முகப்பு

15 May 2016

கோயில் உலா : 13 மார்ச் 2016

13 மார்ச் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி,  குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர் ஆகிய கோயில்களுக்கும் மங்களாசாசனம் பெற்ற ஒரு கோயிலுக்கும் (உப்பிலியப்பன் கோயில்) சென்றோம்.  உப்பிலியப்பன் கோயில் தவிர மற்ற அனைத்துமே நான் இதுவரை பார்த்திராத கோயில்கள். நாங்கள் சென்ற கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். 

1) திருமங்கலக்குடி (கும்பகோணம்-கதிராமங்கலம்-மயிலாடுதுறை சாலை)
பிராணவரதேஸ்வரர்-மங்களநாயகி. (சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது)
உலாவின் முதல் கோயிலான திருமங்கலங்குடிக்குச் சென்றபோது பிரம்மோத்சவ விழா ஏற்பாடுகளைக் காணமுடிந்தது. கோயிலில் உள்ளே சென்றதும் முனைவர் ஜெயபால் அவர்கள் சிவபுராணம் பாட அனைவரும் உடன் பாடினோம். முதலாம் குலோத்துங்க மன்னனின் காலத்தில் வரி வசூலிப்பவர் ஒருவர் அரசுப்பணத்தில் மங்கலக்குடியில் பிராணவரதேஸ்வரருக்குக் கோயில் கட்டியதாகவும் அறிந்த மன்னன் மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டதாகவும், மந்திரியின் மனைவி அத்தலத்து இறைவியிடம் வேண்டியதாகவும், அதே சமயம் மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்ய வேண்டியதாகவும் மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடல் திருமங்கலக்குடியை அடைந்ததும் இறைவியின் அருளால் அவன் உயிர் பெற்றதாகவும் கூறுகின்றனர். அதனால் இறைவன் பிராணன் தந்த பிராண வரதேஸ்வரர் என்றும் இறைவி மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.  இத்தகு புகழ் பெற்ற இறைவனையும், இறைவியையும் தரிசித்தோம். உற்சவர் கோயிலிலிருந்து உலா வந்தார். கோயிலிலிருந்து அவர் வெளியே வரும் அழகை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.    


திருமங்கலக்குடி
2) திருக்கோடிக்கா (கும்பகோணம்-கதிராமங்கலம் சாலை அல்லது மயிலாடுதுறை-குத்தாலம் வழி கதிராமங்கலம் சாலை)
கோடீஸ்வரர்-திரிபுரசுந்தரி. (சம்பந்தர், அப்பர்)
கோயிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் நம்மை வரவேற்கின்றன. ராஜகோபுரத்தின் கீழே காணப்படுகின்ற இச்சிற்பங்களைப் பார்த்ததும் அங்கேயே அனைவரும் நின்றுவிட்டோம். யானை, குதிரை, காளை என்ற நிலையில் பல உருவங்களைக் காணமுடிந்தது.  கல்லால் ஆன தேர் எங்களைக் கவர்ந்துவிட்டது. மிக நுணுக்கமாகவும் அழகாகவும் இருந்தன. இறைவனையும், இறைவியையும் வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.


திருக்கோடிக்கா
3) வேள்விக்குடி (குத்தாலம் அருகே. மயிலாடுதுறை-மகாராஜபுரம் சாலை)
மணவாளேஸ்வரர்-பரிமளசுகந்தநாயகி. (சம்பந்தர், அப்பர்)
அடுத்து நாங்கள் சென்ற கோயில் வேள்விக்குடி. சிவபெருமானின் திருமண வேள்வி நடந்த தலமாதலால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். இறைவனை வணங்கிவிட்டு திருச்சுற்று வரும்போது அழகான சிற்பத்தைக் கண்டோம். இறைவனும் இறைவியும் திருமணக்கோலத்தில் இருந்த காட்சி காண்போரைக் கவரும் வகையில் இருந்தது. 



வேள்விக்குடி
4) எதிர்கொள்பாடி எனப்படும் மேலைத்திருமணஞ்சேரி (குத்தாலத்திலிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலையில் வந்து அஞ்சார்வார்த்தலை என்னும் ஊரையடைந்து, வாய்க்கால் பாலம் தாண்டி, வலப்புறம் செல்லலாம் அல்லது மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாக)
ஐராவதேஸ்வரர்-மலர்குழல்நாயகி. (சுந்தரர்)
வேள்விக்குடியிலிருந்து எதிர்கொள்பாடி சென்றோம். வேள்விக்குடியில் திருமணம் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவரான அரசகுமாரனை இறைவன் எதிர்கொண்டழைத்ததால் இத்தலம் எதிர்கொள்பாடியானது. கோயில் அமைப்பு சற்றே வித்தியாசமானதாக இருந்தது. உள்ளே நுழையும்போது விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோரின் சன்னதியில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.  உள்ளே இறைவன் சன்னதிக்கு வலப்புறம் சற்றே முன்னதாக இறைவி சன்னதி உள்ளது.
எதிர்கொள்பாடி
5) திருமணஞ்சேரி எனப்படும் கீழைத்திருமணஞ்சேரி (மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகச்செல்லலாம்)
கல்யாணசுந்தரேஸ்வரர்-கோகிலாம்பாள். (சம்பந்தர், அப்பர்) 
எதிர்கொள்பாடி தலத்தையடுத்து திருமணஞ்சேரி சென்றோம். மேலைத்திருமணஞ்சேரி என்று ஒரு தலமிருப்பதால் இத்தலத்தை கீழைத்திருமணஞ்சேரி என்றழைக்கின்றனர். இறைவன் கல்யாணசுந்தரர் வடிவம் கொண்டு இறைவியைத் திருமணம் செய்ததால் இத்தலம் திருமணஞ்சேரி எனப்படுகிறது.  திருமணம் தடை படுபவர்கள் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவ்வகையில் இக்கோயிலில் அதிகமான எண்ணிக்கையில் திருமணத்திற்கு வேண்டிக்கொள்வோரையும், புதிய மணத்தம்பதியரையும் அதிகமாகக் காணமுடிகின்றது. மூலவரைச் சுற்றிவரும் திருச்சுற்றில் கல்யாணசுந்தரேசர் சன்னதியில் கல்யாணசுந்தரர் உற்சவமூர்த்தியாக இருக்கிறார். அங்கு எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.
திருமணஞ்சேரி 



6) திருத்துருத்தி எனப்படும் குத்தாலம் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது)
சொன்னவாறு அறிவார்-பரிமளசுகந்தநாயகி (சம்பந்தர், அப்பர், சுந்தரர்)
இறைவி இறைவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டித் தவம் செய்ததாகவும், இறைவன் காட்சி தந்து விதிப்படி அவரை மணப்பதாகக் கூறிய இடம் என்ற சிறப்பினை இத்தலம் பெற்றுள்ளது. இங்குள்ள உத்தால மரம் வேறு எங்கும் காணப்பெறாத அரிய மரம் என்று கூறுகின்றனர். உமையை மணக்க இறைவன் வந்த வடிவம் மணவாளநாதர் என்றும், பாதுகையாக வந்த வேதம் உத்தால மரமானதென்றும் கூறுவர். அம்மரத்திற்கு எதிர்ப்புறத்தில் திருமணத்திற்கெனக் கோலங்கொண்ட திருமேனியாக உள்ளார். இறைவியை மணந்துகொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் துணைவந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இக்கோயில் அழகான விமானத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. 
குத்தாலம் 
7) கொருக்கை எனப்படும் திருக்குறுக்கை (மயிலாடுதுறை அருகே 12 கிமீ தொலைவில் உள்ளது)
வீரட்டேஸ்வரர்-ஞானாம்பிகை (அப்பர்)
மதியம் கொருக்கை வந்து சேர்ந்தோம். மதிய உணவுக்குப் பின் சற்றே ஓய்வெடுத்தோம். பின்பு கோயிலுக்குச் சென்றோம். அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான மன்மதனை எரித்த தலம் இதுவாகும். காம தகன விழா மாசி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்றழைக்கப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கிமீ தொலைவில் அக்குட்டை அமைந்துள்ளது. சற்றொப்ப திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் உள்ளவாறே இக்கோயில் அழகான விமானத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலுள்ள பெரிய அளவிலான சிற்பங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன. 
கொருக்கை 
8) அன்னியூர் எனப்படும் பொன்னூர் (மயிலாடுதுறையிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது)
ஆபத்சகாயேஸ்வரர்-பெரியநாயகி (சம்பந்தர், அப்பர்) 
கொருக்கை இறைவனைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து அன்னியூர் எனப்படும் பொன்னூர் வந்து சேர்ந்தோம். இத்தலத்திற்கு அருகே நீடூர், மயிலாடுதுறை, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, கொருக்கை முதலிய பல தலங்கள் அமைந்துள்ளன. 
அன்னியூர் ஆபத்சகாயேஸ்வரர்
9) நீடூர் (மயிலாடுதுறை அருகே உள்ளது)
சோமநாதேஸ்வரர்-வேயுறுதோளியம்மை (அப்பர், சுந்தரர்)
சற்றே இருட்ட ஆரம்பித்த நிலையில் அங்கிருந்து நீடூர் சென்றோம். ஊழிக்காலத்திலும் இத்தலம் அழியாமல் நீடித்திருந்ததால் நீடூர் என்ற பெயர் பெற்றது. இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த பெருமையுடையது இங்குள்ள மூலவரின் லிங்கத்திருமேனி. பின்னால் நண்டு பூசித்ததும் அதன் காற்சுவடி அத்திருமேனியில் பதிந்ததாகக் கூறுவர். 
நீடூர் 
10) தேரழுந்தூர் (மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் வந்து கோமல் சாலையில் திரும்பிச் சென்றால் மூவலூரை அடுத்து உள்ளது)
வேதபுரீஸ்வரர்-சௌந்தரநாயகி (சம்பந்தர்)
அங்கிருந்து தேரழுந்தூர் சென்றோம். அகத்தியர் இங்கு இறைவனை வழிபடும்போது அதையறியாத மன்னன் ஒருவன் வான வெளியில் செலுத்திச் சென்ற தேரானது, இங்கு அழுந்திய காரணத்தால் தேரழுந்தூர் என்பர். இக்கோயிலின் முக்கிய சன்னதியாக உள்ளே நுழைந்தபின் இடப்புறம் காணப்படும் மடேஸ்வரர், மடேஸ்வரி சன்னதிகளைக் கூறலாம்.  உள்ளே நேராகச் சென்றால் மூலவர் சன்னதியை அடையலாம். மூலவர் சன்னதிக்கு சற்று முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த பெருமையினை உடைய இந்த ஊரில் அவர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என்றழைக்கப்படுகிறது.  
தேரழுந்தூர் 
11) உப்பிலியப்பன் கோயில் (கும்பகோணம் அருகே உள்ளது)
உலாவின் நிறைவாக தஞ்சாவூர் வரும்வழியில் மங்களாசாசனம் பெற்ற வைணவத்தலமான உப்பிலியப்பன் கோயில் சென்றோம். நடை மூடப்படும் நேரம் நெருங்கவே அவசரம் அவசரமாக பெருமாளை தரிசனம் செய்துவிட்டு முன்மண்டபத்தில் சற்றே அமர்ந்து இறைவன் புகழைப்பாடினோம். அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்கள், வித்தியாசமான விமானங்களைக் கொண்ட இரு கோயில்கள், அட்டவீரட்டத்தலங்களில் ஒரு தலம் என்ற நிலையில் நாங்கள் இன்று பார்த்த அனைத்து சிவன் கோயில்களும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களாகும். மங்களாசாசனம் பெற்ற கோயிலாக உப்பிலியப்பனை நிறைவாகத் தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி, மன நிறைவோடு தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.கோயில் உலாக்களில் மறக்கமுடியாத உலாவாக இந்த உலாவும் அமைந்தது.  

உப்பிலியப்பன் கோயில்
நன்றி
கோயில் உலா அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத்தலங்கள் வழிகாட்டி
முனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்
விக்கிபீடியா

15 comments:

  1. இனிய காலைப் பொழுதில் திருத்தலங்களைக் காணக் கிடைத்தது..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. மயிலாடுதுறையில் இருந்ததால் இந்த தலங்களை எல்லாம் தரிசனம் செய்து இருக்கிறோம். திருமங்கலகுடி அடிக்கடி செல்வோம். அதன் அருகில் இருக்கும் நவக்கிரக கோவிலும் போவோம்.
    படங்களும், கோவில் செய்திகளும் அருமை.

    ReplyDelete
  3. அழகிய கோயில் தரிசன விடயங்கள் தந்த முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  4. தலவரலாறுகள் படிப்பதே தனி இன்பம். புகைப்படங்களுடன் அந்தந்த கோயில்களின் தல வரலாறுகளை வாசித்த போது மனசுக்கு இதமாக இருந்தது.

    திருமணஞ்சேரி சென்றிருக்கிறேன். மற்ற கோயில் தரிசனங்கள் சரியாக நினைவுக்கு வரவில்லை. ஒப்பிலியப்பனோ எங்கள் குல தெய்வம்.

    இந்தச் சுட்டி தங்கள் அன்பான பார்வைக்காக:

    http://jeeveesblog.blogspot.in/2008/05/blog-post_25.html

    ReplyDelete
  5. கோவில்களின் தரிசனம் அருமை ஐயா...!

    ReplyDelete
  6. சிறப்பான உலா... உங்கள் தயவில் நாங்களும் சிறப்பான கோவில்களைக் கண்டோம். நன்றி ஐயா.

    ReplyDelete
  7. தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள தலங்களுள் திருமணஞ்சேரி மட்டும்தான் சென்றுள்ளேன். வாய்ப்பு அமைந்தால் மற்ற தலங்களையும் தரிசிப்பேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. அருமையான திருத்தல உலா.

    ReplyDelete
  9. அருமையான உலாக்கள் உங்கள் ஆசியில் நானும் தரிசித்த உணர்வுடன்.

    ReplyDelete
  10. கோயில் உலா
    அருமையான பதிவு
    பலருக்குப் பயனுள்ள பதிவு
    மொத்தத்தில் ஓரு வரலாற்றுப் பதிவு

    ReplyDelete
  11. உடன் பயணித்த திருப்தி
    படங்களுடன் பகிர்வு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. தேரழுந்தூர் போனபோது வேதபுரீஸ்வரரை தரிசிக்கமுடியாமல் போச்சு. இங்கே உங்கபதிவில்தான் தரிசனம்!

    மற்ற கோவில்களில் ஒப்பிலியப்பன் மட்டுமே போயிருக்கோம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. உங்க தயவில் கோவில் தரிசனம் ஆச்சு. கும்பகோணம் பக்கம் வந்தா, உங்க உதவியை நாடலாம் போலிருக்கிறது. கோவிலைப் பற்றி preparatory work பண்ணிட்டு வந்தா, கோவிலைப்பற்றி அறிந்த செய்திகளோடு தரிசனம் செய்யலாம். நிறைவாகவும் இருக்கும்.

    ReplyDelete