முகப்பு

02 November 2019

பெரிய புராண நாடகங்கள் ஒரு பன்முகப்பார்வை : வீ. ஜெயபால்

 ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள்-ஒரு பன்முகப்பார்வை என்ற நூலில் வெளியாகியுள்ள என் அணிந்துரையையும், விழா நிகழ்வினையும் இப்பதிவில் காண்போம்.

அணிந்துரை

ஞானியார் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள்-ஒரு பன்முகப்பார்வை என்ற இந்நூல் பெரிய புராணத்தையும், நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு, நாடகம் ஓர் அறிமுகம், பெரிய புராண நாடகங்களும் வரலாற்றுக் களங்களும், காலப் பின்னணி, அரசியல் பின்னணி, சமயப் பின்னணி, சமுதாயப் பின்னணி, நாடகங்களில் நிகழ்வுகளும் கருத்து வெளிப்பாடுகளும், பெரிய புராண நாடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்புகளுடன் அமைந்துள்ளது.


நாடகம்-ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சமயங்களோடும், சமுதாயத்தோடும் நாடகங்கள் கொண்டுள்ள பிணைப்பில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரையிலான நாடக வளர்ச்சி அணுகப்பட்டுள்ளது.
பெரிய புராண நாடகங்களும் வரலாற்றுக் களங்களும் என்ற தலைப்பில் பெரிய புராணத்தின் 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார், கண்ணப்பர், எறிபத்தர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், நந்தனார், மெய்ப்பொருள் நாயனார், பூசலார், இளையான்குடி மாறனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய 11 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு நாடகங்களின் பின்புலத்தில் சுருக்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
காலப்பின்னணியில் கி.பி.400-கி.பி.600, கி.பி.600-கி.பி.660, கி.பி.660-கி.பி.885 என்ற மூன்று பிரிவில் நாடங்களின் தலைமைப்பாத்திரங்களாகச் சித்தரிக்கப்படுகின்ற 11 நாயன்மார்களும் தென்னிந்தியாவில் பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் கருத்துப்பிரச்சாரம் மூலமாக சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. 
ரசியல் பின்னணியில் 63 நாயன்மார்களில் அரசியல் தொடர்புடைய 17 பேரில் எறிபத்தர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், மெய்ப்பொருள் நாயனார், பூசலார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய ஏழு நாயன்மார்களின் கால அரசியல் செல்வாக்கு, அக்கால ஆட்சி, நிகழ்ந்த போர்கள், பிற சமயங்களின் தாக்கம்,  குடிப்பெருமை, தமிழர் வீரம் போன்றவவை, அரசியலை விளக்குவதற்கு கதை முறையும் நாடக முறையும் பழங்காலந்தொட்டே வழக்கில் இருந்துவருகின்ற கண்ணோட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.     
சமயப்பின்னணியில் சமயத்தின் இன்றியமையாமை, சைவத்தின் தொன்மை, சமணம், பௌத்தம், வைதீகம், இனக்குழு சமயம் உள்ளிட்ட சமயங்கள், பிற இலக்கியங்களில் சமயம், சமயங்களுக்கிடையேயான பூசல்கள், சைவ சமயத்திற்கு மன்னர்களின் ஆதரவு, அடியார்களின் பக்தி நெறி, சிவபெருமானின் பெருமை, திருமுறைகளின் சிறப்பு, வழிபாட்டிற்குரிய இடங்களான மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆலயம் மற்றும் அர்ச்சனைகளின் சிறப்பிடம், ஐந்தொழில், நான்குவகை மார்க்கங்கள், வழிபாட்டு முறை, அற்புதங்கள் போன்றவை குறித்தும், கதைமாந்தர்களான நாயன்மார்களின் பக்தி, எளிமை, பெருமை, இறையனுபவம் ஆகியவை குறித்தும் நாடகங்களின் துணைகொண்டு விளக்கப்பட்டுள்ளது.   
சமுதாயப் பின்னணியில் இல்லறம், திருமண வகைகள், முறைகள் மற்றும் சடங்குகள், பெண் சொத்துரிமை, நீதி, வணிகம், சமுதாயத்தில் சாதிபேதம், பண்பாடு, விருந்தோம்பல், சமயம் சார்ந்த சடங்குகள், நுண்கலைகள், பெண்களின் நிலை, ஆண் பெண் சமத்துவச்சிந்தனைகள் போன்ற பலவற்றைக் குறித்து நாடகத்தின் வழியாக நோக்கப்பட்டுள்ளது.
நாடகங்களின் நிகழ்வுகளும் கருத்து வெளிப்பாடுகளும் என்ற தலைப்பில் நாடகப்பாத்திரம், உரையாடல், உத்தி என்ற வகைப்பாட்டில் சைவ சித்தாந்தம், அன்பில் ஒருமைப்பாடு, சைவ நெறிக்குரிய முறைகள், மறத்தொண்டுகள், அன்பு நெறியின் அடையாளங்கள், ஒழுக்கமுடைமை, வீரம், தாய்மையின் இறையன்பு,  விதியின் தாக்கம், ஆண்டவனைவிட அடியார்கள் சிறந்தவர்கள் போன்ற நிலைகளில் வெளிப்படுகின்ற கருத்துகள் நாடகத்தின் வாயிலாக அணுகப்பட்டுள்ளது.
பெரிய புராண நாடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பின்கீழ் சைவ சமய நாடகங்கள் தென்னிந்திய வரலாற்றிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும், சைவ சித்தாந்தத்திற்கும், நாடகத்திற்கும் அளித்த கொடையினைப் பற்றி  ஆராயப் பட்டுள்ளது.
நாடகம் வாயிலாக கருத்தினை வெளிப்படுத்தும்போது நூலாசிரியர்  கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலை நிகழ்விடத்தையும் குறிப்பிட்டுத் தந்துள்ளவிதம் வாசகரை நாடகக் களத்திற்கும், நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்திற்கும் அழைத்துச் சென்றுவிடும் வகையில் உள்ளது.  தேவையான இடங்களில் உரிய இலக்கியச் சான்றுகளையும், பிற சான்றுகளையும் தந்து தன் கருத்தினை ஆதாரத்தோடு ஆசிரியர் முன்வைக்கும்விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வினை மேம்படுத்தி மேலும் தரவுகளைச் சேர்த்து, அது நூல் வடிவம் பெற ஆசிரியர் மேற்கொண்ட முயற்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. பெரிய புராணம் என்ற பெருந்தலைப்பின் ஊடாக, நாடகம் என்ற நுணுக்கத்தை அமைத்து சமயம், சமுதாயம், வரலாறு, பக்தி, இலக்கியம் போன்ற பரிமாணங்களை காலத்திற்கேற்றவாறு நுட்பமாக அணுகித் தந்துள்ள விதம் போற்றத்தக்கதாகும். இப்பொருண்மையில் அரிதாக நூல்கள் காணப்படும் நிலையில் சைவத்திற்கும், நாடகத்துறைக்கும் ஓர் அரிய வரவாக இந்நூல் அமைந்துள்ளது.  
நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். 


நூல் வெளியீட்டு விழா
முனைவர் வீ. ஜெயபால் அவர்கள் எழுதியுள்ள பெரிய புராண நாடகங்கள் ஒரு பன்முகப் பார்வை என்ற நூலின் வெளியீட்டு விழா 30 அக்டோபர் 2019 அன்று தஞ்சாவூர் இராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற்றது. 

திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாணன் தம்பிரான் சுவாமிகள் வெளியிட, தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத்துறையின் முன்னாள் தலைவர் முனைவர் க.இரவீந்திரன் நூலைப் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்ட சுவாமிகள் தன் ஆசியுரையில் கூறியதாவது :  63 நாயன்மார்களின் வரலாற்றினைக் கூறும் பெரிய புராணத்திலிருந்து 11 நாயன்மார்களின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான நூலாக இந்நூல் அமைந்துள்ளது.  பெரிய புராணத்தின் கருத்துகள் தற்காலத்திற்கும் பொருந்தி வருகிறது.  சமூகத்திற்குப் பொருத்தமான ஒரு தலைப்பை ஆய்வாக எடுப்பது சமுதாயத்திற்கு மிகவும் பயனளிக்கக்கூடியது. பொதுவாக அக்காலத்தில் வரதட்சணை என்பது மாப்பிள்ளை கொடுப்பதே தவிர பெண்ணின் பெற்றோரிடமிருந்து மாப்பிள்ளை வாங்குவது அல்ல என்பது இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற சமூக நலன் சார்ந்த கருத்துகளும், சமயம் சார்ந்த கருத்துக்களும் இந்நூலில் காணப்படுகின்றன. கண்ணப்பரின் அன்பு, எறிபத்தரின் வீரம்,திருநாவுக்கரசரின் தொண்டு, பூசலார் மனத்தில் கோயில் கட்டிய பெருமை, சிறுத்தொண்டரின் சிறப்பு என்ற நிலையில் ஒவ்வொரு நாயன்மாரின் வாழ்வும் ஒவ்வொரு முறையில் தனித்துவம்  பெற்றிருந்தபோதிலும் அனைவரும் பக்தி என்ற நிலையில் ஒருங்கிணைந்து அடியார்களாகத் திகழ்கின்றார்கள் என்பது இந்நூலில் நாடக பாணியில் உரிய மேற்கோள் மற்றும் வசனங்களுடன் தரப்பட்டுள்ளன.    

 
வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் வரவேற்புரையாற்றியதோடு நூலைப் பற்றிய மதிப்புரையையும் வழங்கினார். அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி இராஜா பான்ஸ்லே, ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் தலைவர் எம்.தினேஷ்குமார், பன்னிரு திருமுறை மன்றத்தலைவர் இல.குணசேகரன், சக்தி முனியாண்டவர் கோயில் அறங்காவலர் குரு. சிவசுப்ரணியன், முனைவர் கோ.ப.நல்லசிவம்  ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் முனைவர் வீ.ஜெயபால் ஏற்புரை வழங்கினார். உலகத்திருக்குறள் பேரவைச் செயலர் பி. மாறவர்மன் நன்றி கூறினார். கோயம்புத்தூர் கல்லூரிப்பேராசிரியை முனைவர் கோ.புவனேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சைவ அன்பர்களும், பொதுமக்களும், வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தனர்.



 நூல் தொடர்பான தேவைக்கும் விவரங்களுக்கும் தொடர்புகொள்ள முகவரி:
ஞானியார் முனைவர் வீ.ஜெயபால், 28, அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009
பதிப்பு : ஆகஸ்டு 2019, விலை :ரூ.250 
மின்னஞ்சல் : vee.jayabal@gmail.com, அலைபேசி : 94439 75920

அணிந்துரை, வாழ்த்துரைகள் (12) 
1.மர்ம வீரன் இராஜராஜசோழன்,  ஓவியர் சந்திரோயம், 2005, அணிந்துரை
2.காத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு,  9.4.2009, அணிந்துரை
3.சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
4.சோழர் காலக் கட்டடக்கலையும் சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, 2009, அணிந்துரை
5.திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம், 20ஆம் ஆண்டுநிறைவு விழா மலர், 2010-11, வாழ்த்துரை 
6.இந்த எறும்புகள், கவிஞர் அவிநா, அழகுமலை பதிப்பகம், தஞ்சாவூர், 2.6.2012, அணிந்துரை
7.கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், பிரேமா நூலாலயம், தஞ்சாவூர், அக்டோபர் 2012, வாழ்த்துரை
8.ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன், அழகுமலை பதிப்பகம், தஞ்சாவூர், மார்ச் 2013, அணிந்துரை
9.சுவடிப் பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், 2012, வாழ்த்துரை

12 comments:

  1. புத்தக அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகளும்...
    தங்களது அணிந்துரை நன்று.

    ReplyDelete
  3. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.    முனைவர் திரு ஜெயபால் அவர்களின் தொண்டு தொடரப் ப்ரார்த்தனைகள்.   உங்கள் கட்டுரை சிறப்பு.

    ReplyDelete
  4. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. சிறப்பான அணிந்துரை... புத்தக ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. சமூக நலன் சார்ந்த கருத்துகளும், சமயம் சார்ந்த கருத்துக்களும் இந்நூலில் காணப்படுகின்றன.//

    நல்ல விஷயம்.

    நீங்கள் நூல் ஆசிரியரை பற்றி சொல்லி இருப்பது மகிழ்ச்சி.

    வாழ்த்துக்கள் நூல் ஆசிரியருக்கு.

    ReplyDelete
  7. சிறப்பான அணிந்துரை ஐயா

    ReplyDelete
  8. ஒரு சில நாடகக் காட்சிகள் பற்றியும் கூரி இருக்கலாமோ எடுத்துக்காட்டாக

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல கட்டுரை. ஆன்மிக புத்தக அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி. சிறந்ததொரு நூலைப்பற்றிய விபரங்களை தந்ததற்கு நூலாசிரியருக்கும், தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் நன்றிகளும்...பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  10. வாசித்தேன்.. மனசில் நிறைய கேள்விகள்.

    ReplyDelete
  11. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    நல்ல கட்டுரை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  12. பெரிய புராணம் தொடர்பான பல புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன
    நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நன்றி

    ReplyDelete