முகப்பு

18 July 2020

வெள்ளைச்சீலை ஆத்தா

இளமைக்கால நினைவுகளை, குறிப்பாக ஐந்து வயது காலகட்டத்தில் நடந்தவற்றை  சிந்தித்து முழுமையாக வெளிக்கொணர்வது சற்றுச் சிரமம். இருந்தாலும் ஆங்காங்கே பரவலாக சிந்தனையில் உள்ளவற்றை இணைக்க முயலும்போது முதலில் என் நினைவிற்கு வருபவர் எங்கள் ஆத்தாவின் (அப்பாவின் அம்மா) அம்மா ஆவார். அவர் வெள்ளைச்சீலையுடன் இருந்ததால் அவரை வெள்ளைச்சீலை ஆத்தா என்றழைப்போம். அவருடைய பெயர் பொன்னம்மாள் என்பர். சிலர் அவரை பொன்னாத்தா என்று அழைப்பர். மிகவும் வயதானவர்களில் மூத்தவராக நான் பார்த்தது அவரைத்தான்.

கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் எங்கள் வீடு இருந்ததாகக் கூறுவர். எனக்கு சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் வசிக்க ஆரம்பித்த முதல்தான் நினைவில் உள்ளது. இருந்தபோதிலும் கும்பேஸ்வரர் கோயில்  தெற்கு வீதிக்கும், எங்கள் ஆத்தாவின் அம்மா இருந்த மேல வீதிக்கும் அடிக்கடி சென்று விளையாடியது போன்ற நினைவு அடிக்கடி வருவதுண்டு. சமயத்தில் அங்கிருக்கும் மூகாம்பிகை கோயில், இரு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஹோட்டல், அடுத்ததாக வைத்தியர் வீடு, எதிரே உள்ள கமலா நேரு வாசகசாலை அருகே உள்ள பெரிய காங்கிரஸ் கொடி பறக்கும் கம்பம். இவற்றுக்கருகேயும் விளையாடிக்கொண்டிருப்போம்.  

அவர் அங்கு வருவார். எங்களை அழைப்பார். ஆரஞ்சு சுளை மிட்டாய்களை வாங்கித் தருவார். நார்த்தஞ்சுளை  மிட்டாய் என்று கூட சிலர் கூறுவர் பெரும்பாலும் ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும். அவர் அதனை கையில் வைத்துக்கொண்டு தரும் அழகே தனி. இந்த நிறம்தான் வேண்டும் என்று கேட்டு நாங்கள் வாங்கிக்கொள்வோம். அதனை எங்களிடம் தரும்போது அவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். அதனைப் பெறும் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சியாக இருக்கும். பாசம் தோய்ந்த மிட்டாய் அல்லவா? அன்பு பரிமாறிக்கொள்ளப்படும்போது அவ்வாறான உணர்வு தோன்றும் போலுள்ளது. இப்போதெல்லாம் அவ்வாறான மனம் திறந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கின்ற நல்லுள்ளங்களைக் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது. இந்நாள்களில் பாசம்கூட பெரும்பாலும் செயற்கைத்தன்மையாகவே காணப்படுகிறது.

சமயத்தில் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருப்பார். அமைதியான முகம். வயதான அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும்.  பின்னாளில் எங்கள் ஆத்தாவை (அப்பாவின் அம்மா) அவ்வாறு பார்த்துள்ளேன்.

சில நாள்கள் கழித்து மேல வீதியில் அவருடைய வீட்டில் பெரிய, கைப்பிடியுள்ள மர நாற்காலியில் அவரை உட்கார வைத்திருந்தார்கள். அதே வெள்ளைச்சீலையில் அவர் இருந்தார். இரு கைகளையும் நாற்காலியில் அணைத்துக் கட்டியிருந்தனர். முகத்தை சற்றே இழுத்து, தொங்கிவிடாமல் இருக்க ஒரு வெள்ளைத்துணியைக் கட்டி அதன் மற்றொரு பகுதியை, சுவற்றில் ஆணி அடித்து இறுக்கிக் கட்டியிருந்தார்கள். வழக்கமாக வாசலில் நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும் இருக்கும் ஆத்தாவை ஏன் அப்படி உட்கார வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வீடு முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது. அப்போது வந்து போனவர்கள் எங்களிடம் ஆத்தா வந்து இனி மிட்டாய் தர மாட்டார்கள் என்று மட்டும் எங்களிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதற்கான காரணம் எங்களுக்குப் புரியவில்லை. அவர் எங்களையெல்லாம் விட்டுப் போய்விட்டார் என்று அறிந்துகொள்ளும் பக்குவத்திலும் நாங்கள் அப்போது இல்லை.

இப்போதுகூட திருவிழாக்காலங்களிலோ, சிறு கடைகளிலோ ஆரஞ்சுச்சுளை மிட்டாய்களைப் பார்க்கும் அவர் என் முன் தோன்றுவார். கும்பேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியும், மேல வீதியும் நினைவில் சிறிது நேரம் தோன்றி மறைந்துவிடும்.

என்னால் மறக்கமுடியாதவர்களில் ஒருவராக எங்கள் வெள்ளைச்சீலையாத்தா இருந்ததற்கு மற்றொரு முக்கியக் காரணமும் உள்ளது. எங்கள் அத்தை மகளின் இன்னொரு பெயர் பொன்னி. அவரின் நினைவாக இப்பெயரைச் சூட்டினர். மூத்தோர், நாட்டிற்காக உழைத்த பெரியோர், குலதெய்வம், வீட்டுத்தெய்வம், பிறந்த ஊரின் பெயர்களை  வைத்து அழகு பார்த்த அந்த நாட்களை மறக்க முடியுமா? இப்போதெல்லாம் பொருள் தெரியாத, உச்சரிக்க முடியாத, நினைவில் வைத்துக்கொள்ள முடியாத பெயர்களையும்,  பண்பாட்டினைத் தொலைக்கும் அயலகப் பெயர்களையும் பெரும்பாலும் காணமுடிகிறது.

18 comments:

  1. அந்த நாள் நினைவு. மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இப்போது தளம் மிக எளிதாக விரைவாக திறக்கின்றது. எழுத்துருவும் மிகவும் சிறப்பு. தொடர்ந்து மூன்று நாட்களாக செய்தித்தாளில் வந்து கொண்டிருக்கும் விளம்பரங்களில் பள்ளிக்கூட மாணவ மாணவியரின் பெயர்களை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன். பத்தில் எட்டு பேர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அதாவது தூய தமிழ்ப் பெயர் என்று கூட வேண்டாம். இயல்பான சாதாரண பெயர்களை கூட நம் தமிழர்களை வைக்க மனமில்லை. உச்சரிக்கவே முடியவில்லை. நீங்கள் எழுதிய வரிகளைப் பார்த்து இது தான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே

    அந்த நாட்களை நினைவு கூர்ந்த பதிவு.
    மனதை பிரிவுகள் வருத்தினாலும், அதன் நினைவுகள் என்றுமே பசுமைமானவைதான்.

    உண்மைதான்.. தங்கள் பாட்டியின் அம்மா காலத்தவர்களின் அன்பை வெளிப்படுத்தும் நல்ல குணங்கள் இப்போது பல இடங்களில் குறைவாகத்தான் உள்ளது. அவரின் பெயரை தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைத்திருப்பது சிறப்பு. நீங்கள் சொல்வது போல் வீட்டுப் பெரியவர்களின் பெயர்களை இப்போதெல்லாம் வழிமுறையாக வைக்க தயங்குகிறார்கள். நம் காலத்தில் கூட இந்த பழக்க வழக்கங்கள் ஓரளவு மாறாமல் இருந்து வந்தது. இப்போது காலங்கள் மாறி விட்டதை இப்படித்தான் உணர்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. பழமையான நினைவுகள் சோகத்தோடு, ஒருவிதமான சுகத்தையும் கொடுக்கும்.

    இதன் காரணமாகவே நான் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்குவேன்.

    பெயர்களின் தரம் அடிமட்டமாக போய்க் கொண்டு இருப்பது உண்மையே...

    எனது குடும்பத்திலும் சமீபத்தில் வாயில் நுழையாத பெயர் நுழைந்து விட்டது.

    மனம் கனத்து போகிறது... எல்லோரும் இறுதிவரை ஆட்சியில் இருக்க முடியாதுதான்.

    ReplyDelete
  5. இனிமையான இளமை நினைவுகள்.  பாசப் பக்கங்கள்.

    ReplyDelete
  6. நல்ல மலரும் நினைவுகள்!

    அன்புடன்
    நா. கணேசன்

    ReplyDelete
  7. எங்கள் ஆத்தா - அப்பாயி அவர்களும் வெள்ளைச் சேலையுடன் தான் வாழ்ந்து மறைந்தார்கள்... இயல்பாக அவர்கள் செய்த தர்மங்களுக்கு அளவே இல்லை...

    பதிவு பழைய நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது...

    ReplyDelete
  8. அன்பின் காட்சியையும் அவ்வப்போது உணர்வது சிறப்பு...

    ReplyDelete
  9. மலரும் நினைவுகள் அருமை.

    தமிழ்ப்பெயர் வைத்தால்தான் ஆச்சர்யம். அனேகமா வடமொழி அல்லது மாற்று மதப் பெயர்கள்தாம் இப்போதெல்லாம்.

    ReplyDelete
  10. மலரும் நினைவுகள் - மனம் கனக்கத் தான் செய்கிறது. அழகாக விவரித்துள்ளீர்கள்.

    ஆனந்த விகடனில் மெரினா அவர்கள் எழுதிய "சின்ன வயதினிலே" நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  11. என் அப்பாவின் அம்மாவும், என் அம்மாவின் அம்மாவும் வெள்ளைச்சேலையில் தான் இருப்பார்கள்.
    அவர்களின் நினைவு வந்து விட்டது.
    அவர்கள் எல்லாம் அன்பே உருவானவர்கள்தான்.

    அப்போது பெப்ப்ர்மெண்ட் மிட்டாய் ஆரஞ்சு மிட்டாய் மிகவும் நன்றாக இருக்கும், சின்னது பெரிது என்று கலர் கலராக கிடைக்கும். அதை உங்கள் பாட்டி வாங்கி கொடுத்த நினைவுகள் நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  12. ஆத்தாவை எங்கள் கண் முன் நிறுத்தினீர்கள் ஐயா...
    நெகிழ வைக்கும் பகிர்வு.

    ReplyDelete
  13. நிகழ்வுகளை கண்முன்னர் கொண்டு வந்த பதிவு. அவர்களின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை. எங்கள் அம்மாவின் அத்தை - இப்படி எங்களுடன் இருந்து பாசத்தைப் பொழிந்திருக்கிறார்.

    நெகிழ்ச்சி.

    ReplyDelete
  14. இளமைக்கால நினைவுகள் என்றுமே நினைக்க நினைக்கச் சுகம் தருபவை

    ReplyDelete
  15. எங்கள் பாட்டியின் அம்மாவையும். கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள் நன்றி ஐயா. அவர் பெயரும் பொன்னிதான் தாமிரபரணியை இப்படியும் அழைப்பார்களாம் அதைப் போன்ற பாசம் இனிமேல் காண முடியுமோ தெரியவில்லை.நன்றி ஐயா.

    ReplyDelete
  16. அர்த்தம் விளங்காத , நினைவு விலகாத சிறுபிராய நினைவு கீற்றுகளை பகிர்ந்தமை அருமை. பதிவின் முடிவில் உங்களின் ஆதங்கத்தை சொல்லியது எதார்த்தம் ஐயா. அப்பாவின் அம்மாவை பார்த்ததில்லை அம்மாவின் அம்மாவை பார்த்திருக்கின்றேன், அவர்களை ஆயா என்று அழைப்போம் நாங்கள்.

    ReplyDelete
  17. சரியான ஆதங்கம். இப்போது பெரியோர்களின் பெயரைப் பேரன் பேத்திக்கு இடுவது கூடக் குறைந்துள்ளது.

    ReplyDelete
  18. அழகான சிறு வயது நினைவுகள். பதிவின் முடிவில் இன்னும் அவர் உங்கள் மனதில் இருக்கிறார் என்பதும் கூடவே உங்கள் ஆதங்கமும் தெரிகிறது.

    துளசிதரன், கீதா

    எனக்கும் என் தாத்தா பாட்டியுடனான நினைவுகள் வந்தது.

    கீதா

    ReplyDelete