முகப்பு

05 January 2019

பிருந்தாவனம் பூங்கா

பல திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த பிருந்தாவன் பூங்காவிற்கு ஆகஸ்டு 2017இல் சென்றிருந்தோம். இதற்கு முன் 1980களில் கோயம்புத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் சென்றிருந்தபோதிலும் இப்போதைய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. 






















பிருந்தாவனம் தோட்டம் கர்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடுத்து, அதளை அழகுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழகான பூங்காவாகும். மாண்டியாவில், ஸ்ரீரங்கப்பட்டின வட்டத்தில், மைசூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 143 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

1927இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1932இல் நிர்மாணப்படி முடிவுற்றது. கிருஷ்ணராஜசாகரா படிநிலைப் பூங்கா என அழைக்கப்பட்ட இப்பூங்கா 60 ஏக்கருக்கும் மேல் மூன்று படிநிலைகளைக் கொண்டு, குதிரை லாட வடிவில் முடிவடைகிறது. உலகின் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களில் (the most beautifully laid out terrace gardens) இதுவும் ஒன்றாகும். 

காஷ்மீரில் முகலாயர் பாணியில் அமைந்துள்ள ஷாலிமர் பூங்காவின் மாதிரியையொட்டி அமைக்கப்பட்டது. இதனை சிறப்புற செயல்படுத்தியவர் அப்போதைய மைசூர் அரசின் திவானாக இருந்த சர் மிர்சா இஸ்மாயில் ஆவார். அழகான வடிவத்திற்காகவும், பலவகையான செடிகளுக்காகவும், வண்ண மயமான விளக்கொளிக்கழகிற்காகவும் திகழும் இப்பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இரவில் விளக்கொளியில் பூங்காவின் அழகினை ரசித்துக்கொண்டே இருக்கத்தோன்றும். 

இப்பூங்கா முதன்மை வாசல், தெற்கு பிருந்தாவன், வடக்கு பிருந்தாவன் மற்றும் குழந்தைகள் பூங்கா என்ற நான்கு பிரிவாக அமைந்துள்ளது. 

முதன்மை வாசல்
புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் வடிவில் அமைக்கப்பட்டது. இரு புறமும் ரோஜாப்பூ தோட்டங்கள் உள்ளன. 

தெற்கு பிருந்தாவன்
காவிரி சிலைக்கருகே இப்பகுதி உள்ளது. சிலைக்கு முன்னே உள்ள காவேரியம்மா சர்க்கிளில் பெரிய அளவிலான நீர்வீழ்ச்சி (water fountain) உள்ளது. அங்கு பல வகையான வித்தியாசமான செடி வகைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு காணப்படுகின்ற நீர்ச்சாரல்கள் கண்களுக்கு இதமாக உள்ளன. மாலை நேரத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இவ்விடம் காணப்படும்.

வட பிருந்தாவன்
நான்கு அழகான படி நிலைகளில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளன. வரிசையாக செடிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் காண்போரைக் கவர்கிறது. சிறிய நீர் வீழ்ச்சிகள் ஆங்காங்கே உள்ளன. வட பிருந்தாவனுக்கும், தெற்கு பிருந்தாவனுக்கும் இடையே காவிரியாறு ஓடுகிறது. பார்வையாளர்கள் படகுப்பயணம் செய்ய வசதியுள்ளது.

குழந்தைகள் பூங்கா
தெற்கு பிருந்தாவன் அருகே வலப்புறத்தில் குழந்தைகள் பூங்கா உள்ளது. குழந்தைகள் விளையாடவும், பொழுதைப் போக்கவும் அதிகமான வசதிகள் அங்கு உள்ளன.

விளக்கொளியில் பூங்கா
புதன்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு பூங்கா மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பூங்காவைப் பற்றிய இணைய தளங்களில் விளக்கொளி நேரம் மாறிமாறி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்துகொள்வது நலம்.

மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மைசூரிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கும், வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

மைசூரிலிருந்து பேருந்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் பிருந்தாவன் பூங்கா வந்துசேர்ந்தோம். டிக்கட் எடுக்க வரிசையாக கூட்டமாகக் காத்திருந்தோம். சூரியன் மறையும் வேளையில் நுழைந்த நாங்கள் ரசித்துக்கொண்டே உள்ளே சென்றோம். அதிகமான மேகக்கூட்டம் காரணமாக சூரியன் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் மாலையின் உணர்வு மனதிற்கு இதமாக இருந்தது. பூங்காவினைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. அகன்றும் உயரமாகவும் வளர்ந்திருந்த மரங்கள், பரந்து விரிந்து கிடக்கின்ற புல் தரை, அழகான பூக்கள், இலைகளைக் கொண்ட செடிகள் போன்றவை மிகவும் ரம்மியமாக இருந்தன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அவ்வளவு கூட்டத்தையும் அந்த பூங்கா எதிர்கொண்டதைக் காணும்போது வியப்பாக இருந்தது.  நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமானது. 

மாலையில் இருந்த அழகினை விட மாறுபட்ட அழகினை தொடர்ந்து ரசித்தோம். தொடர்ந்து மின்னொளியில் பூங்காவின் அழகைக் கண்டு வியந்தோம். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகள், படிகளில் நீர் இறங்கி வரும் விதம் பூங்காவின் ரசனையை நன்கு வெளிப்படுத்தியது. மின்னொளியில் அது இன்னும் அருமையாக இருந்தது. அங்கிருந்து கிளம்ப மனமின்றி திரும்பினோம், மைசூரை நோக்கி.  

நன்றி: 
விக்கிபீடியா
http://horticulture.kar.nic.in/brindavan.htm






நன்றி:
உடன் வந்ததோடு புகைப்படம் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி மற்றும் எங்கள் இளைய மகன் சிவகுரு 

கர்நாடக உலாவில் இதற்கு முன் நாம் பார்த்தவை : 
சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர்  
மைசூர் :  மெழுகுச்சிலை அருங்காட்சியகம் 
மைசூர் மிருகக்காட்சி சாலை


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 

16 comments:

  1. படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. மிக அழகிய படங்கள் ஐயா...ரசித்தேன்

    ReplyDelete
  3. மிகவும் அழகான கோணத்தில் படங்கள் எடுக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள்.

    நான் 1983 பிறகு 1987 பார்த்தது இப்பொழுது நிறைய மாற்றங்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நிறைய தடவை போய் இருக்கிறேன்.
    மிக அழகாக படம் எடுத்து விவரங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. தகவல்க அருமை ஐயா. படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன...

    நாங்கள் பார்த்ததற்கும் இப்போதையதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பது போல் தெரிகிறது ஐயா...

    ReplyDelete
  6. பிருந்தாவனம் என்றாலே நந்த குமாரனின் ஞாபகம் வந்து விடுகிறது!

    ReplyDelete
  7. ஓரிரு முறை கண்டு ரசித்திருக்கிறேன்
    படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  8. படங்களும் விவரங்களும் அழகு சார்.

    ReplyDelete
  9. பிருந்தாவன் தோட்டம்பற்றிய இப்பதிவு என் நை என்நினைவலைக்கு இழுத்துச் சென்றது பின்னூட்டமாககூறுவதுகடினம் ரசித்தேன்

    ReplyDelete
  10. அழகிய படங்களுடன் தகவல்களும் அருமை ஐயா...

    ReplyDelete
  11. அலைபேசியில் புகைப்படம் எடுக்கும் போது நேர்வாக்கில் எப்போதும் எடுக்க வேண்டாம். அது கவர்வதாக இருக்காது. நீங்க இயல்பான வாழ்க்கையில் இருந்து இது போல வெளியே கிளம்பியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்னும் தொடர வேண்டும். காரணம் உங்கள் வீட்டில் நிச்சயம் எதிர்பார்ப்பு இருக்கக்கூடும் அல்லவா?

    ReplyDelete
  12. படங்கள் வெகு அழகாக இருக்கின்றன. விவரங்கள் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. பார்த்து பல ஆண்டுகள் ஆகிப் போச்சு..

    ReplyDelete
  14. பல முறை நானும் பிருந்தாவனத்தை கண்டு ரசித்துள்ளேன். ஆயினும் இதன் சரித்திரம் படிக்க சுவராஸ்யமாக இருந்தது . நன்றி.

    ReplyDelete
  15. புகைப்படங்கள் விளக்கம் போலவே அருமை வாழ்த்துக்களுடன்

    ReplyDelete