முகப்பு

03 June 2017

தமிழறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்

தமிழறிஞர், பதிப்பாளர், பழகுவதற்கு இனியவர், பண்பாளர், பலரை எழுத்தாளராக ஆக்கியவர், என்றும் மாறாப் புன்னகையோடு இருப்பவர், என் பௌத்த ஆய்வு நூலாக வெளிவரவேண்டும் என்று தன் அவாவினை பார்க்கும்போதெல்லாம் வெளிப்படுத்திய பெருமகனார் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் 31 மே 2017 அன்று இயற்கையெய்திய செய்தி எங்களை துக்கத்தில் ஆழ்த்தியது.  

கல்வெட்டறிஞர் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக அறிமுகமானவர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா. 2001இல் என் முதல் நூலான வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு) வெளிவர உந்துசக்தியாக அவர், அந்த நூல் அச்சேறிக் கொண்டிருக்கும் போது என் எழுத்துகளைப் பாராட்டினார். முதன்முதலில் தொலைபேசியில்தான் அறிமுகமானேன். அப்போது பேசும்போது என் பௌத்த ஆய்வினைக் கேள்விப்பட்டு அதிசயித்து களப்பணியின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசினார். "களப்பணி அடிப்படையில் தற்போது நூல்கள் எவையுமே வருவதில்லை. குறிப்பாக பௌத்தம் சார்ந்த நிலையில் நூல்களே இல்லை. அந்த நிலையில் உங்களின் ஆய்வேட்டினை நூலாக்கம் செய்யுங்கள். என் உதவி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. யோசிக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம்." என்று அவர் பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு அவரைப் பலமுறை சந்தித்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி என் ஆய்வு அல்லது என்னுடைய புதிய கண்டுபிடிப்பு தொடர்பானதாகவே இருக்கும்.  

கருத்தரங்கு நடைபெறும் இடம், அறிஞர்கள் சந்திக்கின்ற இடம், நூற்கண்காட்சி நடைபெறுமிடம் என்ற பல இடங்களில் அவரைக் காணலாம். தமிழ் இலக்கியத்தின்மீதும், வரலாற்றின்மீதும் அவர் கொண்டிருந்த ஆர்வமும், அறிவும் ஈடு இணையற்றது. அவருடன் நெருக்கமாகப் பழகும்போது அதனை உணரலாம். வயது வித்தியாசமின்றி மிக எளிமையாக அனைவருடன் இயல்பாகப் பேசுவார். தம் பேச்சின்மூலம் நம்மை ஈர்க்க வைத்துவிடுவார். 
நன்றி : அருந்தமிழ் ஆய்வுகள்
தொல்லியல் ஆய்வுகளையும், வரலாற்று நூல்களையும் மிகுதியும் வெளியிட்டு அளப்பரிய பணிகள் செய்து வந்த அவரைச் சிறப்பிக்கும் வகையில் 19 ஜனவரி 2003 மற்றும் 8 நவம்பர் 2003 ஆகிய நாள்களில் நடைபெற்ற விழாக்களின் நினைவாக வரலாற்றில் ஒரு வரலாறு, அருந்தமிழ் ஆய்வுகள், வரலாற்றுச் சுடர்கள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதைத்தொடர்ந்து வரலாற்று வாயில்கள் என்னும் நூல் வெளியானது. (வரலாற்று வாயில்கள், பதிப்.கவிமாமணி கல்லாடன், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, டிசம்பர் 2003) 

2010களின் ஆரம்பத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக வந்தவர் நான் பணியாற்றிய பிரிவிற்கு வந்து என் இருக்கைக்கு வந்தார். அலுவலகச் சூழலையும், அதிகமான பணியையும், அவருடன் பேசக்கூட முடியாத இருந்த நிலையையும் பார்த்த அவர் வியப்போடு "இவ்வளவு அலுவலக வேலைகளுக்கிடையில் நீங்கள் எப்பொழுது களப்பணி செல்கின்றீர்கள்? எப்பொழுது படிக்கின்றீர்கள்?" என்று வாஞ்சையோடு கேட்டார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் விடை பெறும்போது "கல்விப்புலம் சாராத நிலையில் உள்ள உங்களைப் போன்றோர்தான் அமைதியாக அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். பெருமையாக இருக்கிறது. இன்னும் காலம் தாழ்த்தாதீர்கள். நூலை அவசியம் வெளியிட்டு விடுவோம், சரியா" என்றார். 

சோழ நாட்டில் நான் கண்டுபிடித்த புத்தர் கற்சிலைகளைப் பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகளைக் காண்பித்தபோது மிகவும் வியந்து பாராட்டினார். நாகப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, வெளிநாடுகளிலும், இந்தியாவிலும், பிற மாநிலங்களிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்ட நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை என் ஆய்வேட்டில் பார்த்தபோது கற்சிலைகளுக்கும், செப்புத்திருமேனிகளுக்கும் இடையே காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி விவாதித்தார். இலக்கியம், வரலாறு, தொல்லியல், செப்பேடு, கல்வெட்டு போன்றவை உள்ளிட்ட பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர்,  புத்தர் சிற்பம் தொடர்பாகக் காட்டிய ஆர்வத்தை அப்போது அறிந்தேன்.     

3.12.2011 அன்று சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தாரின் வைர விழா நடைபெற்றபோது நூல் ஆசிரியர் என்ற நிலையில் என்னைப் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கினர். அவ்விழாவிற்கு வந்திருந்து என்னைப் பாராட்டினார். விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள், புதிய காற்று ஒப்பிலக்கியப் பார்வைகள் உள்ளிட்ட சில நூல்களை அன்பளிப்பாகத் தந்து, தொடர்ந்து எழுதுங்கள் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். ஒரு பெரியவர் சிரமம் பாராது விழா நடக்கும் இடத்திற்கு வந்து பாராட்டுகின்றாரே என நினைத்து சிலிர்த்துப் போனேன்.     

26.2.2016 அன்று வேலூரில் நடைபெற்ற அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி ஐயாவின் இளைய மகன் திரு தே.கி.பூங்குன்றன் திருமணத்திற்காக, மண நாளின் முதல் நாள் வேலூர் சென்று சேர்ந்தேன். திருமண அரங்கிற்கு வந்தவுடன் என்னைப் பற்றி விசாரித்தாக நண்பர்கள் கூறவே, அவரைக் காணச் சென்றேன். வழக்கமான புன்சிரிப்பினை அவருடைய முகத்தில் கண்டேன். "நீங்கள் வரவுள்ளதாக கிருட்டினமூர்த்தி கூறினார், உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி" என்றார். இரவு அதிக நேரம் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர் மேற்கொண்டிருந்த பணிகள் குறித்தும், அவ்வப்போது உடல் நலம் சரியில்லாமல் போவது குறித்தும், முன்போல பணிகளை விரைந்து முடியாத நிலை குறித்தும் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உழைப்பைப் பற்றிப் பேசிவிட்டு உடல் நலனுக்கு சிறிது முக்கியத்துவம் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கும் ஒரு புன்னகைதான் மறுமொழி. முடிந்தவரை செயலாற்றிக் கொண்டே இருப்போம் என்றார். சிறிது நேரம் அவருடன் பேசினால்கூட எதையாவது எழுத வேண்டும், வாசிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வந்துவிடும். நான் சோழநாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து அதில் என் ஆய்வு தொடர்பாக நான் எழுதிவருவதைக் கேள்விப்பட்ட அவர் இவ்வாறான பதிவுகள் வந்துகொண்டேயிருக்கவேண்டும் என்று கூறி பாராட்டினார்.

1100 நூல்கள் பதிப்பிக்கக் காரணமாக இருந்தவர், பல்துறை வித்தகர், அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர் என்ற நிலையில் நாளிதழ்கள் அவருக்குச் சூட்டியுள்ள புகழாரங்களைப் பார்த்தபோது அவற்றுக்கெல்லாம் அவர் தகுதியானவரே என்பதை அறிந்தேன். 

அன்னாருக்கு நாம் செலுத்தவேண்டிய மரியாதையாக நான் கருதுவது தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும், எழுதவேண்டும், அதனை நூலாக்க வேண்டும், தமிழக வரலாற்றுக்கு நம்மால் ஆன பங்களிப்பினைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதேயாகும். அளப்பரிய சாதனைகளைப் படைத்த அவருடைய புகழ் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

என் எழுத்தை அச்சில் கொணர விரும்பியவர்களில் ஒருவரான அவரைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற தலைப்பில் புதிய பக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அன்னாருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இதனைக் கருதுகிறேன். தொடர்ந்து அவரைப் பற்றிய இந்த பதிவினை மேம்படுத்துவேன். நண்பர்களை இப்பதிவினை மேம்படுத்த உதவ வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்கினால் அவரது பக்கத்தினைப் பார்க்கலாம்.


24 ஜுன் 2017 அன்று அன்னாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் என்ற நூல் வெளியிடப்பட்டது. இதில் அன்னாருடன் பழகிய நண்பர்கள், அறிஞர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எழுதியுள்ள 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. "எழுத்தாளர்களை உருவாக்கிய அறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை இந்நூலில் வெளியாகியுள்ளது. என் கட்டுரை இந்நூலில் வெளியாக உதவியதோடு, நூலை அனுப்பியும் வைத்த திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு என் நன்றி.



நூல் : விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
தொகுப்பு : புலவர் ம.அய்யாசாமி
பதிப்பகம் : சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078
மின்னஞ்சல் : sekarpathippakam@gmail.com
விலை : ரூ.150

16 டிசம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.

12 comments:

  1. ஒரு நல்ல மனிதரைப்பற்றி நயம்படச் சொல்லியுள்ளீர்கள்.

    அவரின் சமீபத்திய மறைவுச் செய்தி கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது.

    அன்னாரின் வழிகாட்டுதல்படி வெற்றி நடை போடுங்கள்.

    ReplyDelete
  2. தங்கள் பதிவைப் படிக்கப் படிக்க
    எவ்வளவு பெரிய இழப்பு தங்களுக்கு
    என உணர முடிகிறது

    எங்கள் மனமும் அத்தகைய உயர்ந்த
    உள்ளம் கொண்ட அறிஞரை
    இழந்ததற்கு அதிகம் வேதனைகொள்கிறது

    ReplyDelete
  3. தங்களது பதிவு இவர் உங்கள் மனதை எவ்வளவு தூரம் ஆக்கிரத்து இருந்து இருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.
    எமது இரங்கல்களை பகிர்கின்றேன்.

    ReplyDelete
  4. விக்கிபீடியாவில் புதிய ஒரு பக்கம்... சிறப்பான அஞ்சலி ஐயா...

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
    ஐயா அவர்களைப் பற்றி நேரில் தாங்கள் கூறிய செய்திகள் எல்லாம் மனதில் வலம் வருகின்றன
    போற்றுதலுக்கு உரிய மனிதர்
    தமிழுலுலகம் ஒரு உன்னத மனிதரை இழந்துவிட்டது

    ReplyDelete
  6. செய்தித்தாளில் படித்தேன். முக நூலில் திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்திருந்ததையும் படித்தேன். சிறந்த அஞ்சலி. எங்கள் இரங்கல்களும்.

    ReplyDelete
  7. அருமையான முயற்சி
    இனிய நினைவூட்டல் பக்கமாக இருக்கும்

    ReplyDelete
  8. நல்லதொரு அஞ்சலியை செலுத்தி இருக்கீங்க. வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நல்ல மனிதரை தெரிந்து கொண்டேன் சார்.
    ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  10. அன்னாரைப் பற்றி அறிந்திலேன்.அவரைப் பற்றியும் , தங்களை போன்றோரின் உழைப்பையும் கண்ணுறும் போது நாமெல்லாம் கால விரயம் செய்து கொண்டிருக்கிறோமே என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றி அய்யா

    ReplyDelete
  11. மிக நல்ல அறிமுகம் அய்யா...
    விக்கியில் அவரது இருப்பு உங்களின் பணி என்பதும் புரிகிறது

    ReplyDelete
  12. அருமையான மனிதரைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் அருமையான முறையில் உங்கள் மரியாதையுடன் கூடிய இரங்கல்களைச் சமர்ப்பித்துள்ளீர்கள்!~

    துளசி, கீதா

    ReplyDelete