முகப்பு

24 February 2018

புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் : தமிழக சமணத் தளங்கள் குறுந்தகடு வெளியீடு

ஜனவரி 2018 இறுதி வாரத்தில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் (French Institute of Pondicherry) புகைப்பட ஆவணப்பிரிவின் தலைவர் திரு கே.ரமேஷ்குமார் அவர்கள், பிப்ரவரி 2018இல் Jain Sites of Tamil Nadu என்ற குறுந்தகட்டினை வெளியிடவுள்ளதாகக் கூறி, அதில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்நிறுனத்தானரிடமிருந்து விழாவிற்கான அழைப்பிதழ் மின்னஞ்சலில் வந்தது.  விழாவில் நானும் திரு.தில்லை கோவிந்தராஜன் அவர்களும் கலந்துகொள்வதாகத் திட்டமிட்டிருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்கள் வர இயலா நிலை ஏற்பட்டது.  

விழா நாளான 5 பிப்ரவரி 2018 அன்று பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றேன். விழாவில் கலந்துகொண்டேன். விழாவினைப் பற்றிய அனுபவங்களைப் பார்ப்பதற்கு முன்பாக சுவடிப்பிரிவையும், நூலகத்தையும் சுற்றிப் பார்ப்போம். அங்கிருந்து கடலின் பேரழகினை ரசிப்போம். தொடர்ந்து நிகழ்வுக்குச் செல்வோம். 

















குறுந்தகடு வெளியீடு
குறுந்தகடு அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. குறுந்தகட்டினை பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே வெளியிட முதல் படிகளை மேல்சித்தாமூர் சமணக்காஞ்சி சமண மடத்தின் தலைவர் ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள், திரு பி.தில்லைவேல், திரு எஸ்.கணேசன் மற்றும் லக்னோ மற்றும் சென்னையைச் சார்ந்த சமணப் பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் புதுச்சேரி சமண சங்க உறுப்பினர் திரு குகாமி சந்த் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழக சமணர் தளங்களைக் கொண்ட இந்த புகைப்படத் தொகுப்பில் தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சமணர் கால கட்டடங்கள், குகைக் கோயில்கள், பாறை படுக்கைகள், குகை ஓவியங்கள், கல்வெட்டுகள், தனிச் சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறுந்தகட்டின் சிறப்புகளையும், அது வடிவம் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், எதிர்கொண்ட சிரமங்களையும் திரு ரமேஷ்குமார், காணொளிக்காட்சி மூலமாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். 
 அறிமுக உரையாற்றும் பிரட்ரிக் லேண்டி (வலது) இசபெல்லா மர்குரே 
 குறுந்தகட்டைப் பெறும்  இலட்சுமிசேனா பட்டாரக பட்டாசார்யவர்ய மகாசுவாமிகள் 
குறுந்தகட்டின் கூறுகளை விளக்கும் திரு ரமேஷ்குமார்

இந்த குறுந்தகட்டை வெளியிட்ட பிரான்ஸ் தூதரக சமூக விவகாரங்கள் துறைத் தலைவர் இசபெல்லா மர்குரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

"தமிழகத்தில் உள்ள 464-க்கும் மேற்பட்ட சமணர் தளங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் கலாசார வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அவர்களது நினைவுச் சின்னங்கள் இடிபாடுகளாக உள்ளன. அவை பராமரிப்பின்றி தொடர்ந்து மறைந்து வருகின்றன. தற்போது ஓரளவு பாதுகாப்பாக இருக்கும் சமணர் நினைவுச் சின்னங்கள் தொகுக்கப்பட்டது. அவற்றை எண்ம மயமாக்கினால் (டிஜிட்டல் மயம்) பாதுகாக்க முடியும். இதன்மூலம் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்க முடியும். சமணர் தளங்களில் உள்ள பாரம்பரிய இலக்கியம், கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது".


பிரெஞ்சு ஆய்வு நிறுவன இயக்குநர் பிரட்ரிக் லேண்டி கூறியதாவது: "இந்த ஆய்வில் சமணர்களின் 13 வகை சடங்குகள், திருவிழாக்கள் தொடர்பான புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோயில்கள், குகைக் கோயில்கள், பாறை தங்குமிடம் தளங்கள் மற்றும் பாழடைந்த கோயில்களின் 7,873 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சமணர்களின் கட்டடக் கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சமணர்களின் பங்கு, சமுதாயச் சடங்குகள், திருவிழாக்கள், கோயில் சடங்குகள் உள்ளிட்டவற்றை இந்தப் புகைப்படங்கள் சித்திரிக்கின்றன. சமணர் தளங்களில் 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்களுக்குச் சென்று சமணர் படுக்கைகள், நினைவுச் சின்னங்கள் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறுந்தகட்டில் சமணர் தளங்களின் வரைபடங்கள், இருப்பிடங்களை காண முடியும். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து இவை ஆவணப் படுத்தப்பட்டுள்ளன".

விழாவில் முனைவர் கனக. அஜிததாஸ், திரு ஸ்ரீதரன் அப்பாண்டைராஜன், திரு வில்லியனூர் வெங்கடேசன், திரு வீரராகவன் திருமதி மங்கையர்க்கரசி, திரு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரைக் கண்டேன். 1999 முதல் பல முறை பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்கு வந்துள்ளபோதிலும் இது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.


நிகழ்விற்குப் பின் நண்பர்களுடனும், அறிஞர்களோடும் சில தருணங்கள்


  



இத்திட்டம் தொடர்பாக 3 நவம்பர் 2011இல் முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினரோடு நானும், எனது மேற்பார்வையில் "தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம்" என்ற தலைப்பில் திட்டத்தை மேற்கொண்ட திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களும் சென்று,  களப்பணியின்போது நாங்கள் கண்டுபிடித்த பல புதிய சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காண்பித்தோம். அந்த சிலைகளின் புகைப்படங்கள் இந்த குறுந்தகட்டில் உரிய ஒப்புகையுடன் இடம்பெற்றுள்ளதைக் கண்டேன். அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

நன்றி : 
ஆய்வாளர்களுடன் சந்திப்பு
திரு அழகானந்தன், 15 பிப்ரவரி 2018

திரு பாலமுருகன், 15 பிப்ரவரி 2018
திரு அன்வர், 26 பிப்ரவரி 2018
திரு அ.கு.செல்வராசன், 27 பிப்ரவரி 2018
For English version visit: 
The French Institute of Pondicherry: Release of DVD on Jain sites of Tamil Nadu 
1 மார்ச் 2018இல் மேம்படுத்தப்பட்டது.

17 February 2018

விக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்

சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள நூல்களில் ஒன்றான விக்கிரம சோழனுலா (பதிப்பாசிரியர் திரு கோ.தில்லை கோவிந்தராஜன்) என்னும் நூலை அண்மையில் வாசித்தேன். விக்கிர சோழனுலாவை வாசிப்போம், வாருங்கள்.

விக்கிரம சோழனுலா, விக்கிரமசோழன் (கி.பி.1118-1133), இரண்டாம் குலோத்துங்கசோழன் (கி.பி.1133-1150), இரண்டாம் ராஜராஜசோழன் (கி.பி.1146-1163) எனும் மூன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டதாகும். அவர் இந்த மூன்று மன்னர்களைப் பற்றியும் மூவருலா பாடியுள்ளபோதிலும் அவற்றில் விக்கிரம சோழனுலா (கி.பி.12ஆம் நூற்றாண்டு) சிறந்ததாகப் போற்றப்படுகிறது. 
சரஸ்வதி மகால் நூலகத்தில் விக்கிரமசோழன் உலா என்ற பெயரில் இரு சுவடிகள் உள்ளதாகவும் அவற்றில் ஆசிரியர் குறிப்புகள் இல்லாமல் மூலம் மட்டுமே உள்ளதாகவும், அவை சுவடி எண்.1890இல் சொக்கநாதர் சுவாமி திருவிளையாடல் என்ற தலைப்பில் தொகுப்பட்டுள்ளதாகவும் பதிப்பாசிரியர் கூறுகிறார். (ப.56) இந்நூலில் உலாவிற்கான விளக்கம், உலாவிற்கான வேறு பெயர்கள், உலாவிற்கான ஊர்தி, அமைப்பு முறைகள், உலாவினைக் காணும் பெண்களின் இயல்பு நிலைகள், வளர்ச்சி நிலைகள் எனவும், சங்க, சமய, பிற்கால இலக்கியங்கள், ரகுவம்சம்சம் ஆகியவற்றில் காணும்உலாவின் வளர்ச்சி நிலைகள் தரப்பட்டுள்ளன. புலவரைப் பற்றிய குறிப்புகளும், பருவப் பெண்களின் வயது வளர்ச்சியைப் பற்றிய குறிப்புகளும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.  உலாவில் காணும் சோழ அரசர்களின் மரபு பட்டியலுடன் இதுவரை வந்துள்ள சோழர்களின் செப்பேடுகளின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட விக்கிரம சோழனுலா 343 கண்ணிகளைக் (இரண்டு வரி) கொண்டமைந்துள்ளது. இவ்வுலாவில் உள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் இயற்றும்படி அரசன் வேண்டிக்கொள்ள அவ்வாறே பாட விரைந்து பாடியதால் கூத்தருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அவருடய இந்நூலில் கீழ்க்கண்டவை உள்ளிட்டவை பற்றி பேசப்படுகின்றன.
  • விக்கிரம சோழனின் முன்னோரின் பெருமை
  • விக்கிரம சோழனின் பிறப்பு, பள்ளி எழுதல், நீராடல், இறைவனை வணங்குதல்
  • சோழன் அலங்காரம் செய்து கொள்ளல்
  • பட்டத்து யானையின் பெருமை
  • சிற்றரசர்களின் விவரங்கள், பரிவாரங்கள்
  • பேதை, பெதம்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பருவ மகளிர் மற்றும் அவர்கள் சோழ மன்னரைக் கண்டு காதல் கொள்ளல்      
சிவ வழிபாடு :
பொன்னித் (புதுமஞ் சனமாடிப்) பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை (41)
மறைக் கொழுந்தை வெள்ளி மலைக் கொழுந்தை  (மௌவுலி)
பிறைக் கொழுந்தை வைத்த பிரானைக்-கறைக் களத்துச் (42)
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குணர்ந்த (43) 
துயில் எழுந்தவுடன் விக்கிரம சோழன் வானம் பொய்த்தாலும், தாய் பொய்யாத காவிரியில் நீராடிய பின்னர் அந்தணர்கள் மந்திரம் ஓதிக் கொடுத்த அருகம்புல்லின் தளிரை காப்பாகத் தன் கைகளில் அணிந்துகொண்டான். பழமைக்கும் பழமையான வேதத்தின் கொழுந்தையும், வெள்ளி மலையின் கொழுந்தையும், தலையில்பிறையின் கொழுந்தையும் அணிந்துள்ளவனும், விஷத்தினைக் கண்டத்தில் சுமந்திருப்பவனும், செவ்வானத்தின் சிவந்த நிறத்தினைக் கொண்ட திருமேனியையும் மூன்று கண்களை உடையவனானச் சிவபெருமானை வணங்கினான்.  

உலா வந்த அரசனைக் கண்ட பெதும்பையின் நிலை :
அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத - முரசம் (149)
தழுங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு மணிமாட முன்றிற் - கெழங்கயற்கட் (150)
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வெளிப்பட்டு - மன்னருயிர் (151)
தாயார் வாழ்த்திக் கொண்டிருக்கும்போது அரசன், அபயன், அகளங்கன் எனப் பெயர் பெற்ற விக்கிரம சோழன் கழுத்தில் மணிக்கயிறு கட்டிய மத யானை மேல் உலாவச் சென்றான். அவன் வருவதனை தெரிவிக்கும் முரசுகளின் ஒலியினைக் கேட்டு தன் சுற்றத்தோடு ஓடினாள். அவள் மேகங்கள் சூழ்ந்திருந்த வாசலில் மீன் போன்ற விழிகளையுடைய திருமகள் போலவும், அழகு முழுவதும் நிறைந்த மின்னல் போலவும் தோன்றினாள்.

மங்கையின் அலங்காரத்தோற்றம் :
வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கித் தரித்தாள்-விரிகோதை (166)
சூடினாள் பைம்பொற் றுலகிலடுத்தாள் சந்தனச்சே
றாடினாள் தன்பே ரணியணிந்தாள்-சேடியர் (167)
வலிமை மிகுந்த பெரிய போர் யானையின் மீது பூமாலையினை அணிந்து கொண்டு விக்கிரம சோழன் உலா வருகிறான் என்ற செய்தியினை மங்கைப்பருவத்துப் பெண் அறிந்தாள். மணிகள் பதித்த அணிகளைக் கொண்டுவரச் செய்து வாங்கி அணிந்தாள். பூத்த மலர்களாலான மலர் மாலையை சூடினாள். சந்தனக் குழம்பை பூசிக்கொண்டாள். மாதணி என்கின்ற பதக்கத்தையும் அணிந்துகொண்டாள்.

பந்து விளையாடுதல் :
சொல்லி யொரு மடந்தை தோழியைத் தோள் வருந்தப்
புல்லிநிலா முற்றம் போயேறி-வல்லிநாம் (195)
சேடிய ரொப்ப வருத்துத் திரள்பந்து
கோடியர் கண்டுவப்பக் கொண்டாடி - (ஆடினால்) (196)
(லென்மாலை) நீகொள்வ தியாங் கொள்வ தெங்கோமான்
தன்மாலை வாங்கித்தருகென்று - மின்னனையாள் (197)
மடந்தைப் பருவத்துப் பெண் தோழியைத் தோளில் வருத்தம் ஏற்படுமாறு தழுவி நிலா முற்றத்தில் ஏறினாள். தோழியிடம் வல்லிக்கொடி போன்றவளே நாம் பாங்கியர் போல இரண்டு பக்கமாக நின்று உருண்டையான பந்தினை எடுத்து கூத்தர்கள் மகிழும்படி பந்தாடுவோம் என்றாள். பந்தாடலின்போது நான் தோற்றுவிட்டால்  என்னுடைய மாலையினை எடுத்துக் கொள்வாயாக எனவும், நீ தோற்றுவிட்டால் மன்னவர் மாலையை வாங்கித் தருக எனவும் பந்தயம் கூறினாள்.

மன்னனைக் காணல் :
புலருந் தனையும் புலம்பினா ளாங்குப்
பலரும் பணிந்து பரவக் - குலகிரிசூழ் (282)
ஆழிப் புவன மடைய வுடையபிரான்
சூழிக் கடாயானை தோன்றுதலும் - யாழின் (283)
காதல் நோயினால் புலம்பிக் கொண்டிருந்த தெரிவை, பலரும் பணிந்து வணங்கும் மலையும் கடலும் சூழ்ந்த உலக முழுவதும் ஆளும் விக்கிரம சோழன் முகபடாம் அணிந்த யானையின் மேல் உலா வரக் கண்டு யாழின் இசை, தென்றல் பனி, உடுக்கை, நிலவு முதலிய அனைத்திற்கும் வருந்தியவள் உயிர் பிழைத்தவள் போல் மன்னனைக் காண ஓடினாள்.

சோழன் உலா வருகை :
வேரிக் கமழ்கோதை வேறாகத் தன்மனத்திற்
பூரித்த மெய்யுவகை பொய்யாகப் -  பாரித்த (319)
தாமக் கவிதை நிழற்றச் சயதுங்கன்
நாமக் கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் (320)
வண்டுகள் சூழ்ந்த மணம் கமழும் கூந்தலையுடைய அப்பேரிளம் பெண் விக்கிரம சோழனைப் புணர்ந்ததாக எண்ணி மகிழ்ந்திருக்கும்பொழுது மாலையணிந்த வெண்கொற்றக் குடை நிழ செய்ய வெற்றியால் உயர்ந்தவனாகிய அச்சோழன் அச்சத்தைத் தரும் மத யானைமேல் உலா வந்தான்.

நூல் : விக்கிரம சோழனுலா
பதிப்பாசிரியர் : கோ.தில்லை கோவிந்தராஜன் (9442148246)
பதிப்பகம் : தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர் 
ஆண்டு : 2017
விலை : ரூ.100   

10 February 2018

பல இதழ்களில் ஒரே கட்டுரை : Syndicated article

Syndicated article என்பது தொடர்பாக நான்  எழுதிய கட்டுரை 
அதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. 
அதன் மேம்படுத்தப்பட் வடிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

பருவ மாற்றம் தொடர்பாக Copenhegan: seize the chance என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் 45 நாடுகளைச் சேர்ந்த, 56 நாளிதழ்களில் ஒரே நாளில் வெளியானது. அத்தலையங்கம் 7 டிசம்பர் 2009 நாளிட்ட The Hindu இதழில் முதல் பக்கத்தில் பொதுத்தலையங்கமாக இடம் பெற்றிருந்தது. அதற்கு முன்னர் இவ்வாறாக ஒரே கட்டுரை ஒரே நாளில் பல இதழ்களில் வெளியானதாக நினைவில்லை. 
பருவ மாற்றம் தொடர்பாக 45 நாடுகளில் 56 நாளிதழ்கள் வெளியிட்ட 
ஒரே தலையங்கம், The Hindu, 7 டிசம்பர் 2009
அதனை வியந்து பாராட்டி நான் எழுதிய கடிதம் அவ்விதழில் 9 டிசம்பர் 2009  அன்று வெளியானது. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அதைப் பாராட்டி நான் எழுதி, வெளியான கடிதம் 
The Hindu, 9 டிசம்பர் 2009

இவ்வாறாக ஒரே கட்டுரை பல இதழ்களில் ஒரே நாளில் வெளிவருவதை Syndicated article என்று கூறக் கேட்டுள்ளேன். Syndication என்பதற்கு The sale or licensing of material for publication or broadcasting by a number of television stations, periodicals etc. என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.  Syndicated என்பதற்கு (of articles and photographs) sold to different newspapers and magazines for publishing என்று கேம்பிரிட்ஜ் அகராதி கூறுகிறது.  அரசியல் பிரமுகர்கள் இவ்வாறாக அவ்வப்போது சில இதழ்களில் எழுவதைப் பற்றிப் படித்துள்ளேன்.  

26 ஜனவரி 2018இல் புதுதில்லியில் நடைபெற்ற 69ஆவது குடியரசு தினத்தன்று ஆசியன் அமைப்பின் 10 நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்திய ஆசியன் உறவைக் குறிக்கின்ற வகையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "Shared values, common destiny" என்ற கட்டுரை அந்த 10 ஆசியன் நாடுகளின் கீழ்க்கண்ட 27 நாளிதழ்களில் கம்போடியா, இந்தோனேசியா, வியட்னாமிஸ், பர்மிஸ், மலாய், தாய், லாவோ, மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் வெளியானது. இவற்றில் சிங்கப்பூர் (தமிழ் முரசு) மற்றும் மலேசியா (தமிழ் நேசன், மக்கள் ஓசை) ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்கள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் வெளியான இதழ்களின் பக்கங்களை கீழே காணலாம்.

  • கம்போடியா: 1) Rasmei Kamuchea, Cambodian 2) Phnom Penh Post, English 
  • இந்தோனேசியா: 1) Kompas, Bahasa Indonesia 2) Jakarta Post, English 
  • வியட்நாம்: 1) Tuoi Tre, Vietnamese 2) Vietnam News, English
  • மியான்மர்: 1) Myanmar Times, English 2) Global New Light of Myanmar, English  3) Myanmar Alin, Burmese 4) Mizzima, English
  • புருனேய்: 
    1) Media Permata, Bahasa Malay 2) Borneo Bulletin, English
  • தாய்லாந்து: 1) Bangkok Post, English 2) Post Today, Thai
  • லாவோஸ்: 1) Vientiane Mai, Lao language 2) Vientiane Times, English
  • பிலிப்பைன்ஸ்: 1) Manila Bulletin, English
  • சிங்கப்பூர்: 1) Strait Times, English  2) Business Times, English  
    3) Tamil Murasu, Tamil 4) Lianhe Zaobao Mandarin 5) Berita Harian, Basha Malay, 6) Tabla, English 
  • மலேசியா: 1) Berita Harian, Bahasa Malay 2) The Star, English 
    3) Tamil Nesan, Tamil 4) Makkal Osai, Tamil
வியட்நாம் நியூஸ், வியட்நாம்

குளோபல் நியூ லைட் ஆப் மியான்மர், மியான்மர்

பாங்காங் போஸ்ட், தாய்லாந்து

மணிலா புல்லட்டின், பிலிப்பைன்ஸ்

ஸ்ட்ரைட் டைம்ஸ், சிங்கப்பூர்

"பிரதமர் மோடி இதழாளர் ஆகிறார்,  ஆசிய நாடுகளின் 27 நாளிதழ்களில் தலையங்க எதிர்ப்பக்க கட்டுரை எழுதுகிறார்" என்ற தலைப்பிட்டு The Hush Postஇல் வெளியான கட்டுரையில் (PM turns into journalist, writes an op-ed piece for 27 newspapers of Asean Nations) சிங்கப்பூரின் இதழில் வெளியான "Shared Values, common destiny" என்ற தலைப்பிலான அக்கட்டுரை இணைக்கப்பட்டிருந்தது. அதே தலைப்பில் கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களில் இடம் பெற்றுள்ளதை மேற்கண்ட பக்கங்களில் காணமுடிகிறது. 

கட்டுரையின் ஆரம்பப் பத்திகள்
"Today, 1.25 billion Indians will have the honour to host 10 esteemed guests – leaders of Asean nations – at India’s Republic Day celebrations in our capital, New Delhi.
Yesterday, I had the privilege to host the Asean leaders for the Commemorative Summit to mark 25 years of Asean-India partnership. Their presence with us is an unprecedented gesture of goodwill from Asean nations........

கட்டுரையின் நிறைவுப் பத்திகள்
......Indians have always looked East to see the nurturing sunrise and the light of opportunities. Now, as before, the East, or the Indo-Pacific region, will be indispensable to India’s future and our common destiny.
Asean-India partnership will play a defining role in both. And, in Delhi, Asean and India renewed their pledge for the journey ahead."

அவரது இந்த கட்டுரையினைப் பற்றி இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் பரவலாக விவாதித்திருப்பதைக் காணமுடிந்தது.  தமிழகத்தில் வெளியாகும் பல நாளிதழ்களில் Syndicated article பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது. The Hindu இதழில், மூன்று இதழ்களின் பெயர்கள் காட்டப்பட்டிருந்தன. அதனடிப்படையில் அந்தந்த இதழ்களின் தளங்களுக்குச் சென்றபோது பிற இதழ்களையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டபோது சில இதழ்களில் இணையத்தில் இக்கட்டுரையினைப் பெறமுடியவில்லை. 

Syndicated article/Op-ed piece என்ற சொல்லை 2009இல் The Hindu மூலமாக அறிந்தேன். இருந்தாலும் இப்போதுதான் அவ்வகையான கட்டுரையினைப் பல தளங்களில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். Syndicated என்ற ஒரு சொல்லே இந்தப் பதிவினை நான் எழுதக் காரணமானது. 

The Hindu வாசிப்பு எனக்கு பல வெளிநாட்டு இதழ்கள் அறிமுகமாக உதவியது. அவ்வகையில் The Guardian, Dawn, New York Times உள்ளிட்ட பல இதழ்களை கடந்த 10 ஆண்டுகளாகப் படித்துவருகின்றபோதிலும் முதன்முதலாக மேலும் பல புதிய வெளிநாட்டு இதழ்களைப் பற்றி தற்போது அறியமுடிந்தது.

30 டிசம்பர் 2017இல் வெளியான The Hindu நாளிதழின் இணைப்பு Turning points : Global Agenda 2018 என்ற தலைப்பில் 12 பக்கங்களைக் கொண்டிருந்தது. அதன் முகப்புப்பக்கத்தில் The Hindu:The New York Times News Service & Syndicate என்றிருந்தது. அவ்விணைப்பின் 2ஆம் பக்கத்தில் வந்த தலையங்கத்தில், இரண்டாவது பத்தியில் "The Hindu, in association with The New York Times, brings its readers an analytical package on the world and on India, with a range of influential thinkers and writers from abroad and India presenting their forward-looking perspectives..." என்று குறிப்பிட்டுள்ளது. இதுவும் Syndicate என்பதன் அடிப்படையில் அமைவதுபோலுள்ளது. 

நன்றி : பதிவில் சுட்டப்பட்டுள்ள அனைத்து இதழ்கள்     
முகாம் : சென்னை, பாண்டிச்சேரி, கரூர் (2 பிப்ரவரி 2018 முதல்)

18 பிப்ரவரி 2018இல் மேம்படுத்தப்பட்டது