முகப்பு

18 August 2018

மண் வாசனை : ஜ. பாரத்

250 ஆவது பதிவு 
வலைப்பூவினைத் தொடர்ந்து வாசித்தும், கருத்து கூறியும் ஆதரவு தருகின்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் மகன் திரு ஜ.பாரத் (99620645436) எழுதியுள்ள மண் வாசனை நூல் 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாகும். அவ்வப்போது வலைப்பூவில் எழுதி வந்ததை நூலாகக் கொணரும்படி அறிவுறுத்தியபோது மேலும் சிலவற்றைச் சேர்த்து நூல் வடிவமாகக் கொண்டு வந்துள்ளார்.


“இவ்வளவு சின்ன வயதில் சமூகத்தின்மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட இந்த இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இருபது தலைப்புகளில் சிறுகதைகளாக அமைந்திருந்தாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நிறைய கதைகள் வலியுறுத்திக் காட்டுகின்றன. இன்று அவற்றை எல்லாம் இழந்து நிற்கின்றோம்.” என்று திரு மணி. மாறன் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.  


எங்கள் இளைய மகன் சிவகுருவிடம் நூலைப் பெறல்
எங்கள் இளைய மகன் சிவகுருவிடம் நூலைப் பெறல்
பணமே உலகம் என்ற அடிப்படையில் வாழ்ந்துகொண்டு அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், நெருக்கத்தையும், குடும்பப் பிணைப்பையும், நட்பின் ஆழத்தையும் விட்டு பலர் விலகிச்செல்கின்றனர். கூட்டுக்குடும்பச் சிதைவு, தனிக்குடித்தன அதிகரிப்பு, தான் என்ற குணம் மேலோங்கி நிற்றல் போன்ற குணங்கள் இக்காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. பிழைப்பினைத் தேடி வெளியே செல்லும்போதுதான் வாழ்க்கையின் உண்மையான பரிமாணங்களை உணர முடியும்.


இயல்பான வாழ்க்கையை விடுத்து, நடிப்பு வாழ்க்கை எங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உறவிலிருந்தும், நட்பிலிருந்தும் அந்நியப்பட்டு தமக்காகவே ஒரு எல்லைக்கோடு அமைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வோர் பலரை நம்மில் காணமுடிகிறது. அடிப்படைத்தேவைக்கு அப்பால் பொருள்களை வாங்க ஆரம்பித்தல், தன் நிலையை மேம்படுத்திக்கொள்வதாக நினைத்து ஏமாற்றிக்கொள்ளல், அண்டை வீட்டாரை ஒப்பு நோக்கி தம்மை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு தன் நிலையிலிருந்து கீழே வர ஆரம்பித்தல், பெரியவர்களிடம் ஆலோசனை கேட்காமல் உடனடியாக முடிவெடுத்து பின் வருந்துதல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தன் கருத்தையே நிலைநிறுத்த வைத்தல், பிறருடைய அறிவுரைகளை கடைபிடிக்கத் தயங்குதல் போன்றவை பலருடைய வாழ்க்கையை திசை திருப்பிவிடுகின்றன.
பதிப்பாளர் காட்சிப்பேழையில் மண் வாசனை

இவ்வாறாக நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் அடையாளங்களை இனங்கண்டு அவற்றின் முக்கியமான கூறுகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் அடிப்படையில் சிறுகதைகளை வடித்துள்ள விதம் பாராட்டத்தக்கது. உறவுகள் பிரியும்போது மனதில் ஆழமாகப் பதிகின்ற வேதனை, பிரிந்த உறவுகள் சந்திக்கும்போது ஏற்படுகின்ற எல்லையற்ற மகிழ்ச்சி, தொலைத்துவிட்ட வாழ்க்கையை மனதில் கொண்டுவந்து உணரும்போது கிடைக்கின்ற அதீத சுகம் போன்றவற்றை அனுபவித்தவர்கள்தான் உணரமுடியும். அவற்றை சாதாரண சொற்களால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் அது போன்ற நிகழ்வுகளை நம் கண் முன் கொண்டு வந்து நம்மை அதில் லயிக்க வைத்த நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. அத்துடன் சமூகப்பிரக்ஞையை உணர்த்துகின்ற கதைகளும், வரலாற்று நிகழ்வினை கற்பனையாகக் கொண்ட பதிவும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன்.
எங்கள் இல்ல நூலகத்தில் மண் வாசனை
நூல் தேவைக்குக் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்: ஜீவா படைப்பகம், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை 600 042, jeevapataippagam@gmail.com, 9994220250, 9841300250, ஜுன் 2018, ரூ.150

17 comments:

  1. உங்கள் மகன் திரு ஜ. பாரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் நூலகம் அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. தங்கள் மகனுக்கு நல் வாழ்த்துகள் ஐயா
    தங்களால் தங்களின் குடும்பமே எழுத்தில் ஆர்வமுற்று செயல்படுவதைக் காணும் பொழுது மனம் மகிழ்கிறது
    மீண்டும் வாழ்த்துகள்
    (எழுத்துப் பிழை காரணமாக முந்தையக் கருத்துரையினை நீக்கம் செய்துவிட்டேன்)

    ReplyDelete
  3. மண் வாசனையோடு, தங்களின் குடும்ப வாசனையும், தொடரட்டும்

    ReplyDelete
  4. மிகவும் மகிழ்ச்சி ஐயா... தங்களின் மகனுக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. மண் வாசனை - ஆஹா... மகிழ்ச்சி. உங்கள் மகனுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    உங்கள் பக்கத்தில் 250-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    ReplyDelete
  6. எமது மனம் நிறைந்த வாழ்த்துகள் குடும்பத்தினர் அனைவருமே எழுத்துலகில் இருப்பது அபூர்வமான விசயம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. இருநூற்றைம்பதாவது பதிவு!...

    மேலும் பலநூறு பதிவுகளை வழங்கிட வேண்டும்..
    மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. மண் வாசனையோடு மற்றும் பல நூல்களை வெளியிட
    அன்பின் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா நண்பரே!
    பாரத் வாழ்க அவர்தம் படைப்பாற்றல் வளர்க.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    தங்கள் மகனின் "மண் வாசனை" புத்தக வெளியீடு குறித்து மிக்க மகிழ்ச்சி. அவருடைய எழுத்தாற்றல் மென்மேலும் வளர்ந்து நிறைய புத்தகங்களை எழுதி வெளியிட வாழ்த்துகிறேன். தங்களின் நூலகமும் மிகவும் அழகாக உள்ளது.

    தங்களின் 250 தாவது பதிவுக்கும் மனமுவந்த நல்வாழ்த்துகள்.மேலும் மேலும் தாங்கள் பதிவுகளை தொகுத்து வழங்கி எண்ணிக்கை பன்மடங்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். புத்தக வெளியீடு குறித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. உங்கள் மகன் திரு ஜ. பாரத்துக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

    250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  12. நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் !
    தங்கள் மகன் மேலும் சிறக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. தங்களின் மகனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் அய்யா. எழுத்துலகில் மண்வாசனை பரவிட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  15. மிக்க மகிழ்ச்சி. பாரத்துக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  16. நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. எந்தவலைத்தளத்தில் எழுதி வந்தார் என்று தெரிந்தால் சில கதைகளையாவதுவாசிக்கலாம் இப்போதெல்லாம் புத்தக வாசிப்பில்கவனம் செல்வதில்லை உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete