முகப்பு

27 June 2020

தர்ப்பண சுந்தரி : எஸ்.வி.வேணுகோபாலன்

"நாம் அன்பு செலுத்திய ஒருவர் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது, அவர் அதுவரை காட்டிய அன்பின் காரணமாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதா அல்லது அவர்மீது கோபித்துக்கொள்வதா? அதனைக் காலம்தான் தீர்மானிக்கும். இருந்தாலும் மனது என்று ஒன்று இருந்து பாடாய் படுத்துகிறதே அதனை என்ன செய்ய?" இது தர்ப்பண சுந்தரியின் தந்தையாரின் மன நிலை மட்டுமன்று. அவரைப் போன்ற குணம் படைத்தோரின் மன நிலையே.

1979 முதல் 2019 வரை எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய 16 சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் அதிகம் பாதிப்பைத் தந்தது தர்ப்பணசுந்தரி. “என் ஜென்ம பிராரப்தம், எல்லாம் முடிஞ்சு போச்சு, கேட்காதே சுந்தரியைப் பற்றி” என்று சொல்லிக் கொண்டு அவர் அழ ஆரம்பிக்கும்போது தன் மகள் வைத்திருந்த பாசத்தை உணர முடிகிறது. எந்த அளவிற்குப் பாசம் வைத்திருந்தால் அந்த அளவிற்கு அவர் அவ்வாறு கூறியிருப்பார். ஒருவர்மீது வைக்கப்படும் பாசத்தைவிட, அதனை இழக்கும்போது அடைகின்ற சோகத்தை சொற்களால் விவரிக்க முடியாது.

 

பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அனைத்துமே எக்காலத்திற்கும் பொருந்துவதைப் போல இருப்பதைக் காணமுடிகிறது. குடும்பத்தில் இருந்துகொண்டு மிகவும் நெருக்கமாக பழகுதல் தொடங்கி, சமூக அவலத்தைக் கண்டு கொதித்தெழுவது வரை மிகவும் அனாயாசமாக எழுத்தைக் கையாண்டுள்ளார். ஆசிரியரின் நடை இதுதான் என்று வரையறுத்துச் சொல்லமுடியாத அளவிற்கு வெவ்வேறு நடையில் யதார்த்தத்தை நம்முன் கொண்டு வந்துள்ளார்.

இன்றோ நாளையோ என்று நிமிடங்களை யுகங்களாகக் கழித்துக்கொண்டிருக்கும் உயிரைப் போகவிடாமல் தடுக்க யத்தனிக்கின்ற பிற உயிர்களின் தவிப்பை உணர்த்துகிறது ‘கடைசி நாள் படுக்கை’. உத்தரவு வாங்கிக்கவா என்று அக்கா கேட்கும்போது அவள் சாகக்கூடாது, சாக மாட்டாள் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் இயல்பாகவே வந்துவிடுகிறது.

நம் மக்களின் ஈரமற்ற குணத்தை வெளிப்படுத்துகின்ற ‘தீர்த்தம்’. இக்கதையைப் படித்தபோது பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வருகின்ற, பட்டினத்தில் பிழைக்கப்போன குடும்பத்தார் குடிக்க தண்ணீர் கேட்கும்  காட்சி நினைவிற்கு வந்தது.

ஏதாவது சாப்பிடாது போகக்கூடாது, உள்ளே வந்து உட்காரு என்று  ‘சூடாமணி மாமி’ சொல்வதுபோல ஏற்படுகின்ற உணர்வு பாசத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மனதில் ஏதோ வெற்றிடம் ஏற்பட்டதைப் போல உணர முடிந்தது. இப்போதெல்லாம் மாமியைப் போன்றோரைக் காண்பது அரிது. எங்குமே வறட்டுச் சிரிப்பையும், பொருளற்ற வார்த்தைகளையேதான் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

நிறைவான வாழ்வினை வாழ்ந்து சென்றுவிட்டால்கூட சிலரது மரணங்கள் அதிக பாடத்தைத் தந்துவிடும் என்பதை உணர்த்தியது ‘முட்டுச்சந்து’.  போயிட்டாளா என்ற தாத்தா நல்லதுக்குத்தான் என்கிறார். அந்த ஒரு சொல்லில்தான் எவ்வளவு பொருள். தாத்தாவால், வேறுவழியின்றி, ஜீரணிக்க முடிந்தால்கூட படிக்கும் நம்மால் அதனை ஜீரணிக்க முடியாதுதான்.

கால இடைவெளி எவ்வித வேறுபாட்டையும் வாசிப்பவருக்குத் தரவில்லை. குழந்தை ஏங்குவது பசிக்காகவா, தூக்கத்திற்காகவா என்ற விவாதத்தை முன்வைக்கும் ‘கோடை’, ரசனை தெரியாத உலகை வெளிப்படுத்துகின்ற ‘கவித்துவம்’, நாடகப்பாணியில் அமைந்த ‘இன்னோடு எல்லாம் முடிந்தது..’  அமைதியாக ஒரு பிரச்னையை முடிவுக்குக் கொணர்ந்த ‘சோறு’, குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும் என்பதை உணர்த்துகின்ற ‘மாநகர்ப் புதைக்குழி’, எப்பொழுதோ கூறப்படுகின்ற அறிவுரையும், அறவுரையும் ஓர் உயிரையே காப்பாற்றும் என்பதை வெளிப்படுத்துகின்ற ‘நெருப்பின் அருகே’ என்ற வகையில் ஒவ்வொரு கதையும் பொருள் பொதிந்ததாக சிறப்பாக அமைந்துள்ளது.

வாழ்வின் யதார்த்தங்களை, சிறுகதைத் தொகுப்பாகக் கொணர்ந்த ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691), பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 (044-24332424, 24332924, 24356935, thamizhbooks@gmail.com),  டிசம்பர் 2019, ரூ.110

நன்றி : புக்டே தளம், அத்தளத்தில் வாசிக்க : தர்ப்பண சுந்தரி



25 comments:

  1. சிறப்பான விமர்சனம் நூலுக்கு மகுடம் சூட்டியதுபோல் இருக்கிறது.
    ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு அறிமுகம்.  அவ்வப்போது மனதைப் பாதிக்கும் விஷயங்களை / சம்பவங்களை வைத்து அப்போதைய மனநிலையில் படைப்புகள் உருவானால் நடை ஒரே மாதிரி அமையாமல் மாறுபட்டதாய் இருக்குமோ என்கிற எண்ணம் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் மிகவும் சரியே. இது எனக்கு அடிக்கடி தோன்றும் குறிப்பாகக் கதை எழுதும் போது. ஏனென்றால், 10 வருடங்கள் முன்...இல்லை ஒரு வருடம்முன் எனக்கிருந்த சில கூட இப்போது யோசிக்கும் போது மாறி இருக்கிறது. முன்பு எழுதிய கதைகளை இப்போது வாசித்தால், கூட அப்ப்டி சில சமயம் தோன்றுகிறது.

      கீதா

      Delete
  4. 16 கதைகளிலுமே நல்ல படைப்பு களை ஆசிரியர் படைத்தது மட்டுமின்றி நெஞ்சில் நிலை நிறுத்தகிறார். இதை படைக்கும் போது அலுவலக பணியிடையே உருவாக்கியுள்ளது வியப்பு.

    ReplyDelete
  5. ஆழ்ந்த அருமையான விமர்சனம் ஐயா...

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம், நூல் அறிமுகமும்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  7. நல்லதொரு விமரிசனம். சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தாளர் பற்றி அதிகம் அறிந்தது இல்லை. இந்தக் கதைகள் மூலம் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

    ReplyDelete
  8. மிகச் சிறந்த மனிதர்
    தங்களின் விமர்சனம் நூலினைப் படிக்கத் தூண்டுகிறது
    அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  9. தர்ப்பண சுந்தரி! -- பெயரே புதுமையாக இருக்கிறது. தாங்கள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதும் அபாரம்! எடுத்துக் கொண்ட பொருளை முன்னிருத்தி பேசும் அல்லது விவாதிக்கும் பழக்கமெல்லாம் இன்றைய காலத்தில் அருகி வருவது இந்நாளைய குறைபாடு தான்!

    ReplyDelete
  10. எழுது பொருளுக்கு ஏற்ப வேறு வேறு புனைப்பெயரில் எழுதுபவர் இவர் என்று நினைக்கிறேன் புஷ்பாதங்க துரை ஒரு புனைப்பெயர் என்று நினைவு

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஜி எம் பி ஸார். அவர் ஸ்ரீவேணுகோபாலன். அவர் புகைப்படம் பார்த்திருப்பீர்கள். அவர் வேறு..்். இவர் வேறு்

      Delete
    2. ஸ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை இப்போது இவ்வுலகில் இல்லை.

      Delete
    3. அடி சறுக்கி விட்டதா

      Delete
  11. விமர்சனம் மிக அருமை.

    //ஒவ்வொரு கதையும் பொருள் பொதிந்ததாக சிறப்பாக அமைந்துள்ளது.//

    ஆமாம், உங்கள் விமர்சனத்தில் வரும் கதை வரிகள் உண்மை என்று சொல்கிறது.

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு
     
    என் அன்பின் நன்றி உரித்தாகிறது!

    மிகச் செறிவான அவரது எழுத்துகள், BOOKDAY இணைய தளத்தில் பதிவானதை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த போது, நண்பர்கள் பலரும் மிகவும் பாராட்டி பதில் போட்டு வருகின்றனர். ஒரு நண்பர், அவர் என் சிறுகதை தொகுப்பை வாசித்தவர், மதிப்புரை வாசிக்கையில் கண்கள் கலங்கின என்று அழைத்துப் பேசினார்.

    இங்கே, அவரது வலைப்பூவில், அன்பர்கள் பலரும் அவரைப் பாராட்டுவதோடு தொகுப்புக்கும் உங்கள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறீர்கள்...உங்களுக்கும் உளமார்ந்த நன்றி.

    இந்தியன் வங்கியில் எழுத்தராக 39 ஆண்டுகள் பணியாற்றி, டிசம்பர் 2019ல் பணி நிறைவு செய்யும் நேரத்தில், தர்ப்பண சுந்தரி எனும் இந்தச் சிறுகதை தொகுப்பையும், உதிர்ந்தும் உதிராத எனும் பெயரில் புகழஞ்சலி கட்டுரைகள் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டோம்.  தி இந்து ஆங்கில நாளேட்டில் (OPEN PAGE) பத்து கட்டுரைகளுக்கு மேலாகவும், தி இந்து தமிழ் நாளிதழில் சமூக, பொருளாதார விஷயங்கள் மீதான கட்டுரைகளும், இந்து டாக்கீஸ் இணைப்பில் திரைப்பட பாடலாசிரியர்கள், பாடகர்கள் பற்றிய சில கட்டுரைகளும் எழுதி உள்ளேன். புதிய ஆசிரியன் எனும் அருமையான இதழில் 2009 மே மாதம் தொடங்கி மாதா மாதம் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன்.தீக்கதிர், செம்மலர், தினமணி உள்ளிட்டு கட்டுரைகள் எழுதி உள்ளேன்.  கடந்த ஏப்ரல் மாதம் ஆனந்த விகடன் இதழில், சுப்பிரமணி எனும் சிறுகதை வெளியானது. இவை யாவும் அன்பர்கள் தகவலுக்கு. ஒரு சுய தம்பட்டம் போல் தான் ஒலிக்கிறது....ஆனாலும், அறியப்படாத ஒருவன் என்ற முறையில் இந்த அறிமுகத்தைச் சகித்துக் கொள்ள வேண்டுகிறேன். 

    ஜம்புலிங்கம் அய்யா அவர்களை இதுவரை நேரில் பார்த்தறியேன்....அவரது எழுத்தின்வழி மின்னஞ்சல் தொடர்பும், தொலைபேசி அழைப்பும் மட்டுமே அருமையான நட்பை சாத்தியமாக்கி இருக்கிறது. அவர் ஓர் அன்பு கொண்டாடி. கரந்தை ஜெயக்குமார் அய்யா அவர்களும், இவரும் மற்றவர்களைப் பாராட்டும் உயர்ந்த பண்பாக்கமும், அப்படியான நட்பு வட்டமும் கொண்டிருப்பது வணக்கத்திற்கு உரியது.

    அய்யாவுக்கு மீண்டும் மீண்டும் அன்பும், நன்றியும், நெகிழ்ச்சியும்....

    எஸ் வி வேணுகோபாலன்
    சென்னை 24
    94452 59691

    ReplyDelete
    Replies
    1. அறிந்து கொண்டோம் ஸார். பாராட்டுகள்.

      Delete
  13. நண்பர் வேணுகோபாலை பல ஆண்டுகளாக அறிவேன். இந்தியன் வங்கியில் தொழிற்ச்சங்க தலைவராக பல ஆண்டுகளாக பணி புரிந்தவர். நற்பண்புகள் கொண்ட மதியாளர். சிரிக்க சிரிக்க அதே சமயம் சிறந்த கருத்துக்களை முன் வைப்பவர். இவரைப்பற்றி அறியாதவர்களுக்கு நான் முன் வைக்கும் சிறிய அறிமுகம்.
    மற்றபடி இந்த புத்தகத்தில் உள்ள யதார்த்தமான நடை எல்லோர் மனதையும் தொடும் என்பது உறுதி. அவர் இன்னும் உச்சத்தை தொடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. வாழ்க SVV

    ReplyDelete
  14. அய்யா அவர்களுக்கு,
    நல்ல நூல் விமர்சனம்.

    ReplyDelete
  15. ஆழ்ந்த விமர்சனம். பாசத்தை இழப்பதன் வலி வார்த்தையால் விவரிக்க முடியாதது. இந்த வரிகள்தான் எத்தனை சத்தியமானது. வாழ்த்துக்கள் ஐயா. ஆசிரியருக்கும் என் பாராட்டுகள்.

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரரே

    அருமையான நூல் விமர்சனம். சிறுகதை தொகுப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. அதில் அடங்கும் சிறு கதைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அற்புதமான கதைகளை படைத்த கதாசிரியருக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள். நல்லதொரு நூலைப்பற்றிய நாங்கள் அறிந்து கொள்ளுமாறு அழகாக விமர்சித்தமைக்கு உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. நண்பர் வேணுகோபாலனை நான் சிறிதுகாலமாகத்தான் அறிவேன். ஆழ்ந்த இலக்கிய ஆர்வமும் இலக்கிய வட்டத்தில் எங்கு நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் வருகைதரும் பாங்கும் உடைய இனிய நண்பர். தர்ப்பண சுந்தரி அவருடைய குறிப்பிடத்தக்க (முதல்) சிறுகதைத் தொகுப்பாகும். தங்கள் மதிப்பீடு நூலுக்கு மேலும் அணிசேர்க்கிறது.

    ReplyDelete
  18. சிறப்பான விமர்சனம். ஒவ்வொரு கதையும் சிறப்பானது என்பதை அறிந்து கொள்ளுகின்றேன்

    ReplyDelete
  19. நல்லதொரு நூல் விமர்சனம்.

    ReplyDelete