முகப்பு

29 March 2017

இளைஞர்கள் முன்னேற்றம், வாசிப்பின் தேவை : திரு உட்கோட்டை பழனியப்பன்

கடந்த பதிவில் நாம் திரு உட்கோட்டை பழனியப்பன் அவர்கள் எழுதிய எளிது எளிது ஐ.ஏ.எஸ்.தேர்வு என்னும் நூலை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றோம். மாணவர்களை உருவாக்க அவர் விரும்புகின்றார். அதற்காக அதிகமான உத்திகளைக் கொண்டுள்ளார். நூலாசிரியர் அவர்கள் கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களை எழுதும் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளார். 
  • உலகத்தந்தையர்கள் 
  • ஒருவரிச்செய்திகள் 
  • அகரவரிசையில் பொது அறிவுச்செய்திகள்
  • மெகா குவிஸ் 
  • உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 
  • உலக விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு 
  • தமிழர்கள் அறிவு ஜீவிகள் 
  • சுருக்கக்குறியீடு விரிவாக்க விளக்கம் 
  • மதிப்புமிக்க மாற்றுத் திறனாளிகளின் சாதனைகள் 
  • மாணவர்கள் என்ன படிக்கலாம்?
அரியலூர் மாவட்டம் உட்கோட்டையைச் சேர்ந்த நூலாசிரியர் திரு உட்கோட்டை பழனியப்பன் (9789640173) அண்மையில் இன்று (29 ஏப்ரல் 2017) இல்லம் வந்திருந்தார். அவரது நூல்களின் பணி குறித்து அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 


ஆர்வமாகப் படித்தால் ஆட்சியராகக்கூட பொறுப்பேற்கலாம் என்று விவாதத்தைத் தொடங்கிய அவர் கூறியவை என்னை வியப்பில் ஆழ்த்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பில் பயின்ற இவருடன் பேசும்போது முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருடன் பேசும் மன நிலை எனக்கு ஏற்பட்டது. உடன் என் மூத்த மகன் திரு பாரத் இருந்தார். இன்றைய இளைஞர்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் உற்றுநோக்கத்தக்கன, கடைபிடிக்கவேண்டியன. 
  • பெற்றோர்கள் இளம் வயதிலேயே குறிப்பாக ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படிக்கும்போதே நாம் நம் பிள்ளைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். 
  • அவ்வாறு வாசிக்கும் மாணவர்கள் பள்ளியிறுதித் தேர்வு நிறைவு பெறும் நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்ற தெளிவான எண்ணத்தைப் பெறுவார்கள்.
  • அவர்களுடைய கனவுகளை நினைவாக்க இவ்வாறான பழக்கம் மிகவும் உதவியாக உள்ளது. 
  • பள்ளியிறுதித்தேர்வு முடிக்கும் நிலையில் அடுத்த மேல் படிப்பு தொடர எளிமையான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு விடுகின்றனர். 
  • கல்லூரிக்குச் சென்று பின்னர் முடிவெடுப்பதற்கு முன்பாகவே தெளிவாக முடிவெடுக்கும் மன நிலையைப் பெறுகின்றார்கள்.
  • இன்றைய மாணவர்கள் வித்தியாசமான மன நிலையில் சிந்திக்கிறார்கள். புதுமையை விரும்புகின்றார்கள். அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் நிலையில் பெற்றோர் பொதுவாக இருப்பதில்லை.
  • மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லவேண்டும், பெற்றோர்கள் நூலகம் செல்லவேண்டும் என்று அன்றே தந்தை பெரியார் கூறினார். அவற்றை கடைபிடிக்கவேண்டியது அவசியமாகும். 
  • நம்மை கனவு காணுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்திய இந்திய குடியரசுத் தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தினசரி இரண்டு மணி நேரம் படித்தால் மாமனிதராகலாம் என்று கூறியதை நாம் நினைத்துப் பார்த்து, செயல்படுத்தவேண்டும்.  
  • வலைதளங்களும், சிறிய திரைகளும், பெரிய திரைகளும் இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டன. பெரும்பாலான பெற்றோர்களும் தொலைக்காட்சி அடிமைகளாகிவிட்டனர். பெற்றோர் பிள்ளைகள் படிக்க உதவுவதோடு தாம் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக்கொள்ளல் நலம். டிஸ்கவரி, க்விஸ், அனிமல் ப்ளானட் போன்ற பயனுள்ள தளங்களை பார்ப்பது அவசியமாகும்.
  • தொலைக்காட்சியில் வெளியாகும் செய்திகளை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கி கவனமாகத் தொடர்ந்து பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.
  • மாணவர்கள் புத்தகப்புழுக்களாக இருந்து அதிக விழுக்காட்டில் மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளனர். அவர்கள் மதிப்பெண் பெறுவது மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஆனால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே வெளியுலக நடப்புகள், பொது அறிவுக்கல்வி என்பனவற்றில் முன்னுக்கு வருகின்றனர்.    
  • பள்ளி, கல்லூரிப்படிப்பு படிப்போருக்கு படிப்பறிவு மட்டுமே இருக்கும். நூலகம் செல்வோருக்கு நூல் அறிவு, நுண்ணறிவு, நினைவாற்றல் திறன், ஆய்வுத்திறன், மொழித்திறன் போன்ற பன்முகத் திறன் காணப்படும்.  இவ்வாறாக பன்முகத்திறன் பெற்றவர்கள் போட்டித்தேர்வில் பங்குபெறவும், எளிதாக வெற்றி பெறவும் வாய்ப்பினைப் பெறுவர்.
  • இன்றைய மாணவர்களின் கனவுகளை மேம்படுத்திக்கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கினால் சாதனை புதிய தயாராக உள்ளார்கள். அவர்கள் வழிகாட்டுதல் இன்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உரிய முறையில் வழிகாட்டும்போது சாதனை புரிவார்கள்.
  • கல்லூரியில் படிக்கும்போதே எந்த மாணவர் அந்த நான்காண்டு காலத்தில், படிப்புடன் தன் திறனை வளர்த்துக்கொள்கிறாரோ அவருக்கு எதிர்காலம் வளமாக அமையும். கல்லூரியில் பயிலும் காலத்தை முறையாகப் பயன்படுத்தாதவர்கள் வாழ்வில் மேன்மையடையது சற்று சிரமமே.
  • 1000 மாணவர்களுக்காவது வழிகாட்டவேண்டும் என்ற ஓர் இலக்கை வைத்து அந்த நோக்கில் சென்று சென்றுகொண்டிருக்கும் அவர், தம்மை அணுகிய மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். அவ்வாறான சில மாணவர்களைப் பற்றி அவர் கூறியது : 
  • சராசரி மாணவரால்தான் சாதனை படைக்கமுடியும் என்பதற்கு தன் மகனையே அவர் சான்றாகக் கூறுகிறார். அவருடைய மகன் பட்டப்படிப்பு முடித்து MSc. MTech முடித்து முனைவர் பட்டம் மேற்கொண்டு வருவதாகவும், சராசரி மாணவரான தன் மகன் முனைவர் பட்ட அளவு மேற்கொள்ளும் அளவு உயர்த்தியது தன்னுடைய ஆலோசனையை என்று பெருமையோடு கூறினார். தன்னை உயர்த்திய வாசிப்புப் பழக்கம், தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் உயர்த்துவதற்கு உதவியாக உள்ளது என்று பெருமையோடு கூறினார். 
  • திருச்சியைச் சேர்ந்த பள்ளியிறுதித்தேர்வு முடித்த ஒரு மாணவி புதுமையான படிப்பு படிக்க விரும்பி அவரிடம் ஆலோசனை கேட்க வந்தபோது, அவர் மன நிலையை அறிந்து கணிப்பியல் அறிவியல் Actuarial Science என்ற பாடப்பிரிவைப் பற்றிக் கூறும்போது அம் மாணவர் அப்படிப்பில் சரியென்றுகூறி அதில் சேர்ந்துள்ளார்.
  • 1078 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் மருத்துவப்படிப்பு சேர விரும்பி, கிடைக்காத நிலையில் அவரை இளம் அறிவியல் தொடங்கி அதில் முனைவர் பட்டம் வரை படிக்கக் கூறியபோது அவர் அவ்வாறே செய்துள்ளார். தற்போது அம்மாணவர் திருச்சியில் அரசு உதவி பெற்ற கல்லூரியில் பணியாற்றி வருகிறார். படிப்பில் ஏற்றத்தாழ்வு என்பதை அம்மாணவர் உணர்ந்துகொண்டார்.  
பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப்படிப்பு முடித்து வேலைக்குச் செல்ல விரும்புவோர்கள், எந்த படிப்பு படிக்கவேண்டும் என்ற ஐயத்தில் உள்ளவர்கள் ஆலோசனை பெற அவருடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

9 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு அருமையான வழிகாட்டவ் பதிவு தந்த முனைவர் அவர்களுக்கு... வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உண்மைதான் முனைவரே

    வாசிப்புதான் தேவை

    தம

    ReplyDelete
  4. அருமையான வழிகாட்டல் மிக்க நன்றி

    ReplyDelete
  5. எவ்வளவோ நல்ல நூல்கள் இருப்பினும் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் அவை பற்றிய தகவல்கள் சென்று சேருவதில்லை. தங்களைப் போன்றோர் செய்திடும் அறிமுகம் மிகவும் பயன்தருவதாகும்.

    ReplyDelete
  6. "பெருந்தொழில் நாட்டுதும் வாரீர்" என்று உட்கோட்டையார் அழைக்கின்றார். அவரது கனவு மெய்ப்படும்.
    பதிவு மிக அருமை

    ReplyDelete
  7. இளைஞர்களின் முன்னேற்றம்
    வாசிப்பு என்றாலும்
    அறிஞர்களின் பலம்
    வாசிப்பு என்றாலும்
    வாசிப்பு இல்லையென்றால்
    நம்மாளுங்க நிலை என்னவாகும்?

    ஐயா!
    "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
    அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
    முழு விரிப்புமறிய
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete
  8. வாசிப்பின் பெருமையைச் சொல்லி, வாழ்க்கையில் கல்வியில் உயர்வு பெறுவதற்கான அருமையான கருத்துகளையும் முன்மொழிந்து மாணவர்களை வழிநடத்தும் உட்கோட்டையார் பழனியப்பன் அவர்களுக்கும் சரியான நேரத்திற்குமாணவர்களைச் சென்றடைய அறிமுகம் செய்து உதவும் தங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் ஐயா.

    அருமையான பகிர்வு!!!

    ReplyDelete