முகப்பு

09 March 2019

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் : மங்கை ராகவன், சி.வீரராகவன், சுகவன முருகன்

தமிழக வரலாற்றில் அதிகம் விவாதிக்கப்படாத துறைகளில் ஒன்றான லகுலீச பாசுபதத்தைப் பற்றி அரிய தகவல்களுடன் களப்பணி அடிப்படையிலும், ஒப்புநோக்கு அடிப்படையிலும் பல அரிய தரவுகளை முன்வைக்கிறது மங்கை ராகவன், சி.வீரராகவன், சுகவன முருகன் ஆகிய பெருமக்கள் இணைந்து எழுதியுள்ள தமிழகத்தில் லகுலீச பாசுபதம்.  இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டமைந்துள்ளது. 


தமிழக லகுலீசர் என்ற முதல் முதன்மைத்தலைப்பின்கீழ் லகுலீசர் தோற்றம், தமிழக லகுலீசர் சிற்பங்கள், லகுலீசர் குடைவரைகள், தமிழகத்து பாசுபத மடங்கள், தமிழகத்து காரோகணக் கோயில்கள், ஆதீசண்டேசன் லகுலீசனே, அரிய சிவ வடிவங்கள், கட்வாங்கம், காசுகளில் லகுலீசர் ஆகிய உட்தலைப்புகள் உள்ளன.

இரண்டாவது முதன்மைத்தலைப்பான மொழிபெயர்ப்புப்பகுதிகளில் லகுலீச பாசுபத மரபின் எழுச்சி  மற்றும் லகுலீசரின் தென்னிந்தியப் பயணம் (Lakulisa in Indian Art and Culture: M.C.Choubey நூலிலிருந்து), யோக நிலைகளில் மந்திரங்களின் பயன்பாடு ஓர் பாசுபத சாட்சியம் (ஜெரார்டு ஓபெர்ஹாம்மெர், தமிழில் சுருக்கிய வடிவம்), சைவ சமயப் பிரிவுகள் ஓர் ஒப்பீடு (சைவம்/பாசுபதம், காளமுகர்கள்/கபாலிகர்கள்), ஜம்புகேசுவரத்தில் ஒரு பாசுபத கிருஹஸ்த மடம் (A family of Pasupata Grahsthas at Jambukeswaram: Dr T.V.Mahalingam). மத்த விலாசம் (மகேந்திர விக்ரமவர்மனின் நகைச்சுவை நாடகமான மத்த விலாசம் : தமிழாக்கம் மயிலை.சீனி.வேங்கடசாமி, 1950) ஆகிய உள் தலைப்புகள் உள்ளன.

மூன்றாவது பகுதியாக உள்ள பின்னிணைப்புகளில் சண்டேசுர நாயனார் புராணம் (சேக்கிழாரின் பெரிய புராணம்), மதுரா தூண் கல்வெட்டு (பிராகிருதம் கலந்த சம்ஸ்கிருத கல்வெட்டு. மதுரா நகரின் இரங்கேஸ்வரர் கோயிலில் இருந்தது, தற்போது முரளிலால் ராஜ்பால் சாலையில் உள்ள உத்திரப்பிரதேச அரசின் அருங்காட்சியகத்தில் உள்ளது), தருமபுரி ஏரிக் கல்வெட்டு (கன்னட கல்வெட்டு. பழைய தருமபுரியின் ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது), சிவாதசேகரன் ராஜராஜசோழனின் தஞ்சை கல்வெட்டில் திருப்பதியம் பாடியோர் (வித்துவான் வே.மகாதேவன் கட்டுரை), சிவனின் திருவடிவங்கள் (கூர்ம புராணத்தின்படி 28 அவதாரங்கள், சிவனின் 25 மகேசுவர மூர்த்தங்கள், 64 சிவ வடிவங்கள்), சிவாகமங்கள் சுவடிகளும் பதிப்பும் (முனைவர் டி கணேசன் கட்டுரை), பல பகுதிகளில் கிடைத்த லகுலீசர் சிற்பங்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு (புவனேஸ்வரம், பாதாமி, பாங்கிராம், எல்லோரா, காந்தாரம், மதுரா, கம்போடியா, நேபாள, மஹாகூடம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், எலிபெண்டா, காசி, புஷ்பகிரி, அல்மோரா, மாள்வா) ஆகியவை உள்ளன.

"பாசுபத விரதம் என்றால் என்ன என்று இலிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தன் உடலை விபூதியால் குளிவித்து, விபூதியணிந்து பரமனிடம் பசுபோல் நின்று வேண்டிடில் பாசுபதம் கிட்டும் என்பர்...மனிதர்க்கு அறிவும் ஆற்றலும் நிறைந்து உள்ளன. ஆனால் அவன் தனது ஆற்றலை செலுத்த இயலாது தனது இந்திரியங்களினால் கட்டப்பட்டு வலுவிழந்து வாழ்கிறான். இதையே பந்தம் கட்டு என்றும் அழைக்கிறோம். இப்பந்தங்களால் கட்டப்பட்டு வாழ்வதையே பசு என்றழைக்கிறோம். பசுக்களாக வாழும் நாம் நமது முழு வலிமையுடன் திகழ வேண்டுமெனில் இப்பந்தங்களை அறுத்துத்தள்ள வேண்டும். அந்த நிலையை நமக்கு வழங்க பதியாகிய சிவபெருமானால்தான் முடியும். அவர் நமக்கு காட்டியதுதான் பாசுபதயோகம்.....பாசுபத தெய்வமான பசுபதி குஜராத் மாநிலத்தில் காயாரோஹணம் என்னும் இடத்தில் லகுலீசராகப் பிறந்தார். அவர் ஒரு சிவலிங்கத்தில் இருந்து வெளிப்படுவதாகக் காணப்படுகிறது." என்று லகுலீசரைப் பற்றியும் பாசுபதத்தைப் பற்றியும் அறிஞர் திரு இரா.நாகசாமி, அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

“…..முற்கால பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் பொ.ஆ.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் பாசுபதம் தமிழகத்தில் வேர்பிடிக்கத் தொடங்கி இருக்கவேண்டும்…..இச்சிறு நூல் தமிழகத்தில் கிடைத்த லகுலீச சிற்பங்கள் பற்றிய அறிமுக அளவில் அதனைத் தொடங்கி இருக்கிறது…..” என்று முன்னுரையில் கூறும் நூலாசிரியர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வீசிய குஜராத் பெரும்புயல் என்று இதனை வர்ணிக்கின்றனர்.

தமிழகத்தில் மாம்பழப்பட்டு, மாரங்கியூர், பேரிங்கூர், சித்தலிங்கமடம், கப்பூர், கண்டம்பாக்கம், ஓமந்தூர், வடமருதூர், ஜம்பை, கீழூர், நெடிமோழையனூர், திருவாமாத்தூர், ஆனங்கூர் (விழுப்புரம் மாவட்டம்), ஆலகிராமம், மேல்பாக்கம், (காஞ்சிபுரம் மாவட்டம்), அவலூர்  (வேலூர் மாவட்டம்), சிறுவந்தாடு (கடலூர் மாவட்டம்), பூண்டி, இளங்காடு (திருவண்ணாமலை மாவட்டம்), திருவொற்றியூர் (திருவள்ளூர் மாவட்டம்), மணக்கால், திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்), திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டம்), பேரூர் (கோயம்புத்தூர் மாவட்டம்), அரிகேசநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) ஆகிய இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள லகுலீசர் சிற்பங்களைப் பற்றி படங்களுடன் இந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது.  பின்வரும் குறிப்பிடத்தக்க கருத்துகளை இவற்றில் காணமுடிகிறது.
திருவாரூர் (எம சண்டீசர் எனப்படும் லகுலீசர்)

மாம்பழப்பட்டு

மணக்கால்

திருவாமாத்தூர்

திருவெண்காடு

வட மருதூர்

புவனேஸ்வரம், பாதாமி, பாங்கிராம், எல்லோரா

அல்மோரா,  சித்தூர் ராஜஸ்தான், எல்லோரா
 ஆதி சைவ மரபில் இருந்து தோன்றியவை காளமுகம், பாசுபதம், கபாலிகம் ஆகும். பாசுபதம் பிரிந்து லகுலீச பாசுபதமானது ஆதியில் பசுபதிவழிபாடு இருந்ததை சிந்து வெளி முத்திரைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது….பொ.ஆ.முதல் இரண்டு நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியாவின் வட பகுதிகளான ஆந்திர கர்நாடகத்தின் பிரதேசங்களில் லகுலீச பாசுபதம் வேர்விட்டிருக்கவேண்டும். அடுத்து ஓரிரு நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் பாசுபத வடிபாடானது கணபதி, லகுலீச வழிபாடுகளுடன் அறிமுகமாகியிருக்க வேண்டும்..  (ப.13, 14)

தமிழகத்தில் இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.  சில கோயில்களில் சண்டிகேசுவரருக்குப் பதிலாக லகுலீசரே சண்டிகேசர் என தனிச் சன்னதி, தனிப்பகுதியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ..தமிழகக் குடவரைக் கோயில்களில் அரிட்டாபட்டி மற்று தேவர்மலை இரண்டும் லகுலீசர் சிற்பங்கள் உள்ள குடவரைகள் ஆகும். (ப.15)

திருவாரூர் கோயிலில் மூத்த சண்டேசருடன் எமதண்டீசுவரர் என்ற தனிச்சிற்றாலயத்தில் வணங்கப்படும் எமதண்டீசுவரர் லகுலீசரே. (ப.37)

விழுப்புரம், மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் லகுலீசரின் சிற்பங்கள் ஜடாமுனி என்றே அறியப்படுவது வியப்பை அளிப்பதாகும். (ப.55)
திருவெண்காடு சிவன் கோயிலில் யோக குருவாக அடையாளம் காணப்படுகிறது. (ப.71)

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள மணக்கால் கோயிலில் இருக்கும் சண்டிகேசர் சிற்ப அமைதியில் லகுலீசரை பூரணமாகக் கொண்டுள்ளார்.  (ப.75)

சிற்பங்களை முழு பக்க புகைப்படங்களாக அமைத்து அதன் எதிரில் அந்தந்த சிற்பங்களைப் பற்றி நுணுக்கமாக விவாதித்துள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். தமிழகத்தில் உள்ள சிற்பங்களோடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் காணப்படுகின்ற சிற்பங்களை ஒப்புநோக்குக்காகத் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. ஆய்வாளர்களும், அறிஞர்களும் பயனுறும் வகையில் மிகவும் செறிவாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அமைந்துள்ள முழுமையான ஒரு நூலாக இதனைக் கொள்ளலாம். நூலாசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 

நூல் : தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
ஆசிரியர்கள் : மங்கை ராகவன், சி.வீரராகவன், சுகவன முருகன்
பதிப்பகம் : திரு சுகவன முருகன், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம் (தொலைபேசி 9842647101, மின்னஞ்சல் : muruguarch@gmail.com)
ஆண்டு : செப்டம்பர் 2017, முதல் பதிப்பு
விலை : ரூ.600
(புகைப்படங்கள் : மேற்படி நூலிலிருந்து, நன்றியுடன்)

19 comments:

  1. நூலைப்பற்றிய தங்களது விளக்கம் படங்களுடன் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. லகுலீசபாசுபதம்ப் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது, இருக்கும் இடங்கள், படங்கள் என்று சிறப்பான பதிவு.
    நூல் விமர்சனம் அருமை. நன்றி.

    ReplyDelete
  3. லகுலீசர் - இந்தப் பதத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    நல்லதொரு நூல் அறிமுகம்.

    ReplyDelete
    Replies
    1. தமிழிலில் நான் படிக்கின்ற மிகப் பழமையான புத்தக வார்த்தைகளைக்குறித்து அவ்வவ்போது கூகுளில் சோதிப்பதற்காக தேடிப்பார்ப்பதுண்டு. சிலவற்றுக்கு சரியான தேடுதல் இருக்காது. அப்படிப்பார்க்கும் இந்த வார்த்தைகள் இனி கூகுளில் முக்கியமாக பார்க்கப்படும்.

      Delete
  4. வணக்கம் சகோதரரே

    லகுலீச பாசுபதம் நூலின் சிறப்பு பற்றி விரிவாக கூறியமைக்கு மிக்க நன்றி. லகுலீசர் சிற்பங்கள் பற்றியும், தமிழகத்தில் அவைகள் இருக்கும் இடங்கள் பற்றியும் அருமையாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். படங்கள் அனைத்தும் சிறப்பு. நிறைய தகவல்களை படிக்க தந்தமைக்கும், அரிதான இந்த நூல் பற்றி அறிய தந்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. அருமையான நூல் அறிமுகம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. லகுலீச பாசுபதம் - புதியதாக ஒரு விஷயத்தினை உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

    புத்தக அறிமுகம் சிறப்பு. நன்றி ஐயா.

    ReplyDelete
  7. பாசுபத விரதம் பற்றிய விளக்கம் அருமை ஐயா...

    ReplyDelete
  8. அரிட்டாபட்டி, தேவர் மலை குறித்தும் அதன் சிற்பங்கள் குறித்தும் கேள்விப் பட்டிருக்கிறேன். அரிட்டாப்பட்டி சிற்பம் என்னுடைய ஏதோ ஒரு பதிவில் போட்டிருக்கிறேன். நினைவில் வரவில்லை. ஆனால் ஜடாமுனி தான் லகுலீசர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஜடாமுனி கோயில் தெரு என்னும் ஒரு தெருவே மதுரையில் உண்டு. இப்போதும் அந்தப் பெயரில் இருக்கானு தெரியலை. நான் மதுரையை விட்டு வந்து 40 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.

    ReplyDelete
  9. திருவெண்காடு யோககுருவும் நினைவில் இருக்கிறார். ஆனால் அவர் தான் லகுலீசர் என்பதை அறியவில்லை. லகுலீச பாசுபதம் பிறந்த இடம் காஷ்மீரம் என நினைத்திருந்தேன். தங்கள் பதில் இருந்து குஜராத் எனத் தெரிய வருகிறது. அங்குள்ள சிவன் கோயில்களில் இதைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை. அதோடு அப்போது குடும்ப வாழ்க்கையில் மும்முரம் அதிகம்! இதற்கெல்லாம் நேரம் இல்லை. இன்னும் படிக்க ஆவலுடன் காத்திருக்கேன்.

    ReplyDelete
  10. 64 சிவ வடிவங்கள் குறித்தும் என்னுடைய ஆன்மிகப்பயணம் பக்கத்தில் பதிவுகள் எழுதி இருக்கிறேன். வடமாநிலங்கள் சந்நியாசிகள் லகுலீச பாசுபதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். இன்றைய பதிவில் வெங்கட் வெளியிட்டு இருக்கும் ஓர் நிழற்படம் அதை நினைவில் கொண்டு வந்தது.

    ReplyDelete
  11. லகுலீசர் இதுவரை அறியாத வார்த்தை... இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.

    தகவல்கள் அருமை புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா

    கீதா

    ReplyDelete
  12. lots of nice photos, but no English.

    ReplyDelete
  13. லகுலீச பாசுபதம் அறிமுகத்திற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  14. வணக்கம் முனைவர் ஐயா !

    அரும்பெரும் நூற்றகவல் அள்ளி அளித்தீர்
    பெரும்பயன்தான் உங்கள் பிறப்பு !

    அறியாத விடயங்கள் அறிந்தோம் மிக்க நன்றி

    வாழ்க நலம் !

    ReplyDelete
  15. அறியாத விடயங்கள் அறிந்தோம் மிக்க நன்றி

    ReplyDelete
  16. thank you. Been wanting to see this image more clearly!

    ReplyDelete
  17. Image 6th from top looks like he could go with a SaptaMatrika group.

    ReplyDelete
  18. பேரூர் கோவிலில் உள்ளது லகுலீசர் என்ற செய்தி தெரியவந்தது நன்றி....

    ReplyDelete