முகப்பு

03 November 2018

அயலக வாசிப்பு : செப்டம்பர் 2018

செப்டம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், சன், இன்டிபென்டன்ட் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளைக் காண்போம்.

பிரிக்சிட்டிற்குப் பிறகு பிரிட்டனின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முகத்தான் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற பிரிட்டன் பிரதமரான தெரசா மே ஏற்றுமதி செய்தது நடனம் தொடர்பான மீம்ஸ்களையே. முதன்முதலில் தென்னாப்பிரிக்கப் பள்ளியில் அவர் நடனமாடியபோது சமூக வலைத்தளங்களில் அது வைரலானது. தொடர்ந்து மறுபடியும் இரண்டாவது முறை நடனமாடினார். இவரைப்போல இதற்கு முன்பாக நடனமாடிய பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் இரும்புப்பெண்மணி என அழைக்கப்பட்ட மார்கரெட் தாச்சர், தொழிலாளர் கட்சியின் தலைவர் நீல் கின்னாக், பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரஸ்காட், பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஜான்ரெட்வுட், கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்னி விட்டிகொம்பே, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், பிரிட்டிஷ் அரசியல்வாதியும் சிறந்த வரலாற்றறிஞருமான போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான நீல் ஹேமில்டன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எட் பால்ஸ் ஆகியோர் ஆவர். அனைவரும் பல நிலைகளில் பல சூழல்களில் நடனமாடியுள்ளபோதிலும் இதில் சிறப்பிடம் பெறுவது தெரசா மே மட்டுமே. அவரை மிஞ்ச முடியுமா?

ரயிலில் பயணிக்கும்போது யாரும் இருக்கை தராத நிலையில், தன் ஆறு மாதக் குழந்தைக்குப் பாலூட்டிய தாய் தன் கோப உணர்வுகளை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார். லண்டனிலிருந்து விக்போர்ட் என்ற இடத்திற்குச் சென்றபோது சுமார் அரை மணி நேரம் நின்று கொண்டே தன் குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார். தன் கோப உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு கடைசியாக அவர் வைத்த வேண்டுகோள் : "அடுத்த முறை ரயிலில் குழந்தையோடு யாராவது இருப்பதைப் பார்த்தீர்களென்றால், நல்ல உடல்நிலையோடு இருப்பவராக இருப்பின், உங்களுடைய இருக்கையை அவருக்குக் கொடுங்களேன்!"

கிரிமியாவில் உள்ள சபாரி பார்க்கிற்கு சுற்றுலா சென்றோருக்கு ஒரு பயமுறுத்தும் ஆச்சர்யம் காத்திருந்தது. அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் ஒரு இளம் சிங்கம் ஏறியது. சில நாள்களுக்கு முன்னர்தான் அந்த பார்க்கில் ஒரு பெண்மணி ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டார். ஆனால் இந்த சிங்கம் சற்றே வித்தியாசமாக நடந்துகொண்டது. சிங்கம் ஏறியதே என்று பயப்படவேண்டாம். அனைத்தும் நன்றாகவே முடிந்தது. அது அங்கிருந்த யாரையும் தாக்கவில்லை. மாறாக அங்கிருந்த பயணிகளை அன்போடு நக்க ஆரம்பித்தது. தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அதன் முகத்தை வைத்து தேய்க்க ஆரம்பித்தது. பயணியர் அந்த சிங்கத்தோடு விளையாட ஆரம்பித்துவிட்டனர். சிங்கத்தோடு அவர்கள் செல்பி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுபோல் தினமும் யாரும் மிக அண்மையில் ஒரு சிங்கத்திற்கு நெருக்கமாக எளிதில் வரமுடியாது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். இந்த பார்க்கில் கடந்த ஆண்டு அரிய வகை வெள்ளைச் சிங்கங்கள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

நவம்பர் 2017இல் பிறந்தபோது அவள் (Vanellope Wilkins) உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஏனென்றால் அவளுக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது. தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே அதன் இதயத்தின் ஒரு பகுதி உடலுக்கு வெளியே வளர்வதை அறியமுடிந்தது. அப்போது பெற்றோரிடம் கர்ப்பத்தைக் கலைத்துவிடக் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வகையில் இங்கிலாந்தில் பிறந்த முதல் குழந்தை இதுதான். 10 இலட்சத்திற்கு ஐந்து குழந்தைகள் இவ்வாறு பிறக்குமாம். குழந்தையைக் காப்பாற்ற பல முயற்சிகள் மருத்துவமனையில் உள்ள குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன. பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் அவளுக்கு முதல் அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. முதலில் லெய்செஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் நாட்டிங்காமில் வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஒன்பது மாதம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற அக்குழந்தை தற்போது குணமடைந்து. வீடு திரும்பியுள்ளது. அவளுடைய இரு சகோதரர்களுடனும், பெற்றோருடனும் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

மின்சாரத்தில் ஓடுகின்ற சைக்கிள் (e-bike) தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கார்டியன் இதழின் மூத்த வாசகர் ஒருவர் அவ்விதழில் கடிதம் எழுதியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் தன்னுடை 87ஆவது வயதில் வாங்கிய அந்த சைக்கிளில்தான் அவர் தினமும் பயணிக்கின்றார். சற்று உயர்ந்த மலைப்பகுதியில் வசிப்பதாகவும் அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கும் பிற இடங்களுக்குச் செல்வதற்கும் மிகவும் சிரமமாக இருந்ததாலும் மின்சார சைக்கிளை ஓட்ட ஆரம்பித்துள்ளார். உயரமான பகுதிகளில் ஓட்டிச்செல்ல இந்த சைக்கிள் மிக உதவியாக இருப்பதாகக் தன்னைவிட இளையவர்கள் பெடலை அழுத்திக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது அவர்களை இவர் மிகவும் வேகமாகக் கடந்துவிடுவதாகவும் கூறுகிறார். இந்த சைக்கிள் பயணம் அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, வாழ்வில் சுறுசுறுப்பாக இயங்க உதவியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். பிரிட்டிஷ் சைக்கிளிங்க்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும், குறிப்பாக மின்சார சைக்கிள் பயணம் வயதானவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கைக்கு உதவும் என்றும் அவர் கருதுகிறார்.

பிலிப்பைன்சில் மேரிஸ் என்பவருடைய வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யச் சென்றார் ஜோலிபி உணவக நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர். அதைப் பார்த்த, அண்டை வீட்டாரான 92 வயதுள்ள பெண்மணி அவரிடம் அந்த பையில் என்ன இருக்கிறது என்று கேட்டு, தனக்கு அது தேவையென்றும், அதனை ஆர்டர் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அப்பெண்மணிக்கு உதவ விரும்பிய அவர் வேறு எந்த விளக்கமும் தராமல், உடனடியாக அங்கிருந்தே தொலைபேசியில் அந்த மூதாட்டிக்காக ஆர்டரை அனுப்பியுள்ளார். அவருடைய அச்செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. அந்த நெகிழ்ச்சியான தருணத்தை தன் முகநூல் பக்கத்தில் மேரிஸ் பகிரவே, அந்த புகைப்படமும், அவருடைய செயலும் எங்கும் பரவி அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

கங்கை இன்னும் என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை. கங்கையில் உள்ள 84 படித்துறைகளைச் சுற்றிக் காண்பிக்க விரைவில் சொகுசுக்கப்பல்கள் களமிறக்கப்படவுள்ளனவாம். தெய்வக்குற்றம், சுற்றுச்சூழல், உள்ளூர் தொழில் நசிவு, நீர் மாசுபாடு, போன்ற பல காரணங்களால் சொகுசுப் பயணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஐக்கிய நாடுகள் அவையில் தன்னுடைய மூன்று மாத கைக்குழந்தையுடன் (Neve Te Aroha) வந்து வரலாறு படைத்துள்ளார் நியூசிலாந்தின் பிரதமரான ஜெசின்தா அர்டர்ன் (Jacinda Ardern). நியூயார்க்கில் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த முதல் பெண் தலைவர் இவரேயாவார். ஜுன் 21இல் அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆகஸ்டு முதல் வாரத்தில் பணிக்குத் திரும்பிய இவர், அதற்கு முன் ஆறு வாரங்கள் பேறுக்கால விடுப்பில் இருந்தார். தொடர்ந்து தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி வருகிறார். அவருடைய அக்குழந்தையானது தாயுடன் ஆறு நாள் பயணமாக நியூயார்க் வந்துள்ளது. பிரதமராக இருந்துகொண்டே குழந்தையை வளர்க்க தன்னால் முடிகிறது என்றும், இனி வரும் நாள்களில் அனைத்துப் பெண்களும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு பணியினையும் மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இதற்கு முன் பணியில் இருக்கும்போது குழந்தை பெற்றவர் என்ற பெருமை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ ஆவார்.

10 comments:

  1. கங்கை தகவல் கவலை தரும் தகவல்...

    ReplyDelete
  2. சிங்கம் பற்றிய செய்திமிரட்டல். இரண்டு குழந்தைச் செய்திகள். இரண்டும் வெவ்வேறு வகை. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  3. அரிய செய்திகள் தந்தமைக்கு நன்றி.

    கங்கையிலும் பிரச்சனையை உருவாக்குகின்றார்களா ?

    ReplyDelete
  4. அறிய இயலாத பல அரிய செய்திகளை வழங்கியமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  5. நாய் அருகில் வந்தாலேயே பயப்படுமெனக்கு சிங்கம் பயணிகளைநக்கிக் கொடுத்தது என்னும் செய்தி ஆச்சரியம் தந்தது

    ReplyDelete
  6. அனைத்து செய்திகளும் அரிய செய்திகள்.
    மேல் நாட்டிலும் கை குழந்தையுடன் இருக்கும் பெண்மணிக்கு அமர இடம் கொடுக்கஒருவரும் முன் வரவில்லை என்பதை படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.

    மக்கள் கூட்டம் இப்போதே அதிகமாய் இருக்கிறது காசிக்கு. 84 கட்டத்திற்கும் சொகுசு கப்பலில் சுற்றி காண்பிக்கபடும் என்றால் இனி சொல்லி மாளாது.

    ReplyDelete
  7. சிங்கம் செய்தி பிரமிக்க வைக்கிறது.

    மற்ற அயலக செய்திகளும் சிறப்பு. உங்கள் மூலம் நாங்களும் படிக்க முடிகிறது. நன்றி.

    ReplyDelete
  8. அனைத்துத் தகவல்களும் அருமை, இன்றஸ்ரிங்கானவை.

    ReplyDelete
  9. அனைத்துச் செய்திகளும் அருமை..சிங்கம் செய்தி ஆ என்று தோன்றியது. இதயம் வெளியே வந்து அப்புறம் இப்போது நன்றாக இருக்கும் குழந்தை நீடுழி வாழ வாழ்த்துவோம்.

    கீதா

    ReplyDelete
  10. (Thro email: subrabharathi@gmail.com)
    Please read anandakumars latest book on this title. Ncbh publishing.

    ReplyDelete