முகப்பு

23 November 2019

சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்

அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் காண்போம், வாருங்கள்.

விக்கிபீடியாவில் தேவார வைப்புத்தலங்கள் பட்டியலை மேம்படுத்தும்போது தஞ்சாவூரில் சிவகங்கைப்பூங்காவில் அமைந்துள்ள குளத்தின் நடுவில் உள்ள கோயில் தளிக்குளத்தார் கோயில் ஒரு வைப்புத்தலம் என்று ஒரு நூலில் (பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) இருந்த செய்தியின் அடிப்படையில் அறிந்தேன். அவ்வாறே அதில் தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் என்ற தலைப்பில் பதிந்தேன்.

குளத்திற்கு நடுவில் உள்ள கோயில். பிற கோயில்களைப் போல எளிதில் காண்பது சிரமம்.  வாய்ப்பு கிடைக்கும்போது அக்கோயிலுக்குச் செல்ல எண்ணியிருந்தேன். 11 நவம்பர் 2019 அன்றைய தினமணி இதழில் சிவகங்கை பூங்கா குளக்கோயிலில் குடமுழுக்கு என்ற செய்தியினைக் கண்டேன். செல்லும்போதே சிவகங்கை பூங்கா குளக்கோயிலில் என்றுள்ளதே என்று யோசித்துக்கொண்டே சென்றேன். முனைவர் வீ.ஜெயபால் அவர்களிடம் குடமுழுக்கு பற்றி விசாரிக்கும்போது அவரும் வருவதாகக் கூறவே, இருவரும் சென்றோம். 

சிவகங்கைப்பூங்காவில் தற்போது மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. 

உள்ளே உள்ள படகுத்துறையில் உள்ள சிறு வாயில் வழியாக குளத்திற்குச் சென்றோம். அங்கிருந்த படிகளில் நடந்து கீழே இறங்கினோம். 



குளத்தையொட்டி அமைந்திருந்த பாதையில் நடந்தோம். நாங்கள் நடந்து சென்ற பாதையின் மேல் தொங்குபாலத்தில் முன்னர் வழக்கமாகச் சென்ற விஞ்ச் கார் நின்று கொண்டிருந்தது. குளத்தில் முன்பு ஓடிக்கொண்டிருந்த படகுகளைக் காணமுடிந்தது.
அங்கிருந்து சென்றபோது குளத்தின் நடுவே அமைந்த கோயிலுக்கு தனியாக அமைத்திருந்த பழைய பாலத்தையும், அண்மையில் குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்டிருந்த பாலத்தையும் கண்டோம். அதில் சென்று கோயில் வளாகம் அடைந்தோம்.  சன்னதி சற்று உயர்ந்த தளத்தில் இருந்தது.



கோயிலில் உள்ள லிங்கத்திருமேனி மிகவும் அழகாக உள்ளது. மூலவரை சிவலிங்கசுவாமி என்று கூறுகின்றனர். மூலவருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இறைவனை நிறைவாக தரிசித்தோம். அங்கிருந்தபடியே பெரிய கோயிலின் விமானத்தைக்  கண்டு தரிசனம் செய்தேன். 

திரு ஜெயபால் அவர்கள்,  அங்கிருந்த திருமதி மீரா என்கிற தனலெட்சுமி அவர்களையும், பிற சைவ அன்பர்களையும் அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், அக்கோயில் தளிக்குளத்தார் கோயில் அல்ல என்றும், அது தொடர்பாக பல மாறுபட்ட கருத்துகள் உள்ளதாகவும் கூறினார். அப்போதுதான் அது தேவார வைப்புத்தலம் அல்ல என்பதை அறிந்தேன். தொடர்ந்து விக்கிபீடியாவில் புகைப்படங்களையும், கீழ்க்கண்ட கூடுதல் செய்திகளையும், என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்தேன். 

பு.மா.ஜெயசெந்தில்நாதன் :
"தஞ்சையில் உள்ளதாலும், கோயிலையுடைய குளம் ஆதலாலும் இது தஞ்சைத் தளிக்குளம் எனப்படுகிறது. இது ஒரு வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது".

குடவாயில் பாலசுப்ரமணியன்:
"சிவகங்கைக்குளம்தான் தளிக்குளம் எனக் கூறுவதற்குப் போதுமான தெளிவான சான்றுகள் இல்லை. இது எப்போது தோண்டப்பெற்ற குளம் என்பதற்கு எந்தச் சான்றும் கிடையாது. நாயக்கர் மற்றும் மராட்டியர் கால ஆவணங்களில் இக்குளம் பற்றிப் பேசப்படுகிறதேயன்றி, அதற்கு முந்தைய காலத்தியக் குறிப்புகள் கிடைக்கவில்லை. குளத்தின் நடுமேடையில் உள்ள சிவலிங்கம் பின்னாளில் வைக்கப்பெற்றதாகும். அத்திருமேனியைத் தளிக்குளத்து மகாதேவர் என்று கூறுவது ஏற்புடையாகாது"  (தஞ்சாவூர் கி.பி.600-1850, அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, ப.96)

தளிக்குளத்தார் கோயில் எது என்பதை அறிந்து விரைவில் அங்கு பயணித்து தொடர்பான பதிவினை எழுதவுள்ளேன். இறைவனின் சித்தத்தை எதிர்நோக்குகின்றேன்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், அருள்மிகு சிவலிங்கசுவாமி திருக்கோயில், சிவகங்கைகுளம், தஞ்சாவூர், கும்பாபிஷேக மலரை (தொகுப்பு சிவத்திரு ஞானியார், வெளியீடு திருமதி மீரா என்கிற  தனலெட்சுமி, தஞ்சாவூர், நவம்பர் 2019) அங்கு பெறும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இந்நூல் தஞ்சை அடியாரும் சிவத்தொண்டும், தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் சிறப்புகள், பொன்மணித்தட்டார் சரிதம், ஏழு நாள் பஞ்சபுராணப் பாடல்கள் ஆகிய உள் தலைப்புகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்துள்ளது.  குடமுழுக்கு நினைவாக மலர் வெளிட்டோருக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வோம்.



14 comments:

  1. படங்களோடு தந்த விளக்கங்கம் அருமை.

    ReplyDelete
  2. அப்பர் ஸ்வாமிகளும் ஞனசம்பந்தப் பெருமானும் குறித்துஅருளும் தஞ்சைத் தளிக்குளத்தார் திருக்கோயில் என்பதில் காணப்படும் திருக்குளம் இது தான்..

    ஆனால் தளி (கோயில்) பெருவுடையார் திருக்கோயிலாக எழுந்து விட்டது..

    பெரிய கோயிலில் கருவூரார் சந்நிதிக்குப் பின்னாலுள்ள திருமாளிகைப் பத்தியில் தேவியுடன் விளங்கும் சிவலிங்க மூர்த்தி தான் தளிக்குளத்தார்...

    அங்கே சந்நிதியில் உள்முக தியானத்தில் இருந்து பெற விடையாகும்..

    வரலாற்று ஆசிரியர்கள் கேட்கும் ஆதாரங்கள் இதற்கு கிடைக்காது...

    ஆனாலும் தேடிக் கண்டு கொள்ள இறைவன் அருள்புரிவானாக...

    இந்த மூர்த்தியை லோகேஸ்வரர் என்றும் லோக நாயகி என்றும் சொல்கிறார்கள்...

    ஐயா அவர்கள் தமது அனுபவத்தினை வழங்கியதற்கு மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. சிவகங்கைப் பூங்காவிற்குச் சென்று பல ஆண்டுகள் கடந்து விட்டன.
    ஒரு முறை சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு ஏற்படுத்தி இரு திரு து

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு.... நன்றி.
    தஞ்சை தளிக்குளத்தார்....வைப்புத் தலம்.இதுவல்ல ...பிறகு தஞ்சை தளிக்குளத்தார் எங்கே இருந்தார்.... அக் கோயில் கல்வெட்டு துண்டுகள் தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தில் உள்ளன..... தளிக்குளத்தார் கோயில் என்ன காரணத்தாலோ அழிந்து இருக்க வேண்டும்.... அந்த இடம் தளி மேடாகிப் போனது....அதுதான் இன்றைய களி மேடு....

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள். அற்புதமான படங்கள். நம்மூரில் இதுபோன்ற இடங்கள் இருப்பதை கட்டுரையாக வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  6. கரந்தையாரே சிவங்கைப் பூங்கா சென்று வருடங்களாகிப் போயின என்று சொன்னால், நானெல்லாம்..?    தஞ்சையை விட்டு வந்து நிறைய வருடங்களாகி விட்டன.  தளிக்குலத்தார் கோவில் என்றால் என்ன என்று தேடவேண்டும்.  அல்லது நீங்களோ, துரை ஸாரோ சுருக்கமாகச் சொன்னால் நலம்.

    ReplyDelete
  7. சிவகங்கைப் பூங்கா குளத்தில்  பல வருடங்களுக்கு முன்னால் ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.  ஜீவனாம்சம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. சென்ற தடவை தஞ்சை சென்ற பொழுது பார்க்க வேண்டும் என்று மனத்தில் குறித்துக் கொண்டது, சரஸ்வதி மஹாலிலேயே வெகு நேரம் ஆகி, பார்க்க முடியாமல் போய் விட்டது.

    உங்கள் படங்களை பார்க்கையில் நேரில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. நன்றி.

    ReplyDelete
  9. சிவகங்கை பூங்கா நிறைய தடவை போய் இருக்கிறோம்.
    விஞ்ச் கார், மற்றும் படகில் பயணம் செய்து இருக்கிறோம்.
    கோவிலை தரிசனம் செய்து கொண்டேன் மீண்டும் உங்கள் பதிவின் மூலம்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    கோவிலைப் பற்றிய அழகான விபரமான பதிவு. தாங்கள் தந்துள்ள படங்களில் கோவிலும் அதன் சுற்றுப்புறங்களும் மிக அழகாக இருக்கின்றன. தஞ்சை செல்லும் சமயம் வாய்த்தால் இந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டுமென குறித்துக் கொண்டேன். இன்று தங்கள் பதிவால் இக்கோவிலின் மூர்த்திகளை தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. வித்தியாசமான திருக்கோவில் ...குளத்தின் நடுவே அய்யன் ..படங்களுடன் காணும் போது பெரும் மகிழ்ச்சி வருகிறது ..

    தங்களின் வழி அருமையான தரிசனம் கிடைத்தது ஐயா ...

    ReplyDelete
  12. அருமை ஐயா...

    தங்களின் பயணம் தொடரட்டும்...

    ReplyDelete
  13. அபூர்வமான விபரங்கள் அடங்கிய இந்தப் பதிவு தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்க்கிறது.

    ReplyDelete
  14. பள்ளி காலத்தில் சுற்றுலா சென்றது. பல வருடங்கள் ஆகி விட்டது. உங்கள் கட்டுரை நல்ல தவல்களோடு சிறப்பாக இருக்கிறது. நன்றி. 

    ReplyDelete