முகப்பு

27 July 2020

அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம்

குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இயற்கையெய்திய போது பல வெளிநாட்டு நாளிதழ்கள் அவருக்குப் புகழாரம் சூட்டின. தமிழகத்தில் பிறந்து, பல சூழல்களை எதிர்கொண்டு, இந்தியாவின் உயரிய நிலையான குடியரசுத்தலைவர் பொறுப்பில் இருந்து, அப்பதவிக்கே பெருமை சேர்த்த பெருமகனாருக்கு அவ்விதழ்கள் (லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், டெய்லி மெயில், இன்டிபென்டன்ட், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான்) சூட்டிய அஞ்சலியை நினைவுகூர்வோம்.

கார்டியன்

அப்துல் கலாம் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 2002 முதல் 2007 ஓர் அசாதாரண குடியரசுத்தலைவராகத் திகழ்ந்த அவர், அதற்கு முன்பாக சுமார் 40 ஆண்டுகள் அசாதாரண அறிவியலாளராகவும் இருந்தவர். பிரிட்டிஷ் கட்டடக்கலைஞர் சர் எட்வின் லியூயென்ஸ் கட்டிய  வைசிராய் அரண்மனையாக செயல்பட்ட,  புதுதில்லியுள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு பொதுமக்களையும் வரவழைத்தார். எங்கு பயணித்தாலும் மக்களுடன் மிகவும் நெருக்கமான நிலையில் காணப்பட்டார். பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் அவர் இருந்தார். அவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அன்போடு அழைக்கப்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பிலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்திலும், அவருடைய பங்களிப்பு அதிகம். அணு ஆய்வுத்திட்டத்தில் தொழில்நுட்ப ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் அவருடைய பங்கு அளப்பரியதாக இருந்தது. பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு பெரும் தூண்டுகோலாக இருந்துள்ளார். 1998இல் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தியபோது அவர் முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளார். “அக்னிச்சிறகுகள்”, “இந்தியா 2020” உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவின் உயரிய பாரத ரத்னா உள்ளிட்ட பெருமைக்குரிய பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

டெய்லி மெயில்

அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக ஆன சூழல் 2002இல் தற்செயலாக அமைந்தது. இருந்தாலும் அவர் அப்பொறுப்பினை ஏற்ற காலம் அவருடைய வாழ்நாளில் சிறப்பான காலம் என்று கூறலாம். நாட்டின் மிகச்சிறந்த குடியரசுத்தலைவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெற்றார். அவர் ஒரு அரசியல்ரீதியிலான ஜனாதிபதி அல்ல. இருந்தாலும் தன் பணியினை மிகவும் துல்லியமாக மேற்கொண்டார். இது வரை எந்தத் தலைவரும் மேற்கொள்ளாததை அவர் செய்தார். தன் அலுவலகத்தை மக்களுக்கு மிகவும் அணுக்கமாகக் கொணர்ந்தார். அவருடைய ஆழ்ந்த நாட்டுப்பற்றும், இந்தியா வலிமை மிக்க நாடாக அமைய வேண்டும் என்ற அவருடைய பேரவாவும் கலாம் இத்தகு புகழ் பெறுவதற்குக் காரணங்களாக அமைந்தன. சாதாரண பின்புலத்தில் பிறந்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் மக்களின் ஜனாதிபதியான கலாமே.  நேருவை, “நேரு மாமா” என்று அழைக்கக் கேட்டுள்ளோம். ஆனால் குழந்தைகளுடன் கலாம் இருந்த நெருக்கத்தைப் பார்ப்போரின் மனதில் உண்மையான மாமா யார் என்ற ஐயம் எழ ஆரம்பித்துவிடும். குடியரசுத்தலைவர் என்ற பதவியால் பலர் சிறப்பு பெற்றுள்ளனர். ஆனால் இவரால் அப்பதவியின் சிறப்பு மேலும் உயர்ந்தது.

இன்டிபென்டண்ட்

இயற்பியலாளரான அப்துல் கலாம் நாட்டின் ஏவுகணைத் திட்டத்தின் பெரும்பங்களிப்பு செய்த வகையில் ஏவுகணைத்திட்டத்தின் தந்தையாகப் போற்றப்படுகிறார். குடியரசுத்தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்தபின்னர் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களோடு உரையாடினார். அவர்களின் கனவுகள் செயல்பட ஊக்குவித்தார். பள்ளி மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அறிவுரை கேட்டு வந்த மின்னஞ்சல்கள் பெரும்பாலானவற்றிற்கு அவர் மறுமொழி கூறிவிடுவார். முதன் முதலாகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் இந்திய ராணுவத்திற்காக ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்தார். போர் விமானியாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் குறுகிய இடைவெளியில் அவரால் அவ்விலக்கை அடையமுடியாமல் போனது. குறைந்த அளவு செலவில் அமைந்த கரோனரி ஸ்டென்ட், கிராமப்புற சுகாதாரத்திற்காக டேப்லெட் கணினி ஆகியவை உருவாக உதவியாக இருந்தார்.

 

நியூயார்க் டைம்ஸ்

இந்திய செவ்வியல் இசையை ரசித்த அப்துல் கலாம், இந்து சமயப் புனித நூலான பகவத் கீதையையும் வாசித்தார்.  உலக நாடுகளின் கண்டனங்களுக்கிடையே 1998இல் இந்தியாவின் வடமேற்கில் பாலைவனப்பகுதியில் அணு ஆயுதச் சோதனை நடத்தியபோது அவரின் செல்வாக்கு வெளிவர ஆரம்பித்தது. அணு ஆயுதத்திட்டங்களுக்கு பெரிதும் ஊக்கம் தந்தார். அவ்வாறான சோதனை முயற்சிகளின்போது, அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஆன நிலையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினார். அணுகுண்டு சோதனைக்குப் பின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர், 2500 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு நாட்டையும் பிடித்ததில்லை. மாறாக பிற நாட்டவர் இங்கு வந்திருக்கின்றனர் என்றார். மக்களுடன் இருப்பதில் அவர் ஒரு மகிழ்ச்சியைக் கண்டார். பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் அவரை அதிகம் மதிக்கத் தொடங்கினர். மாணவர்களை அவர் அதிகம் நேசித்தார். அவருடைய இறுதி மூச்சின்போதுகூட மாணவர்களுடனேயே செலவிட்டார். அவரை “கலாம் மாமா” என்று அன்போடு அழைத்தனர். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அதற்கு முன்னர் “மாமா” என அழைக்கப்பட்டார்.

 

வாஷிங்டன் போஸ்ட்

1980களில் பிரித்வி மற்றும் அக்னி ஏவுகணைகள் வடிவாக்கம் பெறுவதில் அப்துல் கலாமின் பங்களிப்பு இருந்தது. தமிழில் கவிதைகள் எழுதினார். இசை நாட்டம் கொண்ட அவர் வீணை வாசிப்பில் ஆர்வம் காட்டினார். 1998இல் நடைபெற்ற அணுகுண்டு சோதனையின்போது மிக முக்கியமான பங்காற்றியவர். அச்சோதனையின் காரணமாக இந்தியாவின்மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் அச்சோதனை அவரை மிகச் சிறந்த கதாநாயகராக ஆக்கிவிட்டது. “கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், அக்கனவுகளுக்கு சிந்தனை வடிவம் தாருங்கள். அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுங்கள்” என்றார். சிறந்த அறிவியலாளர், நிர்வாகி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற சிறப்புகள் அவருக்கு உண்டு. 

டான்

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலைப் படித்த அப்துல் கலாம், அணு ஆயுதங்களைச் சுமந்துசெல்கின்ற ஏவுகணைகளின் தயாரிப்புக்குழுவில் முன்னணியில் இருந்து செயலாற்றினார். பொக்ரான்-2 எனப்படுகின்ற, 1998இல் இந்தியா அணுகுண்டு சோதனையின்போது அதில் முக்கியப் பொறுப்பாற்றினார். இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முனைந்து அதிக அக்கறை காட்டினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது தவிர்க்கவேண்டும் என்றார். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். தற்காலத்து அரசியல் தலைவர்கள் மிக அரிதாகவே புகழ்கின்ற ஒரு குணம் அவரிடம் இருந்தது. இந்த அறிவியலாளர்-குடியரசுத்தலைவர், ஒரு குறிப்பிட்ட ஒரு சமயம் அல்லது சமூகத்திற்கு மட்டுமன்றி, அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்தியா முழுமைக்குமானவராக செயல்பட்டு வந்தார்.

 

அவர் கூறிய “கனவு காணுங்கள்” என்ற இலக்கினை முன்வைத்து அதை நோக்கி முன்னேற முயல்வோம். அதுவே நாம் அவருக்கும், நம் நாட்டிற்கும் செய்கின்ற மிகப்பெரிய சேவையாகும்.


முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.பி.ஜெ.அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி தொடர்பான தினமணி மலரில் (தினமணி, திருச்சி, 27.7.2020) "அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம்" என்ற என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை வெளியிட்ட தினமணி இதழுக்கு நன்றி.


18 July 2020

வெள்ளைச்சீலை ஆத்தா

இளமைக்கால நினைவுகளை, குறிப்பாக ஐந்து வயது காலகட்டத்தில் நடந்தவற்றை  சிந்தித்து முழுமையாக வெளிக்கொணர்வது சற்றுச் சிரமம். இருந்தாலும் ஆங்காங்கே பரவலாக சிந்தனையில் உள்ளவற்றை இணைக்க முயலும்போது முதலில் என் நினைவிற்கு வருபவர் எங்கள் ஆத்தாவின் (அப்பாவின் அம்மா) அம்மா ஆவார். அவர் வெள்ளைச்சீலையுடன் இருந்ததால் அவரை வெள்ளைச்சீலை ஆத்தா என்றழைப்போம். அவருடைய பெயர் பொன்னம்மாள் என்பர். சிலர் அவரை பொன்னாத்தா என்று அழைப்பர். மிகவும் வயதானவர்களில் மூத்தவராக நான் பார்த்தது அவரைத்தான்.

கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் எங்கள் வீடு இருந்ததாகக் கூறுவர். எனக்கு சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் வசிக்க ஆரம்பித்த முதல்தான் நினைவில் உள்ளது. இருந்தபோதிலும் கும்பேஸ்வரர் கோயில்  தெற்கு வீதிக்கும், எங்கள் ஆத்தாவின் அம்மா இருந்த மேல வீதிக்கும் அடிக்கடி சென்று விளையாடியது போன்ற நினைவு அடிக்கடி வருவதுண்டு. சமயத்தில் அங்கிருக்கும் மூகாம்பிகை கோயில், இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஹோட்டல், அடுத்ததாக வைத்தியர் வீடு, எதிரே உள்ள கமலா நேரு வாசகசாலை அருகே உள்ள பெரிய காங்கிரஸ் கொடி பறக்கும் கம்பம். இவற்றுக்கருகேயும் விளையாடிக்கொண்டிருப்போம்.  

அவர் அங்கு வருவார். எங்களை அழைப்பார். ஆரஞ்சு சுளை மிட்டாய்களை வாங்கித் தருவார். நார்த்தஞ்சுளை  மிட்டாய் என்று கூட சிலர் கூறுவர் பெரும்பாலும் ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும். அவர் அதனை கையில் வைத்துக்கொண்டு தரும் அழகே தனி. இந்த நிறம்தான் வேண்டும் என்று கேட்டு நாங்கள் வாங்கிக்கொள்வோம். அதனை எங்களிடம் தரும்போது அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். அதனைப் பெறும் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். பாசம் தோய்ந்த மிட்டாய் அல்லவா? அன்பு பரிமாறிக்கொள்ளப்படும்போது அவ்வாறான உணர்வு தோன்றும் போலுள்ளது. இப்போதெல்லாம் அவ்வாறான மனம் திறந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கின்ற நல்லுள்ளங்களைக் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது. இந்நாள்களில் பாசம்கூட பெரும்பாலும் செயற்கைத்தன்மையாகவே காணப்படுகிறது.

சமயத்தில் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருப்பார். அமைதியான முகம். வயதான அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.  பின்னாளில் எங்கள் ஆத்தாவை (அப்பாவின் அம்மா) அவ்வாறு பார்த்துள்ளேன்.

சில நாள்கள் கழித்து மேல வீதியில் அவருடைய வீட்டில் பெரிய, கைப்பிடியுள்ள மர நாற்காலியில் அவரை உட்கார வைத்திருந்தார்கள். அதே வெள்ளைச்சீலையில் அவர் இருந்தார். இரு கைகளையும் நாற்காலியில் அணைத்துக் கட்டியிருந்தனர். முகத்தை சற்றே இழுத்து, தொங்கிவிடாமல் இருக்க ஒரு வெள்ளைத்துணியைக் கட்டி அதன் மற்றொரு பகுதியை, சுவற்றில் ஆணி அடித்து இறுக்கிக் கட்டியிருந்தார்கள். வழக்கமாக வாசலில் நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும் இருக்கும் ஆத்தாவை ஏன் அப்படி உட்கார வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வீடு முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. அப்போது வந்து போனவர்கள் எங்களிடம் ஆத்தா வந்து இனி மிட்டாய் தர மாட்டார்கள் என்று மட்டும் எங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதற்கான காரணம் எங்களுக்குப் புரியவில்லை. அவர் எங்களையெல்லாம் விட்டுப் போய்விட்டார் என்று அறிந்துகொள்ளும் பக்குவத்திலும் நாங்கள் அப்போது இல்லை.

இப்போதுகூட திருவிழாக்காலங்களிலோ, சிறு கடைகளிலோ ஆரஞ்சுச்சுளை மிட்டாய்களைப் பார்க்கும் அவர் என் முன் தோன்றுவார். கும்பேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியும், மேல வீதியும் நினைவில் சிறிது நேரம் தோன்றி மறைந்துவிடும்.

என்னால் மறக்கமுடியாதவர்களில் ஒருவராக எங்கள் வெள்ளைச்சீலையாத்தா இருந்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது. எங்கள் அத்தை மகளின் இன்னொரு பெயர் பொன்னி. அவரின் நினைவாக இப்பெயரைச் சூட்டினர். மூத்தோர், நாட்டிற்காக உழைத்த பெரியோர், குலதெய்வம், வீட்டுத்தெய்வம், பிறந்த ஊரின் பெயர்களை  வைத்து அழகு பார்த்த அந்த நாட்களை மறக்க முடியுமா? இப்போதெல்லாம் பொருள் தெரியாத, உச்சரிக்க முடியாத, நினைவில் வைத்துக்கொள்ள முடியாத பெயர்களையும்,  பண்பாட்டினைத் தொலைக்கும் அயலகப் பெயர்களையும் பெரும்பாலும் காணமுடிகிறது.

11 July 2020

ரயில் போகிறது : தேடலுக்கான ஆரம்பம்

கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி என்று அழைக்கப்பட்ட, தற்போது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது (1972-75) சம்பிரதி வைத்தியநாதன் தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து குட்டியாம்பாளையத்தெரு, தண்ணீர்த்தொட்டியைக் கடந்து (இப்போது தண்ணீர்த்தொட்டி இடிந்த நிலையில் உள்ளது) தஞ்சாவூர் முதன்மைச்சாலை வழியாக பள்ளிக்குச் செல்வது வழக்கம். சில சமயங்களில் சிங்காரம் செட்டித்தெரு, மௌனசுவாமி மடத்துத்தெரு வழியாகவும் செல்வேன். அவ்வாறு போகும்போதும் வரும்போதும் குட்டியாம்பாளையத்தெருவில் வரம் தரும் மாரியம்மன் கோயில் அருகில் குடியிருந்த ஜோசியர் ஒருவர் (பின்னர் அவரது மகன் வேதகுமார் எங்களுக்கு கல்லூரி நண்பரானார்) அவ்வப்போது என்னை அழைத்து, திண்ணையில் உட்காரவைத்து சில புத்திமதிகளைக் கூறுவார். வீட்டைப்பற்றியும், படிப்பைப் பற்றியும், பள்ளிப்படிப்பிற்குப் பின் உள்ள இலக்கினைப் பற்றியும் பொறுமையாகப் பேசுவார். என்னைப் போலவே பலரை அவ்வாறு அழைத்து உட்காரவைத்துப் பேசுவதையும் பல முறை பார்த்துள்ளேன்.

ஒரு முறை அவர் “ரயில் போகிறது” என்பதை ஆங்கிலத்தில் கூறும்படி கேட்டார். நான், “The train is going”, “The train go” “Train go” என்றவாறு பதில் கூறினேன். அப்போது அவர் “Third person singular present tense வரும்போது கடைசியில் ‘s’ சேர்க்கவேண்டும்” என்றார். “The train goes” என்றோ  “Train goes” என்றோ சொன்னதாக நினைவு. ஒரு சொற்றொடரை எழுதும் உத்தியைத் தந்ததோடு, எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும் என்பதை அது உணர்த்தியது.

தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்த நான் பொறுமையாக அவர் சொல்வதைக் கேட்பேன். அப்போதெல்லாம் வெளியில் பெரியவர்கள் கூறும் புத்திமதிகளையும், நண்பர்களின் பெற்றோர் கூறும் அறிவுரைகளையும் நான் மட்டுமல்ல, என் நண்பர்களும் பொறுமையாகக் கேட்பதுண்டு. அவை பின்னாளில் என் வாழ்வின் பல கட்டங்களில் உதவின. என் வாசிப்புப்பழக்கத்தினை மேம்படுத்தவும், பல கட்டுரைகளை நான் எழுதவும், என் தேடலுக்கான ஆரம்பமாகவும் அப்போது இடப்பட்ட அடித்தளங்களில் ஒன்றாக இந்நிகழ்வினைக் கருதுகின்றேன். மற்றவர்கள் ஏற்றார்களோ இல்லையோ, அவர் கூறிய புத்திமதிகள் பலவற்றை நான் கடைபிடித்துவந்துள்ளேன். அவற்றில் இந்த ரயில் போகிறது நிகழ்வும் ஒன்றாகும். 

இப்போதெல்லாம் பெற்றோர் அந்த அளவிற்குப் பழக விடுகின்றார்களா என்பதும் வளரும் மாணவர்களும், குழந்தைகளும் இவ்வாறாக பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கின்றார்களா என்பதும் சிந்திக்கும் அளவிலேயே உள்ளது. குழந்தைகள் வளரும்போது மன நிலையில் பக்குவப்படுவதானது அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். 

11 ஜுலை 2020 மாலை மேம்படுத்தப்பட்டது.

04 July 2020

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 : 117 பதிவுகள்

1 நவம்பர் 2019 முதல் 7 டிசம்பர் 2019 வரை நடைபெற்ற, ஆசிய மாதம் தொடர் தொகுப்பில் கலந்துகொண்டமைக்காக விக்கிப்பீடியாவிலிருந்து வாழ்த்து அட்டையும், சான்றிதழும் (மின்னஞ்சலில்) அண்மையில் வந்துள்ளன. இப்போட்டியில் 16 பயனர்கள் கலந்துகொண்டு 713 கட்டுரைகள் எழுதியுள்ளோம். இதில் நான் 117 கட்டுரைகளை எழுதி இரண்டாம் இடத்தில் உள்ளேன்.  


ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பினை விக்கிப்பீடியா நடத்தியது. சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா:  மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத்தளங்கள், கைத்தொழில்கள் கலாச்சாரம் பற்றியதாக இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆசியா தொடர்பான ஒரு நாட்டைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தோனேசியாவினைத் தேர்ந்தெடுத்தேன். 


இந்தோனேசிய அருங்காட்சியகங்கள்இந்தோனேசிய அரண்மனைகள், இந்தோனேசியக் கோயில்கள், இந்தோனேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள், இந்தோனேசியாவில் உள்ள பௌத்தக் கோயில்கள்ஆவணக்காப்பகங்கள், கலைக்கூடங்கள், ஆறு ஜனாதிபதி மாளிகைகள், தொல்லியல் தளங்கள், கோளரங்கம், தேசிய பத்திரிக்கை நினைவுச்சின்னம் உள்ளிட்ட தலைப்புகளில் 117 புதிய பதிவுகளைத் தொடங்கினேன். இவையனைத்தும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து என்னால் மொழிபெயர்த்து எழுதப்பட்டவையாகும்.


இந்துக் கோயில்களை கண்டி, புரா, மற்றும் கோயில் என்றவாறு அழைக்கின்றனர். கண்டி என்பது ஓர் இந்து அல்லது பௌத்தக் கோயிலாகும். இப்பிரிவினைச் சார்ந்த கோயில்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான இந்து-பௌத்த காலத்தில் கட்டப்பட்டவையாகும். புரா என்பது பாலினிய இந்துக் கோயிலாகும். கோயில் என்பது இந்துக் கோயிலைக் குறிக்கும். இவற்றில் சில பதிவுகளைக் காண்போம்.

இஜோ கோயில் யோக்யகர்த்தாவிற்கு அருகில் உள்ள கோயிலாகும். முதன்மைக் கோயிலுக்கு முன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கான மூன்று பெர்வாரா (இதைப் படிக்கும்போது பரிவாரக் கோயில்கள் என்பது நினைவிற்கு வந்தது) கோயில்கள் உள்ளன. கருவறைக்குச்செல்லும் நுழைவாயிலின் மேற்குப் பகுதியில் இரு புறங்களிலும் ஜன்னல் அல்லது மாடம் (கோஷ்டம் என்று நாம் அழைப்பதைப்போல) போன்ற அமைப்புகள் உள்ளன. அதில் யாளி, மகர சிற்பங்கள் உள்ளன.

எம்பூல் தீர்த்தக்கோயில் பாலியில் தம்பக்சைரிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள, பெட்டிர்டான் அல்லது குளியல் கட்டமைப்பைக் கொண்ட, இந்து பாலினிய தீர்த்தக் கோயில் ஆகும். புனித நீரூற்றுக்காக அது பிரபலமானது. அங்கு பாலினிய இந்துக்கள் சடங்கு சுத்திகரிப்புக்கு செல்கின்றனர். கோயில் குளத்தின் நீரூற்று புனிதமானதாகக் கருதப்படுகிறது.

புரா கோவா லாவா எனப்படுகின்ற, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் பெரும்பாலும் சோகி கஹங்கன் ஜகத் அல்லது "உலகின் ஆறு சரணாலயங்கள்" என அழைக்கப்படுகின்ற பாலியில் உள்ள உள்ள ஆறு புனிதமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

புரா தமன் சரஸ்வதி உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும். இக்கோயில் சரஸ்வதி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். புரா தமன் சரஸ்வதி அதன் தாமரை குளத்திற்காகச் சிறப்பினைப் பெறுகிறது.

புரா மாஸ்பகித்பஞ்ச மண்டலா என்ற கருத்துருவின்படி பாலியில் அமைக்கப்பட்ட ஒரே கோயில் என்ற பெருமையினைப் பெற்ற கோயிலாகும். 

பெசாகி கோயில் கிழக்கு பாலியில் அகுங் மலைச்சரிவுகளில் உள்ள பெசாகி கிராமத்தில் உள்ள ஒரு புரா வளாகத்தில்  அமைந்துள்ளது. புரா என்பது கோயிலையே குறிக்கிறது. இது பாலியில் உள்ள இந்து மதத்தின் மிக முக்கியமான, மிகப்பெரிய மற்றும் புனிதமான கோயில் ஆகும்.

மாரியம்மன் கோயில் வடக்கு சுமத்ராவில் மேடான் என்னுமிடத்தில் உள்ள, 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயிலாகும். இக் கோயில் மேடானில் ஆரம்ப காலத்தில் குடியேறிய தமிழ்க் குடியேற்றவாசிகளின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கோயிலாகும்.


ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. தற்போது ஆங்கில விக்கிப்பீடியா நடத்துகின்ற 10,000 இந்திய கட்டுரைப்போட்டிச் சவாலில் (1 மே 2020-31 ஜுலை 2020) முதன்முதலாகக் கலந்துகொண்டுள்ளேன். இன்றுவரை இதில் 41 பேர் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த தமிழ்நாடு தொடர்பான கட்டுரைகளிலிருந்து குறைந்தது 10 கட்டுரையாவது ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். போட்டி நிறைவடைந்தபின் அதன் அனுபவத்தை எழுதுவேன்.

அஞ்சலில் பெறப்பட்ட வாழ்த்து அட்டை மற்றும், சான்றிதழ்



1 நவம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.