முகப்பு

12 September 2020

ஆங்கில விக்கிப்பீடியா : 300 பதிவுகள்

ஆங்கில விக்கிப்பீடியாவில் அண்மையில் 300 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். 2015இல் எழுத ஆரம்பித்து 2019 வரை ஐந்து ஆண்டுகளில் 134 பதிவுகளையும், 2020இல் சுமார் எட்டு மாதங்களில் 166 பதிவுகளையும் எழுதியுள்ளேன். இதில் விக்கிப்பீடியா இந்தியா/10,000 கட்டுரைக்கான சவால் (WikiProject India/The 10,000 Challenge)இல் கலந்துகொண்டு எழுதிய 70 பதிவுகளும் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை பாடல் பெற்ற தலங்கள், வைப்புத்தலங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கோயில்கள் ஆகும். 



பல நண்பர்களும், ஆய்வாளர்களும் தமிழில் உள்ள பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருப்பதில்லை என்றும் கூறியதன் அடிப்படையில் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு புதிய பதிவினைப் பதியும்போதே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளேன். அத்துடன் ஆரம்பத்தில் நான் தமிழில் எழுதியவற்றையும் மொழிபெயர்த்து எழுதுகிறேன்.

தற்போது நேரடியாக மொழிபெயர்ப்பு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இவற்றை எழுதும்போது மொழிபெயர்ப்பிற்கு கூகுளை பயன்படுத்தவில்லை. நேரடியாக மொழிபெயர்க்கும்போது ஆங்கிலத்தில் ஆங்காங்கே சில பிழைகள் இருந்தாலும், மொழிபெயர்ப்பு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த இந்த உத்தி உதவுவதை உணர்கிறேன். நேரடி மொழிபெயர்ப்பில் தட்டச்சு செய்துவரும்போதே ஒரு குறிப்பிட்ட தமிழ்ச்சொல்லுக்கான ஆங்கிலச் சொல் இயல்பாக தட்டச்சிடும் அளவிற்கு அமைந்துவிடுகிறது. முழுமையாகத் தெரியாத சொல்லுக்கான பொருளைத் தேட அகராதிகளைப் பயன்படுத்துகிறேன்.   

வலங்கைமான்மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன், உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில், கும்பகோணம், தஞ்சாவூர், தீபங்குடியிலுள்ள சமணக்கோயில்கள், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்கோயில், கும்பகோணம் மௌனசுவாமி மடம், மகாமகக்குளக்கரையில் உள்ள சோடச லிங்க மண்டபங்கள், நவபுலியூர் கோயில்கள் உள்ளிட்ட கோயில்களைப் பற்றியும்,  பிற தலைப்புகளாக மணப்பாறை முருக்கு, தஞ்சாவூர் பீரங்கி, கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கல் நாதஸ்வரம், செங்கமேட்டில் உள்ள கலிங்கச்சிற்பங்கள், கும்பகோணம் பொற்றாமரைக்குளம், கானாடுகாத்தான்அரண்மனை உள்ளிட்ட பதிவுகளைத் தொடங்கியுள்ளேன். 





விழா என்ற வகையில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற தேரோட்டம் தொடர்பான நிகழ்வுகளுக்கு நேரில் சென்று தமிழில் ஆரம்பித்த கட்டுரையின் அடிப்படையில்  தஞ்சாவூர்பெரிய கோயில் தேரோட்டம் என்ற பதிவினைத் தொடங்கினேன்.

மகாமகத்தின்போது தீர்த்தவாரியில் மகாமகக்குளம், பொற்றாமரைக்குளம், காவிரியாறு, சைவ மற்றும் வைணவக் கோயில்களுக்குச் சென்று படமெடுத்து முன்னர் என்னால் ஆரம்பிக்கப்பட் 2016 மகாமகம் கட்டுரையில் இணைத்தேன். 



பெரும்பாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் அமைந்துள்ளவாறே கட்டுரைகளுக்கான பக்கத்தலைப்புகளை அமைத்துக் கொண்டேன். அந்தந்த பதிவுகளுக்கான தமிழ்க் கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் கீழ்ப்பகுதியில் (Languages: தமிழ்) என்பதையும், ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தின் கீழ்ப்பகுதியில் (மற்ற மொழிகளில்: English) என்பதையும் சொடுக்கி வாசிக்கலாம்.


தமிழ் விக்கிப்பீடியாவில் பெற்ற அனுபவத்தைப் போலவே, சக ஆங்கில விக்கிப்பீடியர் கூறும் கருத்தின் அடிப்படையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, பதிவுகளை மேம்படுத்துகிறேன். அவ்வாறு கருத்து கூறுவோர் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு நான் மென்மேலும் எழுத மிகவும் உதவுகிறது. குறிப்பிட்ட நிலை தொடர்பாக இயலாமையினைக் கூறும்போது அவர்கள் உரிய கருத்தினைக் கூறி, கட்டுரை சிறப்பாக அமைய உதவுகின்றார்கள். "ஆங்கிலத்தில் இணைப்புகள் அவசியம்", "இன்னும் மேம்படுத்தவேண்டும்", "தலைப்பிற்கேற்ற கருப்பொருளில் பதிவு அமையவில்லை", "ஆதாரமாக ஒரே இணைப்பு மட்டுமே உள்ளது", "தரப்பட்டுள்ள ஆதாரம் ஏற்கத்தக்கதாக இல்லை" என்றவாறு கருத்துகளை அவர்கள் கூறும்போது முடிந்தவரை என்னால் இயன்ற மறுமொழியினைக் கூறி, பதிவினை மேம்படுத்த முயற்சிக்கிறேன். உரிய இணைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்க இயலா நிலையில் தமிழில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்துகிறேன்.

சில கட்டுரைகளை எழுதும்போது அது தனித்த கட்டுரை (Orphan) என்ற அளவில் சக விக்கிப்பீடியர் கூறுகின்றனர். மாற்று வழியாக வார்ப்புருவினை (Template) அமைக்கும்படி அவர்கள் கூறவே, புதுக்கோட்டை மாவட்டக் கோயில்கள் என்ற தலைப்பில் ஒரு வார்ப்புருவினை உருவாக்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுரைகளை இணைத்து, தனித்த கட்டுரை என்ற குறிப்பினை நீக்கினேன். தமிழில் சப்தஸ்தானம் (ஆகஸ்டு 2014), மகாமகம் தீர்த்தவாரி கோயில்கள் (அக்டோபர் 2015), தஞ்சாவூர் கோயில்கள் (ஏப்ரல் 2016), இந்தியாவில் புஷ்கரங்கள் (ஆகஸ்டு 2017), புதுக்கோட்டை மாவட்ட கோயில்கள் (ஆகஸ்டு 2020) என்ற தலைப்புகளில் வார்ப்புருக்களை உருவாக்கிய அடிப்படையில் ஆங்கிலத்தில் புதுக்கோட்டை மாவட்ட கோயில்களுக்காக முதன்முதலாக வார்ப்புரு உருவாக்கப்பட்டது. 

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதுவரை இரு கட்டுரைகள் நீக்கப்பட்டிருந்தன. பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா என்ற முதல் ஆங்கில கட்டுரை மே 2015இல் நீக்கப்பட்டது (deleted). அண்மையில் உரிய மேற்கோள்களைத் தந்து, செறிவுபடுத்தி தஞ்சாவூர் தேர்த்திருவிழா என்ற தலைப்பில் புதிய பதிவினை ஆரம்பித்தேன். தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேரில் எடுத்த புகைப்படங்களை பதிவில் இணைத்தேன். மற்றொரு நீக்கப்பட்ட கட்டுரையான திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் பதிவானது சீர் செய்யப்பட்டு (Recreated) மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாததே இல்லை என்ற இலக்கினை முன்வைத்து எழுத ஆரம்பித்து தமிழ்நாடு தொடர்பாகவும், பிற தலைப்புகளையும் தமிழில் எழுதத் தொடங்கி, அவ்வாறு எழுதியனவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியது மறக்க முடியாத அனுபவம் ஆகும். தமிழர் அல்லாதோரும், தமிழ் மொழி அறிந்திராதோரும் நம் பெருமையை அறியும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சி தொடரும், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடனும், சக ஆங்கில விக்கிப்பீடியரின் ஒத்துழைப்புடனும்.

கீழ்க்கண்ட இணைப்புகளில், நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காணலாம்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதுவரை ஆரம்பித்த கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை ஆரம்பித்த கட்டுரைகள்

13 comments:

  1. தங்களது அரும்பணி பிரமிப்பை அளிக்கிறது.. மேலும் மேலும் சிறப்படைய வேண்டும்..

    ReplyDelete
  2. தங்களது பணி மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. "உங்களின் ஆர்வம் மட்டும் என்னையும் பற்றிக் கொண்டால் போதும்" என்று பலமுறை நினைப்பதுண்டு...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  4. ஐயா! நீங்கள் செய்து கொண்டிருப்பது அரிய தமிழ்த் தொண்டு! உங்கள் கட்டுரைகளை நீங்கள் ஆங்கிலத்திலும் வெளியிடத் தொடங்கியிருப்பது தமிழின் பெருமையையும் தமிழர் பெருமையையும் உலகெங்கும் கொண்டு சேர்க்கும் அரும்பெரும் முயற்சி! என் சிரம் தாழ்ந்த நன்றி!

    ReplyDelete
  5. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் உங்களிடம் நிறையவே கேட்டு கற்க வேண்டும்

    ReplyDelete
  6. தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாததே இல்லை என்ற இலக்கினை முன்வைத்து எழுத ஆரம்பித்து.....மிக மிக சிறப்பு ஐயா ..

    மிக மகிழ்ச்சியும் வணக்கங்களும் ..

    ReplyDelete
  7. சிறப்பான பணி உங்களுடையது. தொடர வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    மேலும் பல வெற்றிகள் உங்களை வந்தடையட்டும்.

    ReplyDelete
  8. விக்கி நாயகருக்கு வாழ்த்துகள்
    தங்களின் அயரா உழைப்பு வியப்பைத் தருகின்றது ஐயா

    ReplyDelete

  9. ஒரு குறிப்பிட்ட சமூகம் முன்னேற வேண்டுமானால் சிலவற்றை மிகத் தெளிவாக தெரிந்து இருக்க வேண்டும் என்று நான் கருதுவேன்.
    1. வரலாறு. (தங்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம், முன்னோர்கள் குறித்த உண்மையான தகவல்கள், ஆட்சியில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள்)
    2. மாற்றங்கள் (கல்வித்துறை, தொழில் துறை, கலாச்சார மாற்றங்கள்)
    3. நீங்கள் இதுவரையிலும் தொண்டாற்றியது அனைத்தும் பொக்கிஷம் எனில் இனி நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று உள்ளது.
    4. உலகத்தில் உள்ள அனைத்து ஆங்கிலப் பத்திரிக்கைகளும் படிப்பவர் நீங்கள். தொழில் துறை மாற்றங்கள், இந்தியாவில் தொழில் புரட்சி மூலம் உருவான மாற்றங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
    5. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள் குறித்த தகவல்கள், தொழில் நிறுவனங்கள் பற்றிய முக்கியமான தகவல்கள், நிறுவனம் குறித்த விசயங்கள், அவர்களின் தொழில் சார்ந்த உண்மைத் தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
    எந்த சமூகம் பொருளாதாரத்தில் மேன்மையுடன் இருக்கிறதோ அவர்களின் மொழி மட்டுமே வளரும். அதன் மூலம் மட்டுமே அவர்கள் கலாச்சாரத்தை கொண்டு செலுத்த முடியும்.
    அந்த முயற்சியில் இனியாவது இறங்க முடியுமா? என்று பாருங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பாராட்ட வார்த்தைகள் இல்லை. வருங்கால சந்ததிகளுக்கு அரிய பொக்கிஷம் உங்களின் பதிவுகள். மேலும் தொடர்ந்து எழுதுங்கள்..!

    ReplyDelete
  11. தங்கள் அரிய பணிக்கு பாராட்டுக்கள்.
    உலகத்தகவல் மையத்திற்கு தங்கள் பணி மதிப்பு மிக்கதாகும் .

    ReplyDelete
  12. வியத்தகு நற்பணி....அற்புதம்...அந்தப் பக்கங்களை ஒரு முறை பார்க்கிறேன்... 

    பணிகளில் முன்னுரிமை, இடையறாத தேடல், வற்றாத ஆர்வம், தன்னடக்கமிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்றானே மகாகவி அதற்கும் ஒருபடி மேலே போய் அருகிருப்போர் உடன் இருப்போர் பாராட்டுவோர் வாழ்த்துவோர் என்ற பெரிய வரிசையில் இருக்கும் எண்ணற்ற மனிதர்களுக்கும் சோர்வுறா உள்ளம் வேண்டுமென்ற தீப்பற்ற நீங்கள் பகிரும் பொறிகள்.....வாழ்த்துகள் அய்யா...

    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691 

    ReplyDelete
  13. பிரமிப்பூட்டும் பணி. பாராட்டப்படவேண்டிய பணிகள். உங்கள் முயற்சி போற்றத்தக்கது.

    ReplyDelete