முகப்பு

08 March 2020

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் : தினமணி

உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை தினமணி  தளத்தில் இன்று (8.3.2020) வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தினமணி இதழுக்கு நன்றியுடன்.



உலகைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் பிரதமர் ஆன,  இளம் வயதில் பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற, சன்னா மரின் (34) ஆவார். இவருக்கு முன்பாக நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா அர்டேர்ன் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர்.  

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையில் ஐந்து கட்சிக்கூட்டணி ஆட்சி நடத்தியபோது ஆண்டி ரின்னி பிரதமராக இருந்தார். அப்போதைய தபால்துறை வேலை நிறுத்தத்தை ஆண்டி ரின்னி முறையாக எதிர்கொள்ளாததால் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பைத் தெரிவிக்க, பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அதே கட்சியைச் சேர்ந்த, சன்னா மரின் பிரதமரானார்.

பல பிரச்னைகளை பின்லாந்து எதிர்கொண்டிருந்த சூழலில் பொறுப்பில் அமர்ந்தார் சன்னா மரின்.  நிதியமைச்சரான கத்ரி குல்முனி (32) அவரைவிட இளையவர். ஐந்து கட்சிக் கூட்டணியில் இவரது கட்சியில் இடம்பெற்ற நால்வரில் ஒருவர் குல்முனி.  நால்வரில் ஒருவரே 35 வயதுக்கு மேலுள்ளவர். இந்த நியமனங்களைப் பற்றி ஓர் அரசியல் ஊடகவியலாளர், “மக்களின் தேவைக்கு எந்நேரமும் பணி செய்கின்ற இளம் வயதினர்தான் தற்போதைய தேவை என்றும், அவ்வாறு அமைபவர்கள் குறிப்பாக மிகவும் புதியவர்களாக இருப்பின் இன்னும் சிறப்பு” என்றும் கூறினார்.  

குடும்ப சூழல் அவர் பக்குவப்படக் காரணமானது. இளம் வயதில் பிரிந்த பெற்றோர்களைக் கொண்ட அவர், தாயாரால் வளர்க்கப்பட்டார். அவரது குடும்பம் பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 15ஆம் வயதில் பேக்கரி கடையில் பணியாற்றினார். பள்ளிக்காலத்தில் தன்னுடைய கைச்செலவிற்காக பருவ இதழ்களை விநியோகம் செய்தார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராக தன் தாயார் இருந்ததால் பல இக்கட்டான சூழல்களை எதிர்கொண்டதாகவும், தன் குடும்பத்தைப் பற்றி மனம் திறந்து யாரிடமும் பேச இயலா நிலையில் இருந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தது அவருடைய தாயார் ஆவார். விரும்பியதை சாதிக்கமுடியும் என்ற ஒரு ஊக்கத்தை அவர் தன் மகளுக்குத் தந்திருந்தார். அவர்களுடைய குடும்பத்தில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பினை நிறைவு செய்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றவர் சன்னா மரின் ஆவார்.  

அவருடைய அரசியல் வளர்ச்சியானது மிகவும் குறுகிய காலத்திற்குள் அமைந்ததாகும். 20ஆம் வயதில் அரசியலில் பிரவேசித்த அவர், ஹெல்சின்கியின் வட பகுதியில் இருந்த டாம்பீயர் என்ற ஊரில் உள்ளூர் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும் அடுத்த ஐந்து ஆண்டிற்குள் வெற்றி பெற்றதோடு சபையின் தலைவராக 27ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2015இல் பின்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரானார். முதன் முதலாக பாராளுமன்றத்தில் அடியெடுத்துவைத்தது முதல் இவர் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் திகழ்ந்து வருகிறார்.

பதவியேற்றபோது, 22 மாதக்குழந்தையின் தாயாக இருந்த அவர், இப்பணிக்கு அவர் பொருத்தம்தானா என்ற வகையில் எழுப்பப்பட்ட வினாக்களைப் பற்றி கவலை கொள்ளவே இல்லை. நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை என்று உறுதியாகக் கூறினார். இடதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்த அவர் பின்லாந்து நாடு வளம் பெற்ற நாடாக அமைய இலக்கு அமைத்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர், "என் வயதைப் பற்றியோ, பாலினத்தைப் பற்றியோ எனக்கு என்றும் சிந்தனை கிடையாது. அரசியலில் நான் வெற்றி பெறுவதற்குக் காரணம் மக்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதை நான் அறிவேன்," என்று கூறினார்.

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமரான இவர், “பின்லாந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். அதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அனைவருமே எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் இது. தனி நபருக்கு அல்ல” என்றார். பிரதமராக ஆக வேண்டும் என்று தான் கனவு காணவில்லை என்றும், அதனைக் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசியலும் அவரைப் பொறுத்தவரை வெகுதூரத்தில் இருந்ததாகவும் கூறினார்.

“நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்னைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் இருப்பதற்குக் காரணம். நான் செயல்பட வேண்டிய உடனடித்தேவை உள்ளது. இது மற்றவருடைய பணி என்று ஒதுக்கிவிட என் மனம் ஒப்பவில்லை” என்றும், “அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதல் நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து” என்றும் கூறினார். 1907இல், உலகில் முதன்முதலாக பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பின்லாந்தில் தற்போது முக்கியமான பொறுப்புகளில் அதிகமான இடங்களில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதமராக இருந்தபோதிலும் சொந்த நலனில் கவனம் செலுத்துவதில் எவ்விதச் சிக்கலும் எழவில்லை என்று கூறும் அவர்,  ஒவ்வொரு வார இறுதியையும் தன் கணவருடனும், கைக்குழந்தையோடும் இனிமையாகக் கழிக்கிறார். மற்றவர்களைப் போல வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைக்குச் செல்லும் அவர் தன்னை ஒரு மிகச் சாதாரணமானவர் என்றே கூறிக்கொள்கிறார். அவ்வகையில் உலகம் அவரைத் திரும்பிப்பார்ப்பது இயல்புதான்.  

தினமணி இதழில் வாசிக்க: உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின், தினமணி, மகளிர் தின  சிறப்புப்பக்கம், 8 மார்ச் 2020

12 comments:

  1. உள் நாட்டில் கோயில் சுற்றுலா தான் என்றால் உலகையே சுற்றி வருகிறீர்களே!

    பின்லாந்தின் இளம் பிரதமர் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்புப் பெற்றேன். நன்றி.

    ReplyDelete
  2. இன்றைய தினத்தில் இவரைப்பற்றிய குறிப்பு அற்புதம் வாழ்த்துவோம்.

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மகளிர் தினத்தில் சாதனை பெண்மணி சன்னா மரின் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள செய்த தங்களின் கட்டுரை அருமை ஐயா

    ReplyDelete
  4. இன்றைய தினத்தில் ஒரு சிறப்புப் பகிர்வு.

    நல்லதொரு கட்டுரை - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  5. இந்த மாதிரியான தகவல்கள் வலைதளத்தோட நிற்காமல் பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடங்களுக்கும் சென்று அடைய வேண்டும்.. இந்த மாதிரியான செய்திகள் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நினைக்கிறேன்..

    வேலையில் இருந்து ரிட்டையர்மெண்ட் ஆகி சும்மா இருக்காமல் பல ஆக்கபூர்வமான பணிக்ளை செய்து வரும் உங்களுக்கு இந்னேரம் கிடைத்து இருக்க வேண்டும்....விருது கொடுப்பவர்களின் பார்வையில் நீங்கள் இன்னும்படவில்லை என நினைக்கிறேன் அவர்கள் பார்வையில் பட்டு இருந்தால் நிச்சயம அரசு விருதோ அல்லது விகடன் மற்றும் புதிய தலைமுறையில் கிடைக்கும் சாதனையாளர் விருது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்..அதற்கு அந்த துறைகளில் தொடர்பு உள்ள நம் பதிவர்கள் உங்கலை பற்றிய தகவல்களை எடுத்து சொல்லாம்

    நிச்சயம் நீங்கள் சீகிரம் விருது பெற என் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  6. உலகின் முதல் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. தகவல் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  8. மின்னஞ்சல் மூலமாக (jayabarathans@gmail.com):
    ஓரிளம் பெண் பிரதமரை உலக மாதர் நாளில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.
    அத்துடன் கடல்போன்ற உங்கள் வலைக் களஞ்சியம் பற்பல உன்னதப் படைப்புகளை அள்ளித் தருகிறது. மகத்தான ஆக்கவினைகள்.
    சி. ஜெயபாரதன், கனடா
    https://jayabarathan.wordpress.com/

    ReplyDelete
  9. மகளிர்தினத்தில் சாதனை பெண்மணி பற்றிய சிறப்பான செய்திகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அருமையான தகவல். சிறப்பு ஐயா

    ReplyDelete
  11. சன்னா மரின் போலும் உலகச் சாதனையாளர் பலரை இன்னும் இன்னும் அறிமுகப் படுத்துங்கள் அய்யா. நீங்களும் சாதனையாளராக வாழ்த்துகள் வணக்கம்

    ReplyDelete
  12. நல்ல தகவல்
    மாப்பிள்ளை தீஜ் துரையின் ஆவல் நிறைவேற்றப்படும்

    ReplyDelete