முகப்பு

27 October 2018

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (4, 5 பகுதிகள்) : ப.தங்கம்

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் ப.தங்கம் (9159582467) அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.

நான்காம் பகுதிக்கான அணிந்துரையில் மருத்துவர் ச.மருதுதுரை : “தங்கம் போன்ற ஆளுமைகள்  கலைக்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதாகவே தங்கம் என்ற கலைஞனையும், அவரது கலையையும் பார்க்கும்போது தோன்றுகிறது என்றால் அது சற்றும் மிகையன்று.”

நான்காம் பகுதி (பக்.327-429 வரை) 
பூங்குழலி அறிமுகம் தொடங்கி (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 1 முதல்), சேற்றுப்பள்ளம், சித்தப்பிரமை, நள்ளிரவில், நடுக்கடலில், மறைந்த மண்டபம், சமுத்திர குமாரி, பூதத்தீவு, இது இலங்கை, அநிருத்தப் பிரம்மராயர், தெரிஞ்ச கைக்கோளப் படை, குருவும் சீடனும், பொன்னியின் செல்வன், இரண்டு பூர்ண சந்திரர்கள், இரவில் ஒரு துயரக்குரல், சுந்தர சோழரின் பிரமை, மாண்டவர் மீள்வதுண்டோ?, துரோகத்தில் எது கொடியது?, ஒற்றன் பிடிபட்டான், இரு பெண் புலிகள், பாதாளச்சிறை, (அத்தியாயம் 21) வரையுள்ளவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைத் தெரிவு செய்து  தொடர்பு விடுபாடின்றி சித்திரங்களை வரைந்து நம்மை கல்கியுடன் அழைத்துச் செல்கிறார் திரு தங்கம். கற்பகம் இதழின் ஆசிரியர் வி.ர.வசந்தன் அவர்கள் வரைந்துள்ள கல்கியின் சித்திரத்தை நம்முடன் பகிர்கிறார் நூலாசிரியர். (ப.327)

ஐந்தாம் பகுதிக்கான மதிப்புரையில் டாக்டர் சா.இராமையா : “ஓவியர் மணியம் வரைந்த சித்திரங்களை உள் வாங்கிக்கொண்டு அவற்றிற்கு வசனமும் பக்கத்திலேயே கதையையும், பெரிதாக படங்களையும் வரைந்து, மூலக்கதையின் கருவை சிதைய விடாமல் தெளிந்த நீரோடை போல் கொண்டு சென்றுள்ளார்.”

ஐந்தாம் பகுதி (பக்.430-532 வரை) 
சிறையில் சேந்தன் அமுதன், (கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 2, அத்தியாயம் 22 முதல்), நந்தினியின் நிருபம், அனலில் இட்ட மெழுகு, மாதோட்ட நகரம், இரத்தம் கேட்ட கத்தி, காட்டுப்பாதை, இராஜபாட்டை, யானைப்பாகன், துவந்த யுத்தம், ஏலேல சிங்கன் கூத்து, கிள்ளிவளவன் யானை, சிலை சொன்ன செய்தி, அநுராதபுரம், இலங்கைச் சிங்காதனம், தகுதிக்கு மதிப்பு உண்டா? காவேரி அம்மன், சித்திரங்கள் பேசின, இதோ யுத்தம், மந்திராலோசனை, அதோ பாருங்கள், பூங்குழலியின் கத்தி (அத்தியாயம் 42) ஆகிய அத்தியாயங்களைக் கொண்டமைந்துள்ளது.

அவருடைய ஓவியங்கள் நம்மை நிகழ்விடத்திற்கே அழைத்துச்சென்றுவிடுவதை நாம் முன்பு உணர்ந்துள்ளோம். முந்தைய பகுதிகளில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் நமக்கு அருகாமையில் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். நான்காம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சில ஓவியங்களைக் காண்போம்.  



 







கதாபாத்திரங்களை ஓவியங்களில் கொணரும்போது அவர் பயன்படுத்துகின்ற சொற்கள் வரலாற்றுக்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
· பூங்குழலி, தூரத்தில் தெரிந்த குழகர் கோயிலை பார்க்கும்போது அவளுடைய முகத்தில் வெளிப்படுகின்ற ஆர்வம் (ப.329)
· குதிரை மீது வந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், அவளுக்குத் தோன்றும் நாண உணர்ச்சி (ப.333)
· புதைசேற்றுக்குழயில் வந்தியத்தேவனின் முழங்கால் வரையில் சேறு மேலேறியபோது அவன் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.337)
·   அவனுடைய கைகளை பூங்குழலி பற்றியபோது அவளுடைய கைகளில் இருந்த வலிமை (ப.341)
·   கடலுக்குள் வந்துவிட்டால் சமுத்திரராஜன் தான் தன் தந்தை என்றும், தன்னுடைய மற்றொரு பெயர் சமுத்திரக்குமாரி என்றும் பூங்குழலி கூறும்போது அவள் முகத்தில் தோன்றும் பிரகாசம் (ப.360)
·    தான் கண்ட செய்திகளைச் சொன்னால் வாயு பகவான் நடுங்குவார், சமுத்திரராஜன் ஸ்தம்பிப்பார், பூமாதேவிகூட அலறிவிடுவாள் என்று ஆழ்வார்க்கடியான் கூறும்போது அதனை அநிருத்தப் பிரம்மராயர் கேட்கும்போது இருக்கும் கவனம் (ப.372)
· இளவரசர் அருள்மொழிவர்மன் பொன்னியின் செல்வனாக ஆன வரலாற்று உண்மையை குந்தவை சொல்லும்போது, அவள் முகத்தில் தோன்றும் கனிவு (ப.378)
· தன் மனத்தைத் திறந்து மகள் குந்தவையிடம் உண்மை சொல்ல விரும்பும்போது, தந்தை சுந்தரசோழரின் முகத்தில் காணும் சஞ்சலம் (ப.384)
·   தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ பயங்கரமாக சதி நடப்பதை அறிந்தபோது குந்தவையின் முகத்தில் காணப்பட்ட பீதி (ப.408)
·  சோழசாம்ராஜ்யத்தை தம் காலடியில் விழச்செய்து, நந்தினி சோழ சிம்மானத்தில் வீற்றிருக்கும் நாள் சீக்கிரம் வரும் என்று பெரிய பழுவேட்டரையர் கூறும்போது அவர் முகத்தில் தோன்றிய வஞ்சம் (ப.415)
·      பாதாள சிறையின் சாவியைப் பெற்றதும், சோழர் குலத்திற்கு தன்னால் தீது எதுவும் வராது என்று குந்தவை கூறியபோது அவளுடைய முகத்தில் காணப்பட்ட உறுதி (ப.427)    
· பாதாளச்சிறையில் வானதியிடம் பயமாக இருக்கிறதா என்று குந்தவை கேட்கும்போது அவளுடைய முகத்தில் காணும் எச்சரிக்கை உணர்வு (ப.431)
·          நிருபம் எழுதும்போது நந்தினியிடம் காணப்பட்ட நடுக்கம் (ப.441)
·   வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மூன்று வீரர்களோடு காட்டுப்பகுதிக்குள் பிரயாணம் தொடங்கியபோது அவர்களிடம் காணும் நிதானம் (ப.459)
·          யானையின் கழுத்தில் வீற்றிருந்த யானைப்பாகனின் கழுகுப்பார்வை (ப.471)
·    சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக்கொண்டிருந்த வீரனுடைய முகத்தை வீரர்கள் பார்ததபோது எழுந்த ஆரவாரம் (ப.483)
· அநுராதபுரத்தை நெருங்கும்போது இருந்த புத்தர் சிலையினை இளவரசர் வணங்கும்போது வெளிப்படும் பக்தி (ப.488)
·  இளவரசருக்கு நேரக்கூடிய அபாயங்களைப் பற்றி சித்திரங்கள் மூலமாகவும், சமிக்ஞைகளின் மூலமாகவும் அந்தப் பெண் செய்த எச்சரிக்கை உணர்வு வெளிப்பாடு (ப.504)
·          இளவரசை சிறைப்படுத்திக்கொண்டுபோக ஆட்கள் வந்திருப்பதாகக் கூறியபோது பூங்குழலியின் முகத்தில் காணப்பட்ட பதற்றம் (ப.531)

பொன்னியின் செல்வன் புதினத்தில் வெளிவருகின்ற நிகழ்வுகளில் முக்கியமானவை எதுவும் விட்டுப்போகா நிலையில் அவர் தெரிவு செய்து ஓவியங்களாக்கிய விதம் சிறப்பானதாகும்.  நூலாசிரியரின் விடா முயற்சி தற்போது அடுத்தடுத்த பகுதிகளை நமக்கு அளித்துள்ளது. தொடர்ந்து வெளிவந்துள்ள ஆறாவது பகுதியை விரைவில் ஓவியங்களோடு ரசிப்போம். அசாத்திய முயற்சியில் களமிறங்கி பயணிக்கின்ற திரு தங்கம் அண்ணன் அவர்களின் முயற்சி தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள். 

கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, நான்காம் பகுதி (மார்ச் 2018)
கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, ஐந்தாம் பகுதி (ஜுலை 2018)
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200 (ஒவ்வொரு தொகுதியும்)



முதல் மூன்று தொகுதிகளின் முகப்பட்டைகள்

20 October 2018

மனதில் நிற்கும் இல்ல நவராத்திரி

          என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக  மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப்படங்களை இணைக்க முடியா நிலை.
நினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும். குடும்ப சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூர் வந்த பின்னர் அந்த அழகினை ரசிக்கும் வாய்ப்பினை இழந்தேன். கடந்த பதிவில் கோயில் கொலுவினைப் பார்க்கச் சென்று பார்த்ததைப்பகிர்ந்திருந்தேன். இப்பதிவில் நாங்கள் வீட்டில் அப்போது கொலு வைத்த அனுபவத்தைக் காண்போம்.  
ஒவ்வோராண்டும் கொலுவினை எடுத்து வெளியே வைப்பதும், பின்னர் அதனை பாதுகாப்பதும் மிகவும் சிரமமான காரியமாகும். கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் நாங்கள் முன்பு வசித்த எங்கள் வீட்டில் ஐந்து  பெரிய மரப்பெட்டிகளில் கொலு பொம்மைகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பொம்மையையும் பேப்பரைச் சுற்றி இடையே வைக்கோல் போட்டு ஒன்றோடொன்று உரசாமல் பாதுகாப்பாக வைத்திருப்போம். கீழிருந்து மேலாக அடுத்தடுத்த பெட்டிகள் சிறிதாக இருந்ததால் ஒன்றின் பாரம் மற்றொன்றின்மீது இறங்காமல் பெட்டிகள் இருக்கும். நவராத்திரியின் முதல் நாள் பெட்டிகளைத் தனித்தனியாக எடுத்து வெளியே தூசி தட்டி வைப்போம். வீட்டிலுள்ள அனைவருமே பெட்டிகளை இறக்குவோம். ஒவ்வொரு பொம்மையாக அது உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அமைப்பில் முனை உடையாதவாறும், கீறல் எதுவும் விழாத வகையிலும் எடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் புதிய கொலு பொம்மைகள் வாங்குவோம். எந்த பொம்மை கொலுவில் இல்லையோ அதனை வாங்குவோம். சிலர் அன்பளிப்பாக வாங்கித் தருவதும் உண்டு. அவ்வாறு வாங்கிய வகையில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாயின. 
பொம்மைகளை வெளியே எடுத்தபின் அகல பொம்மைகள், உயர பொம்மைகள், சிறிய பொம்மைகள் என்று சிறிய கூடத்தில் தரம் பிரிப்போம்.   பெரிய கூடத்தில் அமைப்பதற்காக அந்த பெட்டிகளை இரு புறமும் உயரத்திற்கேற்றவாறு அமைப்போம். பெட்டிகள் போதாத நிலையில் வேறு பொருள்களை வைத்து அடுத்தடுத்து படிகளை அமைப்போம். பின்னர் அதன்மேல் துணியை மேலிருந்து விரிப்போம்.  ஏழு படிகள் இரு தூண்களுக்கிடையே கம்பீரமாக அமைக்கப்படும். அது ஆடாதவாறு இருக்க ஆங்காங்கே கட்டைகளை இறுக்கமாக வைக்கப்படும்.
முதல் படியிலிருந்து ஒவ்வொரு படியாக பொம்மைகள் அடுக்கப்படும். வாயில் கை விரலை வைத்து அமர்ந்த நிலையிலுள்ள கண்ணன், அனந்த சயனத்தில் பெருமாள், ஆனந்தத்தாண்டவமாடும் நடராஜப்பெருமான், திருப்பதி ஏழுமலையான் போன்ற பல பெரிய பொம்மைகள் பார்ப்பவர்களின் கண்களை ஈர்த்துவிடும். எங்கள் வீட்டு கொலு பொம்மைகளில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, லிங்கத்திருமேனியருகே உமையம்மை, தசாவதாரம், இராமர் பட்டாபிஷேகம், ராஜேஸ்வரி, மதுரை மீனாட்சி, கஜலட்சுமி போன்ற பொம்மைகளும்,  மகாத்மா காந்தி, திருமண நிகழ்வு, செட்டியார், பாவை விளக்கு, புதுமணத்தம்பதிகள் ஊஞ்சலாட்டம், பொய்க்கால் குதிரையாடும் ஆண், பெண் போன்ற பொம்மைகளும் அடங்கும்.  
தொடர்ந்து அகலமான பொம்மைகளை வைத்தால் பார்வையாக இருக்காது என்பதற்காக ஆங்காங்கே உயரமான அல்லது செங்குத்தான பொம்மைகளை வைத்து சரி செய்வோம். படியின் இரு புறங்களிலும் சிப்பாய், கையில் பறவையுடன் நிற்கும் பெண் போன்ற பொம்மைகளை வைப்போம்.  பூங்கா அமைத்தல், மெழுகுவர்த்தி வைத்து படகு விடல்,  வண்ணத்தாள்களால் அந்த இடத்தையே அலங்கரித்தல் என்று குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்  ஈடுபாட்டோடு செய்வோம்.
பூங்காவிற்காக உள்ள சிறிய மரப்பொம்மைகளை தனியாக சிறிய பெட்டியில் வைப்போம். ஆரம்பத்தில் சிமெண்டிலான படிகளைக் கொண்ட குளம் போன்ற அமைப்பு எங்கள் வீட்டில் இருந்த நினைவு உள்ளது. பின்னர் எவர்சில்வர் தொட்டியிலோ, அலுமினியப் பாத்திரத்தையோ குளமாகப் பயன்படுத்த ஆரம்பித்தோம். 
நவராத்திரி நிறைவுற்றதும் மறுபடியும் அனைத்து கொலு பொம்மைகளையும் அளவுவாரியாக அடுக்கி தாளைச்சுற்றி லாவகமாக வைப்போம். பெரிய பொம்மைகளுக்கு இடையே இடம் வீணாகாமல் இருப்பதற்காக சிறிய பொம்மைகளை நேராகவோ, பக்கவாட்டிலோ, குறுக்குவாட்டிலோ தாளைச் சுற்றி வைப்போம். படித்த நாளிதழ்களின் தாளை நறுக்கி இடையிடையே செருகுவோம். இடிபட்டு உடைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே வைக்கோலையும் செருகுவோம்.  உடையாமல், மடங்காமல், வளையாமல் பொம்மைகளை அனைத்துப் பெட்டியிலும் வைத்து பணி நிறைவடைந்ததும் மகிழ்ச்சியுற்று, அடுத்த வருட நவராத்திரிக்காகக் காத்திருக்க ஆரம்பிப்போம்.
அவ்வாறான காத்திருப்பு தற்போது இல்லாவிட்டாலும் நினைவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

13 October 2018

மனதில் நிற்கும் நவராத்திரி

1960களின் இறுதியும் 1970களும் என்னுள் உண்டாக்கிய தாக்கங்களில் ஒன்று நவராத்திரி. வீட்டுக்கொலு, தெருக்கொலு, கோயில் கொலு என்ற வகைகளில் நவராத்திரி என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான். 

சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரமாக இருந்த எங்கள் தெருவின் பெயர் பின்னர் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெரு என்று மாறி பின்னர் கே.ஜி.கே.தெரு என்று ஆனது. வீட்டில் கொலுவைப்பதென்பதே தனி ரசனைதான். கொலுவிற்கான ஏற்பாடும் தொடர்ந்து நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் அழைப்பதும், உபசரிப்பதும் சுண்டல் கொடுப்பதும் தனி சுகம். அவ்வாறே எங்கள் தெருவிலும் அருகில் உள்ள தெருக்களிலும் கொலு பார்க்கச் செல்வதும், கும்பேஸ்வரர் கோயிலுக்கும் பிற கோயில்களுக்கும் செல்வதும் தனி அனுபவம். 

இளமைக்காலத்தில் எங்கள் தெருவிலுள்ள வீடுகளுக்கும், அருகிலுள்ள வீடுகளுக்கும் கொலு பார்க்கச் சென்ற அனுபவம் என்றும் மறக்கமுடியாதது. 10 அக்டோபர் 2018 அன்று கும்பேஸ்வரர் கோயிலுக்குக் கொலு பார்க்கச் சென்றபோது கோயிலில் நவராத்திரிக்காக அதிகமான கொலுக்கடைகள் வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் எங்கள் தெருவில் நாங்கள் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதிற்கு வந்தன.  முதலில் அந்நாளைய அனுபவத்தை நினைவுகூர்ந்துவிட்டு, பின்னர் இந்நாள் நிகழ்வுக்கு வருவோம். 









நாங்கள் படித்த கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில் நவராத்திரியை அனுசரித்தே விடுமுறை விடுவார்கள். பள்ளி நாள்களில் பிற கோயில் விழாக்களைப் போல நவராத்திரிக்காகக் காத்திருப்போம். எங்கள் தெருவில் பல வீடுகளில் கொலு வைக்கப்பட்டிருந்தாலும் எங்கள் வீடு உட்பட சில வீடுகளில்தான்  பழைய அழகிய பெரிய கொலு பொம்மைகள் இருக்கும். பார்த்தசாரதி, அலமேலு, சாஸ்திரியார், ஒன்பத்துவேலி, சக்கரபாணி, சுந்தர், சோமு, ஆறுமுகம், மணி, முகுந்தன் ஆகியோருடைய வீடுகள் உள்ளிட்ட பல வீடுகளில் கொலுக்களைப் பார்க்கச் செல்வோம். நவராத்திரியின்போது கொலு கொலு சுண்டல் என்று சத்தமிட்டுக்கொண்டே ஒவ்வொரு வீடாகச் செல்வோம். சிலருடைய வீடுகளில் ஆடம்பரமாகவும், சில வீடுகளில் மின் விளக்குகள் போட்டு பூங்காக்கள் அமைத்தும், சில வீடுகளில் எளிமையாகவும் கொலு வைத்திருப்பர். கொடுக்கும் சுண்டலையோ, பொறியையோ போட்டுக்கொள்ள கையில் சிறு சிறு டப்பாக்களையோ,   தாள்களையோ வைத்திருப்போம். 

கொலு பார்ப்பதைவிட போட்டி போட்டுக்கொண்டு சுண்டலை வாங்குவதிலேயே எங்கள் எண்ணம் இருக்கும். சிலருடைய வீட்டில் அன்பாகத் தருவார்கள். சிலர் விரட்டுவதுபோலத் தருவார்கள். ஒரே வீட்டில் இரு முறை சுண்டல் வாங்கியதும் உண்டு. எங்களுக்கு அனைத்துமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டு கொலுவிற்குச் செல்வதற்குள் அந்த சுண்டலைத் தின்றுவிட்டு அதன் குறைநிறைகளை பேசிக்கொண்டே செல்வோம். சுண்டல் நன்றாக இல்லாவிட்டாலோ, குறைவாகத் தந்தாலோ திட்டிவிட்டு வருவதும் உண்டு. ஒரு வீட்டில் சுண்டல் இல்லை என்று கூறிவிட்டால் அடுத்து வருவோரிடம் கூறிவிடுவோம். அவர்கள் அனாவசியமாக அலையக்கூடாது அல்லவா?

சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் தொடங்கும் எங்கள் பயணம் சிங்காரம் செட்டித்தெரு, மேட்டுத்தெரு, மேல மேட்டுத்தெரு, வியாசராவ் அக்கிரகாரம், ரெட்டியார் குளக்கரைகள், சோலையப்பன் தெரு, பேட்டை, திருமஞ்சன வீதி என்ற வகையில் தொடரும். ஒரே நாள்களில் அனைத்து தெருக்களுக்கும் செல்ல முடியாது. நேரத்திற்குத் தகுந்தாற்போல எங்களது திட்டத்தை அமைத்துக்கொள்வோம். சில நாள்களில் குழுக்களாகப் பிரிந்துவிடுவதும் உண்டு. பள்ளி நாள்களில் எனக்குத் தெரிந்து உறவினர் என்ற வகையில் வேறு யாருடைய வீட்டிலும் கொலு வைத்திருக்கவில்லை. ஆனால் பல நண்பர்களின் வீட்டில் பார்த்துள்ளேன். எங்களுடைய கொலு கொலு சுண்டல் பயணம் என்பதானது பக்தி என்பதற்கு அப்பாற்பட்டு,  நட்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்ற வகையிலேயே இருந்தது. கொலு விடுமுறை முடிந்து மறுநாள் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று நினைக்கும்போது வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருக்கும்.  பள்ளி திறந்தபின் ஓரிரு நாட்கள் கொலுவைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். பெரிய வாத்தியாரைக் கண்டதும் கொலு பற்றிய எண்ணங்கள் ஓடி விடும், படிப்பு மட்டுமே நினைவிற்கு வந்துவிடும்.  

நாளாக ஆக,  வீட்டில் வைக்கப்படும் கொலுவிற்கே முக்கியத்துவம் கொடுத்தோம். இருந்தாலும் கோயிலுக்குச் செல்வது தொடர்ந்தது. குடும்ப சூழலால் தஞ்சைக்கு வந்தபின்னரும் நவராத்திரியின்போது கோயில்களுக்குச் செல்வது இன்னும் தொடர்கிறது. வீட்டுக்கொலுவும், தெருக்கொலுவும் இன்னும் மனதில் நினைவுகளாக உள்ளன. 


கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
கும்பேஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு புதிய கொலு பொம்மைகளைக் கூடுதலாகக் காட்சிப்படுத்தியிருந்ததைக் காணமுடிந்தது. முதல் நாள் சிறப்பு அலங்காரமாக அம்மன் தவக்கோலத்தில் இருந்தார். 







முன் மண்டபத்தில் வலது புறத்தில் விநாயகர், பூதகணங்களுடன் அம்மையப்பன், வள்ளி தெய்வானையுடன் முருகன், லிங்கத்திருமேனிக்கு முருகன் விநாயகர் பூஜை, தேவியர், அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். 





இடது புறத்தில் சிம்மவாஹினி, சரஸ்வதி, லட்சுமி, அம்மையப்பன், அலமேலு, தசாவதாரம் ஆகியோர் உள்ளனர்.





வழக்கமாக உள்ள இந்திர சபை எப்போதும் இருக்கும் இடத்திலேயே காணப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்படும் பொம்மைகளை புதிதாக நந்திக்கு வலப்புறத்திலும், நவக்கிரக சன்னதி அருகிலும் வைத்துள்ளனர்.
 





ஒவ்வோராண்டும் சன்னதியில் இரு புறமும் நவராத்திரிக்காக தற்காலிகமாக வைக்கப்படுகின்ற கடைகளைக் காணமுடிவில்லை. பெரிய அளவிலான பொம்மைகளை அதிகமாகக் காணமுடியவில்லை. நடுத்தர அளவிலும், சிறிய அளவிலும் உள்ள பொம்மைகளே அதிகமாக உள்ளன. 

கொலு பார்க்க வருகின்ற கூட்டம் ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே வருவதைக் காணமுடிந்தது. கொலு பார்த்தபின் கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் தரிசித்துவிட்டு மன நிறைவோடு திரும்பினேன்.

 
 
நன்றி :
புகைப்படங்கள் கும்பேஸ்வரர் கும்பேஸ்வரர் கோயில் கொலுக்கடைகளில் கடையினரின் அனுமதியோடு எடுக்கப்பட்டன. அனுமதித்த அவர்களுக்கு நன்றி.

நவராத்திரி தொடர்பான முந்தைய பதிவு :  
கும்பேஸ்வரர் கோயில் நவராத்திரி 17.10.2015

17 அக்டோபர் 2018 அன்று மேம்படுத்தப்பட்டது.

06 October 2018

கடிதம் செய்த மாற்றம் : தினமணி

நான் எழுதிய கடிதம் செய்த மாற்றம் என்ற தலைப்பிலான கட்டுரை 3 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 



“எங்கள் மகள் எதுவாக இருந்தாலும் ஏன், எப்படி என்று கேள்விகள்  கேட்டுக்கொண்டே இருப்பாள். தன் கருத்தையும் கூறுவாள். அவளுக்கு 10 வயதுதான் ஆகிறது. அவளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பினைப் படிக்கின்ற ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரி. தந்தையான ஜேம்ஸ் அதனை ஆமோதிக்கின்றார். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் என்று பார்ப்போமா?

கெல்லோக் நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப்பொட்டலத்தின் அட்டையில் இருந்த ‘குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. உடனே தன் பெற்றோர்களிடம் அவள் இவ்வாறாக ‘அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த அவளுடைய பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.

கடிதத்தை ஆர்வத்துடன் காண்பிக்கும் மாணவி,
 அவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள்.
"என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர்கள் என்றோ பாதுகாவலர்கள் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்."

தந்தையுடன் மாணவி
விடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.

“எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது.”

புதிதாக மாற்றம் பெறவுள்ள அட்டை
கடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், "என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது " என்றாள்.

"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். 'அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள் என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்" என்றும் அவளுடைய தாயார் கூறினார்.

நிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது  அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.

ஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. சில நேரங்களில் நம்மில் மிக இளையவராக இருப்பவர்கள் எந்த ஒரு குறையையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா? தினமணி, 7 அக்டோபர் 2018
29 நவம்பர் 2018இல் மேம்படுத்தப்பட்டது.