முகப்பு

22 September 2018

திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்

17 மார்ச் 2018 அன்று கோயில் உலா சென்றபோது திருநல்லூருக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் சென்று; பிரிகின்ற வலங்கைமான் சாலையில் 2 கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். பாபநாசத்திற்குக் கிழக்கில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை கோயில்களை உள்ளடக்கிய சப்தஸ்தானக் கோயில்களில் இக்கோயில் முதன்மைக்கோயிலாகும். சப்தஸ்தானம் என்றால் திருவையாறு தொடர்பான கோயில்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். பின்னர்தான் கும்பகோணம், சக்கராப்பள்ளி, மயிலாடுதுறை, கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் உள்ளிட்ட பல இடங்களில் இக்கோயில்களை முதன்மையாகக் கொண்டு பல சப்தஸ்தானக் கோயில்கள் இருப்பதை அறிந்தேன்.

காவிரியின் தென் கரையிலுள்ள இத்தலம் ஞானசம்பந்தராலும், அப்பராலும் பாடப்பட்ட பெருமையுடையதாகும். மூலவர் ஆண்டார், கல்யாணசுந்தரர், சௌந்தரநாயகர், பஞ்சவர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூருடைய நாயனார், சுந்தரநாதர் என்றும் இறைவி கிரிசுந்தரி, கல்யாணசுந்தரி, திருமலைசொக்கி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அழகிய மாடக்கோயில். கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. சப்தசாகரம் என்னும் இக்குளம் ஒவ்வொரு மாசி மகத்தின்போதும் சிறப்புற்று விளங்குவதை வைத்து, மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்பர். இக்குளத்தில் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்ததைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போனது.  குளத்திலிருந்து கோயிலைப் பார்க்கும்போது கண்ணைக்கவரும்  வகையில் உள்ளது.


.

ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து, பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து ஒரு கோபுரம் உள்ளது. 


வெளிச்சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி, விநாயகர், நடராசர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் 63 நாயன்மார்கள், கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பானலிங்கம், ஜுரஹரேஸ்வரர்,  ஜுரஹரேஸ்வரியைக் காணலாம்.

உயர்ந்த தளத்தில் மாடக்கோயிலாக உள்ள இக்கோயிலின் வலது புறம் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மூலவர் உள்ள கருவறைக்குச் செல்ல வேண்டும். மூலவரைப் பார்ப்பதற்கு முன்பாக சிவபுராணம் பாடிவிட்டு உள்ளே சென்றோம். 


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, கைலாய கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.  திருச்சுற்று மண்டத்தில் உமாமகேசுவரர், சங்கர நாராயணர், லிங்கோத்பவர், சுஹாசனர், நடராஜர், ரிஷபாரூடர் உள்ளிட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.  மூலவர் கல்யாணசுந்தரரேஸ்வரர் கட்டுமலை மீது, கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும், நந்தியும் உள்ளன. அருகே கணபதி உள்ளார். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். 


நன்றி : மாலை மலர்
மூலவர் சன்னதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்மன் சன்னதி, தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் பள்ளியறை உள்ளது.   



மூலவருக்குப் பின்புறம் இறைவனும் இறைவியும் உள்ளதை திருவீழிமிழலையிலும், வேதாரண்யத்திலும் பார்த்துள்ளோம். மன நிறைவான தரிசனத்திற்குப் பின்னர் அடுத்த கோயிலுக்குக் கிளம்பினோம்.



துணை நின்றவை
  • வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014
  • சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், வேலூர் மாவட்டம், 2005
  • பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 
  • மாலை மலர் தளம்

13 comments:

  1. சிறப்பான, அழகான படங்கள். திருநல்லூர் கோவில் பற்றி அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, குளங்கள் வறண்டு கிடப்பது வேதனைதான் ஐயா

    ReplyDelete
  3. தகவல்கள் சிறப்பு நிறைய விடயம் அறிந்தேன்.

    ReplyDelete
  4. சிறப்பான விவரங்கள் உடன் உங்கள் பதிவு. தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. இனிய தரிசனம்...

    மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். அருமையாக உள்ளது. ஒவ்வொன்றையும் விளக்கிய முறைகளும் அருமை. திருநல்லூர் சிவன் கோவிலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். தங்கள் முழு விளக்கம் படித்த பின் கோவிலுக்கு செல்லும் ஆர்வம் வருகிறது.சிவனின் அருளால், பிராப்தம் கூடி வர வேண்டும். சனி வார மஹா பிரதோஷமன்று சிவனின் தரிசனம் தங்கள் பதிவினால் ஏற்படுத்தி தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. மீண்டும் தரிசனம் செய்தேன். அருமையான தரிசனம்.

    ReplyDelete
  8. அருமையான திருத்தல வரலாறுகள், சுற்றுப் பயணங்கள்
    பாராட்டுகள்

    ReplyDelete
  9. அழகிய படங்களோடு அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  10. சப்தஸ்தானக் கோவில்களில் ஒன்றான திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உலா பற்றிய தகவல்களும் படங்களும் கொண்ட சிறப்பான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. திருநல்லூர் கோவில் படங்கள் அழகு. குளத்தில் நீரில்லை என்றதும் மனம் இருள்கிறது.
    இந்தமாதிரி பாடப்பெற்ற ஸ்தலங்களில் கொஞ்ச நேரம் போய் நின்றாலே நிம்மதி.

    இன்னும் பயணியுங்கள். எழுதுங்கள்.

    ReplyDelete
  12. சப்தஸ்தான கோவில் விபரத்தில் கரந்திட்டைக்குடியும் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete