெயின் ரோட்டில் முதலில் கீழக்கடம்பூர் 2 கிமீ என்ற கைகாட்டியைக் கடந்து, பின் செல்லலாம். தாராசுரம், ஆவுடையார்கோயில், திருவலஞ்சுழி உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில் நினைவூட்டும். 

காவேரியின் வடகரைத்தலங்களில் அமைந்துள்ள இக்கோயில் ஞானசம்பந்தர், நாவுக்கரசரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும்.இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் மிகப்புகழ் பெற்றதாகும்.



இக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது என்று கூறுவர். நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.  விமானத்துடன் கூடிய கருவறையை, திருச்சுற்றிலிருந்து பார்க்கும்போது  கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் நாகேஸ்வரன் கோயில் இக்கோயிலைப் பார்க்கும், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் நம் நினைவுக்கு வரும்.

 

கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.




 

இறைவன் உமையம்மையுடன் அமர்ந்த கோலத்தில், உமையம்மையின் தாடையை வருடியபடி காணப்படும் சிற்பம் நமக்கு பஞ்சவன்மாதேவீச்சரத்தை நினைவூட்டும். இவ்வாறான சிற்பங்கள் தமிழகத்தில் பல கோயில்களில் உள்ளன. அருகிலுள்ள இருவரும் நின்ற கோலத்தில் காணப்படும் சிற்பம் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். 






கருவறை கோஷ்டத்தில் காணப்படும் சிற்பங்கள் நமக்கு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் காணப்படுகின்ற நாயன்மார்களின் சிற்பங்களையும், கதையையும் நினைவூட்டும். 








கோயிலுக்குள் நுழைந்து சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தால் நாம் முற்றிலும் அதில் லயித்து விடுவோம். அவற்றினுடைய அழகு நம் மனதில் பதிந்துவிடும். வேலைப்பாடுகளையும், மிகச் சிறிய அளவிலான சிற்பங்களையும் கொண்டுள்ள இக்கோயிலை ஒரு முறை சென்று பார்ப்போம். 

8.6.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

03 June 2015

ஐந்தாம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்

தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, ஞானசம்பந்தர் தேவாரத்தினையும், நாவுக்கரசர் தேவாரத்தில் முதல் திருமுறையினையும் நாவுக்கரசர் தேவாரத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் திருமுறையினை நிறைவு செய்து, ஆறாம் திருமுறை வாசிக்கத் துவங்கியுள்ளேன். பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியினைத் தொடர்கிறேன். 

நான்காம் திருமுறையில் இருப்பது போலவே நாவுக்கரசர் இறைவனையும், இயற்கையையும், பிற சமயங்களையும் பாடியுள்ள விதம் மனதில் பதியும் வகையில் உள்ளது. அவருடைய வயதின் முதிர்ச்சியை அவரது சில பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐந்தாம் திருமுறையிலிருந்து அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம்.



1) திருமீயச்சூர்
இறைவனுக்கு ஏற்றமுடைய கோயிலாக திருமீயச்சூர் கோயிலைப் போற்றுகிறார். 

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
(பதிகத்தொடர் எண்.124 பாடல் எண்.1) 
இந்நாள் வரை தோன்றிய கோயில்களும், இனித் தோன்றும் கோயில்களும், வேற்றுக் கோயில்களும் பலவுளேனும், கூற்றுவனைத் தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்.

2) திருக்கடம்பூர்
திருக்கடம்பூர் பதிகப் பாடல் ஒன்றில் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்கிறார். அப்பாடலைப் பார்ப்போம். 

நங்க டம்பனைப் பெற்றவன் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி னெசய்து கிடப்பதே.
(பதிகத்தொடர் எண்.132 பாடல் எண்.9) 
கடம்ப மாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பஙகில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றோரைத் தாங்குதல்;  என் போன்றோர் கடன் பணி செய்து தற்போதம் இன்றி இருத்தல்.

3) திருவாய்மூர்
இப்பதிகத்தின் ஒரு பாடலில் திருமறைக்காட்டில் கதவு திறக்கப் பாடிய ஞானசம்பந்தரையும், செந்தமிழையும் போற்றிவிட்டு, இறைவனை பித்தரே என்று ஏத்துகிறார்.

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைகொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.
(பதிகத்தொடர் எண்.163 பாடல் எண்.8)
   
வேதங்களால் பூசைக்கப்பெற்று அடைக்கப்பெற்றிருந்த மறைக்காட்டுத் திருகதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப்பிள்ளையார் உதோ நின்றார். திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லலோ? இவர் பித்தரேயாவர்.

4) பொது
ஒன்று முதல் பத்து என்ற எண்களைக் கொண்டு ஆரம்பிக்கும் இப்பதிகப் பாடல்களில் ஒன்றை அவர் பாட நாம் கேட்போம்.

ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன் மனத் துள்ளவே.
(பதிகத்தொடர் எண்.202 பாடல் எண்.7) 

ஏழு மலை, ஏழு புவனம், ஏழ் கடல் போற்றும் இராவணனது ஏழிசை கேட்டு அருள் செய்தவன். அவன் திருவடிகள் எழு பிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன.



5) பொது
புழுவினுடன் தம்மை ஒப்புநோக்கி அவர் தன்னைப் புழுவினும் கடையேன் என்று கூறும் பாடலைக் கேட்போம்.

புழுவுக் குங்குணம் நான்னெக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
(பதிகத்தொடர் எண்.204 பாடல் எண்.4) 

புழுவுவக்கும் குணம் நான்கு. எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழுவினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்தஅடியார் கழுவினுக்குச் சன்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?
பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008 
இதற்கு முன் நாம் வாசித்தவை : 
முதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்
நான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்
------------------------------------------------------------------------------------------------
சோழநாட்டில் பௌத்தம் வலைப்பூவில், The New Indian Express இதழில் வெளியான ஆய்வு தொடர்பான பேட்டியைப் பகிர்ந்துள்ளேன். அப்பேட்டியைக் காண அழைக்கிறேன்.
Tracing footprints of Buddhism in Chola country



-----------------------------------------------------------------------------------------------