முகப்பு

05 November 2016

பழையாறை மேற்றளி : திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்

பழையாறை என்றால் நமக்கு நினைவிற்கு வருவது கல்கியின் பொன்னியின் செல்வனே. ஆறை, பழையாறை, மழபாடி, பழையாறு என்று அழைக்கப்படுகின்ற பழையாறைப் பகுதியில் அருகருகே கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன.

  • பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர்
  • திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீஸ்வரர் 
  • கீழப்பழையாறை சோமநாதர் (கீழ்தளி)
  • பழையாறை தர்மபுரீசர் கோயில் 
  • முழையூர் பரசுநாதர் கோயில் (தென்தளி)
  • திருமேற்றளி கைலாசநாதர் கோயில் 
  • நந்திபுரவிண்ணகரம் (நாதன்கோயில்)
  • இராஜராஜேச்சரம் (தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்)
  • பஞ்சவன்மாதேவீச்சரம் (பள்ளிப்படை) 
பள்ளிக்காலத்தில் மிதிவண்டியில் நண்பர்களுடன் வரத்தொடங்கியது முதல் இவ்விடங்களுக்கு பல முறை சென்ற நிலையிலும் அப்பகுதியிலுள்ள திருமேற்றளிகை கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவல் நெடுநாளாக இருந்து வந்தது. 

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். அவர் இக்கோயிலைப் பற்றியும், திருமேற்றளிகையைப் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்:
"காஞ்சி மாநகரில் ஒரு மேற்றளி திகழ்ந்ததுபோல பழையாறை மாநகரில் இருந்த மேற்றளியே திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில். திருநாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் இப்பெருமானை வழிபட்டதாக சேக்கிழார் கூறுகிறார். திருமத்தடி என் பேச்சுவழக்கால் குறிக்கப்பெறும் பழையாறையின் பகுதியில் இக்கோயில் உள்ளது.....தாராலிங்கம் எனும் பல்லவர் கால இலிங்க வடிவம் எழிலோடு அருள் தர அதே காலத்தைச் சார்ந்த சண்டீசர் திருமேனி அர்த்தமண்டபத்தில் உள்ளது.  கருவறையின் புறச்சுவரில் அமர்ந்த கோலத்தில் காணப்படுகின்ற இரு சிவ வடிவங்கள் லகுளீச பாசுபதர்கள் போற்றும் சிவ வடிவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்......"

சுந்தரர் இக்கோயில் இறைவனைப் பாடும் விதம் நம்மை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும். 

அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
நின்றும்  போந்து வந்து இன்னம்பர்த்
தாங்கினோமையும் இன்ன தென்றிலர்
ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி
வானவர்தாம் தொழும்
பொங்குமால் விடை ஏறி செல்வப்
புறம் பயம் தொழப் போதுமே.

முன்னர் பராமரிப்பின்றி இருந்த இக்கோயில் வழிபாட்டில் உள்ளதை மார்ச் 2016இல் அங்கு செல்லும்போது கண்டோம். பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலிலிருந்து மிகவும் அண்மையில் இக்கோயில் உள்ளது. சாலையிலிருந்து பார்க்கும்போது இக்கோயில் தெரிவதற்கு வாய்ப்பில்லை. முதன்மைச்சாலையிலிருந்து உள்ளடங்கி காணப்படுகின்ற இக்கோயில் தரையிலிந்து சற்றே உயர்ந்த தளத்தில் சற்றொப்ப கைலாசத்தையே நமக்கு உணர்த்துமளவு அமைந்துள்ளது இக்கோயில்.



பட்டீஸ்வரத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய,  பார்ப்பதற்கு மிகவும் அழகான கருவறை மற்றும் அர்த்த மண்டபம், கண்ணைக்கவரும் விமானம், நந்தி மண்டபத்துடன் உள்ள கோயில்.  நாங்கள் சென்றிருந்த சமயம் கோயில் பூட்டியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தபின் கோயில் திறக்கப்பட்டது. கருவறை விமானத்தையே கோயிலாகக் கூறுமளவு உள்ள இக்கோயிலின் முன்பாக காணப்படுகின்ற நந்தி மண்டபத்தில் நந்திகேசர் உள்ளார்.  


சிறிய கருவறையில் பெரிய அளவிலான லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் கைலாசநாதர் என்றழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் சபளநாயகி. காமதேனுவின் மகளான சபளி வழிபட்டதால் அவ்வாறாகப் பெயர் வந்தது என்று கூறினர். அர்த்தமண்டபத்தில் சூரியன், சண்டிகேஸ்வரர், விநாயகர், பைரவர், சபளநாயகி ஆகியோரின் சிற்பங்களைக் கண்டோம்.கோயிலின் வெளியே சுற்றிவரும்போது தேவகோஷ்டத்தில் அடிமுடி காணா அண்ணல் உள்ளிட்ட பல சிற்பங்கள் இருப்பதைக் கண்டோம். 




கோயிலுக்கு எதிரில் இடிபாடான நிலையில் உள்ள கோபுரம் போன்ற அமைப்பைப் பார்க்க அங்குள்ளவர்கள் கூறினர். அந்த அமைப்பைப் பார்த்தபோது இக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய கோயிலாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்தோம். அக்கோபுரம் அப்பகுதியில் காணப்படுகின்ற கோபிநாதப்பெருமாள் கோயில் மற்றும் பழையாறை சோமநாதசுவாமி கோயிலின் ராஜகோபுரங்களை நினைவூட்டியது.
மண்ணின் பெருமையையும், வரலாற்றின் பெருமையையும் நேரடியாக உணர, திருமேற்றளிகையில் அமைதியாக இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் கைலாசநாதரையும், பழையாறைப் பகுதியிலுள்ள பிற கோயில்களையும் காண வாருங்கள்.  

துணை நின்றவை
குடவாயில் பாலசுப்பிரமணியன், "பழையாறை மாநகர்",  பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999 
பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், 2009

நன்றி
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, புகைப்படங்கள் எடுக்க உதவிய இளைய மகன் திரு சிவகுரு

21 comments:

  1. திருமேற்றளிகை கோவில் பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை ஐயா... உங்களின் பதிவின் மூலம் சிறப்பை அறிந்தேன்... நன்றி...

    ReplyDelete
  2. ஒரு முறை தங்களோடு இக்கோயில்களுக்கு நானும் வந்திருக்கிறேன் அல்லவா
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நாம் சென்ற கோயில்கள்தான். நண்பர்கள் அறிந்துகொள்ளவேண்டுமென்பதற்காகப் பகிர்ந்தேன். நன்றி.

      Delete
  3. அறியாத தளம் பற்றி அரியத் தந்தீர்கள். மிக்க நன்றி அய்யா!
    த ம 3

    ReplyDelete
  4. அரிய தகவல்கள் அறிந்தேன் முனைவருக்கு நன்றி
    த.ம.4

    ReplyDelete
  5. திருமேற்றளிகை பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை அய்யா...
    அறிந்து கொண்டேன்...

    ReplyDelete
  6. தஞ்சை- கும்பகோணம் கோயில்கள் தரிசிக்க வேண்டியவை! வாய்ப்புகிடைக்கையில் தரிசிக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  7. இவ்வளவு செய்திகளுக்கு இடையே சுந்தரர் பாடல் ஒரு போனஸ்.

    பழையாறை என்றால் எனக்கும் உடனே நினைவுக்கு வருவது பொன்னியின் செல்வன் தான்.

    பட்டீஸ்வரம் கோயிலுக்கு அருகேயே பிரியும் ஒரு சாலையில் வழிகாட்ட சிமிண்ட் பலகை வைத்து 'பழையாறை'என்று போட்டிருக்கும் அல்லவா?.. அப்படியான ஒரு நினைவு இருக்கிறது.

    கோபுரமே தான். இடிபாடுகளைப் பார்த்த பொழுது மனம் வருந்தியது.

    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான தகவல்
    தங்கள் பணி தொடர
    வாழ்த்துகள்

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  9. கோவில் கோவிலாக எங்களை அழைத்துப் போவதற்கு நன்றி

    ReplyDelete
  10. #காமதேனுவின் மகளான சபளி வழிபட்டதால் அவ்வாறாகப் பெயர் வந்தது#
    அதற்கு முன்னால் என்ன பெயரோ :)

    ReplyDelete
  11. அருமையான விபரங்கள்! மழபாடியென்றாலும் பழையாறை என்றெழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் தஞ்சையிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள திருமழபாடியா?

    ReplyDelete
    Replies
    1. பழையாறைக்குரிய பெயர்கள் தொடர்பாக முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறிய கருத்தினை பின்வரும் இணைப்பிலுள்ள பழையாறை சோமநாதர் கோயில் என்ற என் கட்டுரையின் முதல் பத்தியில் காணலாம். பழையாறைக்குரிய பெயர்களில் ஒன்று மழபாடி என்று அவர் கூறுகிறார்.
      http://drbjambulingam.blogspot.com/2016/08/blog-post.html
      தாங்கள் குறிப்பிடும் (தஞ்சையிலிருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள)திருமழபாடி வேறு. திருமழபாடி பற்றிய என் கட்டுரையை பின்வரும்இணைப்பில் காணலாம். http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_29.html தங்களின்ஆர்வத்திற்கு நன்றி.

      Delete
  12. என் வருங்கால யாத்திரைத்திட்டத்தில் பழையாறை தலத்தைச் சேர்த்துக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    மழபாடி அல்லது திருமழபாடி பற்றிய, திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களின் சந்தேகக் கேள்விக்கான, தங்களின் பதிலை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தற்போதுதான் ம்றுமொழி கூறியுள்ளேன். தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  14. மழபாடி மாணிக்கமே (?) என்ற பாடல் திருமழபாடியைக் குறிக்கிறதா அல்லது பழையாறையையா?

    ReplyDelete
  15. இவ்விடத்தில் மழபாடி என்பது என்பது திருமழபாடியைக் குறிக்கிறது. பழையாறையையல்ல.அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  16. கற்றளி என்றால் என்ன,மேற்றளி என்றால் என்ன ?விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

    ReplyDelete