முகப்பு

15 August 2020

15 ஆகஸ்டு 1947 : தி இந்து (ஆங்கிலம்) சுதந்திர தின இதழ்

சந்தாதாரர் என்ற வகையில், 15 ஆகஸ்டு 1947ஆம் நாளன்று வெளியான இதழினை மின்னஞ்சலில் The Hindu எனக்கு அனுப்பியிருந்தது. வரலாற்றுப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை அதன்மூலம் பெற்றேன். முன்னுரை மற்றும் முகப்புப்பக்கத்துடன், அந்நாளில் வெளிவந்த The Hindu 12 (1-12) முதன்மைப்பக்கங்களையும் +20 (I-XX) இணைப்புப்பக்கங்களையும் அவ்விதழ் கொண்டிருந்தது. முதல் மூன்று பக்கங்கள் முழுக்க விளம்பரங்களைக் காணமுடிந்தது. 74ஆவது இந்திய சுதந்திர தின நாளில், இந்த சிறப்பிதழின் சில பக்கங்களைக் காண்போம். 











நகரம் முழுவதும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சென்னையிலும் சுதந்திர இந்தியாவின் பிறப்பினைக் காண விழாக்கோலம் பூண்டது. நகரில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வணிகள் போட்டி போட்டுக்கொண்டு தம் வளாகங்களை அலங்கரித்திருந்தனர். அரசுக்கட்டடங்களில் காலை தேசியக்கொடி ஏற்றப்படவிருந்தபோதிலும், வணிக நிறுவனங்கள் நேற்று மாலையே கொடியை ஏற்றிவைத்திருந்ததைக் காணமுடிந்தது.  தேசியக்கொடி அணியாத எவரையும் காணமுடியவில்லை. (Celebration in Madras, p.4) 

சென்னை அரசின் பிரதமரும் பிற அமைச்சர்களும் நாளை காலை 9.00 மணியளவில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள உள்ளார்கள். (Ministers to take oath, p.4) 

சென்னை மாநகராட்சியின் ஆணையர், மேயருடன் விவாதித்தன் அடிப்படையில், ரிப்பன் கட்டடத்தில், மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சி நிரலைத் தெரிவித்தார். (Corporation Programme, p.4) 

சுதந்திர தின விழாவினை நாளை துறைமுகத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்படுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக துறைமுகம் திறந்துவிடப்படும். கொடி ஏற்றப்படும்போது துறைமுகத்திலும், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களிலிருந்தும் ஒலி எழுப்பப்படும். கப்பல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  (Arrangements at Port Trust, p.4) 

மைலாப்பூரிலுள்ள இந்துஸ்தான் சாரணியர் அமைப்பின் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்த தொழில்துறை அமைச்சர் சீதாராம ரெட்டி வெற்றியைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் நம் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த தியாகசீலர்களை நினைவில்கொள்வதோடு, தேசத்திற்காக அவர்கள் ஆற்றிய தியாகத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். (Ministers’ advice to scouts, p.4) 

இந்திய சுதந்திர தினத்திற்காக ஆகஸ்டு 15 வெள்ளிக்கிழமை அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. (Holiday for post offices, p.4)

கல்கத்தாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்ள அனைத்துப்பகுதிகளிலும், முழுவதிலும் எங்கும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் எங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்கத்தா முழுவதும் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. (Calcutta en fete, p.4) 

நாளை நாம் அந்நியப் பிடியிலிருந்து வெளியேறுகின்ற நாள் என்ற வகையில் கொண்டாடுவதற்கான நாளாகும் என்று இன்று மாலை நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில், மகாத்மா காந்தி கல்கத்தாவில் கூறினார். இந்தியாவின் நலனுக்காக அந்த நாள் 24 மணி நேரமும் நாம் பிரார்த்தனையையும் விரதத்தினையும் கடைபிடிப்பதோடு, இயலும் வரையில் நூல் நூற்போம் என்றார். கையால் நூற்றல் என்பதானது ஏழையையும் பணக்காரரையும் ஒன்றிணைப்பதோடு தொழிலில்லாத எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் கையால் நூல் நூற்றல் பெரும் தொழிலாக அமைந்துள்ளது என்றார். பிரார்த்தனைக்கூட்டத்தில் இருந்த மக்கள் எந்தவித சிறு இடையூறுமின்றி அமைதியாக அவருடைய பேச்சைக் கேட்டனர். (Day of prayer and fast, p.4) 

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக, இந்திய தேசிய காங்கிரஸால் முதல் விதை விதைக்கப்பட்ட இடமான பம்பாய் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு மின்னொளி எங்கும் பரவியிருந்ததைக் காணமுடிந்தது. பாமரனுக்கு சிறிதே வித்தியாசமாகத் தெரிந்த காங்கிரஸ் கொடியிலிருந்து சற்றே மாறுபட்ட, இந்தியாவின் மூவர்ணக்கொடியானது பம்பாயின் புகழ் பெற்ற கட்டடங்களின் உச்சியில் பட்டொளிவீசிப் பறந்தது. (Celebrations in Bombay, p.4) 

வியாழக்கிழமை நள்ளிரவில் புதிய இந்தியா (Dominion) பிறந்தது. வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டு அவையானது நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றதோடு, லூயி மௌண்ட்பேட்டன் பிரபுவை டொமினியனின் முதல் கவர்னர் ஜெனரலாகத் தேர்வு செய்ததற்கான ஒப்புதலை வழங்கியது. அதற்கு முன்னதாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், “நம் அன்பினையும் மரியாதையையும் மகாத்மா காந்திக்குச் செலுத்துவோம். அவர் நமக்கு ஒரு கலங்கரை விளக்காக, வழிகாட்டியாக, தத்துவஞானியாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்துள்ளார்.” இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் நல்லமுறையில் நடத்தப்படுவர் என்ற உறுதிமொழியைத் தந்தார். குடிமகனுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றும், அதே சமயம் அவர்கள் தாம் வாழும் நாட்டிற்கும், சட்ட அமைப்புக்கும் நன்றியுணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார். அவை உறுப்பினர்கள் இந்தியாவிற்காகவும், அதன் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதான தீர்மானத்தை நேரு கொண்டுவந்தபோது தன் எழுச்சிமிகு உரையில் இந்தியாவிற்கான சேவை என்பதானது பாதிக்கப்பட்ட கோடானு கோடி பேருக்கான சேவை என்பதே என்றும், நம் தலைமுறையினரின் மாமனிதரின் இலக்கானது ஒவ்வொருவர் கண்ணிலிருந்து ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் துடைக்க வேண்டும் என்பதே என்றும், அது நமக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் கண்ணீரும் கம்பலையும் இருக்கும் வரை நம் பணியானது தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் கூறினார். ஒருமித்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடபின் உறுப்பினர்கள் சரியாக 12.00 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருமதி ஹன்சா மேதாவால், இந்திய மகளிர் சார்பாக வழங்கப்பட்ட தேசியக்கொடியைப் பெற்றபின் அவையானது ஒத்திவைக்கப்பட்டு. வெள்ளிக்கிழமை காலை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.  (Free India is born, p.5)

மறக்க முடியாத நாள் என்ற தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு, மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்பு, இரு உலகப்போர்களின் தாக்கம், பிரிவினையின் சோகம் உள்ளிட்டவை  மிகவும் சிறப்பாக விவாதிக்கப்பட்டுள்ளன. (The Red letter day, p.5)  இந்திய அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்கள், பாகிஸ்தான் உதயம், உலக உரிமைகளில் இந்தியாவின் பங்கு, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் உள்ளிட்ட பல செய்திகள் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. நேரு, ஆச்சார்ய கிருபளானி, சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆஸாத், சர் டெரன்ஸ் ஷோன், ஹென்றி கிராடி, பிரதமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகள், (Independence Day: Leaders messages, p.7, Dominion of Indian Government, p.8)  இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்ற தலைப்பிலான செய்தியில் அவருக்குப் புகழாரம் (Father of the Nation: India’s debt to Mahatma Gandhi, p.12, Greatness of Bharathi: Contribution to culture, p.12) உள்ளிட்ட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர தின செய்திகளைத் தவிர பிற செய்திகளையும் காணமுடிந்தது.     

முதல் பக்கத்தில் ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி மற்றும் நாம் இருவர் திரைப்படங்களுக்கான விளம்பரம் வெளிவந்துள்ளது. பல நிறுவனங்கள் சுதந்திர நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து தேசியக்கொடி, வந்தே மாதரம், தியாகிகளைப் போற்றல், சுதந்திர உதயம், புதிய விண்மீன் பிறந்தது, அடிமைத்தளையிலிருந்து விடுதலை, உறுதியேற்போம், ஆசியாவின் ஜோதி நம் தேசியக்கொடி, நாட்டை வணங்குவோம், தேசியக்கொடிக்கு வணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, நாட்டிற்கு வெற்றி, இறுதியாக சுதந்திரம், சுதந்திரத்தின் அடையாளம், வரலாற்றின் சிறப்புமிக்க நாள் 15 ஆகஸ்டு 1947 என்பன போன்ற பொருண்மைகளையும் சொற்களையும் தேசியக்கொடி மற்றும் இந்தியாவின் வரைபடங்களின் பின்புலத்தோடு விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் விளம்பரங்கள் உள்ளிட்ட பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்விதழில் வெளியான தமிழ்க்கலைக்களஞ்சியம் தொடர்பான செய்தி (Encyclopaedia in Tamil: One lakh fund to be collected, The Hindu, 15 August 1947, p.10): “தமிழில் கலைக்களஞ்சியம் : ஒரு இலட்ச ரூபாய் திரட்டப்படவுள்ளது” தமிழில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளிக்கொணர ஒரு இலட்ச ரூபாய் திரட்டுவதற்கான ஓர் இயக்கத்தை கல்வியமைச்சர் திரு டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் ஆரம்பித்துள்ளார். நிதி கேட்ட அவருடைய வேண்டுகோளின் அடிப்படையில் இதுவரை ஏழு நபர்களிடமிருந்து ரூ.33,000 பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் விவரம் : டாக்டர் ஆர்எம்.அழகப்ப செட்டியார் மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.10,001), திருவாரூர் திரு விஎஸ்.தியாகராஜ முதலியார் மற்றும் சிவகங்கை ராஜா (ஒவ்வொருவரும் ரூ.5,000), கொட்டையூர் திரு கேவி ஏஎல்எம் ராமநாதன் செட்டியார்,  தேவக்கோட்டை திரு ஏஎல் ஏஆர் சோமநாதன் செட்டியார் மற்றும் கண்டனூர் வி.டி.வீரப்ப செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.1,001). 

15 ஆகஸ்ட் 1947இல் வெளியான இந்த முழு இதழையும் பெற விரும்புவோர் விருப்பம் தெரிவித்தால் புலனவழி (9487355314) அவர்களுக்கு அனுப்புவேன். இதுவரை பல நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் இதனை அனுப்பியுள்ளேன். 

வழக்கம்போல எங்கள் இல்லத்தில் இன்று (15 ஆகஸ்டு 2020) சுதந்திர தின நாளையொட்டி கொடியேற்றினோம்.



21 comments:

  1. மிகுந்த சுவாரஸ்யம்.   அந்நாளில் இதனைப் படிக்க நாடே திருவிழாக் கோலத்துடன் காத்திருந்திருக்கும்.

    ReplyDelete
  2. மிக மகிழ்வான விசயங்களை தந்து இருக்கின்றீர்கள்.

    இன்றைய நாளிலாவது நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களை சற்றேனும் நினைவு கூர்வோம்.

    எனக்கும் புலனத்தில் செய்தியை அனுப்பி வைத்தால் மகிழ்வேன் - கில்லர்ஜி

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள வகையில் பல செய்திகள் தெரிவிக்கின்றன. தொகுத்து வழங்கியுள்ள தங்களின் பணி அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பொக்கிஷ படங்கள் ...

    படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் ...மிக அருமை ஐயா

    ReplyDelete
  5. அருமையான அறிய படங்களும் செய்திகளும்! நன்றிகள் பல!!!

    ReplyDelete
  6. பொக்கிஷம் போன்ற பதிவு..
    பாரத்த்தின் மைந்தர்களைக் காணக் காண பரவசம்..

    வாழ்க பாரதம்... வளர்க தமிழகம்..
    வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

    ReplyDelete
  7. சுதந்திரம் கொண்டாடும் நேரத்தில் மகாத்மா அங்கில்லாமல் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையே பதிவில் சொன்னேன்... சுதந்திர தின வாழ்த்துகள்...

    தொகுப்பு சிறப்பு...

    ReplyDelete
  8. அருமையான பதிவு. சுதந்திர இந்தியா உதயமான நாளின் நாளிதழ் ஓர் அரிதான பொக்கிஷம். மிக்க மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  9. சுதந்திர தின நல்வாழ்த்துகள். பொக்கிஷப் பகிர்வு. எத்தனை தகவல்கள். முழு நாளிதழையும் படிக்க ஆர்வம்.

    ReplyDelete
  10. சுதந்திரதின சிறப்பு பகிர்வு மிக அருமை.
    பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு. நாம் எல்லாம் சுதந்திரம் பெற்றபின் பிறந்தாலும்
    நம் முன்னோர்கள் எவ்வளவு பாடு பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும் பொக்கிஷப்பகிர்வு.
    வீட்டில் வாசலில் போட்ட வண்ணக்கோலம் அழகு. கொடியேற்றியது சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வழக்கம் போல முத்திரைப்பதிவு

    ReplyDelete
  12. பெரு மதிப்பிற்குரிய அய்யா ,வணக்கம் . அரிதான ஒன்றை அனுப்பியதற்கு மிக்க நன்றி. இதற்கா சுதந்திரம் பெற்றோம் என அறவோர்கள் மனம் வருந்தும்படியாக சமுதாயத்தில் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் நிலையில் தன் இன்னுயிரைக் கொடுத்து நிலத்தை மீட்ட தியாகிகளின் வரலாறு வெகுவாக மக்களிடம் பரவச் செய்திடல் வேண்டும். அந்தவகையில் தங்களது இந்தப் பகிர்வு அமைந்துள்ளது. மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  13. மிகவும் பெறுமதியான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி

    உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    ReplyDelete
  14. செய்தி தொகுப்பும் அரிய புகைப்படங்களும் காண கொடுத்தமை அருமை ஐயா.

    ReplyDelete
  15. ஆஹா...அன்றைய சுதந்திர நாளை இன்று அப்படியே உணர்ந்து மகிழ முடிந்தது..பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றியும்..வாழ்த்துகளும்..

    ReplyDelete
  16. காணக் கிடைக்காத செய்தியினை பகிர்ந்துள்ளீர்கள் ஐயா
    மிகவும் மகிழ்ந்தேன்
    எனக்கு ஒரு பிரதி அனுப்புங்கள்
    நன்றி

    ReplyDelete
  17. வியப்பூட்டும் தகவல்கள். தங்கள் வீட்டிலும் கொடியேற்று கொண்டாடியது சிறப்பு

    துளசிதரன்

    ReplyDelete
  18. தகவல்கள் வியப்படைய வைக்கிறது. முதல் சுதந்திர தினத்தின் போது அது கிடைத்த மகிழ்ச்சிய மக்கள் எப்படிக் குதூகலித்துக் கொண்டாடி இருப்பார்கள் என்று நினைக்க முடிகிறது. அதுதான் உண்மையாகவே சிலிர்ப்புடன் ஆன விடுதலைக்காகப் பாடுபட்டோர் அதனை உணர்ந்து கொண்டாடி மகிழ்ந்த சுதந்திரதின கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

    உங்கள் வீட்டிலும் நம் தேசியக் கொடி! நல்ல விஷயம் ஐயா. வாசலில் கோலம் அழகாக இருக்கிறது ஐயா

    கீதா

    ReplyDelete
  19. அருமை, பொக்கிஷம் நீங்கள் பெற்ற இன்பத்தை எங்களையும் பெறச் செய்தீர்கள். அன்றைய தினத்திற்கே சென்று வந்த உணர்வு.

    ReplyDelete
  20. Now only I had time to read this blog leisurely. Enjoyed your write-up. Happy to see that you hoisted the National flag atop your home. As I am in Canada I was refrained from doing so.

    ReplyDelete
  21. மிகச் சுவையான, அரிய செய்திகள்! படங்கள் மிகவும் சிறியவையாக இருப்பதால் எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை. எந்தெந்த பக்கங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என நீங்கள் ஓரளவு பதிவில் விவரித்தது பயனுள்ளதாக இருந்தது. இந்த அரிய இதழை நீங்கள் வாட்சப்பில் அனுப்ப இயலுமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் எங்கள் எண்களுக்குத் தனித்தனியே அனுப்பி வைப்பதை விட நம் ‘தமிழ் வலைப்பதிவகம்’, ‘முயற்சி + பயிற்சி = வெற்றி’ ஆகிய குழுக்களுக்கு அனுப்பி வைத்தால் விருப்பமுள்ள அனைவரும் தரவிறக்கிக் கொள்வோம்!

    ReplyDelete