முகப்பு

19 May 2018

புத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்

நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள கும்பகோணத்தில் ஒரு அறிவு திருக்கோயில்  நூலை முன்பு வாசித்துள்ளோம். அந்நூல் ஒரு குறிப்பிட்ட நூலகத்தைப் பற்றி முழுமையாக விவாதிக்கிறது. இந்நூல் வாசிப்பு மற்றும் நூல் தொடர்பாக, ராமகிருஷ்ண விஜயம், தினமணி, புதிய தலைமுறை-கல்வி, தினமலர் போன்ற இதழ்களில் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாக அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட தொடர்பான பொருண்மைகளில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். திரு சம்பத்குமார் மிகவும் முயன்று அவ்வாறான கட்டுரைகளைத் தொகுத்து வாசிப்பு தொடர்பானவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, ஒரே இடத்தில் அவ்விதமான கட்டுரைகள் அமையவேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார். இந்திய நூலகவியலின் தந்தையான டாக்டர் எஸ்.ஆர்.ரெங்கநாதன் அவர்களின் 125ஆவது பிறந்த நாள் நினைவாக வெளியிடப்பட்ட இந்நூலில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

இளைஞர்கள் எதை வாசிக்க வேண்டும் :  இறையன்பு ஐ.ஏ.எஸ்
புத்தகங்கள் அழிவதில்லை : சா.கந்தசாமி
புத்தகங்களைத் தேடித்தேடி : தஞ்சாவூர் கவிராயர்
வாசிக்கும் சமூகமே வளரும் : த.ஸ்டாலின் குணசேகரன்
திருக்குறளும் தேசப்பிதாவும் : கவிஞர் முத்துலிங்கம்
தமிழ் இலக்கியத் தொடரடைவுகள் : வாசி
தமிழ் இலக்கியக் கலை நூல்கள் : அவினாசி முருகேசன்
உலகறியச் செய்வோம் : ப.சேரலாதன்
கற்றணைத்து ஊறும் அறிவு : பாரதிபாலன்
வாசிக்கும் பழக்கமும் நேசிக்கும் வழக்கமும் : உதயை மு வீரையன்
சுதந்திரப் போராட்டத்தில் நூலகத்தின் பங்கு 
உறுதிமொழி எடுக்கும் தருணம் : இடைமருதூர் கி.மஞ்சுளா
நூலகமும் மாணவரும் : சி.சரவணன்

மேலும் புத்தக உலகம், மின்னணு உலகம், நவீன நூலகம், தேசிய டிஜிட்டல் நூலகம், ATM நூலகம், சிங்கப்பூரில் பேருந்து நிறுத்தத்தில் நூலகம், உலகப் புத்தகத் தினக் கொண்டாட்டத்தின் பின்னணி ஆகிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற அரிய மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளங்களின் முகவரிகளும் தரப்பட்டுள்ளன.

கட்டுரைகளின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் விவாதிக்கும் பொருண்மைகளை அறியமுடிகிறது. வாசிப்பு நிலையில் அகராதி, இலக்கியம், வரலாறு, இந்திய விடுதலை போன்ற  பல்துறைகளோடு தொடர்புடைய வாசிப்பு சார்ந்த இடத்தினையும் முன்னேற்றத்தினையும் இக்கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. பல ஆசிரியர்களின் கட்டுரைகளை ஒரே சமயத்தில் படிக்கும்போது பற்பல புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. தொகுப்பாசிரியர் அரிதின் முயன்று கட்டுரைகளை வாசகர்களின் நலனுக்காகத் தெரிவு செய்து ஒன்றுசேர்த்துத் தந்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. 

புத்தகங்கள் மூலமாக நம்மை புது யுகத்திற்கு அழைத்துச் செல்கின்ற நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டுவோம். நமக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், வாசிப்பின் மீது ஆர்வத்தினை உண்டாக்கவும் அவர் எழுதியுள்ள இந்நூலை வாசிப்போம். 
11 மார்ச் 2018இல் நூலாசிரியர் எங்கள் இல்லத்தில் சந்தித்து, பௌத்த ஆய்விற்காகவும் களப்பணிக்காகவும், விக்கிபீடியாவிற்காகவும் பாராட்டியபோது

நூல் : புத்தகமும் புதுயுகமும் 
ஆசிரியர் : முனைவர் ச.அ.சம்பத்குமார் (9443677943)
பதிப்பகம் : வெங்கடேஷ் பதிப்பகம், OA2 சென்னை சாலை, வேதபவனம் தெரு, கும்பகோணம் 612 002
ஆண்டு : 2017
விலை : ரூ.50   

18 comments:

  1. நல்ல புத்தகம் என்று தெரிகிறது.

    ReplyDelete
  2. சிறிய விலையில் நிறைய தகவல்கள் போல் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. NALLA NOOL ARIMUGATHIRKU NANDRI .PAARATTUKKAL

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மிகச்சிறந்த புத்தகம் மிகச்சிறந்த பேராசிரியரால்
    விமரிசிக்கப்பட்டிருக்கிறது.
    வாழ்வில் சாதிக்கவேண்டும் என்ற தீவிர
    ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு புத்தகத்தை வெகு சிறந்த முறையில் அறிமுகப்படுத்தி சிறப்பான விமர்சனமும் தந்து உள்ளீர்கள். உங்கள் விமர்சனங்களை படிக்கும் போது புத்தகத்தை படிக்கும் ஆவல் எழுகிறது.
    நல்ல நூலை அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நல்ல கட்டுரைகளின் தொகுப்பு பற்றிய நூலறிமுகம் சிறப்பு. இது போன்ற நூலறிமுகம் என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனளிக்கும்

    ReplyDelete
  8. நல்ல நூல் விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நற்முத்துக்கள் அனைத்தும் ஒரே நூலில் படித்து பயன்பெற நல்ல வாய்ப்பு.

    ReplyDelete
  11. நல்ல புத்தகத்ததை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. அருமையான நூலறிமுகம்
    தொடருவோம்

    ReplyDelete
  13. நுாலைப் படிக்கும் ஆவல் எழுகிறது. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  14. சுயநலம் இன்றி நம் தாய்மொழிக்குத் தொண்டு செய்யும் நல்லோர் சம்பத்குமார் மற்றும் தங்களைப் போன்றவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  15. நல்ல கட்டுரைகளின் தொகுப்பு நூல் அறிமுகம் அதுவும் விலை குறைவு மதிப்பு அதிகமான நூல் !!
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா

    கீதா

    ReplyDelete
  16. முனைவர் சம்பத்குமார் நூலாசிரியர் (tamilancomputers17@gmail.com மூலமாக): வணக்கம். எனது புத்தகமும் புதுயுகமும் என்ற நூலை திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளீர். மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி. நான் முன்பு எழுதிய கும்பகோணம் சிவகுருநாதன் நூலகம் என்ற வரலாற்று நூலை நினைவுகூர்ந்து பதிவைத் துவக்கிய விதம் அருமையாக உள்ளது. "நூல் வாசிப்பு தொடர்பானவற்றுக்கு முக்கியத்துவம் தந்து ஒரே இடத்தில் இவ்வித கட்டுரைகள் அமையவேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூலைப் படைத்துள்ளார்" என்ற எனது நோக்கத்தை தாங்கள் நன்கு புரிந்து கொண்டு அதனை பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வாசகராகவும், பின்பு விமர்சகராகவும் இருந்து திறனாய்வு செய்துள்ளீர்கள். நூலாசிரியரின் நோக்கம் நிறைவேறியதை உணர்ந்து மகிழ்வுறுகிறேன்.
    புத்தகங்கள் மூலமாக வாசகர்களை புது யுகத்திற்கு அழைத்துச்செல்கின்ற நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும். வாசிப்பின்மீது அனைவருக்கும் ஆர்வம் உண்டாக்கவேண்டும் என்ற நல்லநோக்கத்தை - நூலின் செய்தியை - எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இதன்மூலமாக சுமார் 60 பேருக்கும் அதிகமாக தங்கள் விமர்சனமும் எனது நூலின் செய்தியும் சென்றடைந்துள்ளது. தங்கள் நூல் திறனாய்வு என்னைப் போன்ற நூலாசிரியருக்கு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது. இதனை நிரூபிக்கும் விதமாக பலர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நூல் வாங்கி படித்திட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
    தாங்கள் திறனாய்வு செய்து நூல் உலகிற்கு வெளிப்படுத்தியமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete