முகப்பு

23 June 2018

பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018

1999இல் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது "பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் பெறும் காட்சியைக் காணும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. அது 15 ஜுன் 2018 அன்று நிறைவேறியது. 

முத்துப்பந்தல் விழாவோடு தொடர்புடைய திருமேற்றளிகை மற்றும் திருச்சத்திமுற்றம் கோயில்களுக்கு முன்னர் பலமுறை சென்றபோதிலும் இப்போது திருச்சத்திமுற்றம் சென்று பின்னர் பட்டீஸ்வரம் சென்றோம். வைகாசி பிரம்மோற்சவ விழாவின்போது இங்கு கீழ்க்கண்ட நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதை அறிந்தோம். 
* திருமுலைப்பால் அளிக்கும் விழா
* ரிஷப வாகனத்தில் வீதியுலா
* முத்துக்கொண்டை,முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து வீதியுலா
* முத்துத் திருஓடத்தில் திருஞானசம்பந்தர் வீதியுலா
* முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் விழா
* முத்துப்பந்தலில் வந்து இறைவனை தரிசிக்கும் விழா

விழா நாளன்று காலை முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவதைக் காண ஆவலோடு இருந்தபோதிலும் மதியவாக்கில்தான் பட்டீஸ்வரம் சென்றடைய முடிந்தது. திருமடாலயத்திலிருந்து பல்லக்கில் ஞானசம்பந்தப்பெருமான் திருமேற்றளிகை செல்கிறார். அங்கிருந்து திருச்சத்திமுத்தம் வந்தடைகின்றார். அங்கிருந்து கிளம்பி வரும்போது இறைவன் தருகின்ற முத்துப்பந்தலில் வந்து பட்டீஸ்வரர் ஆன தேனுபுரீஸ்வரரை வழிபடுகிறார். 

ஞானசம்பந்தப்பெருமான் பட்டீஸ்வரரை நோக்கி மேள தாளங்கள் முழங்க, பக்திப்பாடல்கள் பாடப்பெற, இசைக்கருவிகள் இசைக்கப்பெற, பூதகணங்கள் தாங்கிவருகின்றமுத்துப்பல்லக்கில் வரும் காட்சியைக் காண பல மணி நேரமாக பக்தர்கள் ராஜகோபுரத்தின் வாயிலில் காத்திருப்பதைக் காண முடிந்தது. நாங்களும் அவரைக் காணக் காத்திருந்தோம்.  

இங்கிருந்துகொண்டே நாம் ஞானசம்பந்தப்பெருமான் வந்ததை, சேக்கிழார் பாடிய காலம் நோக்கிச்சென்று பார்ப்போமா?
பட்டீச்சரப்பதியை ஞானசம்பந்தப்பெருமான் நெருங்கும்போது வெப்பத்தை மிகுதியாய்த் தருகின்ற முதுவேனில் வெம்மையாக இருக்கிறது. இப்பதியில் தான் பெறற்கரிய பேற்றினை அவர் பெறுகின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அடியார்களுடன் ஞானசம்பந்தப்பெருமான் நடந்துவரும்போது இருக்கும் வெப்பத்தைக் காண விரும்பிய பரம்பொருள், அவருக்கு முத்துப்பந்தரை அளிக்கிறார். பிறர் கண்ணுக்குத் தெரியாதபடி முத்துப்பந்தரைப் பூதங்கள் தாங்கிப்பிடிக்கின்றன. பந்தரைப் பிடித்துக்கொண்டே ஒரு பூதம், இது பட்டீசர் திருவருள் என்றது. அதைக் கண்ட ஞானம்பந்தப்பெருமான் புளகாங்கிதமடைந்து நிலத்தில் விழுந்து வணங்கினார். இதனைச் சேக்கிழார் தம் காப்பியத்துள் மிகவும் அழகாக வடிக்கின்றார்.

"அவ்வுரையும் மணிமுத்தின் பந்தரும்ஆ காயம்எழச்
செவ்வியமெய்ஞ் ஞானமுணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன் மேதினியின் மிசைத்தாழ்ந்தார்" (பாடல் எண்.2291)

தொண்டர் கூட்டமானது ஆரவாரம் செய்யவும், மறைகளின் பேரொலி எட்டு திசைகளிலும் நிறைந்து ஒலிக்கவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப்பந்தரின் நிழலானது தம்முடியின்மீது நிழல் பரப்பிப் பொருந்தப் பெறுவதால் பொன்னம்பலத்தில் கூத்தபபிரானின் தூக்கிய திருவடி நிழலில் அமர்ந்திருத்தலைப் போல அமர்ந்திருந்ததாக வருணிக்கிறார் சேக்கிழார். அச்சமயத்தில் இனிய மொழியுடைய தமிழ்மறைத் தலைவராக பிள்ளையார்மே தேவர்கள் பொழிந்த மந்தாரம் போன்ற தெய்வ மரங்களின் மலர்கள் முத்துப்பந்தரை பூம்பந்தராக்கிவிட்டதாக உவகை கொள்கிறார்.  


ஞானசம்பந்தப்பெருமான் அன்று வந்ததை சேக்கிழார் பெருமான் கூறியதை இன்று கண்டோம். தொண்டர் கூட்டமானது ஆரவாரம் செய்யவும், மறைகளின் பேரொலி எட்டு திசைகளிலும் முழங்கவும் ஞானசம்பந்தப்பெருமான் பல்லக்கில் பட்டீசர் கோயிலின் ராஜகோபுரத்தின் முன்பாக வந்தார்.



பூதகணங்கள் தாங்க முத்துப்பல்லக்கில் ராஜகோபுர நுழைவாயிலின் வழியாக, நந்தி மண்டபத்தையும், கொடி மரத்தையும் கடந்து கோயிலுக்கு உள்ளே வந்த ஞானசம்பந்தப்பெருமான் அங்கிருந்து இறங்கி பட்டீசரைக் காண உள்ளே செல்கிறார். பல்லக்கில் வந்த பெருமானை இப்போது பக்தர்கள் தூக்கிச் செல்கின்றனர். 


அவர் கோயிலுக்குள் நுழையும்போது இரு புறமும் தன்னை மறந்து தென்னாடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பக்தர்களின் குரல் விண்ணைப் பிளக்கின்றது. ஞானசம்பந்தரை வரவேற்றுக்கொண்டே முழுமுதற்பெருமானை வாயாறத் துதிக்கின்றார்கள்.  








நன்றி:
ஞானசம்பந்தப்பெருமானைக் காணச்சென்றபோது உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, என் இளைய மகன் திரு சிவகுரு.
துணை நின்றவை:
பா.ஜம்புலிங்கம், பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர், பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர், பதிப்பாசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன், வெளியீடு நவகோடி நாயகி ஸ்ரீதுர்காம்பிகை அறக்கட்டளை, சென்னை 600 102, 1999, பக்.36-38






விழா சென்றுவந்த பின் விக்கிபீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரை

20 comments:

  1. காணாத இடமெல்லாம் கண்டேன் இறையருள் நல்கட்டும் எல்லோருக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா வாழ்க நலம்

    ReplyDelete
  2. தங்கள் பதிவினூடாக பல தகவல் படிக்கின்றேன்.
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அழகிய தரிசனக்காட்சிகள் முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நான் மிஸ் செய்ததை இங்கு பார்த்து விட்டேன். ஜூன் பதினைந்து மதியம் நானும் பட்டீஸ்வ்ரம் கோவில் வந்தேன். ஆனால் நிறைய கோவில்களை தேர்சனம் செய்ய விரைந்தவேகத்தில் சீக்கிரமே திரும்பி விட்டேன். முத்துப்பந்தல் போஸ்டர் வழியெங்கும் கண்டேன்.

    ReplyDelete
  5. மிக அழகு..படங்கள்...

    பல தகவல்களையும் அறிந்துக் கொண்டேன்...


    நன்றி ஐயா
    ...

    ReplyDelete
  6. படங்களுடன் பகிர்வு அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  7. இனிய தரிசனம்..
    அழகிய படங்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  8. மாயவரத்தில் இருக்கும் போது காணவேண்டும் என்று நினைத்த விழா.
    இன்று உங்கள் தளத்தில் நேரில் தரிசனம் செய்த உணர்வு அடைந்தேன்.
    அருமையான தரிசனம் செய்து வைத்தீர்கள் நன்றி.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். முத்துப் பல்லக்கில் திருஞானசம்பந்தர் அழகிய உலாவாக. வந்ததை விளக்கி கூறி, எங்களையும் பட்டீசஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள். தங்கள் பதிவின் மூலம் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நிறைய விபரஙகள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. சிறப்பான விழா பற்றிய சிறப்பான பகிர்வு. உங்கள் மூலம் நாங்களும் விழா கண்டோம். நன்றி ஐயா.

    ReplyDelete
  11. நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு . படங்கள் அருமை ஐயா.

    ReplyDelete
  12. அருமை ஐயா

    ReplyDelete
  13. தமிழ் நட்டுக் கோவில் திருவிழாக்கள் கண்டதே சொற்பம் பட்டிசுவரம் சென்றதில்லை பஹிவின் மூலம் அறிந்தேன் நன்றி

    ReplyDelete
  14. பட்டீஸ்வரம் எழிலார்ந்த தேனுபுரிஸ்வரர் கோயிலும், கோபுரபும்,உற்சவர்களும், பக்தர்களும் மனம் கவர்ந்தன..

    ReplyDelete
  15. ஆளுடைய பிள்ளையின் அழகிய உலா அருமை சார் :)

    ReplyDelete
  16. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் 15 ஜுன் 2018 அன்று நடைபெற்ற ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் பெறும் விழா பற்றிய பதிவு சிறப்பு. நேரில்கண்ட நிறைவு. அபூர்வமான பதிவு.

    ReplyDelete
  17. அருமை ஐயா
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
  18. படங்கள் அருமை. உங்களால் நாங்களும் முத்துப் பந்தல் விழாவினை கண்டோம்.
    இங்குதானே திருஞான சம்பந்தர் பக்தர்கள் புடை சூழ வரும் அழகை காண விரும்பிய சிவபெருமான் நந்தியம் பெருமானை சற்று நகர்ந்து இருக்கச் சொன்னதாகவும், அதனால் நந்தி சிவா பெருமானுக்கு நேரே இல்லாமல் சற்று நகர்ந்து இருப்பார்?

    ReplyDelete
  19. அழகிய உலா. இதுவரை பார்த்திராத நிகழ்வைத் தங்கள் மூலம் கண்டோம். படங்கள் அழகு.

    ReplyDelete