முகப்பு

06 July 2019

கோயில் உலா : 27 ஏப்ரல் 2019

27.4.2019 கோயில் உலாவின்போது கொங்கு நாட்டிலுள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் அனைத்தையும் ஒரே நாளில் பார்த்தோம். 26.4.2019 இரவு 11.00 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி காலை 5.30 மணியளவில் புன்செய்ப்புளியம்பட்டி சென்று, திருமண மண்டபம் ஒன்றில் சிறிது நேரம் இளைப்பாறினோம். 
 
அங்குள்ள உண்ணாமுலையம்மை உடனமர் அண்ணாமலையார் கோயிலில் எங்களை அழைத்துச்சென்ற ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு சைவ அன்பர்கள் சிறப்பானதொரு வரவேற்பு அளித்தனர். 

 



 அங்கு கோயில் தரிசனம் செய்த பிறகு, அங்கேயே காலை உணவினை முடித்துக்கொண்டு அங்கிருந்து கொங்கு நாட்டுத் தலங்களுக்கு ஒவ்வொன்றாகச் சென்றோம்.

எங்கள் பயணம் காலை அவினாசியப்பர் அவினாசியப்பர் கோயிலிலிருந்து தொடங்கியது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில், பவானி சங்கமேஸ்வரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் நிறைவு செய்தபின் அங்கு மதிய உணவு உண்டோம். கோயிலின் நடை சாத்தியிருக்கும் நேரம் எங்களுக்கு பயண நேரமானது. மாலை கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் பயணத்தைத் தொடங்கி, அங்கிருந்து வெஞ்சமாக்கூடலூர் கல்யாணவிகிர்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அடுத்து கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலை அடைந்தோம். அங்கு தரிசனம் முடிந்தபின் இரவு உணவுக்குப் பின் அங்கிருந்து புறப்பட்டு, தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம். ஒரே நாளில் கொங்கு நாட்டுத்தலங்களைப் பார்ப்பது சற்று சிரமமாக இருந்தாலும் உடன் வந்த சைவ அன்பர்கள் ஒத்துழைத்த நிலையிலும் ஊர்தி ஓட்டுநர் ஆர்வமும் எங்களின் பயணம் சிறப்புற அமைய உதவியது.

அவிநாசி (அவினாசிலிங்கேஸ்வரர்-கருணாம்பிகை)

சுந்தரரால் பாடப்பட்ட, திருப்புக்கொளியூர் என்றழைக்கப்பட்ட இத்தலம் கோயம்புத்தூர்-ஈரோடு சாலையில் உள்ளது. கோயிலின் முன் உள்ள கல்லால் ஆன தீபஸ்தம்பத்தின்கீழ் சுந்தரர், முதலை பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உள்ளன. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு கிமீ தூரத்தில் முதலையுண்ட பாலனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சன்னதியும் உள்ளன.

திருமுருகன்பூண்டி (முருகநாதேஸ்வரர்-ஆவுடைநாயகி)
சுந்தரரால் பாடப்பட்ட, இத்தலம் அவினாசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. சுந்தரத் இவ்வழியே செல்லும்போது இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரின் செல்வங்களைப் பறித்துக்கொண்டதாகக் கூறுவர். இங்குள்ள சண்முகநாதர் சன்னதி சிறப்புடையது. இக்கோயிலில் திருச்சுற்று மண்டபத்தில் எங்கும் இல்லாத புதுமையாக மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, கோயிலைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.   

பவானி (சங்கமேஸ்வரர்-வேதாம்பிகை)

 
சம்பந்தரால் பாடப்பட்ட, திருநணா என்றழைக்கப்பட்ட இத்தலம் ஈரோட்டிலிருந்து 12 கிமீ தொலைவில் பவானியும் காவிரியும் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. ஆடிப்பெருக்கன்று இங்கு நீராடல் சிறப்பாகும். இக்கோயிலில் ஆதிகேசவப்பெருமாள் சன்னதியும் உள்ளது. அதிகமான சன்னதிகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. பவானியும், காவிரியும் கூடும் இடம் மிகவும் அழகாக உள்ளது.

திருச்செங்கோடு (அர்த்தநாரீஸ்வரர்-பாகம்பிரியாள்)
சம்பந்தரால் பாடப்பட்ட, கொடிமாடச்செங்குன்றூர் என்றழைக்கப்பட்ட இத்தலம் ஈரோட்டிலிருந்து 18 கிமீ தொலைவிலும், நாமக்கல்லிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் உற்சவத்திருமேனி மிகவும் அற்புதமாக உள்ளது. சிவத்தலமாக இருந்தாலும் முருகனுக்கு மிகவும் உகந்த தலமாகும். மலைமீதிருந்து காவிரி ஆற்றினைக் காணலாம். இங்குள்ள ஆதிகேசவப்பெருமாள் சன்னதி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையது. மலையில் வித்தியாசமான அனுபவம்.

வெஞ்சமாக்கூடல் (கல்யாணவிகிர்தீஸ்வரர்-மதுரபாஷினி)
சுந்தரரால் பாடப்பட்ட, வெஞ்சமாங்கூடலூர் என்றழைக்கப்பட்ட இத்தலம் கரூர்-அரவக்குறிச்சி சாலையில் 13 கிமீ தொலைவில், சீத்தப்பட்டி ஆறு ரோடு பிரிவில் 8 கிமீ தொலைவில் உள்ளது. இத்தலத்துள்ள இறைவன் ஒரு சமயம், உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவில் இருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார் என்று கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் கூறுகிறது.  

கொடுமுடி (மகுடேஸ்வரர்-பண்மொழிநாயகி)
கொங்கு நாட்டில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட, திருப்பாண்டிக்கொடுமுடி எனப்பட்ட இத்தலம் ஈரோட்டிலிருந்து 39 கிமீ தொலைவில் உள்ளது. சுந்தரர் நமச்சிவாய பதிகம் பாடிய பெருமையுடையது. இத்தலத்தை வழிபட்டால் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூருடைய தரிசனம் கிடைக்கும் என்பர். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி வருகின்ற காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசை மாறிச்செல்கிறது. 

கரூர் (பசுபதீஸ்வரர்-கிருபாநாயகி)

சம்பந்தரால் பாடப்பட்ட, கருவூர் என்றழைக்கப்பட்ட இத்தலம் திருச்சி-ஈரோடு சாலையில் உள்ளது. புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட, எறிபத்த நாயனார் பிறந்த, சிவகாமியாண்டார் வாழ்ந்து தொண்டு செய்த, திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் அவராதத் தலமாகும். மாசி மாதத்தில் ஐந்து நாள்கள் சூரிய ஒளி மூலவர் மீது படுகின்ற பெருமையுடைய தலம்.



நன்றி
ஒரே நாளில் கொங்கு நாட்டுத்தலங்களுக்கு அழைத்துச்சென்ற திரு வீ.ஜெயபால் அவர்களுக்கும், உடன் வந்த குழுவினருக்கும் நன்றி.
புன்செய்ப்புளியம்பட்டியில் காலையில் தங்க இடத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, காலை உணவினையும் வழங்கிய திருநாவுக்கரசு மற்றும் சைவ அன்பர்களுக்கு நன்றி. 

துணை நின்றவை
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
விக்கிபீடியா

19 ஜுலை 2019இல் மேம்படுத்தப்பட்டது

17 comments:

  1. தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமையான ஆன்மீக உலா.
    நாங்கள் இப்படித்தான் பாடல் பெற்ற தலங்களை பார்த்தோம்.
    ஒரு நாளில் எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்ப்போம்.

    நீங்கள் சொல்வது போல் உடன் வருபவர், அழைத்து செல்பவர் இறைவனின் கருணை எல்லாம் சேர்ந்தால் உலா இனிமையாக இருக்கும்.

    நல்ல தரிசனம் உங்கள் தளத்தில் நன்றி.

    ReplyDelete
  3. இந்த மாதிரி உலா இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தினால், விரும்புபவர்களும் சேர்ந்துகொள்வார்களே. வெறும் தரிசனம் என்றில்லாது தலத்தைப் பற்றி நிறைவாக விளக்குவார்களே என்பதால்தான் ஆசை.

    கேள்வி தவறாக இருக்குமோ என்று ஐயம்..உணவு சைவம்தானே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் தொடர்ந்து பல வருடங்களாக இவ்வாறு சென்றுகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் ஒத்த கருத்துள்ள, தொடர்ந்து வரும் அன்பர்களே வருகின்றார்கள். நீங்கள் கூறிய கருத்தும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
      கேள்வியில் தவறில்லை...உணவு சைவம்தான்.

      Delete
  4. புன்செய்ப்புளியம்பட்டிக்குப் பதினைந்து வருடங்கள் முன்னர் வேறொரு காரணத்துக்காகச் சென்றோம். கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆனாலும் அந்தப் பயணத்தை நினைவூட்டியது உங்கள் இந்தப் பதிவு!

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    அருமையான தெய்வீக சுற்றுலா.. கொங்கு தேசத்து அழகான கோவில்களை கண்டு மனம் அகமகிழ்ந்தது. தங்களால் இன்று சிறப்பான இக் கோவில் தரிசனங்களை கண்டுகந்தேன். இந்த மாதிரி குழுக்களுடன் செல்வதில் எல்லா கோவில்களையும் ஒர் நாளில் பார்க்க முடிகிறது என்ற தகவல் தந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை. கோபுர தரிசனங்கள் கண்டு களித்தேன் . பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. குறிப்பிட்டிருக்கும் கோயில்களில் திருச்செங்கோடு மட்டும் போயிருக்கோம். அதுவும் ஆற அமரப் பார்க்கலை! அவசரமாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் உள்ள மற்றக் கோயில்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுமானு தெரியலை.

    ReplyDelete
  7. மிகுந்த சிரமம் தரும் சுற்றுலா.உடலுக்கு அசதி தந்திருக்கும். பேரூர் பட்டீஸ்வரரையும் நீங்கள் காண வேண்டும். மேலைக்காஞ்சி எனப்படும் இந்த தலம் முக்தித்தலமாகும்.

    ReplyDelete
    Replies
    1. பல முறை சென்றுள்ளோம். தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று நீங்கள் கூறியுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில். கொங்குத்தலங்கள் என்ற நிலையில் இந்த உலா அமைந்தது.

      Delete
  8. அவினாசியப்பர் அவினாசியப்பர் கோயிலிலிருந்து தொடங்கியது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில், ........... ஆச்சரியமாக உள்ளது. மூச்சே விடாமல் சென்று விட்டீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. இறையருள் துணையிருக்கும்போது இது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

      Delete
  9. பவானி, திருச்செங்கோடு ஆகிய தலங்களையும் சென்னிமலை,சேலம், ஈரோடு, கஞ்சமலை நாமக்கல் ஆகிய திருக்கோயில்களையும் ஆங்கே
    தரிசித்துள்ளேன்...

    ReplyDelete
  10. சிறப்பானப் பயணம்
    தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  11. அருமையான உலா. படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பு ஐயா.

    கீதா

    ReplyDelete
  12. அவினாசி அவினாசியப்பர் கோவிலுக்கு ஒரு திருமணத்திற்காக சென்றிருந்த போது தரிசனம் செய்தது தான்.. மற்றும் காவிரி கரையில் அமைந்துள்ள கொடுமுடி சிவா விஷ்ணு கோவிலை பார்த்துள்ளேன்.. தங்களது பதிவை பார்த்த பிறகு மற்ற கோவில்களையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.. தங்களது பதிவுக்கு நன்றி.

    ReplyDelete