முகப்பு

17 March 2018

பாப் அப் ஷாப் : உலக மகளிர் தினம்

கடந்த மாதம் Syndicate என்ற சொல்லுக்கான பொருளையும், பயன்பாட்டையும் அறிந்தோம். அண்மையில் அயலக இதழ்களை வாசிக்கும்போது மகளிர் தினத்தை முன்னிட்டு pop up shop அமைக்கப்படுவதாக ஒரு செய்தியைப் படித்தேன். அதற்கான பொருளைத் தேடிச் சென்றதன் அடிப்படையில் அமைந்தது இப்பதிவு. 

Pop-up retail என்பதானது pop-up store (ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்தில் pop-up shop) என்பதானது குறுகிய காலத்தில் அமைக்கப்படுகின்ற விற்பனைக்கான இடமாகும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக குறிப்பிட்ட காலம் மட்டுமே அமைக்கப்படுகின்ற தற்காலிகக் கடையாகும். 

நம் நாட்டில் திருவிழாக் காலங்களில் குறிப்பாக கோயில் விழாக்களின்போது இவ்வாறாகத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் நவராத்திரியின்போது காணப்படுகின்ற கடைகளே எனக்கு நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு வருடமும் அவ்விழாவின்போது பொருள்களை வாங்குவதையே பலர் வழக்கமாகக் கொண்டுள்ளதை நான் நேரில் கண்டுள்ளேன். 

பாப் அப் ஷாப்பின் முக்கியமான இலக்குகள் வருமானத்தை மேம்படுத்துதல், குறிப்பிட்ட பொருள் தொடர்பான விழிப்புணர்வினை உண்டாக்குதல், வாடிக்கையாளர்களை தம் பக்கம் ஈர்த்தல் என்பனவாகும். முதன்முதலாக லாஸ் ஏஞ்சல்சில் அறிமுகமான இந்த கடை தற்போது அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. சொல்லுக்கான பொருளைக் கண்டோம். இவ்வாறான ஒரு தற்காலிகக் கடை மகளிர் தினத்தை முன்னிட்டுத் திறக்கப்பட்டிருந்ததை இனி பார்ப்போம்.

உலக மகளிர் தினம் மற்றும் மகளிர்க்கான வாக்களிப்பு உரிமை நீடிப்புச்சட்ட நூற்றாண்டு தினம் ஆகிய இரு தினங்களையும் நினைவுகூறும் வகையில்  லைக் எ உமன் (Like a woman) என்ற தற்காலிகப் புத்தகக் கடையை  (pop-up shop), உலகப்புகழ் பெற்ற புத்தக நிறுவனமான பெங்குவின் நிறுவனம், வாட்டர்ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து  2018 மார்ச் 5 முதல் 9 வரை லண்டனில் ரிவிங்டன் தெருவில் திறந்தது. 240க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் நூல்கள் இதில் இடம்பெற்றன.   


ஆங்கில பெண் எழுத்தாளரான விர்ஜீனியா ஊல்ப் (1882-1941), கனடா நாட்டு பெண் எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் (பி.1939) ஆகியோரின் நூல்களுக்கு இடம் உண்டு என்றும், அயர்லாந்தின் புதின ஆண் எழுத்தாளரான ஜேம்ஸ் ஜாய்ஸ் (1882-1941), பிரிட்டனைச் சேர்ந்த புதின ஆண் ஆசிரியர் (பி.1949) ஆகியோரைப் போன்றோரின் நூல்களுக்கு இங்கு இடமில்லை என்றும் இந்நிறுவனம் கூறுகிறது. கிழக்கு லண்டனில் திறக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கடையில் பெண்களால் எழுதப்பட்ட நூல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாற்றத்திற்காகப் போரிட்ட பெண்களின் நிலைபேற்றினைக் கொண்டாடும் வகையிலான புத்தகக்கடை என்கிறது பெங்குயின்.



அந்தந்த நூலாசிரியர்கள் பண்பாடு, வரலாறு மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் நூல்களின் தலைப்புகள் பகுப்பு அமைந்திருந்தது. “மகளிர் வாசிக்கவேண்டியவை, “எழுச்சியுறும் இளம் வாசகர்கள்”, “கவனிக்கப்படவேண்டிய மகளிர்”, “மாற்றம் கொணர்வோர்” உள்ளிட்ட பல பிரிவுகள் இதில் அடங்கும்.


குழந்தைகளுக்கான பெண் எழுத்தாளர்களான மலோரி பிளாக்மேன் (பி.1962), ஜாக்குலின் வில்சன் (பி.1945)  மற்றும் ஐரிஸ் மர்டோ (1919-1999), கெய்ட்லி மோரன் (பி.1975), மலாலா யூசுப்சையி (பி.1997), ஜாடி ஸ்மித் (பி.1975), ஆகியோரின் நூல்கள் இதில் இடம்பெறவுள்ளன. 100 அசாதாரண மகளிரின் கதைகளைக் கொண்ட குட்நைட் ஸ்டோரீஸ் ஃபார் ரிபல் கேர்ல்ஸ்  (Goodnight Stories for Rebel Girls) என்ற நூலை இணைந்து எழுதிய இத்தாலிய பெண் எழுத்தாளரும் தொழில் முனைவோருமான எலினா ஃபாவிலி மற்றும்  இத்தாலிய பெண் எழுத்தாளரும் தொழில் முனைவோரும் நாடக இயக்குநருமான  ஃப்ரான்சஸ்கா காவல்லோ ஆகியோரின் படைப்புகளும் இடம் பெறும். இலக்கியப் பிரிவில் கட்டே அட்கின்சன் (பி.1951) மற்றும் ஏலிஃப் சஃபாக் (பி.1971), கிலாசிக் வரிசையில் ஆன் பிராங்க் (1929-45) மற்றும்  மேரி உல்ஸ்டன் கிராப்ட்  (1759-1797) உள்ளிட்டோரின் நூல்கள் இடம் பெற்றிருந்தன.

எங்கும் பெண்களின் குரல்கள் கேட்கப்படுவதுடன் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிலையில் பாலின சமத்துவத்தைக் கொணர இது ஒரு திறவுகோலாக இருக்கும் என்றும், இவை போன்ற குரல்கள் வெளிப்படவும், கொண்டாடப்படவும் இதுபோன்ற புத்தகக்கடை பெரும் பங்களிப்பு செய்யும் என்றும் பெங்குயின் ராண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் படைப்பு மேலாளர் ஜைனாப் ஜுமா கூறுகிறார். மேலும் அவர் மிகச்சிறந்த எழுத்தாளர்களையும், ஆர்வலர்களையும், முன்னோடிகளையும் காண்பதற்கான ஓர் அரிய வாய்ப்பினைத் தந்துள்ளதாகவும், அவர்கள் மூலமாக வாசகர்கள் முன்னுக்குச் செல்வதற்கான ஒரு தூண்டுகோலைப் பெறுவதோடு மாற்றத்தினையும் உணர்வர் என்றும் கூறினார்.
விழா நாட்களில் இந்த புத்தகக்கடையில் பல இலக்கிய நிகழ்வுகளும், பணிப்பட்டறைகளும் நடைபெற்றன. மகளிரின் நூல்களும் வெளியிடப்பட்டன.
மகளிரின் குரலை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்ற  இவ்வாறான வித்தியாசமான புத்தகக்கடையைத் திறப்பது என்பதானது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது என்கிறார் வாட்டர்ஸ்டோன்ஸ் விழா மேலாளர் லூசி கிரைய்ன்கெர்.  
புத்தகக்கடை திறப்பு மற்றும் விழா தொடர்பான நிகழ்வுகளை பெங்குவின் தன் இணையதளத்தில் (https://www.penguin.co.uk/likeawoman/) தொடர்ந்து வெளியிட்டு வந்தது. மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடிய அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுவோம். 

துணை நின்றவை 

16 comments:

  1. மகளிர் தினத்தை வித்யாசமாக கொண்டாடினார்கள் .இவ்வருடம் லண்டனில் இந்த pop அப் ஷாப் இல் நிறைய மகளிர் எழுதிய புத்தகங்கள் விற்பனையும் நடைபெற்றது எங்களுக்கு போக முடியலை .

    ReplyDelete
  2. புதிய தகவல். நீங்கள் அறிந்து கொண்டதை எங்களுக்கும் அறிய தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    மகளிர் தினத்திற்காக இந்தளவிற்கு வித்தியாசமாக முயற்சி எடுத்த பெங்குவின் நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். எத்தனை எழுத்தாளர்கள்! தங்களது அறியும் திறனினால் எங்களுக்கு இவ்விசயங்கள் தெரிய வருகிறது.
    சேகரித்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. நல்லதொரு புதிய தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  6. புதியதொரு தகவல்...பாப் அப் ஷாப்ஸ் பற்றித் தெரியும் கேட்டதுண்டு அது மகளிர் தினத்தை முன்னிட்டு பாப் அப் ஆகி அருமையான நிகழ்வாக்கியதற்கு அவர்களைப் பாராட்ட வேண்டும். நல்ல புதிய தகவலை இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

    கீதா

    ReplyDelete
  7. மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடிய அவர்களுடைய முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது

    ReplyDelete
  8. என்னாதூஊஊஊஊஉ பெண்களுக்கு மட்டுமே ஆன பொப் அப் ஆஆஆ?:)) இனி எங்களையும் ஆரும் பிடிக்கவே முடியாதூஊஊஊஊஉ:)) ஹா ஹா ஹா...

    அருமையான தகவல் உண்மையில் என் காதுக்கு இத்தகவல் எட்டவில்லை.. உங்கள் மூலமே அறிகிறேன்...

    இனி பொப் அப் ஷொப் இல் “எழுத்தாளர் அதிராவி” :)..ன் புக்ஸ் உம் இடம்பெறும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து அமர்கிறேன்:).

    ReplyDelete
  9. //மகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடிய அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுவோம். //

    அருமையான தகவல். நிச்சயமாய் பாராட்ட வேண்டும்.

    அதிராவின் புத்தகமும் இடம்பெறபோவது அறிந்து மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. நன்றி. நம் நாட்டிலும் இவ்வாறு இடம்பெற வேண்டும்.

    ReplyDelete
  11. Superb Sir. New Information, really interesting

    ReplyDelete
  12. பாப்-அப் பற்றிய புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  13. இதுவரை கேட்டிராத செய்தி. பாப் அப் ஷாப் என்பது நமக்குப் புதிதன்று. நம் ஊர் வாரச் சந்தை கடைகள் அத்தகையதே. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  14. புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்! பயனுள்ள பதிவு. நன்றி!
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
  15. புதிய தகவல் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  16. பாப் அப் ஷாப் பற்றியும் மகளிர் தினக் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புத்தகக்கடை பற்றிய செய்திகள். மிக வித்தியாசமான பதிவு.

    ReplyDelete