முகப்பு

17 April 2021

ஆக்ஸ்போர்டு அகராதியின் எதிர்பாரா ஆண்டின் (2020) சொற்கள்

ஒவ்வோராண்டும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும், பிற அகராதிகளும் அந்த ஆண்டுக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்கின்றன. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 2018இன் சிறந்த சொல்லாக டாக்சிக் என்ற சொல்லையும், 2019இன் சிறந்த சொல்லாக கிளைமேட் எமர்ஜென்சி என்ற சொல்லையும் தெரிவு செய்திருந்தது. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலை உள்ளதாகவும், ஒரு சொல்லுக்குள் இந்த ஆண்டை அடக்கமுடியாது என்றும் அந்த அகராதி தெரிவித்ததோடு, சிறந்த சொல் என்பதற்கு மாறாக, எதிர்பாரா ஆண்டிற்கான சொற்களை அளித்துள்ளது.


2020ஆம் ஆண்டிற்கான சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி 2004ஆம் ஆண்டு முதல் ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த ஐக்கியப் பேரரசுச் சொல் (Oxford Dictionaries UK Word of the Year) என்றும், ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த அமெரிக்கச் சொல் (Oxford Dictionaries US Word of the Year) என்றும் ஆண்டிற்கான சிறந்த ஆங்கிலச்சொல்லைத் தெரிவு செய்து வருகிறது. சில சமயங்களில் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கான சொற்கள் ஒரே சொல்லாக அமைவதும் உண்டு. அவ்வாறாக தெரிவு செய்யப்படுகின்ற ஆண்டின் சிறந்த சொல் அந்த அகராதிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆக்ஸ்போர்டு அகராதிப்பிரிவின் மொழியியலாளர்கள், கருத்தியலாளர்கள், மற்றும் ஆசிரியர்கள், விநியோகஸ்தர்கள், விளம்பரப்பிரிவினர் உள்ளிட்ட குழுவினரால் இவ்வாறாக சொற்கள் தெரிவு செய்யப்படுகின்றன.

முந்தைய ஆண்டுகளிலிருந்து இந்த ஆண்டு சற்றே மாறுபட்டுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும், ஆங்கில மொழியானது இந்த ஆண்டு வழக்கம்போல தன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது என்றும், அந்தச் சூழலில் தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி மொழியியலாளர்கள் ஆராய்ந்தபோது ஆண்டின் சிறந்த சொல் என்ற வரையறைக்குள் அடங்குகின்ற அளவிற்கு 2020ஆம் ஆண்டு அமையவில்லை என்றும் ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர்.  2020ஆம் ஆண்டிற்கான சொல் தெரிவு செய்ய இயலாத நிலையில் அவர்கள், வழக்கத்திற்கு மாறாக, 2020இல் மொழியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து எதிர்பாரா ஆண்டிற்கான சொற்கள் (Words of an Unprecedented Year ) என்ற ஓர் அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

பொதுவாக ஆக்ஸ்போர்டின் ஆண்டின் சிறந்த சொல் என்பதானது வழக்கம்போல இந்த ஆண்டும் ஓர் ஆர்வத்தினைத் தூண்டிவிட்டிருந்தது என்றும், ஒவ்வோராண்டும் பண்பாட்டு முக்கியத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட, ஒரு முக்கியமான தாக்கத்தினை உண்டாக்குகின்ற, ஒரு சொல்லைத் தெரிவு செய்வது தொடர்பாக விவாதித்தாகவும் அவ்வகராதியினர் கூறியிருந்தனர். நிறைவாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் குறிப்பிட்டு ஆக்ஸ்போர்டு அகராதிகளின் 2020க்கான எதிர்பாரா ஆண்டின் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.   

அந்த அறிக்கையில் முக்கிய இடத்தைப் பெற்றது 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் முக்கிய இடத்தைப் பெற்ற பெயரடையாகும். "எதிர்பாராத வகையில் ஆங்கிலம் பேசுகின்ற உலகில் கொரோனா தொடர்பாக பல புதிய சொற்கள் இடம்பெற்றதோடு, மொழியின் முக்கியமான இடத்தைப் பெற ஆரம்பித்தன," என்கிறது அந்த அறிக்கை. கொரோனாவின் பாதிப்பானது மொழியைக்கூட விட்டுவைக்கவில்லை என்பதை இதன்மூலம் உணரமுடிகிறது.

அந்த அறிக்கையில் பல சொற்கள் (“bushfire”, “acquittal”, “covid-19”, “Black Lives Matter”, “Mail-in”, “Belaurusian”, “Moonshot”, “net zero”, “superspreader”) மாதவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆஸ்திரேலியா எதிர்கொண்ட காட்டுத்தீ (ஜனவரி/புஷ்பயர்), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு விசாரணையிலிருந்து விடுவிப்பு மற்றும் 11 பிப்ரவரி 2020 முதன்முதலில் பதிவான கோவிட்-19 என்ற சொல்லைத் தொடர்ந்து அதன் தொடர்பான ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல், முகக்கவசம், நோய்ப்பரவல், பாதுகாப்பு கவச உடை, வீட்டிலிருந்து பணியாற்றல், இணையவழி கருத்தரங்கு போன்றவை (பிப்ரவரி/அக்குவைட்டல், கோவிட்-19), கருப்பு இனத்தவருக்கான நீதி (ஜுன்/ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்), அமெரிக்காவில் அஞ்சல்வழி வாக்குகள், பெலாரஸ் நாட்டில் ஜனாதிபதியின்  சர்ச்சைக்குரிய மறுதேர்தல் (ஆகஸ்ட்/மெயில்-இன், பெலாருசியன்), ஐக்கிய ராஜ்ஜிய அரசின் பெருமளவிலான கொரோனா பரிசோதனைத்திட்டம் (செப்டம்பர்/மூன்ஷாட்), 2060க்குள் கார்பன் நடுநிலை என்ற சீன அதிபர் சீ சின்பிங்கின் உறுதிமொழி மற்றும் வெள்ளை மாளிகையில் அதிக அளவிலான கொரோனா பரவல் (அக்டோபர்/நெட்ஜீரோ, சூப்பர்ஸ்பிரெட்டர்)   போன்றவை அடங்கும். நோய்ப்பரவல் என்ற சொல்லானது கடந்த ஆண்டைவிட 57,000 விழுக்காடு அதிகம் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கோவிட்டுக்கு முன், கோவிட்டுக்குப் பின் என்ற பயன்பாடுகளும் அதிகம் காணப்பட்டுள்ளது.


தொடர்ந்து ஒவ்வோராண்டும் சிறந்த சொல்லை அறிவித்த இந்த அகராதியானது, திங்களன்று (23 நவம்பர் 2020) 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு சொல்லைத் தெரிவு செய்ய முடியவில்லை என்பதை முதன்முதலாக அறிவித்துள்ளது. 2020இன் சிறந்த சொல்லாக லாக் டவுன் என்ற சொல்லை காலின்ஸ் அகராதியும் க்வாரன்டைன் என்ற சொல்லை கேம்பிரிட்ஜ் அகராதியும் அறிவித்துள்ளன. 2020ஆம் ஆண்டை எதிர்பாராத ஓர் ஆண்டு என்று அந்த அகராதி கூறியுள்ளதைக் காணும்போது 2020இல் உலகையே உலுக்கிய கொரோனாவைக் குறிக்கின்ற வகையில் 2020 என்ற சொல்லே இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அமைய வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

துணை நின்றவை

Word of the Year, Wikipedia

Word of the Year 2020, Oxford Languages 2020, Words of an Unprecedented Year

Oxford English Dictionary couldn't pick just one 'word of the year' for 2020, CNN, 23 November, 2020

Can you describe the year 2020 in one word? Neither can the Oxford Dictionary, Windsorstar, 24 November 2020

Cambridge Dictionary’s Word of the Year 2020,  A blog from Cambridge University, Quarantine, 24 November 2020




நன்றி : திகிரி ஏடு 3, அகம் 1, ஏப்ரல்-ஜுன் 2021  

12 comments:

  1. ஆண்டின் சிறந்த சொல் - சிறப்பான செய்திகள். 2020 - வித்தியாசமான ஒரு ஆண்டு தான். 2021-ம் அந்தப் பாதையிலே செல்கிறது என்பது வேதனையான உண்மை.

    ReplyDelete
  2. சிறந்த சொல்லை தேர்வு செய்ய இயலாதது வியப்பளிக்கிறது.

    ReplyDelete
  3. அதிகப் புழக்கத்தை வைத்து இது மாதிரி சொற்களைத் தேர்ந்தெடுக்கின்றனரோ...

    ReplyDelete
  4. சிறந்த தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. க்வாரண்டைன், லாக்டவுன் என்ற இரு சொற்களும் அதிகம் சொல்லப்பட்டதால் இருக்குமோ?

    2020 என்றால் 2021 இன்னும் அதிகமான தாக்கத்தைக் கொண்டுள்ளதே. சென்ற வருடத்தைப் போலவே தான் இவ்வருடமும் செல்கிறதே.

    2020 என்பதைச் சொல் என்று சொல்ல முடியுமோ? அதைவிட கோவிட் என்ற சொல் சொல்லலாமோ? ஐயா?

    கீதா

    ReplyDelete
  6. சிறந்த தேடலை உருவாக்கிய பதிவு. இறுதிவரை ஆர்வத்துடன் வாசித்தேன். நன்றி.

    எனது பதிவு

    https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html

    ReplyDelete
  7. ஒவ்வோராண்டும் இந்த விவரம் பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்கிறேன் ஐயா! முன்பெல்லாம் தொலைக்காட்சிச் செய்திகளில் சொல்வார்கள், "இந்தாண்டின் சிறந்த சொல்லாக ஆக்சுபோர்டு அகராதி இன்ன சொல்லைத் தேர்வு செய்தது" என்று. ஆனால் இப்பொழுதெல்லாம் சொல்வதில்லை. பரபரப்புக்கு மட்டுமே முக்கியம் தரும் இன்றைய செய்திகளில் இப்படிப்பட்ட அறிவுலகு சார் தகவல்கள் வருவதில்லை.

    ஆக்சுபோர்டு அகராதியால் கடந்தாண்டுக்கான சிறந்த சொல்லைத் தேர்வு செய்ய முடியவில்லை என்பது வியப்புதான். மகுடை (corona) காரணமாகப் பல புதிய சொற்கள் கடந்தாண்டு செல்வாக்குப் பெற்றன. வாழ்க்கை முறையே பெரிதும் மாறி விட்டது. எனவே எதிர்பாரா ஆண்டுக்கான சொற்கள் என்பது சரிதான்.

    ஒவ்வோராண்டும் கருத்துரையில் நான் சொல்வேன், தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகள் நிகழ்வதில்லையே என்று. ஆனால் கடந்த ஆண்டு ‘சொற்குவை’ அந்தச் சிக்கலைத் தீர்த்தது. தமிழ்நாடு அரசின் ‘சொற்குவை’ அமைப்பு ஆக்சுபோர்டு போலத் தமிழுக்கான தலைசிறந்த அகராதிச் சேவையை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி, வரப்பெறும் சொற்களை ஆராய்வது, பொருத்தமான சொற்களைத் தேர்வு செய்வது, பொருந்தாச் சொற்களைத் தள்ளுபடி செய்வது என வெகு அருமையாகத் தமிழ்த் தொண்டு புரிந்து வருகிறது சொற்குவை. ஆங்கில அகராதிகள் பற்றி எழுதும் நீங்கள் நம் சொற்குவை ஆற்றும் பணிகள் பற்றியும் எழுதினால் பலருக்கும் அது சென்று சேர்ந்து தமிழ் வளர்ச்சிக்காக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைக்க ஏதுவாகும் ஐயா!

    அப்புறம் இன்னொன்று! கட்டுரையில் Oxford Dictionaries US Word of the Year என்பதற்குத் தமிழில் "ஆக்ஸ்போர்டு அகராதிகளின் அமெரிக்காவின் ஆண்டின் சிறந்த சொல்" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மாறாக "ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த அமெரிக்கச் சொல்" என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அதே போல் Oxford Dictionaries UK Word of the Year என்பதைக் கூட "ஆக்ஸ்போர்டு அகராதிகளுடைய இவ்வாண்டின் சிறந்த ஐக்கியப் பேரரசுச் சொல்" எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    நன்றி!

    ReplyDelete
  8. உங்கள் கருத்துக்கு நன்றி. கடைசி பத்தியில் கூறியுள்ள திருத்தங்களை மேற்கொண்டுவிட்டேன். ஆங்கில இதழ்களில்/ஆங்கிலத்தில் வெளிவருகின்ற, தமிழில் அதிகம் பேசப்படாதனவற்றை வெளிக்கொணருவது என் இலக்குகளில் ஒன்றாகும். சொற்குவையைப் பற்றி விரைவில் எழுதுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா! இந்தச் சிறுவன் கருத்தையும் ஏற்றுச் செயல்படுத்தியமைக்கு மிக்க நன்றி! சொற்குவை பற்றிய உங்கள் கட்டுரையைப் படிக்கக் கட்டாயம் வருவேன்.

      Delete
  9. உங்களின் இந்த பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன். கொரோனா, கோவிட், அல்லது பேண்டமிக் போன்ற சொற்களை எதிர்பார்த்தேன். 

    ReplyDelete
  10. எல்லாமே வியப்புதான் 2020 ல். ஐயாவுக்கு அநேக நமஸ்காரங்கள்.

    ReplyDelete