முகப்பு

25 October 2017

தேனுகா : மூன்றாமாண்டு நினைவு

தேனுகா. பெயரை உச்சரிக்கும்போதே கலையியலும், ரசனையும்தான் நம் நினைவிற்கு வரும். அவருடைய மூன்றாமாண்டு நினைவு நாள் கும்பகோணம் காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் 24 அக்டோபர் 2017 அன்று நடைபெற்றது. 







(இடமிருந்து வலமாக) கு.பாலசுப்பிரமணியன், 
அ.மார்க்ஸ், இராம குருநாதன், எஸ்.பி.இராமன், வித்யா சங்கர் ஸ்தபதி





காந்தியடிகள் நற்பணிக்கழக அமைப்பாளர் திரு கு.பாலசுப்பிரமணியன் தலைமையேற்க திரு வித்யா சங்கர் ஸ்தபதி, திரு எஸ்.பி.இராமன் (ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கம்), பேராசிரியர் திரு இராம. குருநாதன், பேராசிரியர் திரு அ.மார்க்ஸ் (சமூகப்போராளி), திரு எம்.எஸ்.பாலு (மேழி இலக்கிய சங்கமம்), கவிஞர் ஆடலரசு, திரு தேவ ரசிகன் உள்ளிட்ட நண்பர்கள் நினைவுப் பொழிவாற்றினர். கழக ஆசிரியர் திரு செல்வம் நன்றி கூறினார். முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

நண்பர்கள் பொழிவில் தேனுகாவின் பன்முகப்பரிமாணங்களை அறியமுடிந்தது. வங்கிப்பணியாற்றும்போது அவருக்கிருந்த சமூகப் பிரக்ஞை, மனித நேயம், ஒரு கலைஞனாக பழமையும், புதுமையையும் அவர் பாராட்டிய விதம், நண்பர்களிடம் பழகும் பாங்கு, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கூறுகளில் அவருடைய ஈடுபாடு  போன்ற அவருடைய குணங்களை நண்பர்கள் எடுத்துக் கூறினர்.  அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாருமேயில்லை என்பது அவர்களுடைய பேச்சில் உணரப்பட்டது. பலர் உணர்ச்சிபூர்வமாகப் பேசியபோது அவர்மீது அவர்கள் வைத்திருந்த அன்பை உணரமுடிந்தது. அவர் நண்பர்களுடன் விவாதிக்கும் இடங்களான மகாமகக்குள மேல் கரை, காந்தி பார்க், காந்தியடிகள் நற்பணிக்கழக அலுவலகம், வித்யா சங்கர் ஸ்தபதி உள்ளிட்ட பெரியோர்களின் இல்லம் ஆகிய இடங்களில் அதிக நேரங்களில் நண்பர்கள் அவரோடு விவாதத்தில் ஈடுபட்டதைக் கூறினர். தன் கருத்தில் அவர் உறுதியாக இருந்ததையும், மாற்றுக்கருத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டதையும் முன்வைத்தனர். 

பார்வையாளனாகச் சென்ற எனக்கு அமைப்பாளர் பேச வாய்ப்பளித்தார். என் ஆய்வுக்கு தேனுகா தூண்டுகோலாக இருந்தது, என் கண்டுபிடிப்புகளைப் பாராட்டியது குறித்து எடுத்துப் பேசினேன். அவருடைய நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளையும், அவரது புகழ் பெற்ற நாற்காலியையும், அவரைப் பற்றிய பேட்டிகளையும் அவ்வப்போது நாளிதழ்களில் பார்த்துத் தொலைபேசியில் நான் அவரோடு பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தேன்.

அவரைப் பற்றி கழகம் இதழில் தேனுகாவும் நானும் என்ற தலைப்பில் திரு பாலசுப்பிரமணியன் கூறுகிறார் : 
"தேனுகாவின் வாழ்க்கையில் கடைசி பத்தாண்டில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் எங்களது சந்திப்பு நடந்துகொண்டே இருந்தது. கடைசி ஐந்தாண்டில் கிட்டத்தட்ட தினந்தோறும் சந்தித்தோம். சில சமயம் ஒரே நாளில் இரு முறையும் சந்தித்ததுண்டு. அப்படித்தான் எங்களது கடைசி சந்திப்பும் நிகழ்ந்தது.....22ஆம் தேதி தீபாவளி 24ஆம் தேதி கீழ்வேளூர் வரை போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவரின் மரணச் செய்தியை 24ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு ஸ்தபதியின் மகன் திரு ரவிசங்கர் கூற கேட்டபோது என்னுள் ஏற்பட்ட அதிர்வுகளைப் பதிவு செய்வது கடினம். என் மகள் என் மனைவியிடம், அப்பா இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று கேட்டதாக என் மனைவி கூறினார். தாங்க முடியவில்லைதான். என்ன செய்வது? வேறு வழியில்லை. தேனுகா இல்லாத உலகத்தை ஏற்று வாழ வேண்டியதுதான். இன்றுகூட இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட எனக்கு தேனுகா படியேறி கழகத்திற்குள் வருவது போன்ற பிரமை ஏற்படுகிறது. இந்த பிரமை இருக்கும் வரை தேனுகா என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பார், மனிதனாக."

அனைவருடைய வாழ்விலும் இத்தகைய ஒரு தாக்கத்தினை தேனுகா ஏற்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. அவருடைய நினைவினைப் போற்றும் வகையில் அறக்கட்டளை ஒன்று துவங்குவது, துறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவது என்பன போன்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் திரு பாலசுப்பிரமணியன் நெகிழ்ச்சியுடன். 

காந்தியடிகள் நற்பணிக்கழகம் வெளியிடும் கழகம் இதழ் தேனுகா நினைவு நாள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தொடர்புக்கு : காந்தியடிகள் நற்பணிக்கழகம், 16சி, காலசந்தி கட்டளைத்தெரு, கும்பகோணம் 612 001, மின்னஞ்சல்: gnk.kumbakonam@gmail.com அலைபேசி : 09952793520


தோற்றம் பின்னுள்ள உண்மைகள் என்ற தேனுகாவின் நூலைப் பற்றிய என் பதிவு



தேனுகாவைப் பற்றி விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த பதிவு


17 comments:

  1. திரு. தேனுகா அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  2. எனது அஞ்சலிகள் தேணுகாவிற்கு உரித்தாகுக

    ReplyDelete
  3. தேனுகா என்ற மாமனிதரைப் பற்றி அறிந்துகொள்ள உங்கள் பதிவு பெரிதும் உதவியது. அவருக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலி.

    ReplyDelete
  4. தேனுகா என்னும் மாமனிதரை அறியத் தந்தீர்கள் ஐயா....
    அவரின் இழப்பு கொடுத்திருக்கும் வலியை இறைவன் மாற்றட்டும்...

    ReplyDelete
  5. அவரின் ஆத்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகளும்... தேனுகா என்றாதும் பெண்ணாக இருக்கும் என நினைச்சு வந்தேன்...

    ReplyDelete
  6. தேனுகாவை நினைத்தால் எழுத்தாளர் எம்.வி.வி. (எம்.வி. வெங்கட்ராம்) நினைவுக்கு வருவார். எம்.வி.வி.யை நினைத்தாலும் தேனுகா நினைவுக்கு வருவார். இந்த இருவர் பற்றி நினைக்கும் பொழுது எம்.வி.வி.யின் 'தேனி' பத்திரிகை நினைவுக்கு வரும்.

    ReplyDelete
  7. தேனுகாவைப் பற்றி உங்களைப் பேச வைத்தது நியாயம்தானே ?ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு பதிவை நீங்கள் போட்டு இருந்தீர்களே !

    ReplyDelete
  8. தேனுகா அவர்களை பற்றி அறிந்து கொண்டேன்.
    அவர் ஆத்மா சாந்திக்கு என் பிராத்தனைகளும்.

    ReplyDelete
  9. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
    போற்றுவோம்

    ReplyDelete
  10. இலக்கிய விமர்சகர் தேனுகா அவர்களை அறிந்துகொள்ள உதவிய பதிவு. நன்றி ஐயா. தொடர்ந்து எமது தளத்திற்கு வந்து கருத்திட்டு வாழ்த்தி வருவதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் சமர்ப்பிக்கிறேன்! முன்போல் வலைதளத்தில் இயங்க முடியவில்லை! நிலைமை சீரானதும் பழையபடி தினமும் வலைதளங்களுக்கு வாசிக்க வருவேன்! நன்றி!

    ReplyDelete
  11. நெகிழ்வான நினைவேந்தல்.

    ReplyDelete
  12. தோழர் தேனுகா அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி

    ReplyDelete
  13. கலைவிமர்சகர் தேனுகா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தாங்கள் கலந்து பேசியுதுடன் அதனைப் பதிவிட்டதும் எனக்கு இனிய நண்பரும் என் நண்பன் நந்தலாலாவின் சம்பந்தியுமான தேனுகாவின் நினைவலைகளில் நெஞ்சம் தளும்புகின்றது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் நந்தலாலாவிற்கு இந்தப் பதிவை மின்னஞ்சல் வழி தெரிவித்திருக்கிறேன் அய்யா, நன்றி.

    ReplyDelete
  14. கலைவிமர்சகர் தேனுகா அவர்களின் நினைவஞ்சலி நாள் பதிவில் அவரைப் பற்றி நாமிறியத் தந்தமை பயனுள்ள பதிவு!

    ReplyDelete
  15. நான் தெரிந்து கொள்ளாதவர்களுள் தேனுகாவும் ஒருவர் நண்பர்கள் நினைவாண்டு கொண்டாடியது சிறப்பு

    ReplyDelete
  16. தாமதமான வருகை. கலை விமர்சகர் தேனுகா அவர்களுக்கு எங்கள் ஆத்மார்த்தமான அஞ்சலிகளும்,. நெகிழ்வான நினைவேந்தல்.

    ReplyDelete
  17. தேனுகா அவர்கள் ஒரு கலை பொக்கிஷம் ஆவார்.

    ReplyDelete