முகப்பு

30 December 2021

2021ஆம் ஆண்டின் சிறந்த சொல்

2021இன் சிறந்த சொல்லை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகளும், டிஸ்னரி இணையதளமும் தெரிவு செய்துள்ளன. இவ்வாண்டின் சிறந்த ஆங்கிலச் சொற்களையும், அதற்கான  பின்னணியையும் காண்போம். 

ஆக்ஸ்போடு அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vax (தடுப்பூசி) என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் ஆங்கில மொழித் தொகுப்பினைத் தேடியபோது அச்சொல் அவர்களால் குறிப்பிட்ட வகையில் அதிகமாக ஈர்த்ததாகவும், இந்த ஆண்டு வரை இச்சொல் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் வாக்கில் அதன் பயன்பாடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 72 பங்கு அதிகரித்தாகவும் இவ்வகராதி கூறியுள்ளது. இச்சொல் vax sites (தடுப்பூசி போடப்படும் இடங்கள்), vax cards (தடுப்பூசி அட்டைகள்), to getting vaxxed (தடுப்பூசி போடப்படுதல்), being fully vaxxed (முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருத்தல்) என்பன பல சார்புச்சொற்களையும் உருவாக்கியுள்ளதாகவும், அவை அலுவல்சாரா முறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இச்சொல்லைத் தவிர வேறு எந்தசொல்லும் கடந்த ஆண்டு சூழலை இந்த அளவிற்கு ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது இவ்வகராதி. 

 கேம்பிரிட்ஜ் அகராதி


2021இன் சிறந்த சொல்லாக perseverence (விடாமுயற்சி) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து இன்று அறிவித்துள்ளதுகேம்பிரிட்ஜ் அகராதி. Perseverance என்றால் ஒன்றை சாதிக்க, நிறைவேற்ற சில சமயங்களில் ஆதிக நேரம் ஆனாலும்கூட, மேற்கொள்ளப்படுகின்ற தொடர் முயற்சி எனப்படும் என்றும் 2021இல் உலகம் முழுவதும் கோவிட்19 மற்றும் பல பிரச்னைகளை வாழ்வில் எதிர்கொண்டபோது தொடர்முயற்சி எடுத்து அதனை எதிர்கொண்டனர் என்றும் இவ்வகராதி கூறுகிறது. "கடினமான சூழலை மக்கள் எதிர்கொள்ளும்போது அவர்களைப் புகழ்கிறோம். அவ்வகையில் இச்சொல் ஓர் நேர்மறைச்சொல்லாகிறது. கேம்பிரிட்ஜ் அகராதியின் வலைப்பக்க வாசகர்கள் தம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அதனைத் தொடர்ந்து வாசித்தும், பகிர்ந்தும், அதில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு மறுமொழி தந்தும் தம் மன உறுதியைக் கடைபிடித்துவந்துள்ளதைக் காண்கிறோம். வாசகர்களின் ஆதரவு எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நீங்கள் எங்கள் அகராதியை நாடுவதற்குக் காரணம் நாங்கள் தருகின்ற விளக்கங்கள் குறிப்பாக ஆங்கிலம் கற்போருக்காகவே அமைந்துள்ளன. அவை ஆங்கிலம் எந்த வகையில் உண்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற ஆழமான ஆய்வின்மூலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. கற்போரால் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தாவிட்டாலும், உலகளாவிய நிலையில் இச்சொல்லானது 2021இல் 2,43,000 முறை பயன்படுத்தப்பட்டதை எங்களின் புள்ளிவிவரப்படி அறியமுடிகிறது. செவ்வாய்க்கிரகத்தில் நாசாவின் ரோவர் தரையிறங்கியபின்னர், 18 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி வரை 30,847 முறை இச்சொல் தேடப்பட்டது. இச்சூழலில் 2021இன் சிறந்த சொல்லாக இச்சொல் தேர்ந்தெடுக்க இக்காரணிகள் துணையாக இருந்தன" என்கிறது இவ்வகராதி. நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியானது எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவை போன்ற காரணிகளே நிர்ணயிக்கின்றன.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vaccine (தடுப்பூசி) என்ற சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. "நம் மதிப்பீடுகளை, எண்ணங்களை, ஆசைகளை வெளிப்படுத்த நாம் தினமும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கருத்தியல்ரீதி்யிலான மோதலில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன. 2021இல் இதுதான் நிகழ்ந்தது. 2020இல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய கொரோனா பரவலானது அரசியல்ரீதியான விவாதத்தையும், பிரிவிற்கான ஓர் ஆதாரத்தையும் உண்டாக்கியது. நம் காலத்திய பெரிய அறிவியல் நிகழ்வானது விவாதப்பொருளாக மாறியது. இச்சூழலில் தடுப்பூசி என்ற சொல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது" என்கிறது மெரியம் வெப்ஸ்டர் அகராதி.

 

காலின்ஸ் அகராதி

காலின்ஸ் அகராதி NTF என்ற சொல்லை இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. Non-fungible token என்பதன் சுருக்கமான NFT டிஜிட்டல் வடிவிலான அடையாளம் ஆகும். அதிகம் நாடப்படுகின்ற ஒளிப்படங்கள், வீடியோக்களுக்காக வர்த்தகத்தின்போது பரிமாறப்படுகின்ற டிஜிட்டல் விலைமதிப்பினை இது குறிக்கிறது. இதனை டிஜிட்டல் சொத்து என்று கூறலாம். .இவ்வகராதி இவ்வாண்டு தேர்ந்தெடுத்த 10 சொற்களில் இச்சொல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மூன்று சொற்களும் அடங்கும் என்கிறது இவ்வகராதி.

டிஸ்னரி இணைய தளம்


2020ஆம் ஆண்டின் துருவப்படுத்தப்பட்ட நிலையும், இருத்தல் அல்லது சர்வதேசப்பரவல் காரணமான தாக்கங்களும் அவற்றை எதிர்கொள்ள பல வழிமுறைகளை நாம் 2021இல் கையாண்ட வகையில், alllyship (கூட்டு அல்லது கூட்டணி) என்ற சொல்லைத் தெரிவு செய்துள்ளது டிஸ்னரி இணையதளம். "ஓர் ஆண்டில் காணப்பட்ட பரவலை ஒற்றைய சொல்லில் அடக்கிவிடமுடியாது. இருந்தபோதிலும் இச்சொல் பலவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரே சொல்லாகும். இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சொல் எங்கள் அகராதிக்குப் புதியது என்ற வகையில் சிறப்பினைப் பெறுகிறது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட வகையிலான பிரிவிற்காக குழுவின் ஓர் உறுப்பினர் என்ற நிலையிலன்றி ஒன்றிணைந்து தம் தலைமைப்பொறுப்பிலும், பார்வையிலும் செயல்படுவதை இச்சொல் குறிக்கிறது" என்கிறது இவ்வகராதி.

2020இன் சிறந்த சொல்லாக "க்வாரன்டைன்" (கேம்பிரிட்ஜ்), "பான்டெமிக்" (மெரியம் வெப்ஸ்டர் மற்றும் டிஸ்னரி இணையதளம்),  "லாக் டவுன்" (காலின்ஸ்) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் கூறியிருந்தது ஆக்ஸ்போர்டு அகராதி.

கொரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் 2021இலும் அது தொடர்பான சொற்கள் அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழில் இவ்வாறாக ஆண்டின் சிறந்த சொல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.      


துணை நின்றவை: மேற்கண்ட அகராதிகளின் தளங்கள்

12 comments:

  1. விரிவான தகவல்கள்..
    வாழ்க நலம்...

    ReplyDelete
  2. தங்களது விளக்கம் அருமையாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள்... அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    நல்ல தகவல்கள். தெரிந்து கொண்டேன். விளக்கமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள் அறிந்து கொண்டோம் ஐயா.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    கீதா

    ReplyDelete
  7. அருமையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள். மிக்க நன்றி ஐயா

    இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

    துளசிதரன்

    ReplyDelete
  8. சிறப்பான தகவலுக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  10. சிறப்பான தகவல்கள்.

    ReplyDelete
  11. ஆங்கில மொழி குறித்த என் ஆர்வத்திற்குத் தீனியாய் அமைந்தது உங்கள் பதிவு. இப்படிப் பதிவிட ஓர் ஆங்கில மொழியாசிரியர் இருப்பாரா என்பதே என் ஐயம்.

    ReplyDelete
  12. Hey i just landed on your site from Google, i should say that it is a very useful information you have shared. I will be happy if you can just check out my our site Symbios Kohima contact number , I'm really providing some useful update to my viewers. Thank you.

    ReplyDelete