முகப்பு

01 July 2017

கோயில் உலா : 24 ஜுன் 2017

24 ஜுன் 2017 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ. ஜெயபால் அவர்களுடன் குழுவாக 10 கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் ஒன்பது சிவன் கோயில்களும் தேவாரப்பாடல் பெற்றவையாகும் நாகை சௌந்தரராஜப்பெருமாள் மங்களாசாசனம் பெற்றது. இந்த 10 கோயில்களில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலை மட்டுமே இதற்கு முன் பார்த்துள்ளேன். தற்போது ஒன்பது கோயில்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
  • காலை 6.30 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து 15 பேர் அடங்கிய குழுவாக வேனில் புறப்பட்டோம்.
  • கீழ்வேளூர் கோயில் மிகவும் சிறப்பாகவும் கலைநுட்பமாகவும் அமைந்துள்ள பார்க்கவேண்டிய கோயில் (இதனைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவுள்ளேன்). இக்கோயில் சிவபுராணம் பாடி பயணத்தைத் துவங்கினோம்.
  • திருக்கோஷ்டியூர் பெருமாளை நான்கு நிலைகளில் கண்டுள்ளேன். பிற இடங்களில் கருவறையில் நின்ற நிலையிலோ கிடந்த நிலையிலோ பார்த்துள்ளேன். நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோயிலில் மூலவர் சன்னதியில் நின்ற நிலையில் பெருமாள் உள்ளார். கருவறையின் இடது புறம் மற்றொரு சன்னதியில் கிடந்த கோலத்தில் உள்ளார். இவ்வாறாக ஒரே கோயிலில் இரு கோலத்தில் பெருமாளை இங்கு மட்டுமே பார்த்தேன்.
  • நாகப்பட்டினத்தில் காயரோகணேசுவரைவிட நீலாயதாட்சி அம்மனே பெரும்பாலும் பேசப்படுகிறார்.
  • திருநள்ளாற்றில் மூலவரான தர்பாரண்யேஸ்வரரைப் பெரும்பாலும் அனைவரும் மறந்துவிட்டது போலுள்ளது. அக்கோயிலை சனீஸ்வரர் கோயிலாக ஆக்கியுள்ளனர். கோயிலைச் சுற்றி வந்து சனீஸ்வரரைப் பார்த்துவிட்டு, மூலவரைப் பார்க்க வேண்டிய நிலை. அந்த அளவிற்கு வரிசையாக (கியூ) செல்லும்படி வைத்துள்ளனர்.
  • தருமபுரத்தில் ஒரு அம்மன் கோயிலில் மதிய உணவு உட்கொண்டு சற்று ஓய்வெடுத்தோம். 
  • காரைக்கால் பகுதியில் ஒரு தருமபுரம் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன்.
  • காரைக்கால் அம்மையார் கோயில் உள்ள தெருவின் கடைசியில் சற்றே உள்ளடங்கி கோவில்பத்து என்னுமிடத்தில் கோயிலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது இப்பயணத்தில்தான். காரைக்கால் அம்மையார் கோயிலுக்கும், அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்கும் பல முறை சென்றுள்ளேன்.
  • கடவூர் மயானம் பார்க்கும்போது சற்றே இருட்டி விட்டது. இருந்தாலும் பெரிய கோயிலை பொறுமையாகப் பார்த்தோம்.
  • திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றால் எங்கும் சாம்பிராணிப் புகையே. சாம்பிராணி உடம்புக்கு நல்லதுதான். ஆனால் நாம் கோயிலில்தான் இருக்கிறோம் என்று நமக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும். 60 வயது முதல் அட்டவணை போடப்பட்டு திருமணங்கள் நடத்தப்படுவதைப் பார்த்தோம். பல கல்யாண வீடுகளுக்கு ஒரே நாள் சென்றுவந்ததுபோலிருந்தது. மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி என எங்கு பார்த்தாலும் தம்பதியர்களை குடும்பத்தாரோடு கண்டோம். வீட்டில் நடக்கும் நிகழ்வு போல அவரவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதைக் கண்டோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மூலவரைக் கண்டோம்.  
  • எங்களை அழைத்துச் சென்ற முனைவர் ஜெயபால் அவர்கள் எங்களின் பயணத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறி நன்றி கூறினார். 
  • இரவு 11.30 மணியளவில் சுகமாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.

1) கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
(கோயில் உலாவில் முதல் கோயில்)
(சிவபுராணம் பாடப்பெறல்)
கேடிலியப்பர்-வனமுலையம்மை (ஞானசம்பந்தர், நாவுக்கரசர்) பூமியிலிருந்து சுமார் 21 முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்ட சித்திரக்கூட பர்வதம் என்ற பெயர் பெற்ற கட்டுமலையில் அமைந்துள்ளது. மூலவர் கருவறையுடன் கூடிய விமானம் கட்டட நுட்பங்களைக் கொண்டமைந்துள்ளது. இங்குள்ள அஞ்சுவட்டத்தம்மன் சன்னதி மிகவும் புகழ் பெற்றதாகும். உலாவின் முதல் கோயிலான இக்கோயிலில் அனைவரும் சிவபுராணம் பாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த கோயில்களுக்குச் சென் (நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் உள்ளது). 

2) நாகப்பட்டினம் சௌந்தரராஜப்பெருமாள் கோயில்
சௌந்தரராஜப்பெருமாள்-சௌந்தரவல்லி  (திருமங்கையாழ்வார்(நாகப்பட்டினம் நகரில் உள்ளது).

3) நாகப்பட்டினம் காயரோகணேசுவரர் கோயில்
காயரோகணேசுவரர்-நீலாயதாட்சி
(ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) (நாகப்பட்டினம் நகரில் உள்ளது).

4) திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில்
தர்பாரண்யேஸ்வரர்-போகமார்த்தபூமுலையாள் (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) (காரைக்கால்-கும்பகோணம் சாலையில் திருநள்ளாறில் உள்ளது). 

5) திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில்
பார்வதீஸ்வரர்-பார்வதியம்மை (ஞானசம்பந்தர்) (காரைக்கால் நகரில் பாரதியார் சாலையில் கோவில்பத்து என்னுமிடத்தில் உள்ளது). 
   
6) தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்
யாழ்முரிநாதர்-தேனமிர்தவல்லி (ஞானசம்பந்தர்)  9 பிப்ரவரி 2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. (காரைக்கால் பகுதியில் திருத்தெளிச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது)

7) கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
ஐராவதீஸ்வரர்-வண்மார் பூங்குழலி  (ஞானசம்பந்தர்)
(திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கோட்டாறு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேருந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கிமீ சென்று இவ்வூரை அடையலாம். பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கிமீ சென்றும் இவ்வூரை அடையலாம்.
  
8) வேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
 
சுந்தரேசுவரர்-சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர்)
(நாகப்பட்டினம்-தரங்கம்பாடி சாலையில் வரிச்சிக்குடி என்னுமிடத்தில் இடப்பக்கம் பிரியும் கிளைப்பாதையில் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம். புதுச்சேரி மாநில எல்லையில் இக்கோயில் உள்ளது)

9) திருக்கடையூர்மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பிரம்மபுரீஸ்வரர்-ஆம்லகுஜநாயகி (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) 
(நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில், திருக்கடையூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது).        

10) திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
அமிர்தகடேஸ்வரர்-அபிராமி  (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) 
அட்டவீரட்டானத்தலங்களில் ஒன்று. எமனை உதைத்த காலசம்காரமூர்த்தி மூலவரின் வலப்புறம் தனிச் சன்னதியில் உள்ளார். (மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், ஆக்கூர் அருகில் உள்ளது).

நன்றி
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலுள்ள பத்து கோயில்களுக்கும் எங்களை அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. 

துணை நின்றவை
சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005

15 comments:

  1. அழகிய படங்களுடன், பயண விபரங்கள் அருமையாக தந்த முனைவருக்கு நன்றி.

    ReplyDelete
  2. திருக்கடவூர் மட்டும் பார்த்திருக்கிறேன். தம +1

    ReplyDelete
  3. #எங்களை அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி#
    போனோம் வந்தோம்னு இல்லாமல் பதிவாக்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றி அய்யா :)

    ReplyDelete
  4. கோவில் உலா அருமை. மீண்டும் உங்களால்
    எல்லா தலங்களையும் தரிசனம் செய்தேன்.

    ReplyDelete
  5. படங்களுடன் கூடிய மிக அருமையான செய்திகளைக் கொடுத்துள்ளீர்கள்.

    இந்தப்பதிவினைப் பார்த்தாலே எங்களுக்கும் உங்களால் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கக்கூடும்.

    பகிர்வுக்கு நன்றிகள், முனைவர் ஐயா.

    ReplyDelete
  6. aaaa pathu koilgal visit aa. super. enakku koncham jealous aa irukku. Jambu sir. veetla solli thirishti suthi potukongka rendu perum. :)

    enakku koil tharisanam seya pidikkum . aana ore naalil pathu koil endrathum viyappakivittaathu :)

    ReplyDelete
  7. தஞ்சை, காவேரி என நினைவு வந்தாலே
    புண்ணிய ஸ்தலங்கள் நினைவுதான்
    மேலோங்குகிறது
    அந்த அளவு சிறப்பு மிக்க கோவில்கள்
    அடுத்து அடுத்து இருப்பது அவ்வூரின்
    சிறப்பு என்றால் மிகையில்லை
    படங்களுடன் தங்கள் ஆன்மீகப்பயணப்பதிவு
    மிகச் சிறப்பு
    விரிவான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து..
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  8. ஆலயங்களின் அழகு..
    இனிய தரிசனம்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  9. அழகிய படங்கள் தகவல்கள் உட்பட கோயில் உலா அருமை!!! கோயிலில் நடந்த கல்யாணங்கள் பற்றி தாங்கள் சொல்லியிருப்பது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. மற்றும் மூலவரை மறந்து சனீஸ்வரர் கோயில் என்று வழங்கப்படுவது எல்லாம் வணிகமாக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறதே....

    துளசி. கீதா

    ReplyDelete
  10. ஒரே நாளில் இத்தனைக் கோவில்களில் தரிசனமா... ஆஹா.. அருமை.

    ReplyDelete
  11. இந்தப் பதிவைப் படிக்கும்போது எனக்கு திருக்கடையூரில் அறுபதாஆண்டு மண விழா கொண்டாடியது நினைவிலாடுகிறது காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கும் சென்றிருக்கிறோம் வழக்கம்போல் கோவில் உலா அருமை

    ReplyDelete
  12. இனிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  13. கோயில் சுற்றுலா மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  14. கோயில் உலா
    எம் உள்ளத்தைத் தொடுகிறது

    ReplyDelete