முகப்பு

24 September 2016

முனைவர் இராம. குருநாதன் நூல்கள்

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாகக் கட்டுரை எழுதுவதற்காக கும்பகோணம் சென்றபோது முனைவர் இராம. குருநாதன்  (9444043173), அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தான் எழுதிய நூல்களைத் தந்து எனது கட்டுரைகளைப் பாராட்டிக் கூறினார்.  அவரது நூல்களை முன்னரே படித்துவிட்டாலும் தற்போதுதான் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நூல்களைப் பற்றிச் சுருக்கமாக அறிவோம், வாருங்கள்.


தமிழ் யாப்பியல் உயராய்வு, ஆங்கில மூலம் : செந்தமிழ்க்காவலர் பேராசிரியர் அ.சிதம்பரனார், தமிழில் : இராம.குருநாதன், விழிகள் பதிப்பகம் (9444265152), 8/எம், 139, 7ஆவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை 600 041, 2009
"தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழகத்தில் ஆய்வேடு அளித்து அதன்வழியே முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வேடு என்ற பெருமையைக் கொண்டது இந்நூல். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவ்வாய்வேடு 67 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதன்முதலாகத் தமிழ் வடிவம் பெறுகிறது. முனைவர் அ.சிதம்பரநாதனார் கைப்படி ஆங்காங்கே சில திருத்தங்களை செய்ய எண்ணிய நூல் படிவம் என்னிடம் உள்ளது. அதில் சில இடங்களில் அவரே அடித்தும் கைப்படக் குறுக்குக் கோடு இட்டும் வைத்துள்ளார்" என்று மொழிபெயர்ப்பாசிரியர் நூலின் பெருமையைப் பற்றிக் கூறுகிறார்.   இந்நூல் கி.பி.10ஆம் நூற்றாண்டு வரை தமிழ் யாப்பியலின் வரலாற்றை எடுத்துக்கூறுகிறது. 

போடோ சிறுகதைகள்மூலம் : ஜெய்காந்த சர்மா, தமிழாக்கம் : இராம.குருநாதன்,
சாகித்திய அகாதெமி, புதுதில்லி, 2012
"போடோவின் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள் பதினொன்றும் ப்டோவின் அண்மைக்காலக் கதைகளின் போக்கை உணர்த்துகின்றன. குறிப்பாகபத்தாண்டு காலத்தின் பதிவுகள் அவை. போடோ வாசகர்களாலும் திறனாய்வாளர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும். எளிமையும் தமக்கெனத் தனி அடையாளமும் கொண்ட போடோ மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தின் பிரதிபலிப்பினை இக்கதைகள் வெளிப்படுத்துவனவாய் உள்ளன" என்ற நிலையில் பதிப்பகத்தாரின் குறிப்போடு அமைந்துள்ள இந்நூலில் மூல ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. படிக்கும்போது மூல நூலையே படிப்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. 

நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் ஓர் ஒப்பாய்வு,  இராம.குருநாதன், விழிகள் பதிப்பகம் (9444265152), 2012
"கீரரையும் கீட்சையும் ஒப்பிட்டு நோக்க இயலுமா?  நக்கீரர் செவ்வியல் காலத்துக் கவிஞராயிற்றே. செவ்வியல் தன்மைகள்தாமே அவருடைய கவி ஆளுமையாக இருக்க இயலும். கீட்சு புனைவியல் காலத்துக் கவிஞராயிற்றே! முற்றிலும் புனைவியல் கூறுகளால் அமைந்த கவித்தன்மையல்லவா அவரது கவிதையில் இருக்கமுடியும். செவ்வியல் காலத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவரைப் புனைவியல் காலத்தவரோடு ஒப்பியல் நோக்கில் ஒப்பிட இயலுவதா எனக் கேட்கலாம். காலங்கடந்து நிற்பவர்களாயிற்றே கவிஞர்கள்" என்ற குறிப்பினை முன்னுரையில் தரும் ஆசிரியர் மிகவும் நுட்பமாக தன் எழுத்துத்திறமையால் பாடுபொருள் சிந்தனையில் அவர்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிடுகிறார். ஒப்புமைப் பண்புகளை நூலாசிரியர் வாசகர்கள் முன்பாக வைக்கும்விதம் வியப்பை உண்டாக்குகிறது.

ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன் : பாரதிதாசனும் இராபர்ட் லீ பிராஸ்ட்டும், இராம.குருநாதன், தென்புத்தூர் பதிப்பகம், 10/E55, 3ஆம் குறுக்குத்தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை 600 041, விற்பனை உரிமை : விழிகள் பதிப்பகம் (9444265152), 2015
ஒப்பியல் நோக்கில் வல்லுநராக நூலாசிரியர் பாரதிதாசனையும் இராபர்ட் லீ பிராஸ்ட்டையும் இந்நூலில் ஒப்புநோக்குகிறார். ஒருவர் தமிழகத்துக் கவிஞர். மற்றொருவரோ அமெரிக்கக்கவிஞர். இவர்கள் இருவருமே பல வகைகளில் ஒத்த நிலையில் உள்ளவர்கள். வாழ்க்கையின் பரந்த வெளியைக் கவிதையின் பாடுபொருளாக்கியவர்கள். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை மக்களுக்குப் புரிய வைத்தவர்கள். இவர்களை ஒப்பிடுவதற்கான சில அடிப்படைக் கூறுகளை முன்வைத்து, அந்த வகையில் இவ்விருவரையும் சில கோணங்களில் ஒப்பிட முயன்று வெற்றி பெறுகிறார். 


பல்வகைப் பொருண்மையில் அமைந்துள்ள முனைவர் இராம.குருநாதன் அவர்களின் மூல நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும், ஒப்பியல் நூல்களையும் வாசிப்போம், வாருங்கள். 


விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு

16 comments:

  1. நல்லதொரு அறிமுகம். நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  2. சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பற்றி தாங்கள் பதிவு எழுதிய சில நாட்களிலேயே அந்நூலகம் பற்றி தி இந்துவில் கட்டுரை கண்டு மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  3. நல்ல அறிமுகம் ஐயா..

    ReplyDelete
  4. முனைவரின் அறிமுகம் நன்று தொடரட்டும்...

    ReplyDelete
  5. நல்லதொரு அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. பாரதிதாசனையும் இராபர்ட் லீ பிராஸ்ட்டையும் ஒப்பிட்டு ஒரு நூலா ?படிக்க வேண்டுமென்ற ஆரவத்தைத் தூண்டுகிறது உங்க பதிவு !

    ReplyDelete
  7. செவ்வியல் காலத்து படைப்புக்ளுக்கும், புனைவியல் காலத்துப் படைப்புகளுக்கும் அடிப்படையில் இருக்கும் வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள ஆவலாக் இருக்கிறது, ஐயா!

    ReplyDelete
  8. வாசிப்பில் ஆர்வம் உள்ள நீங்களெழுதி இருக்கும் பதிவு நல்லதொரு பகிர்வு ஆகும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. என் அன்பின் அய்யாவிற்கு,
    தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தங்களின் சீரான 35 ஆண்டுகள் பணிக்காலத்திற்கு முதலில் பாராட்டுகளும் வணக்கங்களும். குடந்தை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் பற்றிய தமிழ் ‘தி இந்து’ கட்டுரையில் தங்களுடைய பேட்டியினைப் படித்தேன். மன நிறைவாக இருந்தது.

    ReplyDelete
  10. பயனுள்ள அறிமுகம்.
    பாராட்டும் நன்றியும் .........

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு ஐயா.

    ReplyDelete
  12. உண்மையான தமிழ் வளர்ச்சிப் பணிகள் இவைதாம்.பாராட்டுகள்

    ReplyDelete
  13. இரா.குருநாதன் அவர்களின் அலைபேசி எண் உங்கள் பகிர்வின் மூலம் அறிகிறேன்.உங்கள் பகிர்வு வியப்பளிக்கிறது.

    ReplyDelete