முகப்பு

16 May 2017

விதானத்துச் சித்திரம் : ரவிசுப்பிரமணியன்

கும்பகோணம் நண்பர் திரு ரவிசுப்பிரமணியன் (அலைபேசி : 9940045557) அவர்களிடமிருந்து அவருடைய கவிதைத் தொகுப்பான விதானத்துச் சித்திரம் என்ற நூலை இன்று பெற்றேன். 28 ஏப்ரல் 2017இல் நான் பணி நிறைவு பெற்றபோது அன்பளிப்பாக வந்த சுமார் 50 நூல்களில் 15 நூல்களைப் படித்து முடித்துள்ள நிலையில் அவருடைய கவிதைத் தொகுப்பு உடன் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

இருவரும் கும்பகோணம் என்ற காரணமோ, கோயில்கள் என்ற நிலையிலான ஈடுபாடோ, கலையியல் ரசனையோ, அழகியல் ஈர்ப்போ ஏதோ ஒன்று என்னை இக்கவிதை நூலை உடனே வாசிக்க வைத்துவிட்டது. 

நூலின் மேலட்டையைப் பார்த்ததும் பட்டீஸ்வரத்திலோ, திருவலஞ்சுழியிலோ, கோனேரிராஜபுரத்திலோ விதானத்தில் உள்ள, நான் பார்த்த ஓவியங்களில் ஒன்று இதுவென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் முழுக்க முழுக்க வித்தியாசமான பின்னணியில் உரிய விளக்கத்தோடும், குறியீட்டோடும் அந்த ஓவியம் இத்தொகுப்பிற்கு முத்தாய்ப்பாக உள்ளது.  அட்டை ஓவியத்திற்கான குறிப்பு நமக்கு ஒரு தெளிவினைத் தருகிறது. (ப.80) 

அவ்வாறே தமிழகத்தில் கூத்து, நடனம், நாடகம் என்று பல மரபு நிகழ்த்துக்கலைகள் வெறும் கேளிக்கைகளாக மட்டுமின்றி, ஒரு வழிபாட்டுச் சடங்காகவும் காலம் காலமாக நடத்தப்பட்டு வருவதைக் குறிப்பிடும் ஆசிரியர் அவை போன்ற சிலவற்றைச் சித்தரிக்கும் படங்களைக் கோட்டோவியங்களாகத் தந்துள்ளார். (ப.82) 

"கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் எதிரே உள்ள கீழ வீதியில் பிறந்து வளர்ந்தவன் நான். என் பால்யத்தின் பெரும்பகுதி அந்தக் கோவிலிலும் அதன் திருவிழாக்களிலும் உறைந்திருக்கிறது. அவைதான் வேறு வேறு ரூபங்களில் நினைவுச் சுரங்கத்திலிருந்து படிமங்களாக மேலெழும்பி வருகின்றன....கோவிலைப் பிரார்த்தனை ஸ்தலமாக ஒற்றைப் பார்வையுடன் அணுகுபவனுக்கும் கலை கலாசாரப் பண்பாட்டுப் பின்புல நுண்ணுணர்வுகளோடு அதனை அறிய முயலும் ஒருவனுக்கும் உள்ள புரிதல் எவ்வளவு பார தூரமானது..." என்கிறார் நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில்.

நான் கும்பகோணம் செல்லும்போதெல்லாம் செல்லும் கோயில்களில் ஒன்று பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில். அக்கோயிலின் கருவறையில் உள்ள துர்க்கையம்மனைக் காணும்போது மனதில் தோன்றும் எண்ண ஓட்டத்தை பின் வரும் அவருடைய கவிதையில் கண்டேன். பள்ளிக்காலம் முதல் நான் பார்த்துவரும் அந்த துர்க்கையைப் பற்றியே இவர் எழுதியிருக்கின்றாரோ என்று எண்ண வைத்தன இந்த வரிகள். அண்மையில் சென்றபோதுகூட துர்க்கையம்மன் அணிந்திருந்த சேலையின் நிறம் உட்பட பொறுமையாகக் கவனித்து, ரசித்து பிரிய மனம் இன்றித் திரும்பி வந்தேன். 

"....சன்னப் பொன்னொளி தீபம் ஒளிர
எண்ணெயில் மேனி மினுமினுங்க
கற்பூர சுகந்தம் வீச
கிளிப்பச்சை சேலையுடுத்தி
ஒளிரும் மூக்குத்தியும்
காதுக் குழைகளும் அணிந்து
கழுத்தோரம் பூச்சரங்கள் தொங்கவிட்டு
திருக்கோலம் காட்டி நிற்கும் உன் சந்நிதியில்
பனிக்கால நல் இரவில்
இசை கேட்க வந்திருந்தேன்........(இசை)

இவ்வாறே ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பொருளைக் கொண்டும், பரந்துபட்ட உள்ளீடுகளைக் கொண்டும் அமைந்துள்ளது. மண்ணின் மணத்துடன் அவருடைய கவிதை வரிகள் இணையும் நிலையில் ஆதங்கம், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஏக்கம், வருத்தம், யதார்த்தம் என்ற பல வகையான உணர்வுகளை கவிதைகளில் காணமுடிகிறது. கவிதை வரிகளாக இல்லாமல் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், சில இடங்களில் கொந்தளிப்பாகவும் இருப்பதைப் படிக்கும்போது உணரமுடிகிறது. விதானத்து சித்திரத்தில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.

".....அளைதல், அணுக்கம்,
சார்தல், அவிதல்,
இயைபு, இச்சை,
மேவல், விழைவு,
வெஃகல், வேட்கையென
பிரியத்தின் பிறபெயர்களை எல்லாம்
கொல்லென்று பூத்திருக்கும்
மகிழ மரத்தின் பூக்களுக்குச்
சூட்டிக்கொண்டிருக்கிறேன்....." (மலருதிர் மகிழ மரம் நீ)

".....அவசரங்கள் மறைந்துவிட்ட
பிரஹார வெளியதிலே
ஆசுவாசக் காற்றடிக்கும்...
மதில் சுவரைப் பிறந்து நிற்கும்
ஆல மல வேர்கள் பார்க்க
மறுபடியும் மனசுக்குள் ஏதோ செய்யும்....(பிரஹார வெளி)

"....மலரின் இருப்பு மணத்தைச் சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றைச் சொல்லுகையில்
பறவையின் பாடல் இசையைச் சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையைச் சொல்லுகையில்
சொல்லால் ஆவதென்ன சொல் அமிர்தா....(ஆவதென்ன சொல்)

"....அன்றைக்குத்தான் வந்திருக்கிறாள்
அந்த இளம் டீச்சர்
புதிதாய்ப் பள்ளிக்கு வந்த குழந்தைகளின் 
அழுகை தாளாது 
தானும் அழுகிறாள்...
இப்போது
குழந்தைகளின் எண்ணிக்கைல்
ஒன்று கூடிவிட்டது....(மற்றுமொரு அழுகை)

"....இடிபாடுகளுக்கிடையில்
சிதைந்து கிடக்கிறது
மேன்மைமிகு மகாராஜாவின் கோட்டை...
தொளதொளவென்ற ராஜ உடையை அணிந்தபடி
வளைந்த பிடியற்ற செங்கோலை ஊன்றி
அங்குமிங்கும் உலவுகிறார் மன்னர்....(மகாராஜா)

அருமையான கவிதைத் தொகுப்பை வாசிப்போம், மறைந்து கொண்டிருக்கும் கலைகளைப் பற்றிய அவருடைய ஆதங்கத்தை நாம் பகிர்வோம், வாருங்கள்.

நூல் : விதானத்துச் சித்திரம்
ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (மின்னஞ்சல் : ravisubramaniyan@gmail.com)
பதிப்பகம் : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 
     12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014
பதிப்பு : ஏப்ரல் 2017
விலை : ரூ.100

நூலாசிரியரைப் பற்றி அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்துள்ள அவரைப் பற்றிய பக்கத்தைக் காண அழைக்கிறேன்.

16 comments:

  1. தங்களது பாணியிலான விரிவான விமர்சனம் அருமை ஆசிரியருக்கு எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. படித்த கவிதைகளில் தனக்குப்பிடித்த சிறந்ததை நலம்பட எடுத்துகாட்டி, தொகுப்பை படிக்க வைக்கும் நோக்குடன் எழுதப்பட்ட அருமையான கட்டுரை. நான் பட்டீஸ்வரம் துர்கையை நினைத்து எழுதிய கவிதையை அப்படியே கட்டுரை ஆசிரியரும் சொல்லியிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைத்து எழுதியது அதே பட்டீஸ்வரம் துர்க்கை என்பதை அறிந்ததும் மனம் நெகிழ்ந்தது. ஒருமித்த கருத்தை நாம் கொண்டதையறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தங்களின் ரசனையுடன் கூடிய கவிதைகளுக்கு மறுபடியும் பாராட்டுகள். நன்றி.

      Delete
  3. அருமையான கவிதை தொகுப்பின் அறிமுகம்.

    கோவிலைப் பிரார்த்தனை ஸ்தலமாக ஒற்றைப் பார்வையுடன் அணுகுபவனுக்கும் கலை கலாசாரப் பண்பாட்டுப் பின்புல நுண்ணுணர்வுகளோடு அதனை அறிய முயலும் ஒருவனுக்கும் உள்ள புரிதல் எவ்வளவு பார தூரமானது..."

    கூர்ந்த பார்வை!

    ReplyDelete
  4. அறிமுகம் செய்த கவிதைகளும்
    அறிமுகம் செய்த விதமும்
    மிக மிக அருமை

    கவிதைகள் வாசிக்க வாசிக்க
    நான் இரசித்த கோவில் சன்னதிகளும்
    அகன்று விரிந்த பிரகாரங்களும்
    என்னுள் படிமங்களாய் விரிகிறது

    கவிதைகள் பிரமிப்பூட்டுகின்றன

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான நூலினை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் ஐயா
    அவசியம் வாங்கிப் படிப்பேன்
    நன்றி

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம்...

    அவரின் பக்கத்திற்கு செல்கிறேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  7. "மற்றுமொரு அழுகை" என்ற கவிதையை எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். ஒரு பானை சோறுக்கு ஒருசோறு பதம். இந்த ஒரு கவிதைக்காகவே இந்த நூலைப் படிக்கலாம்:
    "....அன்றைக்குத்தான் வந்திருக்கிறாள்
    அந்த இளம் டீச்சர்
    புதிதாய்ப் பள்ளிக்கு வந்த குழந்தைகளின்
    அழுகை தாளாது
    தானும் அழுகிறாள்...
    இப்போது
    குழந்தைகளின் எண்ணிக்கையில்
    ஒன்று கூடிவிட்டது...."

    வாழ்த்துக்கள் ரவி சுப்பிரமணியன்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம். விக்கிபீடியாவில் ரவிசுப்பிரமணியம் அவர்கள் பக்கத்தை படிக்கிறேன்.
    கவிதை அருமை. இளம் டீச்சர் குழந்தையான கவிதை அருமை.

    ReplyDelete
  9. மதிப்புமிக்க பகிர்வு.

    ReplyDelete
  10. நல்லதொரு அறிமுகம். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  11. முகநூல் வழியாக திரு Rufus V Antony :
    படைப்பாளிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்...? தன் படைப்புகளே பேச வேண்டும் என்று தன் முதல் கவிதை நூலில் (ஒப்பனை முகங்கள்) கூறியிருந்தவாறே... வெற்றி பெற்றுள்ளார் என்பது... வியப்புக்குரியதல்ல... வாழ்த்துக்கள் அத்தான்.

    ReplyDelete
  12. சிறப்பான கவிதை நூலின் அருமையான அறிமுகம்.
    மற்றுமொரு அழுகை..!அருமை

    ReplyDelete
  13. "....சன்னப் பொன்னொளி தீபம் ஒளிர
    எண்ணெயில் மேனி மினுமினுங்க
    கற்பூர சுகந்தம் வீச
    கிளிப்பச்சை சேலையுடுத்தி
    ஒளிரும் மூக்குத்தியும்
    காதுக் குழைகளும் அணிந்து
    கழுத்தோரம் பூச்சரங்கள் தொங்கவிட்டு
    திருக்கோலம் காட்டி நிற்கும் உன் சந்நிதியில்
    பனிக்கால நல் இரவில்
    இசை கேட்க வந்திருந்தேன்........" (இசை)

    இந்தப் பாவரிகள் என்னை ஈர்க்கிறதே!

    அருமையான கவிதை நூல் அறிமுகம்
    பாராட்டுகள்!

    ReplyDelete
  14. செமை தோழர் ...
    விதானத்து சித்திரங்கள் அருமை

    ReplyDelete