முகப்பு

27 July 2019

பேராசிரியர் இரா.பாவேந்தன் (13 ஏப்ரல் 1970 - 20 ஜுலை 2019)

முனைவர் இரா.பாவேந்தன் மூன்று மாதங்களாக கல்லீரலின் செயலிழப்புக்கும், நம் போன்றோரின் நலவிருப்புக்கும், மருத்துவர்களின் முயற்சிக்குமிடையே நடந்த போராட்டத்தில் 20 ஜுலை 2019 அன்று காலை இன்னுயிரை ஈத்தார். அன்று மாலை திருச்சி கீழ்க்கண்டார்கோட்டையில் நடைபெற்ற அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது அங்கு வந்திருந்த பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள் பாவேந்தனின் உழைப்பைப் பற்றிப் பேசியவை என்றும் என் நினைவில் இருக்கும். தமிழ்த்தாகம் கொண்டு வாழ்ந்தவர் தன் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே என எண்ணி நாங்கள் வருந்தினோம். அவரது மனைவி திருமதி ஜெயலட்சுமி, குழந்தைகள், தம்பி மருத்துவர் இரா.  அமுதக்கலைஞன் மற்றும் குடும்பத்தாருக்கு என்னுடைய மற்றும் எங்கள் குடும்பத்தாருடைய சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.  



தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக, 1990களின் இடையில் அறிமுகமானவர் திரு இரா. பாவேந்தன். பழகுவதற்கு மிகவும் இனியவர். எப்பொழுதும் புன்னகையுடன் இருப்பார். எழுத்து, வாசிப்பு என்ற நிலையில் நன்கு விவாதிப்பார். 


ஆய்வாளராக இருந்தபோது மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவருடைய நன்மதிப்பினையும் பெற்றவர். தற்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழாய்வுத்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் எங்கள் நண்பர் முனைவர் சு. மாதவன் அவர்களும் இரட்டையர்களாக இணைந்து அக்காலகட்டத்தில் பல நற்பணிகளைச் செய்தனர். தமிழியல் ஆய்வு, தமிழ்ப்பல்கலைக்கழக ஆய்வு மாணவர் மன்றம், மாணவர் உரிமைகளுக்கான போராட்டம், மாணவர் விடுதி கட்ட போராட்டம், விடுபட்ட பணியிடங்களை மீட்பதற்கான போராட்டம், ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் என்பனவற்றுக்கிடையே இருவரும் இணைந்து தமிழியலாய்வில் பங்காற்றினர். 

1990களின் இறுதியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் எழுதிய தமிழில் அறிவியல் இதழ்கள் (சாமுவேல் ஃபிஷ்கறீன் பதிப்பகம், கோவை, 1998) நூலினை அன்பளிப்பாகத் தந்தார். அதிகமான முதல்நிலைத் தரவுகளைக் கொண்டது அந்நூல். இத்துடன் கீழ்க்கண்ட நூல்களையும், பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.







  •  சமூகப்புரட்சியாளர் ஜோதிராவ்ஃபூலே (சிந்தனைப்பேரவை, கோயம்புத்தூர், 1994)
  •  ஆதிதிராவிடன் இதழ்த்தொகுப்பு (சந்தியா பதிப்பகம், சென்னை, 2008, தமிழ் வளர்ச்சித்துறையின் 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு பெற்றது)
  • பாழ்நிலப்பறவை லீலாகுமாரி அம்மா (கோ.நாகராஜ் உடன் இணைந்து, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008)
  • கறுப்பு சிகப்பு இதழியல் (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009),
  • திராவிட சினிமா (வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், உடன் இணைந்து, கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2009)
  • திராவிட நாட்டுக்கல்வி வரலாறு (கயல்கவின் பதிப்பகம், சென்னை, 2013)

அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு உருவாக்கம் பெறும் நிலையில் தட்டச்சு, திருத்தம், மேம்படுத்தல் தொடர்பாக எங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அதன்மூலம் எங்கள் குடும்பத்தவர் அனைவரோடும் நன்கு பழகி, குடும்ப நண்பரானார். அவருடனான கலந்துரையாடல் என்பது எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்கும். Institute of Asian Studies வெளியிட்ட Archaeological Atlas of the antique remains of Buddhism in Tamil (1997) என்ற நூலைப் பற்றி அவர் மூலமாகவே நான் அறிந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் முனைவர் பட்ட ஆய்வேட்டினை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த பின்னர்தான் (1999) இந்நூல் அவர் மூலமாக எனக்கு அறிமுகமானது.  
கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தபின்னர் நட்பு தொலைபேசியிலும், அலைபேசியிலும் தொடர்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் முகநூலில் தமிழியல் ஆய்வுகள் (Tamil Studies) என்ற பக்கத்தினைத் தொடங்கினார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர் என்ற நிலையில் கல்வி, ஆய்வு அனுபவங்களை அத்தளத்தில் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அந்த பக்கத்தில் ஆரம்ப காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், தமிழ்ப்பல்கலைக்கழகக் காலாண்டிதழான தமிழ்க்கலை மற்றும் Tamil Civilization தொடர்பான பதிவுகளை எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பேராசியர்களுடனான என் அனுபவத்தையும் அப்போது பகிர்ந்தேன்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆய்வில் ஆர்வமுடைய மாணவர்கள் பழைய மாணவர்கள் சங்கம் ஒன்றை அமைத்து அதன்மூலமாக பற்பல ஆய்வுகளுக்கு வித்திட வேண்டும் என்று அண்மையில் பேசிக்கொண்டிருந்ததை நண்பர்கள் பகிர்ந்துள்ளதைப் பார்க்கும்போது தமிழாய்வின்மீதான அவருடைய ஆர்வத்தினை உணரமுடிகிறது. அவருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசும்போதோ எதையாவது சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும், இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும், தமிழுலகிற்கு நம்மாலான பங்களிப்பினைத் தொடர வேண்டும், என்று கூறிக்கொண்டே இருப்பார். சிறந்த கல்வியாளர். திராவிட இயக்கச் சித்தாந்தவாதி. சமூக ஆர்வலர். சாதிக்க நினைக்கத் துடித்த ஓர் அரிய இளைஞர், ஆய்வாளர், பேராசிரியர் என்ற பன்முகப்பரிமாணம் கொண்டவரை தமிழ் ஆய்வுலகம் இழந்துவிட்டது. அவருடைய கனவுகள் மெய்ப்படுத்தப்பட இனிவரும் ஆய்வாளர்களும், நண்பர்களும் அவருடைய வழித்தடத்தில் பயணிப்போம்.

தகவல் உதவி : 
விக்கிபீடியா
முனைவர் சு.மாதவன் மற்றும் நண்பர்களின் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகள் 

என் மூத்த மகன் ஜ.பாரத் எழுதிய முகநூல் பதிவு

நினைவேந்தல்
திரு பாவேந்தனின் நினைவேந்தல் திருச்சியில் 18 ஆகஸ்டு 2019இல் நடைபெறவுள்ளதாகவும், உரிய நேரமும், இடமும் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவருடைய சகோதரர் திரு அமுதக்கலைஞன் (9443217556) வாட்ஸ்அப் வழியாகத் தெரிவித்துள்ளார். அதில் பங்குபெற விரும்பும் நண்பர்கள் அவரைத்  தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

12 comments:

  1. அகால மரணம். ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  2. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களும்...

    ReplyDelete
  3. பேரிழப்பு
    ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  4. தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி நல்ல மனிதர். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும்.. அவரின் குடும்பத்திற்கு எதையும் தாங்கும் மனோபலத்தை இறைவன் தர பிரார்த்திக்கிறேன்.

    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. உணர்வார்ந்த....அறிவார்ந்த...நட்பார்ந்த பதிவு இது.
    எதையும் மனம்திறந்து வெடிப்புறப் பேசுவான் பாவேந்தன்.
    எப்போதும் சொந்த விசயம் பேசவே மாட்டான்.
    ஒவ்வொரு முறை பேசும்போதும் பற்பல ஆய்வுத் திட்டங்களையும் எழுதிவரும் நூல்களையும் பற்றியே பேசுவான்.

    "நீ என்னடா செய்துகொண்டிருக்கிறாய் ?மாதவா ! " எனக் கேட்பான்.
    பல திட்டங்களைச் சொல்லி இதைச் செய்.அதைச் செய் என்பான்.

    சொல்லிக் கொண்டே இருக்கலாம் அவனைப் பற்றி....

    என் நினைவுகள் சுழல்கின்றன.... என் தலை சுற்றுகிறது அவனை நினைக்க நினைக்க...

    தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் எங்களைத் தனியே யாரும் பார்க்க முடியாது.... இணைந்தே திரிவோம்....

    "எங்கே மாதவன்..?" என்று என்னைக் கேட்பார்கள்.
    " எங்கே பாவேந்தன்..? " என்று அவனைக் கேட்பார்கள்...

    அப்படி இணைந்து சிந்தித்து, ஆய்வு செய்துகொண்டே போராடிய காலம் என்றும் மறக்கவியலாதது.

    இன்று என்னைத் தனியே விட்டுவிட்டு....

    தமிழோடு கலந்தாய் !
    தமிழுள்ளவரை இருப்பாய்...!!

    ReplyDelete
  6. ஆழ்ந்த இரங்கல்கள்.....

    ReplyDelete
  7. அவரது குடும்பத்தினர்களுக்கு எனது இரங்கல்கள்
    அந்த குழந்தையை நினைத்தால் மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கல்கள்.
    அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  9. தமிழ் ஆய்வுலகிற்கு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  10. தங்களோடு பல்லாண்டுகளுக்கு முன்பு பழகிய நட்பையும் மறவாமல் தொடர்ந்து நினைவு காக்கும் மாண்பு போற்றத்தக்கது. முனைவர் பாவேந்தனின் மறைவு மிகவும் வருந்தத்தக்கது. நீண்ட ஆயுள் ஒன்றுதான் ஒரு மனிதனின் மிகப் பெரிய வரம். அது சிலருக்கே வாய்ப்பதுதான் புரிந்துகொள்ள முடியாத புதிர்.

    -இராய செல்லப்பா (தற்போது நியூஜெர்சியில்)

    ReplyDelete


  11. முகநூலில் இவரைப் பற்றி பலரும் எழுதியிருந்தார்கள். எல்லாமே மேம்போக்காக இருந்தது. முழுமையாக உங்கள் பதிவை வாசித்த பின்பு அவர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்னவொரு அற்புதமான பணியைச் செய்துள்ளார் என்பதே வியப்பாக உள்ளது. உங்கள் மகனின் வார்த்தைக் கோர்வைகள் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற நபர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து விட்டு காலத்தோடு கரைந்து போய்விடுகின்றார்கள். அரசு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அரசும் கவலைப்படுவதில்லை. இது போன்ற நபர்களையும் அங்கீகரிப்பதில்லை. ஆழ்ந்த இரங்கலுடன் கூடிய என் அஞ்சலி.

    ReplyDelete