முகப்பு

21 July 2018

தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு

தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சாவூரில் உள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய புதிய செய்திகளையும், புகைப்படங்களையும் கொண்ட அந்நூலை வாசிக்க அழைக்கிறேன். 


நாயக்கர் காலம், மராட்டியர் காலம், அண்மைக்காலம் என்ற வகையில் தஞ்சாவூரில் காணப்படுகின்ற அனுமார் கோயில்களுக்கு நேரில் சென்று விவரங்களைத் திரட்டி, ஆங்காங்கே புகைப்படங்களையும் தந்துள்ளார் நூலாசிரியர். 

நாயக்கர் காலக் கோயில்களாக கோட்டை சஞ்சீவிராயன் கோயில், ஒப்பல் நாயக்கர் பஃக் ஆஞ்சநேயர் கோயில், குருகுல ஆஞ்சநேயர் கோயில், வேட்டை மார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், வல்லம் சஞ்சீவிராயர் கோயில்களையும், மராட்டியர் காலக் கோயில்களாக வீர பிரதாப ஆஞ்சநேயர் கோயில் (மூலை ஆஞ்சநேயர்), நாலு கால மண்டப ஆஞ்சநேயர் கோயில், சூடாம ஆஞ்சநேயர் கோயில் (நாணயக்கார செட்டித்தெரு) உள்ளிட்ட கோயில்களையும்,  மராட்டியர் காலத்திற்குப் பின் வந்த கோயில்களாக வடவாற்றங்கரை அனுமார் கோயில், கொண்டிராஜபாளையம் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களையும் பற்றி விவாதிக்கிறார்.

திரு ஜே.எம்.சோமசுந்தரம் பிள்ளை எழுதிய தஞ்சையிலுள்ள பெரிய கோயில் ஆங்கில நூலில் சுட்டப்பட்டுள்ள 64 கோயில்களில் ஏழு அனுமார் கோயில்கள் உள்ளதையும், அரண்மனை தேவஸ்தானம் தந்துள்ள 88 கோயில்கள் பட்டியலில் ஒன்பது அனுமார் கோயில்கள் உள்ளதையும் குறிப்பிடுகிறார். 

காலப்போக்கில் இடம் பெயர்ந்த அனுமார் பற்றியும், சில இடங்களில் திருப்பணி நடைபெறுவதால் எழுத இயலா நிலை பற்றியும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஊக அடிப்படையில் தன் கருத்துகளை ஆங்காங்கே பதிந்துள்ளார். 

தஞ்சாவூரிலுள்ள அனுமார் கோயில்களைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த நூலாக இந்நூல் அமைந்துள்ளது. நூலை கையில் வைத்துக்கொண்டு அந்தந்த கோயிலுக்குச் செல்லுமளவிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. 

அனுமாருக்கென தனிக்கோயில்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தாலும் தஞ்சாவூரில் சற்று அதிகமெனில் மிகையாகாது என்றும், அவை பழமை வாய்ந்ததாகவும் உள்ளதால் முக்கியத்துவம் அடைவதாகவும், அதனால் தஞ்சாவூரிலுள்ள அனுமன் தனிக்கோயில்களைத் தொகுத்து அளிக்க முன்வந்ததாக முன்னுரையில் கூறுகிறார். 

தஞ்சாவூரிலுள்ள தனியாக உள்ள அனுமார் கோயில்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு சிறந்த ஆவணமாக உள்ள இந்நூலை வாசிப்போம். 

நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றி பேசும் அரிய வாய்ப்பினை நூலாசிரியர் தந்ததற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழா நிகழ்வுப் படங்களை அவர் அண்மையில் அனுப்பியிருந்தார். அவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இந்நூலைப் பற்றி, நூல் வெளியான நாளில் விக்கிபீடியாவில் தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் (நூல்) என்ற தலைப்பில் பதிந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழா 







நூல் : தஞ்சாவூர் அனுமார் கோயில்கள்
ஆசிரியர்: ஆவணம் கோபாலன் (திரு கோபாலகிருஷ்ணன் 9958727846)
வெளியீடு : வாயுசுதா பப்ளிகேஷன், தில்லி 110 092
மின்னஞ்சல் : vaayusutha.publications@gmail.com
இணையதளம் : http://publications.vayusutha.in

நன்றி : விழா நிகழ்வு புகைப்படங்களைப் பெற உதவிய தஞ்சாவூர் திரு ராமச்சந்திரன் கோஸ்வாமி 

17 comments:

  1. அடடே... தஞ்சையில்தான் ஆஞ்சிக்கு ஆலயம் அதிகமா? நான் சிறுவனாயிருக்கும்போது தஞ்சி மருத்துவக்கல்லூரிக் குடியிருப்பில் வாசித்தோம். அங்கு ஈஸ்வரி நகர் ஸ்டாப்புக்கு முன்னதாக ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் உண்டு. அருகிலேயே ஒரு மசூதியும் இருக்கும்.

    ReplyDelete
  2. Replies
    1. *வாசித்தோம்.

      வசித்தோம்.

      :((

      Delete
    2. ஹா ஹா ஹா எதுக்கு டங்கு ஸ்லிப் ஆகுது இப்போ ஹா ஹா ஹா:)

      Delete
  3. நூல் அறிமுகம் நன்று
    ஆசிரியர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    தஞ்சையில் ஆஞ்சநேயர் கோவில் அதிகமாக இருப்பதை தங்கள் பதிவினால், தெரிந்து கொண்டேன். அது குறித்த நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. பயனுள்ள நூல் அறிமுகம். அந்நூலை வடித்த ஆசிரியருக்கும், எங்களுக்கு அதை பகிர்ந்த தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஐயா... தொடரட்டும் தங்களின் சிறப்பான பயணம்...

    ReplyDelete
  6. ஆவணம் கோபாலன் அவர்களை நான் அறிவேன். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் பேசுவது ஹனுமன் ஆலயங்கள் பற்றியதாகவே இருக்கும். நல்ல மனிதர்.

    ReplyDelete
  7. தஞ்சையில் அனுமன் ஆலயங்கள் பற்றி தெரிந்து கொண்டோம்.
    ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் , உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நூல் அறிமுகம் நன்று.. வாழ்த்துக்கள் நூலாசிரியருக்கு.

    அங்கு அதிகம் ஆஞ்சனேயர் கோயில்கள் இருக்கும்போல இருக்கே.. எனக்கு சின்ன வயதில் ஆஞ்சனேயர் பற்றி தெரியாது[கடவுளாக நினைத்ததில்லை].. இப்போ சில வருடங்களாகத்தான் நம்பிக்கை வந்திருக்கு.

    ReplyDelete
  9. "தஞ்சாவூரிலுள்ள தனியாக உள்ள அனுமார் கோயில்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு சிறந்த ஆவணமாக உள்ள இந்நூலை வாசிப்போம்." என்பதே சிறப்பு.

    ReplyDelete
  10. ஆர்வத்துடன் வாசித்தேன். பழைய தஞ்சை நினைவுகள் மனசில் படிந்தன. தலைநகரிலிருந்து நூல் வெளியிடப்பட்டிருப்பது இன்னொரு ஆச்சரியம். நூலாசிரியருக்கும் {ஏதோ ஏர்லைன் சம்பந்தப்பட்ட மாதிரி பெயர் கொண்டிருக்கும்} பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஐயா

    நூலாசிரியருக்கும்...எங்களுக்கு அறிமுகம் செய்த தங்களுக்கும்...

    ReplyDelete
  12. தஞ்சை அனுமன் வரலாறு அறிந்தோம்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மிகவும் உதவியாக இருக்கும் பதிவு. வாழ்த்துக்கள் பெரியப்பா ☺️

    ReplyDelete
  15. தஞ்சாவூரில்தான் ஆஞ்சநேயர் கோவில்கள் அதிகமா? இது கேள்விப்படாத விஷயம். அது குறித்து புத்தகம் வெளியிட்டோருக்கும், அந்த நூலை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete