முகப்பு

30 March 2019

நந்தி திருமணம் : 16 மார்ச் 2019

16.3.2019 கோயில் உலாவின்போது பயண நிறைவாக காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமானின் திருமண நிகழ்வினைக் காணும் பேற்றினைப் பெற்றோம்.

பல ஆண்டுகளாக இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்பியபோதிலும் அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. விழா நிகழ்வினை நேரில் பார்த்தபோது நம் இல்ல நண்பர்களின், உறவினர்களின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதுபோல இருந்தது. மணமகள் வரும்போது மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருத்தல், அடுத்து மணமகன் வருகையை எதிர்பார்த்தல், மணமக்களுக்கு மாலை எடுத்துவரல், அபிஷேகப் பொருள்களையும், விடுபட்ட பொருள்களையும் கோயில் பணியாளர்களும், பக்தர்களும், மாற்றி மாற்றி எடுத்துவரல், அப்போது அவர்களிடம் காணப்படுகின்ற ஒரு விதமான ஏக்கம், தவிப்பு, மாலைகளையும், திருமாங்கல்யத்தையும் அணிவிக்கும் முன்பாக கூடியுள்ளோரின் முன்பாக அதனை வானை நோக்கிக் காண்பித்து, அனைத்து திசையிலுள்ளோரும் காணும்படி செய்தல் என்பன உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. வெயில் மறைய ஆரம்பித்தபோது மழபாடி சேர்ந்தோம். திருமணம் நிறைவுற்றபோது இரவு சுமார் 9.00 மணியாகியிருந்தது. அங்கிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வந்தடைந்தோம். வாழ்வின் மறக்கமுடியாத ஒரு நாளாக இந்நாள் எனக்கும், உடன் வந்தோரும் அமைந்திருந்தது. நாங்கள் பெற்ற இறையனுபவத்தைக் காண உங்களையும் அழைக்கிறேன், வாருங்கள்.  முதலில் கோயிலுக்குச் செல்வோம், பின்னர் திருமணத்தைக் காண்போம்.

திருமழபாடி வைத்தியநாதசாமி கோயில்
அரியலூர் மாவட்டத்தில், திருவையாற்றுக்கு வடமேற்கில் 16 கிமீ தொலைவிலும், புள்ளம்பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள திருமழப்பாடியில்  வைத்தியநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாம் முன்னர் சென்றுள்ளோம். இங்குள்ள இறைவி சுந்தராம்பிகை ஆவார். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற இத்தலம்  கொள்ளிடத்தின் வடகரையில் முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்ததால் ‘வடகரை மழபாடி’ என்றும், மழவர்கள் என்கிற பழங்குடியினர் வாழ்ந்ததாலும்,  சிறந்த போர்வீரர்களான மழவர்களின் சேனைகள் தங்கியிருந்ததாலும் ‘மழவர்பாடி’ என்றும் அழைக்கப்பட்ட இத்தலம் பின்னாளில் திருமழப்பாடி என்றானது. மார்க்கண்டேய முனிவருக்கு சிவபெருமான் காட்சி தந்து, மழு எனும் படையை தாங்கி ஆடல் செய்தருளிய தலம் இது என்பதால் ‘மழுபாடி’ என்றும் கூறப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேஸ்வரர், தனது மனைவி சுயசாம்பிகையுடன் காட்சி தருகிறார்.





  









நந்தியெம்பெருமான் பிறப்பும், திருமணமும்
திருவையாறு அருகே அந்தணபுரம் என்னும் ஊரில் வசித்த சிலாத முனிவர் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்ததால் குழந்தைப்பேற்றிற்காக திருவையாற்றுள் உறையும் ஐயாறப்பரை நோக்கித் தவம் செய்தார். இறைவன் அவர் முன் தோன்றி ஒரு யாகம் செய்யக் கூறுகிறார். யாகபூமியை உழும்போது கிடைக்கின்ற பெட்டகத்தில் ஒரு புத்திரன் இருப்பான் என்றும் அவன் 16 வயது வரை மட்டுமே உன்னுடன் இருப்பான் என்றும் அருளினார். அவ்வாறு பெற்ற குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டார். அவன் 14 வயதிற்குள் அனைத்து வித்தைகளையும் கற்றான். தந்தை, தன் மகனின் அற்ப ஆயுள் பற்றி கவலையடைந்தார். ஆயுளின் உண்மையை உணர்ந்த செப்பேசன், ஐயாறப்பர் கோயிலில் உள்ள குளத்தில் இறங்கி தவம் செய்தபோது, இறைவன் காட்சி தந்ததோடு மட்டுமன்றி 16 பேறுகளையும் தந்தார். பின்னர் அவன் இறைவன் மீது கொண்ட பற்றால் பல உபதேசங்களை அறிந்து சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியைப் பெற்றதோடு, ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் பெற்றார். இவரே நந்தியெம்பெருமான் என்றழைக்கப்படுகிறார். 
உரிய நேரத்தில் பரமேஸ்வரன் அவருக்கு திருமணம் செய்ய விழைகிறார். திருமழபாடியில் உறையும் வைத்தியநாத சுவாமியை சாட்சியாக வைத்து ஐயாப்பரே நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகைக்கும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை திருமண நிகழ்வு
ந்தணர்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  விழாவின்போது சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்றவற்றால்  நந்தியெம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று  மாலையில்  திருவையாறு கோயிலில் அவருக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பெறுகிறது. அடுத்து சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் ஐயாறப்பர்  அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடிப் பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வாண வேடிக்கை, இன்னிசைக் கச்சேரியுடன் புறப்படுகிறார்.  தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்று மாலை திருமழபாடி வந்தடைகின்றார். அங்கு இறைவனும், இறைவியும் மங்கல வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைக்கின்றனர்.  அவர்களை வரவேற்று கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வருகிறார்.
திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்றவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடிப்பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாறப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட பக்தர்கள் அட்சதை தூவ திருமணம் நடைபெறுகிறது. தாலி கட்டும் நிகழ்ச்சியுடன் திருமணம் நிறைவுறுகிறது. திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார்கள். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். இறைவனே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததால் நந்தியெம்பெருமான் திருமணத்தைக் காணும் இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணத் தடைகள் நீங்கிக் காலத்தே திருமணம் கைகூடி வரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ‘நந்தி’ கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்’ என்ற சொல் வழக்கு இன்றளவும் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கிறது.

நன்றி
வழக்கம்போல உலா ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்றபோது, எங்களின் விருப்பப்படி பயணத்திட்டத்தில் நந்தி திருமண விழாவினைச் சேர்த்த முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

23 March 2019

கோயில் உலா : 16 மார்ச் 2019

16.3.2019 கோயில் உலாவின்போது காவிரியின் தென்கரைத் தலங்களில் நான்கையும்,  (சக்கரப்பள்ளி), (திருப்பாம்புரம்), (செருகுடி), (திருச்சோற்றுத்துறை) மங்களாசாசனம் பெற்ற தலங்களில் ஒன்றையும் (சிறுபுலியூர்) கண்டோம். பயண நிறைவாக காவிரியின் வடகரைத் தலங்களில் ஒன்றான திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமானின் திருமண நிகழ்வினைக் காணும் பேற்றினைப் பெற்றோம். நாங்கள் பெற்ற இறையனுபவத்தைக் காண உங்களையும் அழைக்கிறேன், வாருங்கள். 

சக்கரப்பள்ளி (சக்கரவாகேஸ்வரர்-தேவநாயகி)




சிவபுராணத்துடன் எங்கள் பயணம் ஆரம்பித்த தலம் ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சக்கராப்பள்ளியாகும். இது சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளது. திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்ற தலமாகும். சக்கரவாளப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் தலங்கள் சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்பனவாகும். திருவையாற்றினைப் போலவே இக்கோயில்களிலும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. விரைவில் சப்தஸ்தான விழா நடைபெறவுள்ள நிலையில் கோயில் அதற்கான ஆயத்தான நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது.

திருப்பாம்புரம் (பாம்புரேஸ்வரர்-பிரமராம்பிகை)
அடுத்து  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருப்பாம்புரம் சென்றோம். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணம் காரைக்கால் சாலையில், பேரளத்திற்கு மேற்கே கற்கத்தியை அடுத்து 2 கிமீ தொலைவில் உள்ளது.  நாகராஜன் வழிபட்ட  இத்தலத்தில் பாம்பு கடித்து இறப்பவர்கள் இல்லையென்றும், வீடுகளில் பாம்பு வந்தாலும் சாதாரணமாகப் போய்விடும், கடிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். ஆதிசேஷன் உலகைத்தாங்கும் சோர்வு நீங்கி நல்ல வலிமை பெற இறைவனருளை வேண்டி, உலகிற்கு வந்து மகாசிவராத்திரி நாளில் முதற்காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் காலத்தில் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு உடல் நலம் பெற்ற பெருமையுடையது. வழிபாட்டிற்குப் பின் காலை உணவை திருப்பாம்புரத்தில் உண்டோம். அங்கிருந்து அருகில் உள்ள செருகுடி நோக்கிக் கிளம்பினோம்.

செருகுடி (மங்களேசுவரர்-மங்களநாயகி)

அங்கிருந்து ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற செருகுடி சென்றோம். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டத்தை அடுத்து வலப்புறம் பிரியும் நாச்சியார்கோயில் கும்பகோணம் சாலையில் கடகம்பாடியை அடுத்து வலப்புறமாகப் பிரியும் சாலையில் 3கிமீ தொலைவில் உள்ளது.  அங்காரகனுக்கு தனி சன்னதி உள்ளது.  செவ்வாய் வழிபாடு சிறப்பானது.

சிறுபுலியூர் (சலசயனப்பெருமாள்-திருமாமகள் நாச்சியார்)

குழுவில் வந்த அன்பர் ஒருவர் அருகில் சிறுபுலியூர் இருப்பதாகவும், அதில் சிறிய வடிவில் கிடந்த நிலையில் உள்ள பெருமாளைக் காணலாம் என்று கூறியதன் அடிப்படையில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற சிறுபுலியூர் சென்றோம். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகேயுள்ள கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. புஜங்க சயனத்தில் மிகவும் சிறிய உருவத்தில் பெருமாள் உள்ளார். தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத மூலவர்.  ஒரு காலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச் சமாதானப்படுத்த பெருமாள் பால சயனத்தில் எழுந்தருளியதாகக் கூறுவர். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் மதிய உணவிற்காக கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டோம். மதிய உணவிற்குப் பின் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். தொடர்ந்து கோயில் உலாவில் நாங்கள் பார்க்க விடுபட்ட திருச்சோற்றுத்துறையை நோக்கிக் கிளம்பினோம்.

திருச்சோற்றுத்துறை (தொலையாச்செல்வர்-அன்னபூரணி)
திருச்சோற்றுத்துறை  ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற, திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றுறாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் கண்டியூருக்குக் கிழக்கே 2 கிமீ தொலைவில் உள்ளது. திருவையாறு சப்தஸ்தானத் தலங்கள் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,  திருக்கண்டியூர், திருப்பூந்திருத்தி, திருநெய்த்தானம் என்பனவாகும். திருவையாற்றினை மையமாகக் கொண்ட இவ்விழாவின் தொடக்கமாக நந்தியெம்பெருமான் திருமணம் நாங்கள் பயணித்த அதே நாளில் நடைபெற்ற நிலையில் அங்கிருந்து திருமழபாடிக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது.   

திருமழபாடி (வைத்தியநாதர்-சுந்தராம்பிகை)


ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருமழபாடி அரியலூர் மாவட்டத்தில், திருவையாற்றுக்கு வடமேற்கே 16 கிமீ தொலைவில் உள்ளது. கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நந்தியெம்பெருமான் சுயசாம்பிகை திருமணம் நடைபெற்றது. முதலில் இரு கலசங்களை (ஒன்று நந்தி, மற்றொன்று சுயசாம்பிகை) வைத்து யாகம் உண்டாக்கி அக்னி வளர்க்கின்றனர். தொடர்ந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பெருமானுக்கு பூணூல் அணிவிக்கப்படுகிறது. இருவருக்கும் காப்பு அணிவிக்கப்பட்டது. நிகழ்வின்போது மாற்றும் மாலையையும், தாலியையும் உயரப்பிடித்துக் காண்பிக்கும்போது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது பெண் மாப்பிள்ளை மாலை மாற்ற, மணமகன், மணமகளுக்கு தாலி அணிவிக்க திருமண நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது. முன்பொரு கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுவந்துள்ளோம். ஒரு மகாமகத்தையே நினைவுபடுத்திய அவ்விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம். இரவு 9.00 மணிவாக்கில் திருமண விழா நிறைவுற்று, திருவையாற்றில் இரவு உணவுக்குப் பின் சுகமாக தஞ்சாவூர் வந்து சேரந்தோம்.
முனைவர் வீ.ஜெயபால் தலைமையில் கலந்துகொண்டோர் 
திருச்சோற்றுத்துறையில் எங்களுடன் இணைந்துகொண்டோர்
நன்றி
வழக்கம்போல உலா ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

துணை நின்றவை
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
ஆ.எதிராஜன், 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு, ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, ஐந்தாவது பதிப்பு, 2002
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

16 March 2019

காமரசவல்லி கார்க்கோடேஸ்வரர் கோயில்

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகே காமரசவல்லியில் உள்ள கார்க்கொடேஸ்வரர் கோயிலுக்கு 20 ஜனவரி 2019 அன்று சென்றிருந்தோம். அங்கிருந்த கோஷ்ட சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. அவற்றைக் காண அன்போடு அழைக்கிறேன்.

சுந்தரசோழனால் (பொ.ஆ. 956-973) கட்டப்பட்ட இக்கோயில்  பல்வேறு காலங்களில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. 



 திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதவல்லி எனப் பலவாறாக அழைக்கப்படுகின்ற இத்தலத்தில் உள்ள இறைவன் கார்க்கொடேஸ்வரர் என்றும் சௌந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர்கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இறைவியான பாலாம்பிகை தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர், முருகன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.


நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள சிறிய கோபுரத்தின் வழியாக உள்ளே நுழையும்போது முன்மண்டபம் காணப்படுகிறது. மூலவர் கருவறை, விமானத்துடன் அமைந்துள்ளது.  

கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, உமையொருபாகன், அடிமுடிகாணா அண்ணல், பைரவர், கொற்றவை உள்ளிட்டோரின் சிற்பங்கள் உள்ளன. இச்சிற்பங்களைப் பார்த்தபோது கரந்தட்டாங்குடி வசீஷ்டேஸ்வரர் கோயில் நினைவிற்கு வந்தது. அக்கோயிலின் கோஷ்டத்திலும் இவ்வாறான சிற்பங்களைக் காணமுடியும்.   












இனிமையான மன நிறைவான தரிசனத்திற்குப் பின் ஏலாக்குறிச்சியில் உள்ள வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கலமாதா கோயிலுக்குச் சென்றோம். சற்றே இருட்ட ஆரம்பித்தபோதிலும் இனிய தரிசனத்தை நிறைவு செய்த அங்கிருந்து புறப்பட்டோம். 



நன்றி : 
ஏலாக்குறிச்சியில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்த நிகழ்விற்குச் சென்றபோது, கொற்றவை உள்ளிட்ட கோஷ்ட சிற்பங்களைக் காணக் கருத்து கூறிய திரு அரும்பாவூர் செல்வபாண்டியன்
உடன் வந்து, புகைப்படங்கள் எடுக்க உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி