முகப்பு

26 August 2017

காவிரி புஷ்கரம்

புஷ்கரம் என்றால் பள்ளிக்காலம் முதல் எனக்குத் தெரிந்தது புகழ் பெற்ற ஒட்டகச் சந்தையும், புஷ்கரின் ஏரிக்கரையோரம் உள்ள பிரம்மன் கோயிலும் ஆகும்.  ஆனால் புஷ்கரம் என்பதற்கு பரந்த அளவில் ஒரு விழா குறிப்பிடப்படுகிறது. அண்மைக்காலமாக காவிரி புஷ்கரம் என்ற விழா தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் உள்ளதைக் காணமுடிந்தது. மயிலாடுதுறை அருகேயுள்ள துலாக்கட்டத்தில் சிறப்பாக அவ்விழா கொண்டாடப்படவுள்ளதும், அதற்காக 30 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் பிறந்து பல மகாமகங்களைப் பார்த்த ஆர்வம் புஷ்கரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலை உண்டாக்கியது. நாடெங்கும், ஊரெங்கும் நீர் நிலைகள் வற்றி வரும் நிலையில் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படும்போது செயற்கைத்தன்மையையே காணும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இருந்தாலும் அவ்விழாவினைப் பற்றி அறிந்துகொள்வோம், வாருங்கள்.

அது நதிகளுக்கே உரிய சிறப்பான விழாவாகும். புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில்  நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர். நதிகள், ராசிகளோடு தொடர்புபடுத்தப்படுவதே இவ்விழாவின் முக்கியத்துவமாகும். 

நன்றி : தஞ்சாவூர் பரம்பரா தளம்

விழா ஏற்பாடு, நன்றி : தினமலர்
நன்றி : தினமணி
விழாவிற்குத் தயாராகும் துலாக்கட்டம், நன்றி : விகடன்
12 நதிகள்
இந்தியாவிலுள்ள கங்கா, நர்மதா, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சிந்து,  துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, ப்ராணஹிதா என்ற 12  நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. புஷ்கரம் என்பதற்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளும் அந்தந்த ராசிகளுக்கு உரித்தான புண்ணிய ஆறுகளில்  வாசம் செய்து மக்களுக்கு நன்மை பயப்பதாகும் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

12 ராசிகள்
ஒவ்வொரு ஆண்டுக்கும் தொடர்புடைய ஆறு என்பதானது, குரு அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. அந்த ராசியில் குரு சஞ்சரிக்கும் கால அளவில் புஷ்கரம் நடைபெறுகிறது.  குரு பகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது  சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது  கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும்,  மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது கோதாவரி நதியின் உபநதியான  ப்ராணஹிதாவிலும்  இருந்து அருள்பாலிக்கிறார்.   

12 புஷ்கரங்கள்
இந்தியாவில் 12 புஷ்கரங்கள் அந்தந்த ஆற்றினை தொடர்புபடுத்திக் கொண்டாடப்படுகின்றன. அவற்றின் பெயரையும், அவை நடைபெறும் இடங்களையும் பார்ப்போம். 

கங்கா புஷ்கரம் : காசி, ஹரித்வார், ரிஷிகேஷ்
நர்மதா புஷ்கரம் : மத்தியப்பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான ஓங்காரேஸ்வரர் தலம்
சரஸ்வதி புஷ்கரம் குருசேத்திரம், கேசவ பிரயாகை, குஜராத்தில் சோம்நாதபுரம், அலகாபாத் திரிவேணி சங்கமம், ஆந்திரப்பிரதேசத்தில் காலேஸ்வரம், மத்தியப் பிரதேசத்தில் பேடாகட்
யமுனா புஷ்கரம் யமுனோத்ரி,  ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம்
கோதாவரி புஷ்கரம் : திரியம்பகம் (நாசிக்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரா)
கிருஷ்ணா புஷ்கரம் : துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி, உள்ளிட்ட ஐந்து நதிகளும் சேர்ந்து பஞ்ச கங்கா நதி, கிருஷ்ணா நதியோடு சேருமிடமான பிரயாக் சங்கமம், ஆந்திரப்பிரதேசத்தில் விஜயவாடா
காவிரி புஷ்கரம் தமிழ்நாட்டில் ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்
பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் : ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றான பீமாசங்கரம், பண்டரிபுரம், தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள பாண தீர்த்தம், பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை
பிரம்மபுத்ரா புஷ்கரம் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கரையில்
துங்கபத்ரா புஷ்கரம் : சிருங்கேரி, மந்த்ராலயம்
சிந்து புஷ்கரம் சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்
ப்ராணஹிதா புஷ்கரம் : தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத்தில் காலேஸ்வரம்

144 வருடங்களுக்கு ஒரு முறை
அவ்வகையில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.  இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை  வருவதால், செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா நாள்களில் காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

177 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா
இந்த விழா கடந்த 12 செப்டம்பர் 1840இல் நடைபெற்றதாகவும், 177 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

அவரவரர் ஊருக்கு அருகில் உள்ள காவிரியாற்றங்கரையில் அமைந்துள்ள ஊருக்குச் சென்று இவ்விழாவினைக் காண்போம். காண வாய்ப்பில்லாதவர்கள் இவ்வாறான ஒரு விழாவினைப் பற்றி அறிந்துகொள்வோம், இறையருள் பெறுவோம். 
தினமணி, தினமலர், விகடன் இதழ்கள்
www.kaveripushkaram.com/ Kaveripushkaram
www.kaveripushkaram.in/ காவிரி புஷ்கரம்
www.thanjavurparampara.com/காவிரி புஷ்கரம் திருவிழா பத்திரிக்கை

19 August 2017

கழுகுமலை வெட்டுவான்கோயில்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் கழுகுமலை வெட்டுவான் கோயிலைப் பற்றிய ஒரு கட்டுரையினைப் படித்தேன். அதில் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்களைப் பார்த்த முதல் அக்கோயிலைப் பார்க்கவேண்டுமென்று ஆவல் எழுந்தது. அந்த விருப்பம் அண்மையில் நிறைவேறியது.
பள்ளமான இடத்தில் காணப்படும் கோயில்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள இக்கோயில் கி.பி.800இல் கட்டப்பட்டதாகக் கூறுவர். மலைப்பகுதியில் மலையினைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்கோயிலினைக் காண மலையில் ஏறிச் செல்ல வேண்டும். சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது கோயிலே கண்ணுக்குத் தெரியாது. சுமார் 10 அடி கீழே இறங்கி இக்கோயிலைப் பார்க்கவேண்டும். வெளியிலிருந்து பார்க்கும்போது பாறையைப் போன்றுதான் தெரியும்.

மலைப்பாறையில் 'ப' வடிவிற்கு சதுரமாக 7.50 மீட்டருக்குச் சதுரமாக வெட்டி அதில் கோயிலை குடைந்துள்ளனர். 
மலையில் குடையப்பட்டுள்ள நிலையில் அமைந்துள்ள இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர் உள்ளிட்ட பல சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. ஒரு நிலையில் பார்க்கும்போது இக்கோயில் முற்றுப்பெறாத ஒரு கோயிலாகக் காணப்படும். 






உமாமகேஸ்வரர் 
ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு திசையிலும் பார்க்கும்போது சிற்பங்களின் அழகினை உணரலாம். 122 சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன. சிவன் கோயிலை என்பதை உணர்த்துகின்ற வகையில் நான்கு புறமும் நந்தியைக் காணமுடியும்.






மலைப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலை உச்சியிலிருந்து பார்க்கும்போது இக்கோயில் பள்ளத்தில் இருப்பதைப் போலக் காட்சியளிக்கும். இதுபோன்ற கற்கோயில்
தமிழகத்தில் வேறெங்கும் காணப்படவில்லை. மகாராட்டிர மாநிலத்திலுள்ள ராஷ்டிரகூடர்களால் அமைக்கப்பட்ட எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போல் இக்கோயில் உள்ளதால் இக்கோயிலை தென்னகத்து எல்லோரா என்றும் கூறுகின்றனர்.
பூத கணங்கள்

கருவறையில், பின்னாளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்
தமிழகத்தில் காணப்படுகின்ற குகைக்கோயில்களில் முக்கியமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்ற இக்கோயிலுக்கு ஒரு முறை செல்வோம்.



வெட்டுவான் கோயிலில் என் மனைவி திருமதி பாக்கியவதியுடன்
  • கழுகுமலை, விக்கிபீடியா
  • கல்லும் கலை சொல்லும் கழுகுமலை, தினமலர், 14 ஜுன் 2011
  • முன்னோர்களின் வாழ்வியல் முறையை பறை சாற்றும் கழுகுமலை, தினமணி, 3 ஏப்ரல் 2013
  • தமிழகத்தின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்
  • Kazhugumalai, Times of India, Chennai, 16 October 2012 
-----------------------------------------------------------------------------------------
ஆங்கில விக்கிபீடியாவில் முதல் பக்கத்தில் என் கட்டுரையிலிருந்து.....
In Wikipedia's first page, under the column Did you know? (DYK) among others a sentence from the article written by me under the title Thukkachi Abatsahayesvar temple has been quoted: .."that the Thukkachi Abatsahayesvar temple (pictured) was greatly expanded by Vikrama Chola after he was supposedly cured of vitiligo by praying to the presiding deity for 48 days?" (20 Aug 2017)
Wikipedia, First page, Did you know? 20 Aug 2017

Wikipedia, First page, Did you know? 20 Aug 2017


 Wikipedia, Recent additions, as on 21 Aug 2017

ஆங்கில விக்கிபீடியாவில் 20 ஆகஸ்டு 2017 அன்று முதல் பக்கத்தில், நான் ஆரம்பித்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கட்டுரையிலிருந்து ஒரு வரி மேற்கோளாக, நான் எடுத்துள்ள புகைப்படத்துடன் உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றுள்ளது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். முதன்முதலாக இடம் பெற்ற என்னுடைய இத்தகவலை 6635 பேர் பார்த்ததாகக் கூறி மறு நாள் விக்கிபீடியா மூலமாக அறிந்தேன். "Congrats on your first DYK. 6635 people viewed our page yesterday when it appeared as the main Did You Know article on the main page. Please continue to expand the article if you want to and continue with your good work of creating useful new articles."



-----------------------------------------------------------------------------------------
20 நவம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

12 August 2017

கோயில் உலா : ஜூலை 2017

முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் குழுவினரோடு 15 ஜூலை 2017 அன்று திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர், மருதாநல்லூர் கருக்குடிநாதர், சிவபுரம் சிவகுருநாதர், அரிசிற்கரைப்புத்தூர் சுவர்ணபுரீஸ்வரர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம் சித்தநாதர், திருப்பந்துறை சிவாநந்தேஸ்வரர், வாஞ்சியம் வாஞ்சிநாதர், திருவீழிமிழலை, அன்னியூர் அக்னிபுரீஸ்வரர், கருவேலி சற்குணேஸ்வரர், குடவாசல் கோணேஸ்வரர், கருவாய்க்கரைப்புத்தூர் சொர்ணபுரீஸ்வரர், நாலூர் மயானம் பலாசவநாதர், திருச்சேறை சாரபரமேஸ்வரர், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். கடந்த பல ஆண்டுகளாக செல்கின்ற கோயில் உலாவின்போது ஒரே நாளில் 15 தேவாரத் தலங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தற்போதுதான். அவற்றில் நாம் முதன்முதலாகச் செல்லும்கோயில்களுக்கு அழைக்கிறேன், வாருங்கள். திருவீழிமிழலை, நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம் கோயில்கள் முந்தைய கோயில் உலாக்களின்போது நாம் பார்த்தவையாகும்.

திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை) அமிர்தகலசநாதர் கோயில்
அமிர்தகலசநாதர்-அமிர்தவல்லி (சுந்தரர்) (கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ளது). மகாமகத்தின்போது தீர்த்தவாரி தருகின்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். பல முறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். எங்கள் உலாவின் முதல் கோயில். சிவ புராணம் பாடி, உலா தொடங்கியது.


மருதாநல்லூர் (கருக்குடி) கருக்குடிநாதர் கோயில் 
கருக்குடிநாதர்-கல்யாண நாயகி (ஞானசம்பந்தர்) (திருக்கலயநல்லூருக்கு மிகவும் அருகில் உள்ளது)
அரிசிற்கரைப்புத்தூர் சுவர்ணபுரீஸ்வரர் கோயில்
சுவர்ணபுரீஸ்வரர் –சௌந்தரநாயகி (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) படிக்காசு வைத்த பரமர், படிக்காசுநாதர்–அழகாம்பிகை கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.
அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அக்னீஸ்வரர் பார்வதியம்மை (நாவுக்கரசர்) திருவீழிமிழலையிலிருந்து வடக்கே 4 கிமீ கும்பகோணம் காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் வந்துஅங்கிருந்து தெற்கில் திரும்பி வட மட்டம் சென்று அதே பாதையில் மேலும் சென்றால் கோயிலை அடையலாம்.
சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
சிவகுருநாதசுவாமி-சிங்காரவல்லி (ஞானசம்பந்தர்,அப்பர்) கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை சென்று அங்கே பிரியும் சாலையில் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். 

திருநறையூர்ச்சித்தீஸ்வரம் சித்தநாதர் கோயில்
சித்தநாதேஸ்வரர்-அழகம்மை (ஞானசம்பந்தர், சுந்தரர்) கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோயில் சாலையில் வந்து நாச்சியார் கோயிலின் முற்பகுதியான திருநறையூரில் இறங்கி கோயிலை அடையலாம்.

திருப்பந்துறை சிவாநந்தேஸ்வரர் கோயில்
சிவானந்தேஸ்வரர்-மங்களாம்பிகை (ஞானசம்பந்தர்) காரைக்கால் கும்பகோணம் சாலையில் நாச்சியார் கோயிலை அடுத்து எரவாஞ்சேரி பாதையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.
வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
வாஞ்சிநாதேஸ்வரர்-மங்களநாயகி, (ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்) நன்னிலம் குடவாசல் சாலையில் உள்ளது. திருவாரூர் குடவாசல் சாலையிலும் வரலாம். நன்னிலத்திற்குத் தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ளது. மூலவரைப் பார்க்கச் செல்ல உள்ளே செல்லும்போதே கையைக் காட்டி முதலில் எமதர்மராஜன் சன்னதியைப் பாருங்கள் என்று கூறுகின்றார்கள். பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், திருநள்ளாறு போன்ற பல கோயில்களில் மூலவர் சன்னதியின் பக்கம் பலர் செல்வதேயில்லை.
கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
சற்குணநாதேஸ்வரர்-சர்வாங்கநாயகி (நாவுக்கரசர்) கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் பூந்தோட்டம் செல்லும் சாலையில் உள்ளது.
குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
கோணேஸ்வரர்-பெரியநாயகி (ஞானசம்பந்தர்) திருவாரூரிலிருந்து 16 கிமீ கும்பகோணத்திலிருந்து 15 கிமீ திருவாரூர் கும்பகோணம் சாலையில் உள்ளது.  அழகான மாடக்கோயில்.

கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டாங்கோயில்) சொர்ணபுரீஸ்வரர் கோயில்
சொர்ணபுரீஸ்வரர்-சொர்ணாம்பிகை (நாவுக்கரசர்) குடவாசல் வலங்கைமான் சாலையில் குடவாசலிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.
நன்றி
எங்களை உலா அழைத்துச்சென்ற சித்தாந்த வித்தகர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்தோருக்கும் நன்றி.

துணை நின்றவை

  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005




05 August 2017

அயலக வாசிப்பு : சூலை 2017

அயலக வாசிப்பில் சூலை 2017இல் நான் வாசித்தவற்றில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன்.  இவற்றில் இஸ்ரேல் கயோம் இதழை இப்போதுதான் முதன்முதலாக வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். கார்டியன், நியூயார்க் டைம்ஸ், டான் போன்ற இதழ்கள் நான் வழக்கமாகப் படிக்கும் இதழ்களாகும். இன்டிபென்டன்ட், டெலிகிராப் போன்றவை அவ்வப்போது வாசிக்கும் இதழ்களாகும். 

சூலை 4
இன்றைய The Hindu இதழில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் தொடர்பான செய்தியில் (Suhasini Haidar, Indian Embassy to remain in Tel Aviv, The Hindu, July 4, 2017, p.11) இஸ்ரேலில் வெளிவருகின்ற Israel Hayom இதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டி மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்தது. பேட்டி எடுக்கப்படும் விதம் கேள்விகள் வைக்கப்படும் விதமும், பிரதமரைப் பற்றி பேட்டியாளர் தந்துள்ள அறிமுகமும் ரசிக்கும்படி இருந்தன. (நன்றி : Israel Hayom, July 3, 2017)

சூலை 7
சமூக வலைதளங்களில் மோடி மற்றும் நெதன்யாகுவின் இணைந்த கட்டியணைப்பு மற்றும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளல் குறித்து டான் இதழில் வெளியான செய்தி. (நன்றி : டான்) இருவரும் வெறும்காலுடன் கடற்கரையில் உலாவியது உள்ளிட்ட பல புகைப்படங்களைக் கொண்டமைந்துள்ள இச்செய்தியின் தலைப்பில் Bromance என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (21ஆம் நூற்றாண்டில் உருவான, brother and romance என்ற இரு சொற்களும் இணைந்த Bromance என்ற சொல்லுக்கு A close but non-sexual relationship between two men என்று பொருளாகும். நன்றி :https://en.oxforddictionaries.com/definition/bromance)


சூலை 11
உங்கள் மேசை ஒழுங்கின்றி கன்னாபின்னா என்று இருக்கிறதா? அப்படியென்றால் அது நீங்கள் ஒரு மேதையாவதற்கான ஓர் அறிகுறி என்கிறது ஓர் ஆய்வு. ஒழுங்கற்ற நிலையில் மேசையை வைத்துள்ளவர்கள் எந்த ஒரு காரியத்தையும் சவாலாக ஏற்றுச் செய்வார்களாம். சுத்தமாக, ஒழுங்குபடுத்தி வைத்துள்ளவர்கள் கடினமான விதிமுறையை பின்பற்றுவதோடு, புதியனவற்றை முயற்சி செய்ய அதிகம் யோசிப்பார்களாம். ஒழுங்கற்ற சுற்றுச்சூழலானது மரபு முறை மீறல் நிலையில், புதிய சாதனைகளைப் படைக்க உதவுகிறது என்கிறது அந்த ஆய்வு. (நன்றி : இன்டிபென்டன்ட்) நமக்கு இது எப்படிப் பொருந்துமோ என்று தெரியவில்லை. ஆனால், என் மேசையை எப்பொழுதும் ஒழுங்காகவே வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.


சூலை 16
நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் password, 123456, 12345678, 1234, qwerty, 12345, dragon, pussy, baseball, football என்பனவாம். ஒரே விதமான கடவுச்சொல்லை பயன்படுத்துவதால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். ஒரு நபர் பெரும்பாலும் 20க்கும் மேற்பட்ட கடவுச்சொற்களை வைத்துள்ளார். அவற்றில் திரும்பத்திரும்ப வருவன பல உள்ள நிலையில் பல சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாம் .(நன்றி : டெலிகிராப்)


சூலை 17
மிதிவண்டியில் பயணிப்பவர்களுக்கு மன அழுத்தம் மிகவும் குறைவே. மேலும் பல பயன்கள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா? (நன்றி : கார்டியன்)

சூலை 18
அம்மாவுக்குக் கடைசி முத்தம். காதில் தொற்று நோய் காரணமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 36 வாரக் கர்ப்பிணி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவளுடைய உடல் நிலை மோசமானது. சிசரியன் முறைப்படி குழந்தை பிறந்து, மூளையில் வீக்கம் காரணமாக இறந்தது. தாயின் உடல் நிலை கவலைக்கிடமானது. அவள் இறப்பதற்கு முன்பாக அவளுடைய 17 மாத ஆண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். தாயின் உயிர் காக்கும் கருவிகள் நீக்கும் முன்பாக அவன் தன் தாயின் நெற்றியில் கடைசி முத்தம் கொடுத்தான். அவன் தரும் முத்தம் பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்துவிடும். (நன்றி : இன்டிபென்டன்ட்)

சூலை 19
2017இல் கார்டியன் இதழில் வெளிவந்த கட்டுரைகளில் வாசகருக்கு மிகவும் பிடித்த கட்டுரை எது என்று கேட்கிறது அவ்விதழ். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரை 2017 இறுதியில் 320 பக்கங்களைக் கொண்ட பெட்சைட் கார்டியன் தொகுப்பில் வெளிவரவுள்ளது. ஒரு நாளைக்கு 1,50,000 சொற்கள். ஒரு வருடத்திற்கு 47 மில்லியன் சொற்கள். நூற்றுக்கணக்கான இதழாளர்கள், பங்களிப்பாளர்கள். செய்தி, அரசியல், பண்பாடு, விளையாட்டு என்ற பல நிலைகள். அவற்றில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கவுள்ளது கார்டியன். (நன்றி : கார்டியன்)


சூலை 20
1942இல் பனிமலையில் சிக்கிய சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்சலின் டுமோலின் (40) மற்றும் அவருடைய மனைவி பிரான்சின் (37) ஆகிய இருவரின் உடல்கள் தற்போது தரையிலிருந்து 8,600 அடி உயரத்தில் அல்பைன் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் அணியப்பட்ட ஆடைகள், ஒரு நூல், ஒரு கெடிகாரம் ஆகியவையும் அவர்களின் உடலருகே இருந்தன. (நன்றி : நியூயார்க் டைம்ஸ்)


சூலை 26
விஜயவாடாவைச் சேர்ந்த அண்ணி திவ்யா தன் கனவுகளை நினைவாக்க அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. உலகிலேயே முதன் முதலாக போயிங் 777 விமானத்தின் இளம் பெண் கமாண்டர் என்ற சிறப்பினைப் பெறுகிறார். 30 வயதில் அவருக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளையும், எதிர்ப்புகளையும் துணிவோடு எதிர்கொண்டு இச்சாதனையை அவர் படைத்துள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)  நம் நாட்டுப் பெண்மணியைப் பற்றி இன்டிபென்டன்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு இதழ்களில் கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றி முழுமையாக முன்பொரு பதிவில் வாசித்துள்ளோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை : 
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468586