முகப்பு

05 February 2020

இராஜராஜேச்சரம் குடமுழுக்கு

இராஜராஜேச்சரம் என்றழைக்கப்படுகின்ற பெரிய கோயிலின் குடமுழுக்கு இன்று காலை 5 பிப்ரவரி 2020இல் நடைபெற்றது. 1997க்குப் பிறகு நடைபெறுகின்ற இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக விடியற்காலை 1.00 மணியளவில் கிளம்பி கோயிலுக்கு வந்து சேர்ந்தேன். கோயிலுக்கு வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவனின் அருளைப் பெற எனக்கு முன்னரே பலர் வந்து காத்துக்கிடப்பதைக் காணமுடிந்தது.

கூட்டத்தில் இவ்வாறாக இருந்து பார்க்கவேண்டுமா என்பதை நினைக்கும்போது சொந்த ஊரான கும்பகோணத்துக் கோயில் விழாக்கள் நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு விழாவின்போதும் ஆர்வமாகக் கலந்துகொண்ட அனுபவம் இதிலும் கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 

விடியற்காலை 1.30 கோயில் நோக்கிச் செல்லல்




விடியற்காலை 4.15 மணி வரை ராஜராஜசோழன் சிலையருகே காத்திருப்பு

சுமார் 4.30 மணி வாக்கில் தடுப்புகள் திறந்தபின்னர்
கோயில் நோக்கிச் சென்றபோது எடுத்த படம்


காலை 4.00 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் 4.30 மணிவாக்கில்தான் வெளியே (கோயிலுக்கு வெளியே சற்று தூரத்தில்) இருந்த தற்காலிக கதவுகள் திறக்கப்பட்டன. கேரளாந்தகன் வாயிலுக்கு வலது புறம் உள்ள பாதை வழியாக அனைவரையும் அனுப்பினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 


உள்ளே நுழைந்தவுடன் (சுமார் 4.30 மணிவாக்கில்) முன்மண்டபத்தோடு கூடிய விமானத்தைப் பார்த்ததும் விண்ணிலிருந்து வந்து இறங்கிய, தங்கத்தகடு போர்த்தியதைப் போன்ற உணர்வினைக் காணமுடிந்தது. அந்த இருட்டில் வண்ண விளக்கொளியில் விமானம் தங்க விமானமாகக் காட்சியளித்தது.


சுமார் 7.30 மணி வரை பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. கையில் பிஸ்கட், பழம், குளுகோஸ், குடிநீர் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்ததால் கொஞ்சம் சமாளித்தேன். 
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் ஆர்வம் காரணமாக வந்து காத்திருந்ததைக் காணமுடிந்தது. யாகசாலை நடந்துகொண்டிருப்பது ஒலிபெருக்கி மூலமாக எங்களுக்குத் தெரிந்தது. எட்டாம் நிலை யாகசாலைப் பூசை முடிந்தபின்னர் கலசங்கள் எடுத்துவரப்பட்டன. அதனைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தொடர்ந்து குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கி கலசங்கள் அந்தந்த சன்னதிக்கு மேலே எடுத்துச் செல்லப்பட்டன. கலசத்தை ஏற்றியதை முன்பொரு பதிவில் நாம் பார்த்துள்ளோம். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விமானம், இராசராசன் வாயில், கேரளாந்தகன் வாயில் ஆகியவற்றைக் காண முடிந்தது. 
  




சுமார் 9.00 மணிக்கு மேல் நிகழ்வுகள் நிறைவிற்கு வர அனைவருடைய சிந்தனைகளும், கண்களும் விமானத்தின் உச்சியை நோக்கியே இருந்தன. எங்கும் சிவ சிவ, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி முழக்கங்கள் விமானத்தையும் தாண்டி, விண்ணைத் தொட்டன.  


  


வழக்கமாக தினமும் ஒரு தேவாரப்பதிகம் என்ற நிலையில் பல ஆண்டுகளாகப் படித்துவருகிறேன். குடமுழுக்கு நாளன்று பொருத்தமாக கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாவில் ஒன்பதாக அமைந்துள்ள தஞ்சை இராசராசேச்சரம் பற்றி படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அப்பொருத்தத்தினை எண்ணி வியந்தேன். அதில் ஒரு பாடலுக்கான பொருளைப் பகிர்ந்து எம்பெருமானை நினைவுகூர்வதைப் பெருமையாக எண்ணுகிறேன்.  

"தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் ஆகிய ரங்கள் நிறைந்த நந்தவனத்தின் கரிய இருள் பரவியிருக்கின்ற இடமும் மதிலும் சூழ்ந்த தஞ்சையில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப்பெருவுடையாரிடத்துப் பிறவிப்பிணிக்கு அரிய மருந்து ஆகிய அவரது திருவருளைப் பருகித் துன்பம் நீங்கப் பெற்ற கருவூர்த்தேவர் பாடிய பாமாலையாகிய இந்தப் பத்துப் பாடலகளின் பொருளாகிய அரிய மருந்தை உண்பவர்கள், உணர்ந்து அனுபவிப்பவர்கள் சிவபதம் என்னும் அழகிய பெரிய  கயிலாய மலையைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்."

அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பாக விழா நிறைவடைந்தது. இப்பணியைச் செவ்வனே செய்த அனைவரும் போற்றுதற்குரியவர்கள் ஆவர். கி.பி.1010இல் மாமன்னன் இராசராசன் கோயிலை அமைத்து குடமுழுக்கு செய்து 1010 ஆண்டுகளுக்குப் பின்னர் காணும் பேற்றினைப் பெற்றது மகிழ்ச்சியே. நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்காகவும் மனதுருகி இறைவனை வணங்கி மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன். 

12 comments:

  1. நிகழ்வினை கண்டது போன்ற உணர்வு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    அழகாக தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு வைபவத்தை தங்கள் பதிவின் மூலம் தரிசித்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அழகான படங்களை கண்டு சிவ, சிவ என்ற நாமத்தில் மனது பரவசமாக கும்பாபிஷேக விழா பார்ப்பதற்கு மனதுக்கு மிகவும் நிம்மதியை தந்தது. நேரில் சென்று காண முடியாத அற்புத காட்சியை தங்கள் பதிவின் மூலம் தந்ததற்கு தங்களுக்கு மிக மிக நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அன்பு முனைவர் ஐயாவுக்கு வணக்கம்.
    மிக மிக நன்றி.
    இந்தக் குடமுழுக்கைக் காணவேண்டி இந்த ஊர்க்
    காலை 4 மணிக்கு எழுந்துவிட்டேன். யப் தொலைக்காட்சி,பொதிகை
    வழியே குடமுழுக்கைச் சரியான நேரத்தில் காண
    வைத்தது அவன் அருளே.
    சிவாச்சாரியர்கள் கருடன் தென் படுகிறதா என்று
    தேடுவதையும் கண்டேன்.
    வந்ததா என்று தெரியவில்லை.
    வர்ண விளக்குகள் ஒளியில் கோபுரங்களும் கலசங்களும்
    மிக.
    அழகு, எத்தனை ஆயிரம் மக்கள். நம் ஊரில் இறைபக்தி என்றும் நிலைத்திருக்கும்.
    நமசிவாய நாமம் என்றும் நம்முடன் இருக்க அவர் அருள்
    நம்முடன் இருக்கட்டும்.

    ReplyDelete
  4. தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பே திருப்தியாக இருந்தது.

    ஒரு தொலைக்காட்சி சேனலில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஏன் ஓத வேண்டும் தமிழில் ஓதினால் இறைவனுக்குப் புரியாதா என்று பெரும் விவாதம் ஒன்றே நடந்தது. தமிழுக்காக வாதாடிய அணியினர் 'தமில், தமில்' என்று உச்சரித்ததே தலைக்குனிவாக இருந்தது.

    இராஜராஜ சோழனைப் பற்றி பெருமைபட குடமுழுக்கு நேரடி வர்ணனியில் உரையாற்றிய பேராசிரியர்களில் ஒருவர் கூட 'பொன்னியின் செல்வனை' இலட்சக்கணக்கான தமிழ் வாசகர்கள் மத்தியில் உலவ விட்ட பேராசிரியர் கல்கிரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாதது வியப்பாக இருந்தது.

    ReplyDelete
  5. விடியற்காலை ஒரு மணிக்கே வந்துவிட்டீர்களா
    வியந்தேன்
    மகிழ்ந்தேன் ஐயா

    ReplyDelete
  6. ஆஹா... உங்கள் மூலம் ஒரு நேரடி ஒளிபரப்பு! உங்கள் வழி நாங்களும் குடமுழுக்கு விழாவினை நேரில் பார்த்த உணர்வு. நன்றி ஐயா.

    ReplyDelete
  7. மிக அருமையான விபரங்களைத்தந்ததற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  8. 30 தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த மன்னர். 5 தலைமுறைக்கு முன்னால் தான் ஆங்கிலேயர் குரூஸ் என்பவர் இந்தக் கோவில் குறித்து இதன் உண்மையான வரலாறு குறித்து நமக்கு கல்வெட்டு ஆய்வுகளை வைத்து கண்டறிந்து சொன்னார். வியப்பாக பெருமையாக ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் படங்கள் எடுக்கும் போது இன்னும் தெளிவாக எடுக்க வாய்ப்புள்ளதாக என்பதனைப் பார்க்கவும்.

    ReplyDelete
  9. மிக சிறப்பாக நிகழ்வைத் தொகுத்துள்ளீர்கள். நேரில் வர முடியாதது ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. எப்போதேனும் பார்க்கக் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி ஐயா.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
  10. குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  11. நேர்த்தியான நேர்முக வர்ணனை...
    மனம் முழுதும் ஸ்ரீராஜராஜேச்சரமே நிறைந்திருக்கின்றது...

    மகிழ்ச்சி.. நன்றி...

    ReplyDelete