முகப்பு

27 April 2019

டெலிகிராப் இதழில் சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதழின் பக்கங்கள்

26 ஏப்ரல் 2019இல் வெளியான The Hindu நாளிதழில் “போட்டி இதழின் பக்கங்களை ஆஸ்திரேலிய நாளிதழ் அச்சிட்டிருந்தது” (Australian newspaper prints rival pages, The Hindu, 26 April 2019, p.18) என்ற செய்தியைக் காணமுடிந்தது. போட்டி நாளிதழான Sydney Morning Herald இதழின் பக்கங்களிலிருந்து இரண்டு பக்கங்கள் அப்படியே Daily Telegraph இதழில் வெளியாகியிருந்ததை அச்செய்தியில் காணமுடிந்தது. டெய்லி டெலிகிராப் ட்விட்டரில் இரு நாளிதழ்களும் சிட்னியில் ஒரே இடத்தில் அச்சிடப்படுகின்றன. அச்சுப்பணியின்போது இத்தவறு நிகழ்ந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக வருந்துகிறோம் என்று அவ்விதழ் கூறியிருந்தது. இந்த இரு இதழ்களுமே ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகின்ற இதழ்களாகும். இச்செய்தியைப் பார்த்ததும் பிற இதழ்களின் தளங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 

டெய்லி டெலிகிராப் இதழில் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பக்கங்கள்
(தலையங்கப்பக்கமும், தலையங்க எதிர்ப்பக்கமும்)


“அச்சுப்பிழை : மர்டோவின் இதழான டெய்லி டெலிகிராப், அதன் போட்டி இதழான சிட்னி மார்னிங் ஹெரால்டின் இரு பக்கங்களைக் கொண்டிருந்தது” என்ற தலைப்பில் (Printing error: Murdoch's Daily Telegraph includes pages from rival Sydney Morning Herald, The Guardian, 25 April 2019) கார்டியனில் செய்தி வெளியாகியிருந்தது. ரூபர்ட் மர்டோவின் இதழான டெய்லி டெலிகிராப் அதன் வாசகர்களுக்கு ஒரு முற்போக்குச் சிந்தனையை இன்று தந்துள்ளது. அவர்கள் இன்று காலை அவ்விதழை வாசிக்கும்போது அதில் சிட்னி மார்னிங் ஹெரால்டிலிருந்து சில பக்கங்களைக் கண்டார்கள். ஹெரால்டின் தலையங்கப்பக்கத்தில் வெளியாகியிருந்த Anzac Day பற்றிய கட்டுரை பழமைவாத டெய்லி டெலிகிராப் வாசகர்களுக்கு  ஒரு குழப்பத்தைத் தந்திருக்கலாம். அதனருகே டெலிகிராப்பின் gossip செய்திகளுடன் Syndney Confidential இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் உலக அழகியின் பெரிய அளவிலான புகைப்படம் அதில் இருந்தது. அதே பக்கத்தில் ஹெரால்டின் obituary செய்திகளும் இடம் பெற்றிருந்தன.   Anzac day செய்தி தவறாக இடம்பெற்றதைப் பற்றி ஹெரால்டின் உரிமையாளர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. அது எப்படி நடந்தது என்றும் அவர்களால் கூறமுடியவில்லை. பின்னர்தான் இரு நாளிதழும் ஒரே இடத்தில் அச்சாகின்ற நிலையில் இந்த அச்சுப்பிழை நடந்திருக்கும் என்பதை உணர்ந்தனர். ஹெரால்ட் இதழ் ப்ராட்ஷீட் வடிவில் இருந்திருந்தால் இவ்வாறான தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இரு இதழ்களுக்கும் மேம்படுத்தப்பட்ட வடிவு தரப்பட்டபோது, 15 மில்லியன் டாலர் தொகையை மிச்சப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஒரே இடத்தில் அச்சிட ஒத்துக்கொண்டனர். அச்சகப்பொறுப்பாளர், “இன்றைய நகரப்பதிப்புகளை அச்சிடும்போது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. பிந்தைய மெட்ரோ பதிப்புகளில் அத்தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. இதுபோன்ற தவறு இனி நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும்” என்று கூறினார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் இதனை மிகவும் மென்மையாக எடுத்துக்கொண்டதோடு, “டெலிகிராப் இதழின் வாசகர்கள் இன்று எங்கள் இதழின் தலையங்கப்பக்கத்தினை ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். பின்னர் அத்தவறு கண்டறியப்பட்டபின் அடுத்தடுத்த பதிப்புகளில், பாதிப்பு ஏதுமின்றி, சரிசெய்யப்பட்டது” என்று கூறியது.
தவறாக வெளியானதை உணர்த்தும் வகையில் 
pressfrominfo தளத்தில் வெளியான புகைப்படம்

“ஆஸ்திரேலிய நாளிதழ், அதன் போட்டியிதழின் பக்கங்களை தவறுதலாக அச்சிட்டது” (Australia's Daily Telegraph prints rival's pages by mistake BBC News, 25 April 2019) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்த பிபிசி நியூஸ், டெலிகிராப் அத்தவறுக்காக மன்னிப்பு கேட்டதைப் பற்றிக் கூறியிருந்தது. பருவ நிலை மாற்றத்திற்கான நடவடிக்கையைப் பற்றிய ஒரு கடிதமும் அதில் வெளியாகியிருந்தது. பல வாசகர்கள் அத்தவறினை சுட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். ஹெரால்ட் இதழாளர் ஒருவர், “இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஹெரால்ட் இதழின் சில பக்கங்கள் டெலிகிராப் வாசகர்களுக்குக் கிடைத்த போனஸ்” என்றார்.
வாசகர்கள் இக்குழப்பம் தொடர்பாக தம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். ஒருசிலர் அச்சுச்செலவினைக்குறைக்க இதுவும் ஒரு வாய்ப்பு என்று கூறியிருந்தார். இத்தவறால் பணியாளர் பணியிழக்க நேரிடும் என்றார்.
ஒரே இடத்தில் அச்சாகும்போது இவ்வாறான தவறுகள் ஏற்படுவது இயல்பு. இருப்பினும் இரு மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இதழ்களில் இவ்வாறாக செய்தி வெளியாகும்போது வாசகர்களிடம் வியப்பு மேம்பட்டதை அனைவரும் உணரமுடிந்தது. பிற இதழ்களும் இச்செய்தியினைப் பற்றி விரிவாக அலசியிருந்தன.

சிட்டி மார்னிங் ஹெரால்ட் 1831 முதல், ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்து வெளிவருகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து நெடுநாள் தொடர்ந்து வெளிவருகின்ற நாளிதழ் என்ற பெருமையைக் கொண்டது இவ்விதழ். இதன் அச்சு வடிவம் காம்பாக்ட் வடிவில் வாரத்திற்கு ஆறு நாள்கள் வெளியாகிறது.
டெய்லி டெலிகிராப் 1879 முதல், ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்து வெளிவருகிறது. டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்ற இவ்விதழை Tele என்றும் அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் ஆறாவது புகழ்பெற்ற நாளிதழ் என்ற பெருமையினைக்கொண்டது.


நன்றி:
The Hindu
The Guardian
BBC News
The Daily Telegraph
The Sydney Morning Herald
Wikipedia
Pressfrominfo 

10 comments:

  1. மிகவும் சுவாரஸ்யமான தவறு! இருபத்திரிகைகளும் அதை எளிதாக எடுத்துக் கொண்டது பெரிய விஷயம்.

    ReplyDelete
  2. தங்களால்தான் இந்த விடயங்களை அறிய முடிகிறது நன்றி.

    நிகழ்ந்த தவறுகளை பக்குமாக கடந்து செல்வது ஒரு கலை

    ReplyDelete
  3. இரு இதழ்கள் ஒரே இடத்தில் அச்சாவதும், பிழை ஏற்படுவதும் வியப்பைத் தருகின்றன ஐயா

    ReplyDelete
  4. ஸ்வாரஸியமாக இருக்கிறதே நிகழ்வு. தவறும்தான். இரு பெரிய இதழ்களும் மிக அழகாக இதை க் கையாண்டிருக்கிறார்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளாமல் மிக எளிதாக மென்மையாகக் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. //“இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஹெரால்ட் இதழின் சில பக்கங்கள் டெலிகிராப் வாசகர்களுக்குக் கிடைத்த போனஸ்” என்றார்.//

    இதுவும் நல்ல கருத்துதான்.

    ஒரே இடத்தில் இரு பத்திரிக்கை அச்சிடும் போது மிகவும் கவனம் தேவை என்று தெரிகிறது.
    இனி இந்த தவறு நேராமல் கவனமாய் இருப்பார்கள்.

    ReplyDelete
  6. சிட்னி மார்னிங் ஹெரால்ட்டின் பெருந்தன்மையான போக்கு வியப்பூட்டுகிறது. நல்ல முன் மாதிரி. சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. வேடிக்கையான நிகழ்வு. Very rare too. இங்கிருக்கிற மாதிரி சொந்தத்தில் அச்சகம் வைத்துக் கொள்ள மாட்டார்களோ?..

    ஒரு கற்பனை:

    ஹெரால்ட்: "ஏம்ப்பா.. அரைப் பக்கத்துக்கு மேட்டர் குறையுது... உங்கிட்டேயிருந்து ஏதாவது சப்ளை செய்ய முடியுமா?
    டெலிகிராப்: ஓ.கே. தர்றோம். ஆனா எங்களுக்கு இப்படி நேர்ந்தாலும் நீங்க தரணும். சரியா"
    ஹெரால்ட்: டபுள் ஓ.கே.ப்பா. எப்பா யாருக்கு தேவைனாலும் இப்படி மாத்திக்கலாம்.
    டெலிகிராப்: அதுவும் சரித்தான். அப்படியானும் நம்ம ரெண்டு பேர்கிட்டே இருக்கற rivalry இல்லாம போனா சரி.

    ReplyDelete
  8. உங்களைப் போன்ற ஆளுமைகள் அயலுறவுத்துறை சார்ந்த பணியில் இருந்துருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. இந்த மாதிரியான சுவாரஸ்யமான நிகழ்வுகள் உங்கள் மூலமாகத்தான் தெரிய வருகிறது. பெரிய விஷயங்களைக்கூட சிறு விஷயமாக எடுத்துக்கொள்கிற பெருந்தன்மை தான் இவர்கள் இன்னும் உயரத்திலேயே புகழுடன் இருப்பதற்கான காரணமோ?

    ReplyDelete