முகப்பு

21 December 2019

கோயில் உலா : 21 செப்டம்பர் 2019

21 செப்டம்பர் 2019 அன்று முனைவர் ஜெயபால் அவர்களின் குழுவோடு கோயில் உலா சென்றோம். இந்த உலாவின்போது 10 கோயில்களுக்குச் சென்றோம். அவற்றில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் ஆகிய இரு கோயில்களும் முன்னர் நான் பார்த்த கோயில்களாகும்.
காலை 6.30 மணி வாக்கில் தஞ்சையைவிட்டுக் கிளம்பினோம். எங்களது காலைச்சிற்றுண்டியினை  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்திலுள்ள ஆண்டலாம்பேட்டை மூங்கிலாண்டவர் கோயிலில் நிறைவு செய்தோம்.

தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ரத்னகிரீஸ்வரர் கோயில்,  திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில், அதே கோயில் வளாகத்தில் உள்ள திருப்புகலூர்  வர்த்தமானீசுவரர் கோயில் (வர்த்தமானீச்சரம்), இராமநந்தீச்சரம் ராமநாதசுவாமி கோயில்,  திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம்.  திருக்கண்ணபுரம் பெருமாள் கோயில் தரிசனத்திற்குப் பின் மதிய உணவு உண்டோம். பின் அருகேயிருந்த  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறிது நேரம் இளைப்பாறினோம்.
மாலை நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் கோயில், சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில், திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில், திருவாரூர் மாவட்டம் கரவீரம் கரவீரநாதர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம். அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11.30 மணியளவில் தஞ்சாவூர் திரும்பினோம். 

திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்  
(மாணிக்கவண்ணர்-வண்டுவார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர் பாடியது)
இக்கோயில் ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் இடப்புறம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இந்த மரத்தின் அடியில்தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்ந்து எழுப்யி செட்டி மகனுக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறுவர். இந்த ஊரில் பாம்பு கடித்து எவரும் இறப்பதில்லை என்று கூறுவர். 





  
திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்  
(அக்னிபுரீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
கோயிலுக்குள் கோயில் என்ற வகையில் இக்கோயிலில் இரு கோயில்கள் உள்ளன. இங்கிருந்த முருக நாயனார் மடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்ததாகக் கூறுகின்றனர்.





  


திருப்புகலூர் கோயிலிலுள்ள மற்றொரு கோயிலான திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
(வர்த்தமானீஸ்வரர்-கருந்தார்குழலி) (ஞானசம்பந்தர் பாடியது)  
அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, மூலவர் சன்னதியின் வட புறத்தில் வர்த்தமானீச்சரம் அமைந்துள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதியில் மூலவர் அறைக்கு நுழையும்போதே அதே வாயில் வழியாக வர்த்தமானீச்சரம் செல்லலாம். 

இராமநந்தீச்சரம், நாகப்பட்டினம் மாவட்டம்  (ஞானசம்பந்தர் பாடியது)  
(ராமநதீஸ்வரர்-கருவார்குழலி) 
கண்ணபுரம் என்று அழைக்கப்படுகின்ற இந்த தலம், இராமன், இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் நீங்க இறைவனை வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது. ஆதலால் இராமநந்தீச்சரம் என்றழைக்கப்படுகிறது.   




திருச்செங்காட்டாங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்  

(உத்தராபதீஸ்வரர்-குழலம்மை) (ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியது)
பிள்ளைக்கறியமுது அளித்து முக்தியடைந்த சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன் சிறுத்தொண்டருக்கு இறைவன் அருள் செய்ததை அறிந்து, இங்கு வந்து, வழிபட்டு, உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், கோயிலை திருப்பணி செய்து உத்தராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்தால் தான் சண்பகப்பூ மணம் வீசக் காட்சி தருவாகக் கூறி, அவ்வாறே அருள் தந்ததாகக் கூறுவர். 



சீயாத்தமங்கை, நாகப்பட்டினம் மாவட்டம்  


(அயவந்தீஸ்வரர்-இருமலர்க்கண்ணம்மை) (ஞானசம்பந்தர் பாடியது)
ஊர் சீயாத்தமங்கை என்றும், கோயில் அயவந்தீசம் என்றும் அழைக்கப்படுகிறது. திருநீலநக்க நாயனார் அவதரித்த பெருமையுடைய தலமாகும்.

  
திருப்பயத்தங்குடி, திருவாரூர் மாவட்டம்
(திருப்பயற்றுநாதர்-காவியங்கண்ணி) (அப்பர் பாடியது)
நாற்கோண வடிவில் உள்ள ஆவுடையார் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார். இத்தலம் பைரவ மகரிஷி வழிபட்ட தலமாகும்.

கரவீரம், திருவாரூர் மாவட்டம்
(கரவீரநாதர்-பிரத்யட்சமின்னம்மை)  (ஞானசம்பந்தர் பாடியது) 
கர வீரம் என்றால் பொன் அலரி என்று பொருளாகும். அலரியைத் தல மரமாகக் கொண்டதால் இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.

திருவாரூரில் கோயிலுக்குள் கோயில் கண்டுள்ளோம். அவ்வாறே, இந்த உலாவின்போது திருப்புகலூரில் கோயிலுக்குள் கோயிலைக் கண்டோம். இறைவன் இறைவி ஊடல் கொண்ட நிலையிலான சிற்பங்களை ஒரே நாளில் இரு கோயில்களில் கண்டோம். இந்தப் பயணத்தின்போது நாங்கள் கண்ட இறைவியின் பெயர்கள் மிகவும் அழகாக இருந்ததைக் கண்டோம். வழக்கம்போல இந்த உலா ஒரு மன நிறைவான உலாவாக இருந்தது. அடுத்து, பிறிதொரு உலாவில் சந்திப்போம்.
எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால் மற்றும் குழுவினருடன்

துணை நின்றவை
பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
சிவ.ஆ.பக்தவத்சலம், தேவாரத் திருத்தலங்கள் வழிகாட்டி, குடியேற்றம், 2005
விக்கிபீடியா

9 comments:

  1. அம்மாடி..   அழகிய படங்கள்.  சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  2. படங்களும், விளக்கங்களும் அருமை...
    தொடரட்டும் இன்னும் பல உலா...

    ReplyDelete
  3. படங்களும் பகிர்வும் அருமை
    உலாக்கள் தெரடரட்டும்

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    அழகான கோவில் உலா.. அத்தனை படங்களும், கோபுரங்களுமாக பக்தியுடன் கண்டு கோவில்களில் குடியிருந்த இறைவனை உங்களுடன் நானும் தரிசித்துக் கொண்டேன். இத்தனையும் ஒரே நாளில் காண்பதென்பது கிடைத்தற்கரிய அற்புதமான பேறு. அப்பேறினை பெற்ற தங்களை பணிவுடன் வணங்குகிறேன். தாங்கள் கண்ட பிற கோவில்களின் உலாக்களையும் படிக்க ஆவலாய் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. கோவில்களின் நிலையைப்பார்த்தால் மிகவும் வருத்தப்படும் அளவிற்கு இருக்கும்போல உள்ளது. உண்மைதானே?

    ReplyDelete
  6. அருமை... அருமை...

    தங்களின் ஆன்மீக பயணம் தொடரட்டும் ஐயா...

    ReplyDelete
  7. கோவில் உலாக்கள் கற்பதற்கு ஆவல். படங்களும் அருமை. நன்றி

    ReplyDelete
  8. அனைத்துக்கோவில்களின் விபரங்களை அறிந்தபோது மகிழ்வாக இருந்தது. படங்களும் மிக அழகு.

    ReplyDelete