முகப்பு

21 March 2020

ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019

தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு பல்துறைகளில் சாதனைகளைப் பதித்து வருகின்ற ஏடகம் மேற்கொண்டு வரும் அரிய பணிகளில் ஒன்று வளரும் இளைஞர்கள், மாணவர்களிடையே வரலாற்று ஆய்வுத்தேடலைப் பற்றிய எண்ணங்களை உருவாக்குவதும், பொதுமக்களிடையே வரலாற்று உணர்வினை மேம்படுத்துவதும், இத்தகைய விழிப்புணர்வினை உண்டாக்க தொல்லியல் தடம் தேடிச் செல்வதும் ஆகும். அவ்வகையில் 7 டிசம்பர் 2019 அன்று வரலாற்று உலா சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதிகளுக்குச் சென்றோம். அப்போது கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினைப் பற்றி முன்பொரு பதிவில் கண்டோம். அங்கு உலா சென்ற அனுபவத்தை இப்பதிவில் காண்போம்.


தஞ்சாவூரில் தெற்கு வீதியில் உள்ள ஏடகம் அலுவலகத்திற்கு அருகில் இருந்து எங்களது பயணம் ஆரம்பமானது. அங்கிருந்து கானாடுகாத்தான் அரண்மனையை நோக்கிச் சென்றோம். 


கானாடுகாத்தான் அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டில் காரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் போன்ற பகுதிகளில் செட்டிநாடு வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அரண்மனைகள் என்று கூறலாம். மிகுந்த வேலைப்பாட்டிற்கும், இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கும் அவை புகழ் பெற்றவையாகும். அவ்வகையில் முதலில் கானாடுகாத்தான் அரண்மனைக்குச் சென்றோம்.  கண்களுக்கு விருந்தாக, ஒரு பிரம்மாண்டத்தை அங்கு கண்டோம். அழகான நுழைவாயில். கடந்து உள்ளே சென்றதும் மேலே இரு புறமும் திண்ணைகள். உள்ளே பெரிய அறைகள், தாழ்வாரங்கள், முற்றங்கள், ஜன்னல்கள், பெரிய கதவுகள், தூண்கள், தரை, கூரை, மாடி என்று ஒவ்வொன்றும் வியப்பை உண்டாக்கின. அனைத்திலும் அழகான, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காணமுடிந்தது. வெளிச்சமும், காற்றோற்றமும், தண்ணீர் வடிகால் அமைப்பும் இந்த அரண்மனையின் சிறப்புக்கூறுகளாகும். ஆளுயர கண்ணாடிகள், யானைத் தந்தங்கள், சிற்பங்கள், இயற்கை வண்ணங்களைக் கொண்ட ஓவியங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஊட்டுவனவாக உள்ளன. நூற்றாண்டை நெருங்கும் நிலையிலும் அந்த அரண்மனை மெருகு குலையாமல் இருப்பதைக் காணமுடிந்தது. அடுத்தபடியாக ஆத்தங்குடி அரண்மனைக்குச் சென்றோம்.      

ஆத்தங்குடி அரண்மனை, காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்






இதுவும் சற்றொப்ப அதன் வடிவிலேயே உள்ளது. நுழைவாயில் தொடங்கி ஒவ்வொரு அமைப்பையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.   இந்த அரண்மனை சிறிய நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கதவுகளைக் கடந்து உள்ளே சென்றதும் அரண்மனையில் உள்ள தோற்றத்தைத் தருகின்ற பெரிய செவ்வக வடிவிலான அறை அமைந்துள்ளது. அதன் கோயிலின் அமைப்பைப் போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன. மேல் கூரையில் ரசாயனக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. உள் பகுதியில் செல்லும்போது அங்கே நடுவில் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அதனைச்சுற்றி அமைந்துள்ள கூடத்தின் வலது மற்றும் இடது புறங்களில் பல சிறிய அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு அறைக்கும் இடையே ஜன்னல்கள் காணப்படுகின்றன. ஜன்னல்களின் மேல் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்த நிலையைத் தாண்டிச் செல்லும்போது அடுத்தள்ள தளத்திலும் இவ்வாறான அமைப்புகள் காணப்படுகின்றன. சுவற்றிலும், கூரையிலும், ஜன்னல்களிலும் பலவித ஓவியங்கள் உள்ளன. அடுத்தபடியாக எங்கள் பயணம் ஆத்தங்குடியில் உள்ள சிவன் கோயிலை நோக்கி அமைந்தது.

ஆத்தங்குடி மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில், காரைக்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம்

கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் கணபதி சன்னதியும், இடது புறத்தில் தெண்டாயுதபாணி சன்னதியும் உள்ளன. ராஜ கோபுரத்தை அடுத்த உள்ளே செல்லும்போது அடுத்த நுழைவாயில் உள்ளது.  உள்ளே செல்லும்போது கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து தெற்கு நோக்கிய நிலையில் மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்து பைரவர் சன்னதி உள்ளது. கருவறைக்கு செல்லும் முன்பாக வாயிலின் வலது புறத்தில் விநாயகர், இடது புறத்தில் முருகன் உள்ளனர். இரு புறங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சூரியன், கணபதி, சோமாஸ்கந்தர், 63 நாயன்மார்கள் உள்ளிட்டோர், விஸ்வேசர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகம் (முன்பாக மயில், வேல்),  மலைமகள், திருமகள், கலைமகள், ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார் ஆகியோர் உள்ளனர். செல்லும்வழியில் சொக்கலிங்கம்புதூர் என்னுமிடத்தில் ஆத்தங்குடி கற்கள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்றோம்.

சொக்கலிங்கம்புதூர், காரைக்குடி வட்டம்
அரண்மனையில் பதிக்கப்பட்ட கற்களைப் பற்றிப் பேசும்போது அங்கிருந்தோர் அக்கற்களில் ஒருவகையான கற்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஆத்தங்குடியில் தயாரிக்கப்படுவதாகக் கூறினர். எங்களின் அடுத்த இலக்கு அந்தக் கற்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். நாங்கள் சென்ற பகுதியில் அக்கற்களைத் தயாரிக்கின்ற நிறுவனம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்றோம். இவ்வகையான கற்கள் சிமெண்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடு போன்றவை கொண்ட செய்யப்படுகின்றன. சதுரக் கண்ணாடி ஒன்றின்மீது இரும்பால் செய்யப்பட்ட ஒரு கூட்டினை வைத்து அதில் தேவைப்படுகின்ற திரவ வடிவிலான வண்ணங்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்றுகின்றனர். அதன் மேல் மணலைப் பொடியாகத் தூவி அனைத்து இடத்திற்கும் பரவும் வகையில் சலித்து, பின்னர் கலவையை இட்டு அதனைப் புரட்டிக் காண்பிக்கும்போது கண்ணாடி வழியாக அந்த டிசைன் தெரிகிறது. பின்பு அதனை நன்கு நீரில் ஊறவைத்து தேவைப்படும் நிலையில் கற்களை, கண்ணாடியிலிருந்து பிரிக்கின்றனர். இவ்வாறாக கல் முழு வடிவம் பெறுகிறது. வடிவமைத்து, பின் வெயிலில் காய வைக்கின்றனர். அக்கற்களில் உள்ள வேலைப்பாடுகள் அழகினைத் தருகின்றன. நாங்கள் இன்று பார்த்த இரு அரண்மனைகளிலும் இவை போன்ற கற்களைக் கண்டோம்.  ஆத்தங்குடி பகுதியில் உள்ளோர் தம் வீடுகளை மென்மேலும் அழகூட்ட இவ்வகைக் கற்களைப் பயன்படுத்துகின்றனர்.

மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல், காரைக்குடி வட்டம்



அடுத்து காளையார்கோயில் நோக்கி பயணத்தைத் தொடர்ந்தபோது செல்லும் வழியில் மருதுபாண்டியர் கோட்டை இருப்பதை அறிந்தோம்.  அரண்மனை சிறுவயல் என்ற இடத்தில் உள்ள அந்த அரண்மனை தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு வருவதைக் கண்டோம்.  கி.பி.18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மருது சகோதரர்கள் இந்த ஊரில் இருந்த அரண்மனையில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந்ததாகவும், அதன் நினைவாக அந்த அரண்மனை மருதுபாண்டியரின் கோட்டை என்றழைக்கப்படுவதாகவும் அறிந்தோம். அக்காலக் கட்டுமானத்தில் பயன்படுத்திய கற்கள், அதன் அமைப்பு, தடிமன் போன்றவை அவை கோட்டைக்கே உரியவை என்பதை உணர்த்தின.

மருதுபாண்டியர் நினைவிடம்


மருது பாண்டியர் என்றழைக்கப்படுகின்ற மருது சகோதரர்கள் விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 17ஆம் நூற்றாண்டு இறுதிக்காலத்தில் ஆயுதம் தாங்கிப் போராடினர். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற நிலையில் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். காளையார்கோயில் இவர்களது களமாக அமைந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரால் 1801இல் இருவரும் தூக்கில் இடப்பட்டனர். அவர்களின் நினைவாலத்திற்குச் சென்றபோது அவர்களின் வீரத்தையும், தைரியத்தையும் அறிந்தோம். எங்கள் பயணத்தில் மறக்கமுடியாத இடமாக இவ்விடம் அமைந்தது.

சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோயில் சிவகங்கை  மாவட்டம்



பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் இருப்பர். ஆனால் இக்கோயில் சற்றே வித்தியாசமானதாகும். இக்கோயிலில் சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி, சோமேஸ்வரர்-சுந்தராம்பிகை, சுந்தரேஸ்வரர்-மீனாட்சி ஆகிய மூன்று இறைவன் சன்னதிகளைக் கொண்டு அமைந்துள்ள கோயிலாகும். ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற பெருமையுடையது இக்கோயில். சோமேஸ்வரர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள பெரிய கோபுரத்தில் நின்று பார்த்தால் மதுரைக் கோயிலின் கோபுரம் தெரியும் என்று கூறினர்.

திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப்பெருமாள் கோயில், திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம்


பயணத்தின் நிறைவாக திருக்கோஷ்டியூர் சென்றோம். 108 வைணவத்தலங்களில் ஒன்று என்ற சிறப்புடைய இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக மூன்று தளங்களைக் கொண்டுதுள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணரும்,  முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌம்ய நாராயணரும், இரண்டாவது தளத்தில் நின்ற கோலத்தில் தேவலோகபெருமாளும், மூன்றாம் தளத்தில் அமர்ந்த கோலத்தில் வைகுண்டப்பெருமாளும் உள்ளனர். இவ்வகையில் சுவாமி நான்கு நிலைகளில் இங்கிருந்து அருள்பாலிக்கிறார். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திர உபதேசம் பெறுவதற்காக ராமானுஜர் வந்தபோது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி உள்ளிருந்தவாறே, நான் செத்து வா என்றார். தொடர்ந்து 17 முறை இவ்வாறு அதே பதிலைச் சொல்ல, அடுத்த முறை அடியேன் வந்திருக்கிறேன் என்று சொல்ல நம்பி, அவருக்கு ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரஉபதேசம் செய்தார்.  அத்தகைய பெருமையுடைய இக்கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் முழுமையாகச் சுற்றுப்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், புகழ்பெற்ற ஒரு கோயிலுக்குச் சென்ற மன நிறைவு ஏற்பட்டது.

அங்கிருந்து மன நிறைவுடன் தஞ்சாவூர் நோக்கித் திரும்பினோம். ஒரே நாளில் எங்களை இந்த இடங்களுக்கு அழைத்துச்சென்ற ஏடகம் நிறுவனர் முனைவர் மணி.மாறன் அவர்களுக்கும், உலாவின்போது துணைநின்ற ஏடகப்பொறுப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

நன்றி : விக்கிப்பீடியா, நாளிதழ் செய்திகள்









நன்றி : ஏடகம் இரண்டாவது ஆண்டு மலர் 2018-19

26 டிசம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது. 




12 comments:

  1. இதுபோன்ற அரண்மனைகளை பார்க்க எனக்கும் ஆவல் உண்டு.

    புகழ்பெற்ற மருதுபாண்டியர் கோட்டை சிதிலமடைந்துள்ளதைப்  பார்க்கும்போது வருத்தம் 

    ReplyDelete
  2. அழகான படங்களும் விபரங்களும் நன்று நம்ம ஏரியாவுக்கு வந்து போனதில் மகிழ்ச்சி

    தேவகோட்டை வராமல் கல்லல் வழியாக காளையார்கோவில் சென்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

    பயணங்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  3. அருமையான வரலாற்றுப் பயணம் ஐயா
    படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி

    ReplyDelete
  4. இந்த அரண்மனைகளை ரசிக்கவே ஒருமுறையாவது சென்று வர வேண்டும்...

    ReplyDelete
  5. சிறப்பான தகவல்கள் ஐயா.

    ஏடகம் ஏற்பாடு செய்யும் இந்தப் பயணங்கள் மிக முக்கியமானவை. அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. அழகான புகைப்படங்கள்! அருமையான தகவல்கள்! சில செட்டிநாடு அரண்மனைகள் தற்போது நட்சத்திர விடுதிகளாகவும் மாறியிருக்கின்றன. நாங்கள் அது போல ஒரு விடுதியில் தங்கி மற்ற சில அரண்மனைகளையும் ரசித்திருக்கிறோம்!

    ReplyDelete
  7. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    21ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளமும் இணைக்கப்பட்டுள்ளது. எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எமது திரட்டியை புக்மார்க் செய்து பயன்படுத்துங்கள்.

    தற்போது, தங்களது ஏடகம் வரலாற்று உலா : 7 டிசம்பர் 2019 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  8. நான் கூட இந்தப் பகுதிகளை இதுவரையிலும் பார்க்கவில்லை. விபரங்கள் இன்னமும் சேர்த்து எழுதவும்.

    ReplyDelete
  9. தொடரட்டும் பயணங்கள்

    ReplyDelete
  10. படங்கள், தகவல் அருமை
    சிறப்பான தொகுப்பு

    ReplyDelete
  11. கானாடுகாத்தான் அரண்மனை மற்றும் ஆத்தங்குடி அரண்மனைகளை நன்கு பராமரித்து புதியதுபோல் வைத்துள்ளார்கள் ... அருமை !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
  12. ஐயா, உங்கள் சிவகங்கை - காரைக்குடி உலா சுவையானது! அருமையாக விவரித்திருந்தீர்கள்!

    கானாடுகாத்தான் அரண்மனையின் படங்களைப் பார்த்த உடனே ஆத்தங்குடிக் கற்களின் நினைவு வந்தது. அடுத்து ஆத்தங்குடிக்கே சென்றோம் என்றவுடன் அந்தக் கற்கள் பற்றி எங்கே சொல்வீர்கள் எனும் எதிர்பார்ப்புடனே படிப்பதைத் தொடர்ந்தேன். ஏனெனில் அந்தக் கற்கள் பற்றியும் அவற்றின் செய்முறை பற்றியும் முன்பு ஒருமுறை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். பார்த்துப் பல ஆண்டுகளாகியும் இன்னும் மறக்க முடியவில்லை. இன்று நாம் பயன்படுத்தும் வழுவழுப்பான தரை ஓடுகள் (tiles) இல்லாத அந்தக் காலத்திலேயே உறுதியான கண்ணாடிகளைக் கொண்டு அத்தகைய தரைக்கற்களை உருவாக்கிய தமிழர் கட்டடக்கலை நுட்பம் வியப்புக்குரியது. நாங்கள் வீடு கட்டியபொழுது ஆத்தங்குடிக் கற்கள் பதிக்க எண்ணினோம். ஆனால் ஒப்பந்த முறையிலான பணி என்பதால் ஒப்பந்ததாரரின் நிதித்திட்டத்துக்குள் அடங்காத அந்த விருப்பம் நிறைவேறாமலே போனது. :-(

    ReplyDelete