முகப்பு

27 March 2021

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் : பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து ஏழு நாள்கள் (15-21 மார்ச் 2021) நடத்திய இணையவழிப் பயிலரங்கில் முதல் நாளான 15 மார்ச் 2021 அன்று மாலை 3.00 முதல் 4.00 வரை நடைபெற்ற அமர்வில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுடன் உரையாடியது மனதில் நிற்கும் அனுபவமாக அமைந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி என் மின்னூலைப் பெறுவதற்கான இணைப்பினைத் தந்துள்ளேன்.

பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு :  விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்




அமேசான் தளத்தில் பெற இணைப்பு : விக்கிப்பீடியா 1000 பதிவு அனுபவங்கள்

பிற யுட்யூப் பதிவுகள்

1.பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை மாதாந்திரச் 

சொற்பொழிவு,  வேர்கள், 30 நவம்பர் 2018


2.சோழ நாட்டில் பௌத்த களப்பணிதிரிபீடகத் தமிழ் நிறுவனம், சென்னை, 

மானுடம் தேடும் அறம் உரை 1, 27 ஆகஸ்டு 2020, (உரை 27 ஜுன் 2020)


3.களப்பணியில்சமணம்,  அகிம்சை நடையின் இணைவோம் இணைய 

வழியால்9 ஆகஸ்டு 2020


4.விக்கிப்பீடியாவில் தமிழகக்கோவில்கள் அனுபவக் கட்டுரைகள் 

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 6 செப்டம்பர் 2020


5.பொன்னி நாட்டில் பௌத்தம், புதுவைத் தமிழாசிரியர்கள், மின் முற்றம், 

16 நவம்பர் 2020

19 March 2021

இலக்கணம் இனிது : நா.முத்துநிலவன் : புக் டே இணைய தளம்

தமிழில் எழுதுவது சிரமம் என்று கூறிக்கொண்டு பலர் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். தாய்மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவருகின்ற அவர்கள் குறுஞ்செய்தி முதல் கடிதம் வரை அலாதிப்பிரியத்தோடு ஆங்கிலத்தில் எழுதி தம் பெருமையைப் பறைசாற்றிக் கொள்கின்றனர். இப்பழக்கத்தை தம் தலைமுறையினருக்கும் கற்றுத்தருகின்றனர். “இங்கிலீஷ்ல என் பையன் அவ்ளோ அழகா எழுதுவான்”, “என் பொண்ணு இங்கிலீஷ்ல எழுதுனா அருமையா இருக்கும்”, “நானே பெரும்பாலும் இங்கிலீஷ்லதான் எழுதுறேன்” என்ற வகையிலான உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம். தட்டச்சு, கணினி என்ற நிலை வந்தபின்னர் எழுதுவதும் தற்போது குறைந்துவிட்டது. தமிழில் தன் பெயரை எழுதும்போதுகூட பலர் கை நடுங்கிக்கொண்டே எழுதுவதைக் காணமுடிகிறது. ஆங்கிலத்தில் எழுதுவது எளிதென்றும், அதனால் எழுதுவதாகவும், தமிழில் எழுதினால் அதிகமாகப் பிழை வர வாய்ப்புள்ளதென்றும், அதனால் தவிர்ப்பதாகவும் பலர் பேசுகிறார்கள்.

தமிழைவிட்டு விலகி அந்நியப்பட்டுச் செல்பவர்களுக்கு, தமிழில் பிழையின்றி எழுத கைகொடுப்பதோடு, தமிழில் எளிமையாக எழுதலாம் என்ற உறுதியான எண்ணத்தையும் தருகிறது கவிஞர் நா. முத்துநிலவன் எழுதியுள்ள இலக்கணம் இனிது என்ற நூல். “ஆங்கிலவழிக் கல்விமுறை அதிகரிப்பதாலும், அதில் படித்தவர்களின் தமிழைப் பற்றிய அலட்சியத்தாலும், எழுத்துப்பிழை சாதாரணமாகிவிட்டது. மேடைப்பேச்சாளர் பெருகியிருந்தாலும், அவர்களின் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சரியாக இல்லை என்பதோடு, ஊடகங்களில் வரும் உச்சரிப்பு முறையே ஏற்றதெனக் கருதிப் பேச்சாளர்களும் தொடரும் தவறான நிலை உருவாகிவிட்டது. இதற்கு நேர்மாறாக, உயர் கல்வி பெறாதவர்கள் கலப்படமில்லாத தமிழில் பேசி வருவதையும் பார்க்கமுடிகிறது” என்று நூலாசிரியர் கூறுவது முற்றிலும் ஏற்கக்கூடியதாகும். 

நாம் சாதாரணமாக எதிர்கொள்கின்ற பல ஐயங்களுக்குத் தீர்வினைத் தருகிறது 10 கட்டுரைகளைக் கொண்ட இந்நூல். எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவர் தந்துள்ள உத்திகளில் சிலவற்றைக் காண்போம்.

“தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி ன என்பதும் தவறு, மூனு சுழி ண என்பதும் தவறு. ண – இதன் பெயர் டண்ணகரம், ன – இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் என எங்கெல்லாம் மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும் இதனால் இதுக்கு டண்ணகரம்னு பேரு. சொல்லிப் பாருங்களேன், பண்டைக் காலம் முதல் இன்றைய காலம் வரை கண்ட மரபு இது”. (ப.21) “தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க)”. (ப.22) “இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும், ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை, செந்தமிழ்)”. (ப.22)

“சின்ன ர என்பதும் தவறு, பெரிய ற என்பதும் தவறு. ர – இதனை இடையின ர கரம் என்பதே சரியானது. (வரம், தரும், மரம், உரம்). ற – இதனை வல்லின ற கரம் என்பதே சரி. (மறம், அறம், வெறும், முறம்). இதுல ஒரு வேடிக்கை பாருங்களேன். சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருகிறது. பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருகிறது”. (ப.26)

தவறாக எழுதப்படும் சொற்களுக்கான திருத்தங்கள் (திருத்தங்கள் அடைப்புக்குறிக்குள், பக்.45-48), 60வது ஆண்டு விழா (60ஆவது ஆண்டு விழா), 60ம் ஆண்டு (60ஆம் ஆண்டு), ஆடி தள்ளுபடி (ஆடித் தள்ளுபடி), ஐய்யனார் (அய்யனார், ஐயனார்), ஓட்டுனர் (ஓட்டுநர்), கட்டிடத் திறப்பு விழா (கட்டடத் திறப்பு விழா, கட்டிடம்-மனை), கெடிகாரம் (கடிகாரம்), காந்தீயம் (காந்தியம்), கோர்வையாக (கோவையாக), பெறுனர் (பெறுநர்), வாழ்த்துக்கள் (வாழ்த்துகள்), பிற மொழியில் இருந்து தமிழ்ச் சொல்லாக்கம் (திருத்தம் அடைப்புக்குறிக்குள், பக்.49-50) அகங்காரம் (செருக்கு), அபூர்வம் (அரிது), கல்யாணம் (திருமணம்), கலாச்சாரம் (பண்பாடு), திகில் (அச்சம்), பந்தோபஸ்து (பாதுகாப்பு), மாமூல் (கையூட்டு), தாலுக்கா (வட்டம்), வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் (தமிழ்ச்சொற்கள் அடைப்புக்குறிக்குள், பக்.51-52) ஈஸ்வரன் (சிவன்), கும்பாபிஷேகம் (குடமுழுக்கு), பத்திரிக்கை (இதழ்), வருஷம் (ஆண்டு) என்ற வகையில் நூலாசிரியர் பல சொற்களைத் தந்து, இவ்வாறாக பல சொற்கள் உள்ளதாகவும், அவற்றை ஆய்ந்து தெளிந்து பயன்படுத்தும்படியும் கூறுகிறார். நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பல சொற்களை இப்பட்டியல்களில் காணமுடிகிறது.

பொருள் (கருத்து) பிழை வருமிடங்களைச் சுட்டும்போது உணர்ச்சிக்குறிகளைச் சரியாக இடவேண்டும் என்பதற்கு நூலாசிரியர் தரும் உதாரணம் என் பள்ளி நாள்களை நினைவூட்டியது. “யார் யார் புத்தக விழாவுக்குப் போகிறோம்” என்று கேட்ட மனைவியிடம், “நீ என் தங்கை நான் உன் அண்ணன்” என்று கணவன் சொன்னால் அவள் அழுதுவிட மாட்டாளா? நிறுத்தக்குறிகளைச் சரியாக இட்டு, “நீ, என் தங்கை, நான், உன் அண்ணன் ஆகியோர் போகிறோம்” என்று குழப்பம் எழாதவகையில் பேசுவதும் எழுதுவதுமே சரியானது. (ப.56) சற்றொப்ப இதைப்போன்ற சொற்றொடரை எங்கள் தமிழாசிரியரும் கூறியுள்ளார்.

“இப்படித்தான் இருக்கவேண்டும் என்று உடும்புப்பிடி பிடிப்பதல்ல, இப்படி இருந்தால் நல்லது என்பதை எடுத்து உரைப்பதுதான் இலக்கணம். மற்றபடி இலக்கண விளக்கங்களுக்குப் புறனடை என்றொரு விதிவிலக்கும் உண்டு. எனவேதான் பழக, எழுத, பேசக் கற்றுத்தரும் இலக்கணம் இனிது” (ப.85) என்ற ஆசிரியரின் கூற்றானது இலக்கணத்தின் எளிமையை முன்வைக்கிறது.

“எழுதுவோரின் ஆர்வத்தைத் தூண்ட, அவர்தம் பிழையான தமிழைக் கவனமாகப் பார்த்து, ஆக்கவழியில் ஆலோசனை சொல்வதே அவர்தம் படைப்புத்திறனை வளர்க்கும் வழியாகுமே அல்லாமல் ‘க் ச் சரியா இல்லையே இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்’ என்று ஒரேயடியாகச் சொல்லி அவர்களை மனத்தளவில் ஒடுக்கிவிடுவது சரியல்லவே” (ப.78) என்பது போன்ற கருத்துகளின் மூலமாக நமக்கு மிக நெருக்கமாக வந்து பல செய்திகளைப் பகிர்கிறார் நூலாசிரியர். அனைவரும் படிக்கவேண்டிய, ஒவ்வொருவர் வீட்டு இல்ல நூலகத்திலும் இடம்பெற வேண்டிய அருமையான வழிகாட்டி நூல். இந்நூலைப் படித்து, அதில் கூறியுள்ளவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் எளிதாகும். இத்தகு ஒரு நூலைப் படைத்த ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : இலக்கணம் இனிது
ஆசிரியர் : நா.முத்துநிலவன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018
(044-24332424, 24332924, 24356935, bharathiputhakalayam@gmail.com/www.thamizhbooks.com)
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஜனவரி 2021
விலை : ரூ.90
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ilakkanam-inidhu/

நன்றி : புக்டே இணையதளம்