முகப்பு

29 September 2018

காமராஜ் : நியூயார்க் டைம்ஸ், 3 அக்டோபர் 1975

பெருந்தலைவர் காமராஜர் இயற்கையெய்திய செய்தியை, 3 அக்டோபர் 1975 நாளிட்ட நியூயார்க் டைம்ஸ் (கஸ்தூரி ரங்கன்) இதழில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆவணப்பிரிவில் இவ்வாறான, முந்தைய ஆண்டுகளுக்கான  செய்திகள் உள்ளன. அவ்விதழில் 38ஆம் பக்கம் அச்செய்தி வெளியானதாகக் குறிப்பில் காணமுடிந்தது. காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2இல் என்ற நிலையில் அச்செய்தியின் மொழிபெயர்ப்பினைக் காண்போம். 



நியூடெல்லி, அக்டோபர், 2- தென்னிந்தியாவின் மிகச்சிறந்த, மக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் சக்தி கொண்ட, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி பிரதமர்களாக ஆட்சிக்கட்டிலில் அமரக் காரணமாக இருந்த  குமாரசாமி காமராஜ் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 72.

காந்தியின் அடியொட்டி வாழ்ந்தவரும், முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நண்பருமான அவர் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் களத்தில் அதன் சிக்கலான காலங்களில் இருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போரில் இறங்கிய வகையிலும், சுதந்திர இந்தியாவை நிர்ணயித்தவகையிலும் பெரும்பங்காற்றியவர். 

திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த அவர் தன் முழு வாழ்க்கையையும் காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணித்தார். தேசிய அளவில் அக்கட்சியின் தூண்களில் ஒருவராக விளங்கினார். பிற்காலத்தில் அக்கட்சி உடையவும் அவர் காரணமாக இருந்தார். இந்திரா காந்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெருமக்களில் அவரும் ஒருவர்.

தென் மாவட்டமான ராமநாதபுரத்திலுள்ள விருதுநகரில் 1903இல் பிறந்தார்.
கீழ்நிலையிலுள்ள நாடார் இனத்தில் பிறந்த காமராஜர் சிறிதளவு காலமே முறைக்கல்வி பயின்றார். தேங்காய் வியாபாரியான அவருடைய தந்தையார் அவருக்கு ஆறு வயதாகியிருந்தபோது காலமானார்.
1921இல்  தன்னுடைய ஊருக்கு அருகிலுள்ள மதுரைக்கு காந்தி வந்தபோது அவருக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். காந்தியின் எளிய, பயமற்ற, உறுதிக் குணங்கள் அவரை ஈர்த்தன. அவற்றையே தம் வாழ்வின் கொள்கைகளாகக்கொண்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினரானார்.
கட்சிக்கூட்டங்களுக்கு விவசாயிகளை அழைக்கின்ற டிரம்மர் பையனாக தன் பணியைத் தொடங்கிய அவர் சென்னையின் மிகச்சிறந்த தலைவரான சத்தியமூர்த்தியின் நம்பிக்கைக்கு உரியவனார். மெல்லிய தோலினைக் கொண்ட பிராமணரும், கருந்தோலைக்கொண்ட கடைநிலை இனத்தவரும் இணைந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தியும், வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டும் சென்னை மாநிலம் முழுவதும் சுற்றி வந்தனர். அதனால் பல முறை இருவரும் இணைந்தே சிறை சென்றனர். எட்டு வருட காலத்தில் காமராஜர் ஆறு முறை சிறைக்குச் சென்றார்.
சென்னை மாநிலத்திலிருந்த அடித்தட்டு இனத்தவருக்குத் தலைவர் என்ற பெயரைப் பெற்றதோடு, பிராமணர்களின் ஆதிக்கத்தைக் கண்டு கோபமுற்ற பிராமணரல்லாதோரிடையே செல்வாக்கினை உண்டாக்கினார்.  அவர்களுடைய ஆதரவுடன் காமராஜர் தென்னகத்தின் போட்டியில்லாத் தலைவரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியை தோற்கடித்தார். 
1954இல் ராஜகோபாலாச்சாரிக்குப் பின்னர் காமராஜர் முதலமைச்சரானார். இருந்தாலும் 1963இல் தன் பதவியைத் துறந்து திராவிட இயக்கத்திற்கு எதிராக கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்த உத்தியைப் பயன்படுத்திக்கொண்ட பிரதமர் நேரு தேவையற்ற காங்கிரஸ் கட்சிக்காரர்களை அதிகாரத்திலிருந்து நீக்கினார். இந்நிலையில் காமராஜர் திட்டத்தின் காரணமாக காமராஜர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார். 1964இல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.
நேருவின் மரணத்திற்குப் பிறகு, அவருக்குப் பின்னால் யார் என்று முடிவெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.  சக்திவாய்ந்த வலதுசாரி எதிர்க்கட்சித்தலைவரான மொரார்ஜி தேசாயின் திட்டங்களை சமயோசிதமாக முறியடித்து சாஸ்திரியை பிரதமராக்கினார்.  
ஜனவரி 1966இல் சாஸ்திரி இறந்தபோது இதே முறையை அவர் மறுபடியும்  கடைபிடித்தார். இந்திரா காந்தி காமராஜரின் வேட்பாளரானார். ஆனால் அவர் மொரார்ஜிக்கு எதிராக நிறுத்தப்பட்டார். இந்த முறை சூழலை எதிர்கொள்வதில் மொரார்ஜி உறுதியாக இருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் கட்சித்தலைமைக்கான போட்டியில் இந்திரா காந்தி மொரார்ஜியைத் தோற்கடிக்க காமராஜர் ஆதரவைத் திரட்ட முனைந்தார்.    
அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான திராவிட கட்சியினரின் ஆதரவோடு களமிறங்கிய, முன்பின் அறிமுகமில்லாத மாணவர் தலைவரிடம் தன் சொந்த ஊரில் பெருந்தோல்வியடைந்தார்.
அப்போது முதல் அவருடைய அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 1967இன் இறுதியில் காங்கிரசின் தலைமைப்பொறுப்பிலிருந்து இந்திரா காந்தியால் நீக்கப்பட்டார்.
1969இல் காங்கிரசின் மூத்த தலைவர்களைக்கொண்ட, இந்திரா காந்தியை ஆட்சியிலிருந்து நீக்க விரும்பிய,  சிண்டிகேட் காங்சிரசில் இணைந்தார். கட்சி உடைந்து பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் இந்திரா காந்திக்கான செல்வாக்கு அதிகரித்தது.  
பிற மூத்த தலைவர்களுடன் இணைந்த அப்பிரிவு காங்கிரஸ் (ஓ) என்றழைக்கப்பட்டது. அண்மைக்காலம் வரை தன் கட்சிக்காக தமிழ்நாட்டில் உழைத்தார். ஆளும் திராவிடக் கட்சியிலிருந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நம்பிக்கையில் இருந்தார். 

நன்றி : Kumaraswami Kamaraj Dead; Power Broker in Indian Politics, Kasturi Rangan, Oct 3, 1975, p.38, New York Times, Archives 
தமிழில் : பா.ஜம்புலிங்கம்

30 செப்டம்பர் 2018 அன்று மேம்படுத்தப்பட்டது. 

22 September 2018

திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

17 மார்ச் 2018 அன்று கோயில் உலா சென்றபோது திருநல்லூருக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திற்குக் கிழக்கில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை கோயில்களை உள்ளடக்கிய சப்தஸ்தானக் கோயில்களில் இக்கோயில் முதன்மைக்கோயிலாகும். சப்தஸ்தானம் என்றால் திருவையாறு தொடர்பான கோயில்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் இக்கோயில்களை முதன்மையாகக் கொண்டு பல சப்தஸ்தானக் கோயில்கள் இருப்பதை அறிந்தேன்.

காவிரியின் தென் கரையிலுள்ள இத்தலம் ஞானசம்பந்தராலும், அப்பராலும் பாடப்பட்ட பெருமையுடையதாகும். மூலவர் ஆண்டார், கல்யாணசுந்தரர், சௌந்தரநாயகர், பஞ்சவர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூருடைய நாயனார், சுந்தரநாதர் என்றும் இறைவி கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி, திருமலைசொக்கி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அழகிய மாடக்கோயில். கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. சப்தசாகரம் என்னும் இக்குளம் ஒவ்வொரு மாசி மகத்தின்போதும் சிறப்புற்று விளங்குவதை வைத்து, மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்பர். இக்குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்ததைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போனது.  குளத்திலிருந்து கோயிலைப் பார்க்கும்போது கண்ணைக்கவரும்  வகையில் உள்ளது.


.

ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து, பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து ஒரு கோபுரம் உள்ளது. 


வெளிச்சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி, விநாயகர், நடராசர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் 63 நாயன்மார்கள், கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பானலிங்கம், ஜுரஹரேஸ்வரர்,  ஜுரஹரேஸ்வரியைக் காணலாம்.

உயர்ந்த தளத்தில் மாடக்கோயிலாக உள்ள இக்கோயிலின் வலது புறம் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மூலவர் உள்ள கருவறைக்குச் செல்ல வேண்டும். மூலவரைப் பார்ப்பதற்கு முன்பாக சிவபுராணம் பாடிவிட்டு உள்ளே சென்றோம். 


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, கைலாய கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.  திருச்சுற்று மண்டத்தில் உமாமகேசுவரர், சங்கர நாராயணர், லிங்கோத்பவர், சுஹாசனர், நடராஜர், ரிஷபாரூடர் உள்ளிட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.  மூலவர் கல்யாணசுந்தரரேஸ்வரர் கட்டுமலை மீது, கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும், நந்தியும் உள்ளன. அருகே கணபதி உள்ளார். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். 


நன்றி : மாலை மலர்
மூலவர் சன்னதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்மன் சன்னதி, தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் பள்ளியறை உள்ளது.   



மூலவருக்குப் பின்புறம் இறைவனும் இறைவியும் உள்ளதை திருவீழிமிழலையிலும், வேதாரண்யத்திலும் பார்த்துள்ளோம். மன நிறைவான தரிசனத்திற்குப் பின்னர் அடுத்த கோயிலுக்குக் கிளம்பினோம்.



துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • மாலை மலர் தளம்

15 September 2018

தமிழ் அகராதியின் குற்றங்களும் குறைகளும் : திருத்தம் பொன். சரவணன்

தமிழ்ப்பண்பாட்டில் புதிய பார்வை என்ற இலக்குடன் திருத்தம் வலைதளத்தில் எழுதிவரும் திருத்தம் பொன்.சரவணன்  16 ஜுன் 2018 என்று எங்கள் இல்லம் வந்திருந்தார். அருப்புக்கோட்டையிலிருந்து என்னைச் சந்திக்க வந்த அவர் தன்னுடைய தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும் என்ற அவருடைய நூலை அன்பளிப்பாகத் தந்து தமிழ் மொழி, இலக்கியம், அகராதி, வரலாறு உள்ளிட்ட பல துறைகளைக் குறித்து உரையாடினார். 


தன்னுடைய உரையில் கீழ்க்கண்ட கருத்துகளை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.

  • இந்நூல் தமிழ் அகராதிகளுக்கு எதிரானதல்ல
  • அகராதியில் கூறப்பட்டுள்ள சில பொருள்கள் மீள் ஆய்வு செய்யப்படவேண்டும்
  • அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்களில் சில இலக்கியங்களில் பல இடங்களில் பொருந்தாத நிலையில் உள்ளன
  • புரிதல் தவறாகிப் போகும்பொழுது மக்களின் பேச்சும் எழுத்தும் தவறாகும்

தற்போது தமிழ் அகராதிகளில் காணப்படும் தவறுகளை அகராதிக்குற்றங்கள் என்றும், அகராதிக்குறைகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கும் அவர்  அவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தங்களை முன்மொழிவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

கூந்தல் என்ற சொல்லை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு கூறும்போது அவர் இலக்கியங்களில் இச்சொல் எந்தப்பொருளில் ஆளப்பட்டதோ அதே பொருளை அகராதிகள் இச்சொல்லுக்குக் குறிப்பிடவில்லை என்றும், நடைமுறை வழக்கிலம் இச்சொல்லை இலக்கிய வழக்கிற்கு மாறாகப் பயன்படுத்திவருகிறோம் என்றும் கூறுகிறார்.  நடைமுறைப் பேச்கூ வழக்கிலும், அகராதிகளிலும் தலை மயிர் குறிப்பாகப் பெண்களின் தலை மயிர் என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுவதாகவும், இலக்கிய வழக்குகளில் இச்சொல்லுக்கான பொருள் பெண்களின் கண் இமையாகும் என்றும் கூறுகிறார். (ப.6) இவ்வாறாக பல சொற்களை நாம் தவறான பொருள்களில் பயன்படுத்திவருகிறோம் என்பதைச் சான்றுகாட்டி விளக்குகிறார். 


குறிப்பிட்ட சில சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான தற்போதைய பொருளையும், புதிய பொருளையும் தருகிறார். அவர் தந்துள்ள புதிய பொருள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. (ப.10)

பசப்பு/பசலை : தோல் நிற மாற்றம், அழகுத்தேமல்  (அழுகை, கண்ணீர்)
மேனி : உடல்  (கண்ணிமை)
நுதல் : சொல், நெற்றி, புருவம், தலை  (கண்விழி, கண்ணிமை)
பாம்பு/அரவு : நச்சுயிரி  (மேகம்)
முலை : பெண்களின் மார்பகம்  (கண்ணிமை, கண்விழி)
கூந்தல் : பெண்களின் தலை மயிர்  (கண்ணிமை)
அறல் : கருமணல், நீர்  (சிப்பி, நத்தை)
அல்குல் : பெண்குறி, இடை  (நெற்றி)

குறிப்பிட்ட சொல்லுக்கான புதிய பொருளைப் பற்றி விவாதிக்கும்போது அச்சொல்லைப் பற்றிய சிறிய முன்னுரை, அந்த சொல்லின் வடிவங்கள், அதற்கு அகராதி தரும் பொருட்கள், தற்போதைய நடைமுறையில் வழங்கப்படும் பொருள், சொல்லின்  பயன்பாடு, புதிய பொருள், புதிய பொருளை நிறுவ முன்வைக்கப்படுகின்ற காரணிகள் என்ற வகையில் குறிப்பிடுகின்றார்.

இந்த நூலில் உள்ள சொல் மற்றும் பொருள் குறித்த ஒவ்வொரு கட்டுரையிலும் அச்சொற்களின் புதிய பொருட்களை உறுதிப்படுத்துவதற்கு ஏராளமான இலக்கிய ஆதாரங்களைத் தந்துள்ளார். அதனை மறுப்பவர்கள் தம் கருத்துகளை தகுந்த ஆதாரங்களோடு அனுப்பிவைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியுள்ள புதிய பொருள்கள் ஏற்புடையனவா என்பதை பிற ஆய்வாளர்களும், அறிஞர்களும் உறுதி செய்யவேண்டிய நிலை தற்போது உள்ளது. புதிய முயற்சியினை மேற்கொண்டுள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். மாற்றுக்கருத்து இருப்பின் அவருக்குத் தெரிவிப்போம்.

நூல் : தமிழ் அகராதிகளின் குற்றங்களும் குறைகளும்
ஆசிரியர் :  திருத்தம் பொன்.சரவணன் (அலைபேசி 7010558268)
முகவரி : சைபர்நெட் சேவை மையம், 34பி, புதுக்கடைத் தெரு, எஸ்.ஆர்.எஸ்.வளாகம், அருப்புக்கோட்டை 626 101 
பதிப்பு : 2016
விலை : ரூ.100

15 செப்டம்பர் 2018 காலை மேம்படுத்தப்பட்டது.

08 September 2018

அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018

ஆகஸ்டு 2018இல் அயலகச் செய்தியில் எக்ஸ்பிரஸ், நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளைக் காண்போம். இந்த மாதம் வெளியானவற்றில் பெரும்பாலானவை டெய்லி மெயிலில் வெளிவந்தவையாகும். இவற்றில் மாலினாங் என்ற கிராமம் பசுமையைக் காப்பதைப் பற்றிய செய்தியும், ஜபல்பூரில் இரண்டு அடி உயரமுள்ள பூசாரி தொடர்பான செய்தியும் இந்தியா தொடர்பானவையாகும். 

கடும் மழையின் காரணமாகவும், கட்டுமானப்பணிகளின் காரணமாகவும், சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சீனாவின் வட பகுதியில் சான்சியில் தாய் மாவட்டத்தில் (Dai County in Shanxi Province) பெய்த மழையின் காரணமாக சுவரின் பகுதி் இடிந்துள்ளது. சுற்றுலா அலுவலர்கள் அதனை சீர்செய்துகொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சீனா பல ஆண்டுகளாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமாக தடை விதித்திருந்தது. 1984இல் கிராமப்புறத்தைச் சார்ந்த பெற்றோர்களின் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதித்தது. சிறுபான்மையினத்தைப் பொறுத்தவரை இதற்கு விதிவிலக்கு இருந்தது. வயதானோர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதை அறிந்த சீன அரசு, ஒரே குழந்தையைக் கொண்டுள்ள பெற்றோர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த வரையறையை இரண்டாண்டு கழித்து, 1 ஜனவரி 2016 முதல் அனைவருக்கும் உயர்த்தியது. ஒரு குழந்தைக் கொள்கையை சீனா தளர்த்தி இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சீன அரசு அனுமதித்த போதிலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் விரும்பாததால் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருவதாக அரசு கூறுகிறது.

இந்தியாவின் பெரிய நகரங்களான டில்லி, மும்பை, கொல்கத்தா போன்றவை கழிவுகளின் பிரச்னையால் பொலிவு இழந்துகொண்டிருக்கும் நிலையில் வடகிழக்கு இந்தியாவிலுள்ள மாலினாங் (Mawlynnong) என்ற கிராமம் அழகான பசுமையினைக் கொண்டும், சுத்தமான பாரம்பரியத்தைக் கடைபிடித்தும் அனைவரையும் ஈர்த்துள்ளது. 2015இல் தன்னுடைய வானொலி உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த அழகான கிராமம் மற்றவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும் என்றும் இது நம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் பெருமையுடன் கூறினார். பல ஆண்டுகளாக இந்தக் கிராமம் சுத்தமாக இருத்தலை தன் இலக்காகக் கொண்டுத் திகழ்வதாகவும், அக்கிராம மக்களுக்கு சுத்தமாக இருப்பதைக் கடைபிடிப்பது ஒரு வழக்கமாக ஆகிவிட்டதென்றும் அப்போது அவர் கூறினார். “எங்களுடைய கொள்ளுத்தாத்தா பாட்டியும் அவர்களுடைய பெற்றோரும் சுத்தமான பழக்கங்களைக் கொண்டிருந்தனர். எங்கள் கிராமம் ஒரு நாள் சுற்றுலாவினரைக் கவர்கின்ற இடமாக அமையும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்கிறார் புதிய வீடுகளைக் கட்டி வருகின்ற, அந்த கிராமக் கவுன்சிலின் உறுப்பினர். கிராமத்தின் அழகைப் பாதுகாக்க இரண்டு மாடிக்கு மேலுள்ள வீடுகளைக் கட்டக்கூடாது என்றும், அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் தம் கிராமத்தின் அழகு போய்விடும் என்றும், யாரும் சுற்றுலாவிற்குத் தம் கிராமத்திற்கு வரமாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். இக்கிராமத்தில் அனைவருடைய வீட்டிலும் கழிப்பறை உள்ளது. தூய்மையான பாரதம் என்ற, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற திட்டத்தின் இலக்கினையொட்டி இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் எஜமான விசுவாசத்தை காட்டும் நாயைக் கண்டு அனைவரும் வியந்துள்ளனர். தன் எஜமானரின் பேத்தி கடலில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட நாய், அவள் அதிகம் விளையாட ஆரம்பித்தால் ஆபத்தாகப் போய்விடும் என்று எண்ணி அவளுடைய சட்டையை தன் வாயால் கவ்விக் கொண்டுவந்து கரையோரத்தில் விட்டது

சீனாவில், சாலையைக் கடக்க இரு நாய்கள் முயன்றிருக்கின்றன. அப்போது ஒரு நாயின் மீது ஒரு கார் ஏறி அது இறந்துவிட்டது. உயிரற்ற தன் நண்பனின் உடலைக் கண்ட அந்த நாய், அதற்குப் பாதுகாப்பாக அருகிலேயே அமர்ந்திருந்தது. பிராணிகளை நேசிக்கும் பலர் அதனைக் கண்டு துயருற ஆரம்பித்தனர். அதற்கு உதவ ஏன் யாரும் முன்வரவில்லை என்றும், ஓட்டுநர் அந்த சடலத்தை எடுத்துப் புதைத்திருக்கலாம் என்றும், அனைத்து உயிருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், சில நேரங்களில் மனிதர்களைவிட பிராணிகள் அன்போடும் பொறுப்புணர்வோடும் இருக்கின்றன என்றும் அதனைப் பார்த்து பலர் பேச ஆரம்பித்தனர்.

2 அடி உயரமுள்ள, இந்தியாவில் ஜபல்பூரைச் சேர்ந்த பூசாரியான பரத் திவாரி (Bharat Tiwari, 53) மர்மமான மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டு அதனை எதிர்கொண்டு வருகிறார். அதன் காரணமாக ஐந்து வயது முதல் அவருடைய எலும்புகள் வளைந்து, வளராத நிலையில் உள்ளார். மருத்துவர்களால் கணிக்க இயலாத அரிய வகை நோயினால், ஐந்து வயதில் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வயது 53. உள்ளூரில் அவரை கடவுளின் அவதாரமாகக் கருதுகின்றனர். தோட்டக்கலையில் ஈடுபட்டு உதவுவதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றார்கள். "பல கிராமங்களிலிருந்து மக்கள் என்னைப் பார்க்க வருகின்றார்கள், மரியாதை செலுத்துகின்றார்கள். அனைவரும் என்னை மதிக்கின்றார்கள். நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன். அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றார்கள். சிறு வயதிலிருந்தே நான் இவ்வாறு இருக்கிறேன். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்கிறார் பரத். "இதுவும் கடவுள் கொடுத்ததே. இதற்காக நான் வருத்தப்படவில்லை. எனக்கு எவ்வித நோயுமில்லை. நான் வருத்தப்படாத நிலையில் எனக்கு அது பிரச்சினையாகத் தோன்றவில்லை. மற்றவர்களைப் போலவே எந்த பிரச்னையும் இன்றி பயணிக்கிறேன். என் அன்றாடப்பணிகளை நானே கவனித்துக்கொள்கிறேன். துணிகளை துவைத்துக்கொள்வது, சந்தைக்குச் செல்வது, தேநீர் போடுவது என்பனவற்றை மற்றவர்களைப் போலவே நானும் செய்துவருகிறேன்" என்கிறார்.

ஒன்பது வயது முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாசை (Maasai) இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கென்ய நாட்டு சிறுவர்கள் பெரியவர்களாக ஆவதை/வயதிற்கு வருவதை (coming of age) அறிவிக்கும் விழா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கென்யாவில் நடத்தப்படுகிறது. அண்மையில் இவ்விழா காசியாடோ வட்டத்தில் (Kajiado County, in the country's Great Rift Valley), நடைபெற்றது. விழாவின்போது அவர்களுடைய முகத்தின்மீதும், உடம்பின்மீதும் வண்ணம் பூசப்படுகிறது.அன்றைய இரவில் அவர்கள் காட்டில் தங்குகின்றனர். ஐந்து ஆண்டுகளில் அவர்கள், தம் இனத்தைக் காக்கின்ற தைரியமான மற்றும் பலமிக்க போராளிகளாகவும் கருதப்படுவர். அவர்களை ஆசீர்வதிக்கும் வகையில் மூத்தோர் அவர்களின்மீது பீரையும், பாலையும் தெளிக்கின்றனர்.

பிறந்து 22 வாரங்களே ஆன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை கல்லன் பாட்டர் (Cullen Potter) பட்டம் பெற வருவதற்கான பின் புலத்தைப் பார்ப்போமா? பிறக்கும்போது குழந்தையின் சராசரி எடை ஐந்து பவுண்டு எட்டு அவுன்சிலிருந்து எட்டு பவுண்டு 13 அவுன்ஸ் (five pounds, eight ounces and eight pounds, thirteen ounces) எடையுடன் காணப்படுமாம். அலாபாமாவைச் சேர்ந்த என்ற மொல்லி பாட்டர் (Mollie Potter) என்ற பெண்மணிக்கு குழந்தை பிறந்தபோது 13.9 அவுன்ஸ் எடையே இருந்தது. எடை குறைவான அக்குழந்தை உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறு இரண்டு விழுக்காடுதான் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடும்பத்தினர் மன உறுதியை விட்டுக்கொடுக்காமல் அவளுடைய துணைவருடன் மூன்று மாநிலங்களிலுள்ள 16 மருத்துவமனைகளுக்குச் சென்று அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்கான வழியைத் தேடியுள்ளார். பிறந்தவுடன் குழந்தை பெரும்பாலும் இறந்துவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தை 22 வாரங்களாக வளர்ந்துவருவது தாய்க்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆதலால் அவர் தம் குழந்தை பட்டம் பெறுவதற்காக பட்டம் பெறுகின்ற மேடைக்கு வருவதுபோல ஏற்பாடு செய்திருந்தார். குழந்தை சிகிச்சை பெற்றுவருகின்ற தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தாய் தன் குழந்தையை மகிழ்ச்சியோடு கூட்டிவருவதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.பிறந்து, மருத்துவமனையில் 160 நாள்கள் இருந்த அக்குழந்தை தற்போது வீட்டிற்குச் செல்ல தயாராகிவிட்டது. இரண்டு விழுக்காடு எல்லை என்பதை நாங்கள் கடந்துவிட்டோம். அனைத்தும் சரியாக உள்ளது. கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையுடன் கூறுகிறார் தாய். சிக்கலான நிலையைத் தாண்டிய அக் குழந்தையின் தற்போதைய எடைஐந்து பவுண்டு எட்டு அவுன்சாகும். இந்த அதிசயக்குழந்தைக்காகவே அவர் இவ்வாறாக போலி பட்டமளிப்பு நிகழ்வினை (faux graduation ceremony) நடத்தியுள்ளார்.

நன்றி : டெய்லி மெயில், நியூயார்க் டைம்ஸ், எக்ஸ்பிரஸ்

01 September 2018

வாழ்வில் வெற்றி மின்னூல் : முனைவர் பா.ஜம்புலிங்கம்

2001இல் அச்சு வடிவில் வெளியான வாழ்வில் வெற்றி என்னும் தலைப்பிலான, 32 சிறுகதைகளைக் கொண்ட  என் முதல் நூல் தற்போது மின்னூலாக்கம் பெற்றுள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். என் முதல் சிறுகதை வெளியான 25 ஆண்டுகள் கழித்து அச்சிறுகதையை உள்ளடக்கிய கதைகளைக் கொண்டு வெளிவந்த அந்நூல், தற்போது மின்னூலாக வடிவம் பெறுகிறது. எழுத்துப்பணிக்குத் துணை நிற்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி. 

எழுத்தோடு என் தொடர்பானது என்பது 1980களில் ஆரம்பித்தது. எனது முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகள், பிற செய்திகளைப் படிப்பது, அதுபற்றிக் கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. இதன்மூலம் பெரும்பாலான செய்திகளை ஆழ்ந்து நோக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் எழுதும் ஓரிரு வரிகள், வார்த்தைகளை அப்போது இதழ்களில் படிக்கும்போது அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த வழக்கம் சிறிது சிறிதாக சிறுகதைகள் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது.   

பௌத்த ஆய்வின் காரணமாக தொடர்புகொண்ட அறிஞர்களில் ஒருவரான திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி தஞ்சையில் சந்தித்தபோது நான் எழுதிய சிறுகதைகளைப் பற்றிக் கேட்டு, வியந்தார். ஆய்வுப்பணியுடன், சிறுகதைகளும் எழுதுவதையும் பார்த்த அவர், அதனை நூலாக்க முயற்சியினை மேற்கொள்ளலாம் என்று கூறி அனைத்துக் கதைகளின் நகல்களையும் கேட்டு வாங்கிச் சென்றார். எடுத்துச்சென்ற சில நாள்களில் பதிப்பகத்திலிருந்து ஒரு நாள் அஞ்சலில் மெய்ப்புப்படிகள் வந்தன. தொடர்ந்து நூலிற்கான அட்டையும் வந்தது. திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்கள் இந்நூல் வெளிவர ஊக்கம் தந்தார். அப்பெருமக்களின் உதவியுடன் சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றது. இந்த முதல் நூல் எழுதிய ஆர்வம் அடுத்தடுத்து சில நூல்களை எழுதக் காரணமாக அமைந்தது.  

1. Tantric Tales of Birbal (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, நவம்பர் 2002
2. Judgement Stories of Mariyathai Raman (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, நவம்பர் 2002
3. படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, டிசம்பர் 2004
4. Jesting Tales of Tenali Raman (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, அக்டோபர் 2005
5. Nomadic Tales from Greek (மொழிபெயர்ப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மே 2007
6. தஞ்சையில் சமணம், ஏடகம், தஞ்சாவூர், 2018 (கோ.தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன் உடன் இணைந்து)


திரு கு.வெ.பாலசுப்பிரமணியன் அணிந்துரையிலிருந்து:
.........."ஏன் சார்! நான் வந்து கொஞ்ச நாள்லேயே உங்க கதைங்க ரொம்ப படிச்சிட்டேன். நீங்க ரொம்ப நாளா எழுதுறதாச் சொன்னீங்க. நீங்க வெளியிட்ட கதையெல்லாம் ஒரு தொகுப்பா போட்டா நல்லாயிருக்குமே!" இது ஜம்புலிங்கத்தின் கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் குரல் மட்டுமன்று; என்னுடைய குரலும்தான். ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது; ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக்கொள்ளும் திறன் கைவசம் இருக்கிது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக் கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்... இந்த சித்துச் விளைட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.... (ப.7) 

என்னுரையிலிருந்து:
மனதில் நாம் அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அன்றாடம் எதிர்கொள்ளும் சில தீர்வுகள், சமூகத்தில் நம் முன் தோன்றும் அவலங்கள், பிற குடும்பச் சூழல்கள் போன்ற நிலைகளை மனதில் வைத்து கதை எழுத ஆரம்பித்தேன். சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனதில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள் என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன்முதலாக 1993இல் வெளியானது. நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கியக்காரணிகளாக அமைகின்றன. (ப.11)

வாழ்வில் வெற்றி, புஸ்தகா 
வாழ்வில் வெற்றி, அமேசான் 
பல நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி சிறுகதைத்தொகுப்பு தற்போது மின்னூல் வடிவம் பெற்றுள்ளது. வாழ்வில் வெற்றி மின்னூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். நூலைப் பெற மேற்கண்ட புஸ்தகா அல்லது அமேசான் தளத்தின் இணைப்பைச் சொடுக்க வேண்டுகிறேன்.

நன்றி : திரு ரமேஷ், புஸ்தகா
திரு திலக் (அட்டைப்பட இயற்கைக்காட்சி)