முகப்பு

22 August 2015

கோயில் உலா : சூலை 2015

18.7.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், மங்களாசாசனம் பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். இவற்றில் நான் முன்னரே பார்த்தது பந்தணைநல்லூர் மட்டுமே. மற்ற அனைத்துக் கோயில்களுக்கும் இப்போது முதன்முறையாகச் செல்கிறேன். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன், வாருங்கள்.

1) பந்தணை நல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் (மயிலாடுதுறை-திருப்பனந்தாள் இடையில் உள்ளது. கும்பகோணம், குத்தாலம், திருப்பனந்தாள் ஆகிய இடங்களிலிருந்து செல்லலாம்)
பசுபதீசுவரர், வேணுபுஜாம்பிகை. (சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தலம்). இத்தலத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. முதன்முதலாக சட்டநாதர் சன்னதியை சீர்காழியில் பார்த்தேன். பிறகு நெடுநாள் கழித்து கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதையறிந்து சென்று பார்த்தேன். கோயிலின் வலப்புறம் வெளியே ஆதிகேசவப்பெருமாள் சன்னதி உள்ளது. இறைவனை வணங்கிவிட்டு கோயிலில் காலை உணவினை கோயில் சன்னதியில் உண்டோம்.
பந்தணைநல்லூர் ராஜகோபுரம்
2) பழமண்ணிப்படிக்கரை, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில்  மணல்மேடு கடைத்தெருவிலிருந்து வடக்கே 2 கிமீ தூரத்தில் உள்ளது)
நீலகண்டேஸ்வரர், இரு தேவி அமிர்தகரவல்லி, மங்களநாயகி. (சுந்தரர்). பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறுகின்றனர். இறைவன், இறைவி சன்னதிகள் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளன. பிற சன்னதிகள் பிரகாரத்தில் அமைந்துள்ளதைக் கண்டோம்.
பழமண்ணிப்படிக்கரை ராஜகோபுரம்
3) திருவாழ்கொளிப்புத்தூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும் வரலாம்)
மாணிக்கவண்ணர், வண்டார் குழலம்மை (ஞானசம்பந்தர், சுந்தரர்)
ராஜகோபுரமில்லா வாயிலைக் கடந்து உள்ளே சென்றோம். இறைவனை வணங்கினோம்.
திருவாழ்கொளிப்புததூர் கோயில் முகப்பு
4) திருக்குரக்குக்கா, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு வந்து மருத்துவமனை கட்டடத்துக்கு பக்கத்தில் செல்லும் சாலையில் வடக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது)
குந்தளேஸ்வரர், குந்தளாம்பிகை (அப்பர்)
குரங்கு வழிபட்ட தலம். குரங்கு கூட மூலவரை வழிபட்டதாகக் கூறுகின்றனர். இறைவன் சன்னதியைவிட ஆஞ்சநேயர் சன்னதிக்கு பக்தர்கள் அதிகமாக வருவதைக் கண்டோம்.
திருக்குரக்குக்கா கோயில் நுழைவாயில்
5) திருக்கருப்பறியலூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் தலைஞாயிறு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாக செல்லும் பாதையில் செல்லலாம்)
குற்றம்பொறுத்தநாதர், கோள்வளைநாயகி (ஞானசம்பந்தர், சுந்தரர்)
இக்கோயிலிலும் சட்டநாதர் சன்னதி உள்ளது. மலைக்கோயில் என்று அதனை அழைக்கின்றனர். வித்தியாசமானதாக அழகான சன்னதியாக மூலவர் சன்னதியின் வலப்புறம் தனியாக அமைந்துள்ளது. இதுவரை இவ்வாறான அமைப்பில் ஒரு விமானத்தைக் கொண்ட ஒரு சன்னதியை நான் பார்த்ததில்லை.

திருக்கருப்பறியலூர் மூலவர் விமானம், சட்டநாதர் சன்னதி (இடது)
6) திருப்புன்கூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-திருப்பனந்தாள் சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 3 கிமீ மேற்கே உள்ளது)
சிவலோகநாதர், சொக்கநாயகி (மூவர் பாடிய தலம்)
நான் பார்க்க ஆசைப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று. திருநாளைப்போவாருக்காக (நந்தனார்) தம்மை வழிபடுவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு கூறிய புகழ் பெற்ற இத்தலத்தில் உள்ள நந்தி மிக அழகாக உள்ளது. சுந்தரர் பதிகம் பாடி மழை வரவழைத்த பெருமை உள்ள ஊர். கோயிலின் உள்ளேயும், வெளியே எதிரேயும் நந்தனாருக்கான சன்னதிகள் உள்ளன. அவையனைத்தையும் பார்த்துவிட்டு மதியம் கோயிலில் விலகிய நந்தியருகே அனைவரும் ஓய்வெடுத்தோம். மாலை 4.00 மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து குறுமாணக்குடி சென்றோம்.
திருப்புன்கூரில் விலகிய நிலையில் நந்தி
7) குறுமாணக்குடி, நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-மயிலாடுதுறை சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தென்கிழக்கே 3 கிமீ தொலைவில் உள்ளது)
கண்ணாயிரமுடையார், முருகுவளர்கோதை (ஞானசம்பந்தர்)
இந்திரனுடைய சாபம் நீங்கிய இத்தலத்திற்கு திருக்கண்ணார் கோயில் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலைவிட்டுக் கிளம்பியதும் மழை தூற ஆரம்பித்தது.
குறுமாணக்குடி கோயில் நுழைவாயில்
8) கீழையூர், நாகை மாவட்டம் (மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில்  மேலையூர் மேலைப்பாதி தாண்டி, சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது)
கடைமுடிநாதர், அபிராமி (ஞானசம்பந்தர்)
பிரமனும், கண்வ முனிவரும் வழிபட்ட பெருமையுடைய தலம். தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. முதன்மை வாயில் பூட்டப்பட்டிருந்தது. பக்கவாட்டில் உள்ள வாயில் வழியாக உள்ளே சென்றோம். விட்டு விட்டு மழை தூறிக்கொண்டேயிருந்தது.

கீழையூர் கடைமுடிநாதர் கோயில் முகப்பு

9) திருநின்றியூர், நாகை மாவட்டம் (வைத்தீஸ்வரன்கோயில்-மயிலாடுதுறை சாலையில்  மயிலாடுதுறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது)
மகாலட்சுமீசுவரர், லோகநாயகி (மூவர்)
சிறிய ராஜகோபுரத்தைக் கடந்ததும் ரிஷபக்கொட்டில் உள்ளது. அதையடுத்து மூலவர் சன்னதி உள்ளது. சிறிய கோயிலாக இருந்தாலும் பார்க்க அழகாக உள்ளது. மழையின் காரணமாக இக்கோயிலில் சற்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு பின்னர் புறப்பட்டோம்.

திருநின்றியூர் ராஜகோபுரத்தை அடுத்த ரிஷபக்கொட்டில்
10) பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர் (மயிலாடுதுறை நகரில் உள்ளது).
பரிமளரங்கநாதர், பரிமளரங்க நாயகி
இத்தலம் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகும். பஞ்சரங்கம் என்றும் அந்தரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மற்றவை  ஆதிரங்கம் (ஸ்ரீரங்கப்பட்டணம், கர்னாடகா),  மத்தியரங்கம் (திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கொள்ளிடத்தின் தெற்குக்கரையில் அமைந்துள்ள திருப்பேர்நகர் என்ற கோவிலடி), சதுர்த்தரங்கம் (கும்பகோணம் சார்ங்கபாணி கோயில்) ஆகும்.  பரிமள ரங்கநாதரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு அவர் நம் மனதில் பதிந்துவிடுவார்.
பரிமள ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம்
11) வேள்விக்குடி, நாகை மாவட்டம் (மயிலாடுதுறை -மகாராஜபுரம் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 11 கிமீ தொலைவில் குத்தாலத்திற்கு அருகே உள்ளது).
கல்யாணசுந்தரேசுவரர், பரிமள சுகந்தநாயகி (சம்பந்தர், சுந்தரர்)
இரவு 7.30 மணிவாக்கில் சென்றோம். அர்ச்சகர் கோயிலைப் பூட்டி வெளியே வந்துவிட்டார். குழுவாகச் சென்ற நாங்கள் கேட்டுக்கொண்டும் கோயிலைத் திறக்க மறுத்துவிட்டார். வேறு வழியின்றி வாயிலில் நின்று இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பினோம். அங்கிருந்து கஞ்சனூர் சென்றோம்.
வேள்விக்குடி கோயில் நுழைவாயில்
12) கஞ்சனூர், தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணத்திலிருந்து செல்லலாம். திருவிடைமருதூர், மயிலாடுதுறையிலிருந்தும் செல்லலாம்)
அக்னீஸ்வரர், கற்பகாம்பிகை. (அப்பர்)
இத்தல உலாவில் எங்கள் பயணம் இக்கோயிலில் நிறைவுற்றது. கலிக்காம நாயனாருக்கும் திருமணம் நிகழ்ந்த இத்தலம், பிரமனுக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலமாகும். இறைவனை வணங்கிவிட்டு நிறைவாக இரவு உணவினை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி, சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.  

எங்களது இப்பயணத்தில் மறக்கமுடியாதவை விலகிய நந்தி, சட்டநாதர் சன்னதி. மழையின் காரணமாக மேலும் சில தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு குறைந்தது. இருந்தாலும் ஒரே நாளில் 11 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கும் மங்களாசாசனம் பெற்ற ஒரு கோயிலுக்கும் சென்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.

நன்றி
எங்களை தொடர்ந்து கோயில் உலா அழைத்துச்செல்லும் தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ. ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி.

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

46 comments:

  1. தேவாரப் பாடல் பெற்ற சிறப்புத் தலங்களுக்கு சென்றதை இன்னும் ஒவ்வொரு கோவிலின் சிறப்போடு தனித்தனியே தந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும்போது சில பதிவுகளை அவ்வாறு எழுதியுள்ளேன். தங்களின் கருத்தை மனதில் இருத்திக் கொண்டேன். கருத்திற்கும் வருகைக்கும் நன்றி.

      Delete
  2. பந்த நல்லூர் மட்டுமே தரிசித்திருக்கின்றேன்.. கோயிலைச்சுற்றி பெரியதாக அகழி இருந்தது.. தற்போது இருக்கின்றதா தெரியவில்லை..

    எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் பார்த்தவரையில் எங்களுக்கு தெரியவில்லை. சிவன் கோயிலின் வலப்புறம் வெளியே பெருமாள் கோயில் உள்ளதைப் பார்த்தோம். உள் மண்டபத்தில் இடப்புறம் இறைவன் இறைவியை திருமணக்கோலத்தில் தனி சன்னதியில் கண்டோம். வருகைக்கு நன்றி.

      Delete
  3. தாங்கள் அழைத்துச்சென்றவிதம் நாங்கள்செல்லவேண்டுமென்றால்மீண்டுமொருமுறை தங்களின்பதிவைப்பார்த்துவிட்டுசென்றாலுதவியாக
    இருக்கும் என்றுநினைக்கிறேன்நன்றிஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.

      Delete
  4. இது வெறும் பயணப் பதிவல்ல...
    பயனுள்ள அருமையான தகவல்

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. தங்களது ஒருங்கிணைந்த வலைப்பூவினைக் கண்டேன். எனது தளத்தில் இணைத்துவிட்டேன்.

      Delete
  5. அருமையான பதிவு சார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  6. வணக்கம் ஐயா!

    உண்மையிலேயே வியந்துபோனேன்!
    ஒரு நாளில் இத்தனை கோயில்கள் சென்று தரிசித்துள்ளீர்கள். தங்களின் விபரணமும் அழகு!
    அனைவருக்கும் உதவியானவை!

    நல்ல பதிவும் பகிர்வும் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. மழை இல்லாமலிருந்தால் இன்னும் இரு இடங்களுக்குச் சென்றிருப்போம். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  7. 12 ஸ்தலங்களுக்கும் நாங்களும் நடந்து வரும் உணர்வைக் கொடுத்து அதைக்காணும் பாக்கியத்தையும் புகைப்படத்தின் வாயிலாக கொடுத்த முனைவர் அவர்களுக்கு நன்றி
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு மகிழ்வினைத் தருகிறது. நன்றி.

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    கோயில் உலா வந்ததை படங்களுடன் நல்ல அனுபவமாகத் தந்தது அருமை.

    நன்றி.
    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  9. தித்திக்கத் தித்திக்க ஒரு பயணம்
    அருமை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. பயணம் தித்தித்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  10. சுருக்கமான விவரங்களுடன் தேவாரத் தல அறிமுகங்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  11. வணக்கம்
    ஐயா
    ஆலயம் பற்றி படத்துடன் அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. வாழ்த்துகள்.பண்ணாராய்ச்சி வித்தகர் இவ்வாறு கோயில்கள்தோறும் சென்று வழிபட நாடுகாண் குழு என்ற அமைப்பை உருவாக்கியிருந்தார். அந்த நினைவைத் தங்கள் கட்டுரை தந்தது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. கோயில்கள் தொடர்பான முதல் பதிவினை எழுத ஆரம்பித்தபோது நண்பர்கள் தல உலா, ஸ்தல உலா, தல யாத்திரை என்றவாறு பல சொற்களைக் கூறினர். எனக்கு கோயில் உலா என்ற சொல்லே பிடித்திருந்தது. அவ்வாறே எழுத ஆரம்பித்துவிட்டேன். நாடுகாண் குழு என்ற சொல்லை தங்கள் மூலமாக அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  14. பெரும்பாலான கோவில்கள் மயிலாடுத்துறை திருப்பனந்தாள் சாலையில் வைத்தீஸ்வரன் கோவில் சுற்றியே இருப்பது. காணும்போது நன்குதிட்டமிட்ட பயணம் என்று அறிய முடிகிறது இக்கோவில்கள் நான் பார்க்காதது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து வருகிறோம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  15. கோயில்களுக்கு பஞ்சமில்லா நாடு........

    ReplyDelete
  16. உண்மை. நிறைவான இறையுணர்வு உள்ள நாடும் கூட

    ReplyDelete
  17. பார்க்க முடியாத தலங்கள் எல்லாம் உங்களின் பயணம் ஊடாக நானும் பார்த்து ரசித்தேன் ஐயா.சில தலங்களின் தருசனம் கான பூசாரிகள் நந்தி போல வழிவிடுவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. நேரத்தில் சென்றாலும் பல இடங்களில் இவ்வாறான சோதனைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. வருகைக்கு நன்றி.

      Delete
  18. கோவில் உலா சுகமாக இருந்தது. பந்தணை நல்லூர், திருக்குரக்குக்கா, கீழையூர், திருநன்றியூர் தெரியும்.மற்ற‌வையெல்லாம் புதிதாக இருந்தது. விளக்கமும் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  19. 12 ஆவது நவக்கிரகப் பரிகாரத் தலங்களில் சுக்கிரனுக்கான தலம்.
    மனம் நிறைய வைத்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  20. படங்களுடன் பரிகாரத்தலங்கள் அருமையாக இருந்தது அய்யா!
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  21. இப்பதிவில் உள்ள கோவில்கள் எதற்கும் இதுவரை சென்றதில்லை. தமிழகம் வரும்போது கிடைக்கும் சொல்ப சமயத்தில் ஒரு சில இடங்கள் மட்டுமே பார்க்க முடிகிறது.

    உங்கள் மூலம் இன்னும் சில தலங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  22. தங்கள் எண்ணம் ஈடேறும். அனைத்துக் கோயில்களும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  23. வைத்தீஸ்வரன் கோயில் தவிர பிற கோயில்கள் சென்றதில்லை. மிக்க நன்றி ஐயா நல்ல விரிவான தகவல்களுக்கு....செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு ஐயா இருவருக்குமே...மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. எண்ணம்போல தங்கள் குடும்பத்தார்க்கு இக்கோயில்களுக்கு செல்லும் நல்வாய்ப்பு அமையும். நன்றி.

      Delete
  24. அருமை அய்யா... படங்களும் விளக்கமும் உதவும் வகையில் இருக்கிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கு நன்றி.

      Delete
    2. வணக்கம் ஐயா!! தங்கள் வலைப்பூவிற்கு புதியவன் எந்ந கோவிலுக்கும் சென்றதில்லை தாய் தந்தையரே கோவில் என நினைப்பவன்!! தவறாக இருப்பின் மறவாது மன்னிக்கவும் நன்றி

      அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

      Delete
    3. புதியவருக்கு நல்வரவு. கருத்திற்கு நன்றி.

      Delete
    4. வணக்கம் ஐயா!! தங்கள் வலைப்பூவிற்கு புதியவன் எந்ந கோவிலுக்கும் சென்றதில்லை தாய் தந்தையரே கோவில் என நினைப்பவன்!! தவறாக இருப்பின் மறவாது மன்னிக்கவும் நன்றி

      அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!

      Delete
  25. பழமையான கோவில்களின் படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete