முகப்பு

21 April 2018

சமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017

27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன். நவம்பர் 2017 கோயில் உலாவின்போது பிற கோயில்களுடன் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனந்தவல்லி சமேத போஜீஸ்வரர் கோயில் ச.கண்ணனூர் (சமயபுரம்), மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. போஜராஜா கோயில் என்றால்தான் இங்குள்ளவர்களுக்குத் தெரிகிறது.  ச.கண்ணனூர் புது ஆற்றங்கரைக்கு வட பகுதியில் அமைந்துள்ள ஊராகும். 
ராஜகோபுரம் இன்றி அமைந்துள்ள இக்கோயிலின் முகப்பினைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. வலது புறம் அமிர்தமிருத்ஞ்சயன் (சிவன்) உள்ளார். முன் மண்டபம், ராஜகோபுரம், கருவறையைக் கொண்டு மூலவர் சன்னதி அமைந்துள்ளது.



மூலவர் போஜீஸ்வரஸ்வாமி என்றும் போஜராஜஸ்வாமி என்றும் அழைக்கப்படுகிறார். திருச்சுற்றில் மடப்பள்ளி, நந்தவனம், விநாயகர் சன்னதி,முருகன் சன்னதி, நவக்கிரக சன்னதி ஆகியவை உள்ளன. மூலவர் கருவறையின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது.  இங்குள்ள அம்மன் ஆனந்தவள்ளி ஆவார்.  





பல வருடங்களுக்குப் பின் அண்மையில் திருப்பணி ஆனதாகத் தெரிவித்தனர். மண்டபத் தூண்களின் சிற்ப அமைப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. 

இந்தக் கோயில் ஹொய்சல மன்னர்களால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி.1253இல் பூஜிக்கப்பட்ட கோயிலாகும். மைசூரைச் சேர்ந்த துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்த ஹொய்சல மன்னர்களில் இரண்டாவது நரசிம்மன் என்பவன் 13ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சோழனுக்கு உதவியாக வந்து பகைவரை விரட்டி சோழனைப் பட்டத்தில் நிறுத்தினான். இவனுடைய புதல்வனாக வீர சோமேஸ்வரன் தன் ராஜ்யத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தக் கருதி கி.பி.1253இல் கண்ணனூரை தலைநகரமாக்கி விக்கிரமபுரம் என்ற புதிய பெயரைக் கொடுத்தான். ஹொய்சல மன்னர்களில் இவனே புகழ் வாய்ந்தவன். இவன் கர்நாடக தேசத்துக்குச் சந்திரன் என்ற பட்டத்தைப் பெற்றான். இவன் தன் வெற்றிக்கறிகுறியாக  இந்த நகரத்திலிருந்து ஒரு சூரிய கிரகணத்தன்று  (1.3.1253இல்) பல கிராமங்களைத் தானங்களைச் செய்துள்ளான். இவனைப் பற்றிய கல்வெட்டுகள் ஸ்ரீரங்கம் கோயிலிலும், திருவானைக்கா கோயிலிலும் உள்ளன. இவன் கண்ணனூரில் பொய்சலேசுவரம் என்னும் கோயிலைக் கட்டுவித்தான். வீரசோமேஸ்வர தேவன் கண்ணனூரில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவித்து அதற்கு பொய்சலேசுவரம் என்று பெயரிட்டான். அக்கோயில் தற்போது போஜராஜா கோயில் என்று வழங்கப்படுகிறது. (கோயிலுள்ள அறிவிப்புப் பலகை) 

இக்கோயிலில் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 21ஆம் நாள் 6 செப்டம்பர் 1962 அன்றும், துர்முகி வருடம் மாசி மாதம் 21ஆம் நாள் 5 மார்ச் 2017 ஞாயிற்றுக்கிழமை அன்றும் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

கோயிலுக்குச் சென்றுவந்தபின் இக்கோயிலைப்பற்றி விக்கிவீடியாவில் புதிய பதிவு ஆரம்பித்தேன். திருப்பணிக்குப் பின் வடிவம் பெற்றுள்ள, இக்கோயிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம்.

17 comments:

  1. ராஜகோபுரம் இல்லாத கோவில்களுக்கு, அப்படி இருக்க ஏதாவது காரணம் இருக்குமா? தாராசுரம் கோவிலில் கூட ராஜகோபுரம் இல்லை என்று நினைவு.

    கோவில் மண்டபத் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் இருக்கின்றன.

    ReplyDelete
  2. தகவல்கள் நன்று.

    உத்திரகோசமங்கையிலும் வெகுகாலமாக கோபுரம் முடிக்கப்படாமல் மொட்டையாகவே இருந்தது.

    ReplyDelete
  3. நல்ல தகவல். சமயபுரம் சென்றால் பார்க்க முயல்கிறேன்.

    ReplyDelete
  4. படிப்படியாக சிதைந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சுவடுகள்.

    ReplyDelete
  5. நான் திருச்சியில் இருந்தும், இந்த கோயிலைப் பற்றி இப்போது உங்கள் பதிவின் வழியேதான் இப்போது தெரிந்து கொண்டேன். (போஜராஜன் என்றால் எனக்கு முப்பத்தி இரணடு பதுமைகள் ஒவ்வொன்றும் சொல்லும் கதையைக் (விக்கிரமாதித்தன் கதையைக்) கேட்ட போஜராஜ மன்னன்தான் நினைவுக்கு வருகிறான்; அந்த மன்னனுக்கும் இந்த கோயிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருந்தால் கேட்டு எழுதவும். ஏனெனில் பட்டி - விக்கிரமாதித்தன் தொடர்புடைய உஜ்ஜயினி காளி கோயிலும் (இந்த கோயில் பற்றி எனது பதிவும் உண்டு) சமயபுரத்தின் அருகில் உள்ளது)

    ReplyDelete
    Replies
    1. போஜராஜனுக்கோ, போஜராஜன் கதைக்கோ இக்கோயிலுடன் எவ்விதத் தொடர்புமில்லை. நம்மவர்கள் இக்கோயிலை போஜராஜன் கோயில் என்று ஆக்கிவிட்டார்கள் என்பதை களப்பணியின்போது அறிந்தோம்.

      Delete
  6. வணக்கம் சகோதரரே

    அழகான படங்களுடன் அருமையாக சமயபுரம் போஜிஸ்வரர் கோவில் சிறப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி. தூண்களின் அமைப்புகளும் சிற்பங்களும் மிக அழகாய் இருந்தன. சமயபுரம் அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியத்தை இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. கோவில் உலா
    அழகான படங்களுடன்
    அருமையான தகவல்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அழகியப் படங்களுடன் அருமையான பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. படங்கள் எல்லாம் அழகு.
    விவரங்கள் கோவிலைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

    ReplyDelete
  10. மிக அருமை ஐயா. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆவலைத் துாண்டுகிறது.

    ReplyDelete

  11. இக்கோயிலை நானும் இதுவரை பார்த்ததில்லை.
    பார்க்கும் வாய்ப்புக்கு ஆவல்.

    ReplyDelete
  12. கோவில் நிகழ்வுகள் மிகவும் அருமை

    ReplyDelete
  13. கோவிலின் புராதன் சிறப்புகளை அறிந்தோம். வெகுநாளாக ஹொய்சல நாடு எது என்று அறிய ஆவல். தங்கள் கட்டுரை மூலம் கர்நாடக மைசூர் அருகே உள்ள துவாரசமுத்திரம் என அறிந்தேன். நன்றி மும்பை இரா. சரவணன்

    ReplyDelete
  14. அற்புதமானப் பதிவு.
    அழகானப் புகைப்படங்கள்.
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  15. பக்கத்தில் இருந்தும் அறியாத தகவலை அறியத் தந்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்று.

    ReplyDelete
  16. அருமையான தகவல்கள் கோயில்கள் பற்றி.

    ReplyDelete